Friday, June 12, 2009

மீளக் குடியேற்றம் என்பது கானல் நீர் தானா?

வவுனியா அகதி முகாம்களில் உள்ள வன்னி மக்கள் படும் அவலங்கள், அனுபவிக்கும் துன்பங்கள் நாளாந் தம் வெவ்வேறு தரப்புகளால் வெளிப்படுத்தப் படுகின்றன. அடிப்படை வாழ்வாதாரங்கள் இன்றி அவர்கள் அல்லாடுகிறார்கள். அவர்களின் உலக வாழ்க்கை ஆட்டங்கண்டு கொண்டிருப்பது நாளாக நாளாக அதிகரிக்கிறதே அன்றிக் குறைந்த பாடில்லை.
இத்தனைக்கும் அவர்கள் தக்கவாறு பராமரிக்கப்படுவதாகவும், குறைபாடுகள் நாளாந்தம் நீக்கப்பட்டுவருவதாகவும் அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது. யார் எந்தப் பாடுபட்டாலும் சரிதான், தலைகீழாக நின்றாலும் சரிதான் அந்த அகதி முகாம்களுக்குச் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் தானும் சென்று பணியாற்று வதற்கு அரசினால் இன்னும் முழு அளவில் அனுமதி வழங்கப்படவில்லை.

அகதி முகாம்களின் நிர்வாகத்தை இராணுவத்திடம் கையளித்து அவை இராணுவச் சிறைக்கூடங்களாகவே செயற்படுவதாகப் பல தரப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் அவ்வாறில்லை என்று தடுப்புத்தடி பிடித்தவாறே, அங்கு பலவகையான மனித இம் சைகளும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்று வருவதாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.
நாட்டில் உள்ள மக்கள் அமைப்புக்கள் பலவும், அகதி முகாம்களை நிர்வகிக்கும் பொறுப்பை அரசின் சிவில் அதிகாரிகளிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொண்ட போதிலும் அரசு தனது இறுங்குப் பிடியைத் தளர்த்துவதாக இல்லை.

அகதி முகாம்களின் நிர்வாகம் தொடர்ந்தும் இராணு வத்தினர் வசமே உள்ளது. விசாரணை அதன் பின்னர் தடுப்பு முகாம்கள் என்று அகதி முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்கள் பலர் கஷ்டத்துக்கு ஆளாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இத்தனைக்கும் மத்தியில்தான் அகதி முகாம்களில் தங்கியுள்ள வன்னி மக்கள் 180 நாள்களுக்குள் மூன்று மாதங்களில் தமது சொந்த இடங்களில் மீளக் குடி யேற்றப்படுவர் என்று அரசு தரப்பு அறிவித்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விடயங் களுக்குப் பொறுப்பான உதவிச் செயலாளர் ஜோம் ஹோம்ஸிடம் 180 நாள்களில் மீள்குடியேற்றம் என்ற வாய்மொழி வாக்குறுதியை முதல் முதலில் அரசு ஒப்பு வித்தது.
யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவர் களுக்கு, தமிழ் மக்களின் நலனில் அரசுக்கு எத்துணை நாட்டமும் நேசமும் உள்ளது என்பதனைத் தெரிந்து கொண்ட எவருக்கும் அரசு, ஹோம்ஸுக்கு ஒப்புவித்த கால அட்டவணை வெறும் வெற்று வேட்டு என்பது அப்போதே தெரிந்திருக்கும், புரிந்திருக்கும்.

முகத்துக்கு நேரே ஒன்றைக்கூறி, அல்லது வாக்குறுதி அளித்து, குறிப்பிட்ட அந்த நேரத்தின் "விவகாரத்தை"வீச்சுக் குறைய வைப்பதில் இலங்கை அரசு எப்போதும் பெயர் பெற்றது.அந்த வரிசையிலே ஒன்று தான் 180 நாள்களில் ஆறு மாதங்களில் தமிழ் அகதி கள் சொந்த மண்ணில் குடியேற்றப்படுவர் என்ற அறிவிப்பும்..!

ஆம். வன்னி மக்களின் மீள்குடியேற்றம் கால வரையறையின்றி நீண்டு செல்லும் என்பதற்கு இராணுவப் பேச்சாளர் முத்தாய்ப்பு வைத்துவிட்டார்.

வன்னிப் பிரதேசத்தின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில், விடுதலைப் புலிகள் பெருமளவு ஆயுதங்களை ஒளித்துவைத்துள்ளனர். அவர்களது ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டு, நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படும் வரை, இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த் துவது சாத்தியமில்லை என்று மிக வெளிப்படையாகக் கூறியுள்ளார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரா.

இலங்கை நிலைமை குறித்து அறிவதற்கென இங்கு விஜயம் செய்துள்ள இந்திய ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையிலேயே இராணு வப் பேச்சாளர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் முற்றாக ஒளித்துக் கட்டி விட்டதாக உலகளாவிய மட்டத்தில் பெரும் எடுப்பில் பிரசாரம் செய்யப்படும் இவ்வேளையில், அந்த அமைப்பைச் சேர்ந்த இரண்டாம் நிலை, மூன் றாம் நிலைத் தலைவர்கள் முற்றாக அளிக்கப்பட வில்லை என்று இராணுவப் பேச்சாளர் எடுத்தியம்பி உள்ளார். இரண்டாம், மூன்றாம் நிலைத் தலைவர்கள், கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் மறைந் திருக்கின்றனர் என்றும் அவர்கள் வன்னிப் பகுதிக்குள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இத்தகைய ஒரு பின்புலத்தில், வன்னி மக்கள் 180 நாள்களில் தமது சொந்தப் பகுதிகளில் குடியமர்த் தப் படுவர் என்று நினைத்தும் பார்க்க முடியாது என்பது தப் புக்கணக்கல்ல.
இதே போன்று பல காரணங்கள் இனியும் காலத்துக் குக் காலம், தவணைக்குத் தவணை தெரிவிக்கப்படும் என்பதுடன், மீளக்குடியேற்றம் தமிழ் அகதிகளுக்குக் கானல் நீராகவே முடியும் என்பதனையும் இப்போதே கூறிவிடலாம்.

அது தவிர்க்கப்படவேண்டுமானால், அகதி முகாம்களைச் சிவில் அதிகாரிகள் நிர்வகிக்கவும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள், ஆகக் குறைந்தது ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களாவது அகதிகளின் நலன்களைப் பேணவும் வழிதுறை காணப்படவேண்டும். இந்த உண்மை,எவர் சொன்னால் அரசின் உயர் மட்டங்களின் காதில் ஏறும் என்பதைப் பொறுத்தே வன்னி அகதிகளின் வாழ்வும், நலனும், தாழ்வும் தங்கி யுள்ளன. இதுவே அப்பட்டமான உண்மை நிலை; யதார்த்தமும் ஆகும்.

எங்கள் தமிழ் உறவுகளின் எதிர்காலம் வெறும் சூனியமாகப் போகிறதே என்பது நினைத்துப் பார்க் கவும் ஏக்கம் தருவதாக உள்ளது. இதனை யார் மனதார உணர்ந்து மாற்று நடவடிக்கைக்கு வழிகோலுவர்...?

நன்றி
உதயன்

0 Comments: