விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான போர் என்ற பெயரில்- தமிழ் மக்களுக்கு எதிராகவே இலங்கை அரசாங்கம் யுத்தத்தை நடத்தியது. இந்தப் போர் தனியே இலங்கை அரசாங்கத்தால் மட்டும் நடத்தப்பட்ட ஒன்றல்ல.
உலகின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த- இருபது நாடுகள் இணைந்து நடத்திய போர் இது. சர்வதேசம் போரை நிறுத்துமாறு தமக்கு அழுத்தம் கொடுத்தது- ஆனாலும் தனியே நின்று போரை வென்று காட்டினோம் என்று, கடந்த சில வாரங்களாக கூறி வந்த இலங்கை அரசு- இப்போது தான் சில உண்மைகளைப் போட்டுடைக்கத் தொடங்கியிருக்கிறது.
இருபது நாடுகளின் உதவி ஒத்துழைப்புடன் தான் இலங்கை அரசு போரில் வெற்றி பெற்றது என்ற உண்மை- கடந்த செவ்வாயன்று அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தின் போது தான் வெளியே வந்தது.
அப்போது தான் முதல்முறையாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம, புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற உதவிய இருபது நாடுகளுக்கும் தமது நன்றியைத் தெரிவித்திருந்தார்.
ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பையும்- அதற்கு நிழல் கொடுத்து நின்ற மக்கள் கூட்டத்தையும் அழித்து- அடக்குவதற்கு இருபது நாடுகள் கைகோர்த்தது போன்ற நிகழ்வு உலகில இதற்கு முன்னர் நிகழ்ந்திராத ஒன்று.
உலகில் எத்தனையோ போர்கள் நடந்திருக்கின்றன. இந்தப் போர்களில், ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் கூட்டணி சேர்ந்து போரை எதிர்கொண்டிருக்கின்றன.
ஆனால் அவையெல்லாம் ஏதாவதொரு நாட்டுக்கு எதிராகவே இடம்பெற்றிருக்கின்றன. இரண்டாம் உலகப்போரின் போது- ஜேர்மனிக்கு எதிராக, ஜப்பானுக்கு எதிராக நேச நாட்டுப் படைகள் கூட்டாகத் தாக்குதல் நடத்தின. அதுபோன்றே சோவியத் யூனியனுக்கு எதிராக ஜேர்மனியும் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து போரை நடத்தியது.
ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், யூகோஸ்லாவியாவிலும்- அமெரிக்கா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் ஒன்றிணைந்து தான் யுத்தத்தை நடத்தின.
அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்திப்பதைப் போன்று- உலகப் போர்களின் வரலாற்றில் பல நாடுகள் கூட்டணி சேர்ந்து போரை நடத்திய சம்பவங்கள் நிறையவே நிகழ்ந்துள்ளன.
ஆனால் ஒரு விடுதலை அமைப்புக்கு எதிராக இருபது நாடுகள் இணைந்து நடத்திய யுத்தம் இது. இந்த வகையில் பார்க்கும்போது இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. உண்மையில் புலிகளின் பலத்தை- அவர்களின் போர்த்திறனை இப்போது தான் அதிகமாக மதிப்பிடத் தோன்றுகிறது.
இருபது நாடுகள் இணைந்து நடத்திய போரை- ஒரு சிறிய மக்கள் கூட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விடுதலை அமைப்பு ஒன்று- மூன்று வருடங்களாக எதிர்கொண்டு போராடியது என்ற, வியப்பான உண்மை இப்போது தான் உலகில் பலருக்கும் தெரியவருகிறது.
இலங்கை அரசின் படைகளுக்கு முன்னால்- புலிகள் தோல்வியைத் தழுவவில்லை. உலகில் மிகப் பலம் வாய்ந்த நாடுகளின் இராணுவ வல்லமை, அவற்றின் சதித் திட்டங்களின் விளைவாகவே புலிகளின் இராணுவ வல்லமைக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கிறது.
புலிகளுக்கு எதிரான போரில் வெற்றியீட்ட இலங்கைக்கு உதவிய இந்த நாடுகளின் பட்டியலை வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம வெளியிடவில்லை. ஆனால் இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மிகவும் முக்கியமானதும் முதன்மையானதுமான நாடாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை.
இந்தியா கொடுத்த ஆயுதங்கள், புலனாய்வுத் தகவல்கள், இராஜதந்திர உதவிகள் என்பன இந்தப் போரில் இலங்கை அரசு வெற்றி பெறுவதற்கு முக்கியமான புறக்காரணிகளாக இருந்துள்ளன.
'இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட காலம் வரை வடக்கின் போர் நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு அறிவித்துக்கொண்டேயிருந்தோம். இந்திய அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான கட்டமைப்பு ஒன்றையும் உருவாக்கியிருந்தோம்" என்ற மற்றொரு உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தாபய ராஜபக்ச.
பி.ரி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டிருக்கிறார்.
'புலிகளுக்கு எதிராக நடத்திய இறுதி யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டது வரை, வடக்கின் நிலைமைகள் குறித்து இந்தியாவுக்கு விரிவாக விளக்கப்பட்டது.
இறுதி யுத்தத்தின் முதல் தினத்திலிருந்து முடிவு வரை இந்தியாவுக்கு சகல விபரங்களையும் அறிவித்தோம். சீனாவுடனோ பாகிஸ்தானுடனோ அல்லது வேறெந்த நாட்டுடனோ நாம் வைத்துள்ள உறவு காரணமாக- இந்தியாவுக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படாத வகையில் நடந்து கொண்டோம்.
வெளியுறவு அமைச்சின் தொடர்புகளுக்கு அப்பால்- மேலதிகமாக இந்திய அதிகாரிகளுடன் நாம் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தோம்.
இந்தக் கட்டமைப்பில் இந்தியாவின் சார்பில் வெளியுறவு செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்பு செயலாளர் விஜய் சிங் ஆகியோர் இடமபெற்றிருந்தனர்.
இலங்கை அரசின் சார்பில் என்னுடன் லலித் வீரதுங்க, பசில் ராஜபக்ச ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இரண்டு குழுக்களும் அடிக்கடி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் சந்திப்புக்களையும் நடத்தி வந்தோம்.
சகல விவகாரங்கள் குறித்தும் அவ்வப்போது இலங்கைக் குழு இந்தியாவுக்குச் சென்று இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தது.
தமிழகம் கொடுத்த கொடுத்துக் கொண்டிருந்த அழுத்தங்களைப் புரிந்து கொண்டு, நாம் மேற்கொண்ட சில செயற்பாடுகள் இந்தியாவுக்கு உதவியாக இருந்தன. புலிகளுடனான போரின் போது இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்தி மிக நெருக்கமாக செயற்பட்டோம்.
வேறு எத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்டாலும்- இந்த உறவு முறையால் அந்த அழுத்தங்களை சமாளித்து விடலாம் என்பதைத் தெரிந்திருந்தோம். இந்தியாவின் எண்ணமும் புலிகளை தோற்கடிக்க வேண்டுமென்பதாகவே இருந்தது.
யுத்தத்தின் போது விமானத் தாக்குதலை நிறுத்த இலங்கை எடுத்த முடிவுக்கும் இந்தியாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டமை, பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டமை ஆகிய அனைத்து முடிவுகளும் ஜனாதிபதி மற்றும் படைத் தளபதிகளுடன் கலந்தாலோசித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே தவிர, இந்தியாவுடன் தொடர்புடைய விவகாரங்கள் அல்ல.
இந்தியா இந்த நடவடிக்கைகளை வரவேற்றது. எனவே இந்தியாவும் உதவியாக இருந்தது." என்று இந்தப் போரில் இந்தியாவின் பங்களிப்பு பற்றிய உண்மைகள் பலவற்றை வெளியிட்டிருக்கிறார்.
இந்தியாவின் துணையுடன் இலங்கை நடத்திய போர் இது என்பதும்- இதற்கென்றே தனியான கட்டமைப்பு ஒன்றை இலங்கை- இந்திய அரசுகள் ஏற்படுத்தி வைத்திருந்தன என்பதும் பலராலும் அதிர்ச்சியோடு பார்க்கப்படும் விடயங்களாவே இருக்கின்றன.
இந்தப் போருக்கு இந்தியா எந்த வழியிலும் உதவவில்லை என்று, மத்திய அரசினது தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை சொல்லி வந்து பொய்களின் முகத்திரை இப்போது கிழிந்து போயிருக்கிறது.
அவ்வப்போது தமிழகத்தில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட போதெல்லாம்- போரை நிறுத்தப் போகிறார் பிரணாப் முகர்ஜி என்றும், எம்.கே.நாராயணனும் சிவ்சங்கர் மேனனும் தாக்குதலை நிறுத்த வலியுறுத்துவார்கள் என்றும் செய்திகள் வெளியிடப்பட்டதும் இந்தக் கூட்டுச்சதியின் ஒரு அங்கமே.
அவர்கள் கொழும்பு போனதெல்லாமே புலிகளை அழிப்பதற்கான வியூகங்களை வகுப்பதற்கே என்ற உண்மை இப்போது வெளிப்பட்டிருக்கிறது.
இலங்கையும் இந்தியாவும் இணைந்து இரகசியமாக அரங்கேற்றிய இந்தச் சதி நாடகத்தின் உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல்- ஈழத் தமிழர்கள் இந்தியா உதவும் என்று நம்பி நம்பியே மோசம் போயினர். இப்படி ஏமாந்து போனவர்கள் ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல. தமிழக மக்களும் தலைவர்களும் கூட.
போரை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுத்தது- கொடுக்கிறது. இலங்கை அரசு போரை நிறுத்தி விட்டது என்று தமிழகத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் மத்திய அரசு திரும்பத் திரும்ப பொய்யையே கூறிக்கொண்டிருந்தது.
ஆனால் என்ன நடந்திருக்கிறது?
பிரணாப் முகர்ஜியோ, எம்.கே.நாராயணனோ, சிவ்சங்கர் மேனனோ போரை நிறுத்த வலியுறுத்தவும் இல்லை- அதற்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை. அப்படிச் சொல்லிக்கொண்டு இவர்கள் கொழும்பு போய் வந்தெல்லாம் வெறும் நாடகமே.
இவர்கள் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து தமிழகத்;தை ஏமாற்றியிருக்கிறார்கள். விமானத் தாக்குதல் நிறுத்தப்பட்டது, பாதுகாப்பு வலயம் உருவாக்கப்பட்டது என்று எதிலுமே இந்தியாவின் தலையீடு இருக்கவில்லையாம். எல்லாமே இலங்கை அரசாங்கத்தினது முடிவுகள் தான் என்று கூறியிருக்கிறார் கோத்தாபய ராஜபக்ச.
அப்படியானால், இந்திய மத்திய அரசு தமிழக மக்களுக்கு இந்தப் போர் பற்றிக் கூறிய அனைத்துமே பொய் என்பது நிரூபணமாகியிருக்கிறது. இலங்கை அரசு தனது நாட்டு தமிழ் மக்களையே கொன்று குவித்தது.
இந்தியாவோ தனது நாட்டு தமிழ் மக்களையே நம்ப வைத்துக் கழுத்தறுத்து- நம்பிக்கைத் துரோகம் செய்திருக்கிறது. அதேவேளை இலங்கையில் நடக்கும் போரில் தாம் எந்த வழியிலும் உதவவில்லை என்றும், ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்து வந்ததெல்லாம் வெறும் நாடகமே என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது.
காலிமுகத் திடலில் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இலங்கை அரசு நடத்திய பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பில்- இந்தியா கொடுத்த ஆயுத தளபாடங்கள் அணிவகுத்துச் சென்றதை எப்படித் தான் மறைக்க முடியும்?
இந்தியா கொடுத்திருந்த ~இந்திரா| ரேடார், 40 மி.மீ எல்-70 ரக விமான எதிர்ப்புப் பீரங்கிகளை விமானப்படையும், ~சயுர|, ~சாகர| போன்ற போர்க் கப்பல்களை இலங்கைக் கடற்படையும் காட்சிப்படுத்தியதைப் பொய்யென்று உரைக்க முடியுமா?
இலங்கைக்கு எந்தவொரு இராணுவ உதவிகளையும் இந்தியா செய்;யவே இல்லை என்றால்- இவையெல்லாம் இந்த அணிவகுப்புக்கு வந்தது எப்படி?
ஒரு உண்மை மட்டும் இப்போது வெளிச்சத்துக்கு வந்திருகிறது. ஈழத் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்ததற்கு பலரும் புலிகள் தான் காரணம் என்று கூறுகின்றனர்.
எப்போதும் தோல்வியடைந்தவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது தான் வழக்கம். ஆனால் சர்வதேச சக்திகளின் கைககளில் சிக்கித்தான் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் சீரழிந்து போயிருக்கிறது.
இந்தியா போன்ற சர்வதேச சதிகார சக்திகளின் அரசியல் சதுரங்க விளையாட்டுக் களமாக தமிழ்மக்களின் தாயகபூமி மாற்றப்பட்டிருக்கிறது. இப்போதும் கூட இந்தியா இலங்கை அரசுடன் கொஞ்சிக்குலாவவே விரும்புகிறது.
அதிகாரப்பகிர்வு பற்றி இலங்கைக்கு எந்த அழுத்தமும் கொடுக்காதாம். அது அந்த நாட்டின் உள்விவகாரமாம்.
இப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல. இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தான். ஆக, ஈழத்தமிழரை இந்தியா ஒரபோதும் கைவிட்டு விடாது. அவர்களைப் பாதுகாக்க- கௌரவமாக வாழ நடவடிக்கை என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அண்மையில் சொன்னதெல்லாம் வெறும் பொய்- பித்தலாட்டம் என்றே முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
சுவிசிலிருந்து தொல்காப்பியன்
நன்றி:
"நிலவரம்"
Saturday, June 13, 2009
இந்தியா போன்ற சர்வதேச சதிகார சக்திகளின் அரசியல் சதுரங்க விளையாட்டுக் களமாக தமிழ்மக்களின் தாயக பூமி!
Posted by tamil at 7:39 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment