நூற்றாண்டு காலமாக புலம் பெயர்ந்திருந்த ஓரினம், இரண்டாம் உலகப் போருக்குப் பின், தங்களுக்கென்றொரு தாய் திருநாட்டைப் பெற்றதும், அதை எப்படி உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியிருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமென தமிழக எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார்.
இவர் அழுத்திக் கூறியிருக்கும் விடயம், புலம்பெயர்ந்த ஈழத் தமிழனத்தை நோக்கி, முன்வைக்கப்பட்டிருப்பதாகக் கருதலாம்.
சுயநிர்ணய உரிமைக்கான ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்ட நிலையில், சர்வதேசப் பரப்பெங்கும், அதன் நீட்சியை அசைத்துச் செல்ல வேண்டிய கடப்பாடு, எவ்வாறு மேற்கொள் ளப்படலாமென்பதை வரலாற்றுப் பதிவுகள் உணர்த்துகின்றன.
இத்தகைய களநிலை மாற்றங்களின் பௌதிக தன்மைகளை அவதானிக்கும் அதேவேளை, சுயநிர்ணய உரிமை சார்ந்த அடிப்படைக் கருத்துருவத்தையும் அதன் பண்புகளையும்
உயிர்ப்புடன் தக்க வைக்க புவிசார் அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவையொன்றும் புரிந்து கொள்ளப்பட முடியாத கடினமான விடயமல்ல.
இந்திராகாந்தி முதல் சோனியா காந்தி வரை ஈழப்பிரச்சினை குறித்தான அவர்களின் பார்வையினையும், வெளியுறவுக் கொள்கையி
øனயும், ஒரு மதிப்பீட்டு ஆய்விற்கு உட்படுத்தினால், தற்போதைய களநிலைவரத்தின் நிஜத் தன்மையை புரிந்து கொள்ளலாம்.
80களில், போராட்ட இயக்கங்களுக்கு படைக்கல உதவி மற்றும் பயிற்சிகளை வழங்கிய இந்தியா, 1987 இல் இலங்கையுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தில், தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்க முயலவில்லை.
இந்திய மத்தியஸ்தத்தில் நடைபெற்ற திம்பு மகாநாட்டில், சகல இயக்கங்களினாலும் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளையும் அந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கவுமில்லை. அது குறித்து பரிசீலிக்கவுமில்லை.
ஏற்öகனவே இலங்கையினால் நிராகரிக்கப்பட்ட திம்புக் கோரிக்கைகளை முன்வைத்து அழுத்தம் கொடுத்தால், தனது பிராந்திய நலனை முன்னிறுத்தும் ஒப்பந்தம், நிறைவேறாமல் போகும் வாய்ப்பு ஏற்படலாமென்பதை அன்று இந்தியா உணர்ந்து கொண்டது.
உண்மையாகவே ஈழ மக்களின் மீது இந்தியாவிற்கு அக்கறை இருந்திருந்தால், போராட்டச் சக்திகளை அந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் இணைத்து, தனது உறுதியான நிலைப்பாட்டினை நிரூபித்திருக்க முடியும்.
இலங்கையின் வான்பரப்பு இறையாண்மை மீறி, பூமாலை நடவடிக்கை மூலம், குடாநாட்டில் உணவுப் பொட்டலங்களை வீசிய காந்திதேசம், இலங்கைத் தமிழ் மக்களுக்கான பிறப்புரிமை அரசியல் கோட்பாடு சார்ந்த விடயத்தில், மேலதிக அழுத்தத்தை பிரயோகித்திருக்கலாம்.
ஆனாலும், இலங்கையை தனது இராஜதந்திரப் பிடிக்குள் கொண்டு வர, தமிழ்மக்களுக்கு அன்று பூமாலை போட்டது. இன்று இலங்கை அரசாங்கத்தின் இரõணுவ நடவடிக்கைககளுக்கு பக்க பலமாக நின்ற இந்தியா, தமிழ் மக்களுக்கு புதிய பூமாலையைப் போடுமென்று எண்ணியது தவறானதாகும்.
பூமாலை தொடுப்பதும், எதை மற்றவர்களின் கழுத்தில் போடுவதும், உள்நோக்கம் கருதி நிறைவேற்றப்படும்விவகாரமென்பதை பலர் புரிந்து கொள்ளவில்லை.
பல்லின மக்கள் வாழும் இந்திய பெருநிலப்பரப்பில், தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்கள் தொடர்ந்த வண்ண முள்ளன. இரõணுவப் பலத்தை ஏவிவிட்டு அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
தேசியக் கட்சிகளுக்கு மாற்றீடாக பல மாநிலக் கட்சிகள் புதிதாக உருவாகுவதன் காரணிகளை, இந்தியக் கட்டமைப்பின் பலவீனத்திலிருந்து உணரலாம். இத்தகைய நிலப்பிரபுத்துவ தன்மை அழியாத, இந்திய அதிகார வர்க்க அரசியல் கட்டமைப்பானது இனத்துவ தேசியத்தின் உள்ளார்ந்த பண்புகளை உள்வாங்கிக் கொள்ளுமென்று கற்பிதம் கொள்ள முடியாது.
ஆளும் இந்திய அதிகார பீடமானது, தனது மாநிலங்களைக் காலனிகளாகப் பார்க்கும் அரசியல் சூத்திரத்தை, ஈழத் தமிழ் மக்கள் விளங்கிக் கொள்ளவில்லை.
தமிழகத்தினூடாக இந்திய அரசியல் பற்றிய புரிதல் வெளிப்படுத்தும் செய்தி, பிராந்திய நலன் சார்ந்த பார்வையினையும், அந்நாட்டின் அதிகார பீட அசைவியக்கத்தையும் உணர்ந்து கொள்ள முடியாதவாறு தடுக்கின்றது.
தமிழக மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு எழுச்சிகளும், போராட்டங்களும் சர்வதேச அளவில் புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்படும் சுயநிர்ணய உரிமை முழக்கத்திற்கு ஒரு உந்து சக்தியாக அமையுமே தவிர, இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் துளியளவு மாறுதல்களையும் ஏற்படுத்த உதவாது.
இலங்கை குறித்த மத்திய அரசின் கொள்கையே தமது கொள்கையென சில தமிழக அரசியல் தலைவர்கள் வெளிப்படுத்தியிருந்ததை தமிழ் மக்கள் கவனிக்கவில்லை.
அவர்களை இனவிரோத சக்திகளென்றும் யுத்தமொன்று நடைபெறும் போது பொது மக்கள் கொல்லப்படுவது இயற்கை என்று கூறியவருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்புவதுமாக, தமிழ்நாட்டு அரசியல் பாணியில், விடுதலைப் போராட்ட அரசியலை முன்னெடுத்த தவறுகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்னமும், இந்திய இரட்சகர்களின் கைகளிலேயே ஈழத் தமிழனத்தின் வாழ்வு ஒப்படைக்கப்பட்டிருக்கிறதென்று கூறும், வரலாற்று உண்மைகளை மூடிமறைக்கும் சக்திகள் குறித்தும் மிகுந்த அவதானம் தேவைப்படுகிறது.
சீனா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகள், இலங்கையினுள் கால்பதிக்கக் கூடாதென்பதற்காக ஈழத் தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறைக்கு இந்தியா உதவி புரிகிறதென்று பெருமை கொள்வது மிகக் கேவலமானது.
அதேவேளை இலங்கையில், இனப்பிரச்சினை என்கிற விவகாரமொன்று இல்லாதிருந்தால், எவ்வாறு இந்தியாவால் இலங்கையில் கால் பதித்திருக்க முடியும்?
இதற்கான பதிலில்தான், சகல முடிச்சுகளும் ஒன்று குவிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் உதவிகளினால் ஆயுதப் போராட்டம் ஒடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குலக நாடுகளும் படைக்கல உதவி புரிந்ததாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்போடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் இந்தியாவின் அடுத்த கட்ட நிகழ்ச்சி நிரல் என்ன?
ஏற்கெனவே இப்போரினால் பாதிப்புற்ற தாயக, புலம்பெயர்ந்த ஈழத் தமிழினம், இந்தியா மீது, வன்மம் கலந்த வெறுப்புணர்வோடு இருப்பதாக ஆய்வாளர் பி.ராமன் எச்சரிக்கின்றார். புலம்பெயர்ந்த நாட்டில் பிறந்து வளரும் புதிய தலைமுறையினர் இந்தியாவின் பிராந்திய சுயநலன் குறித்து தெளிவாகப் புரிந்துள்ளார்கள்.
இந்நிலையில் ஈழத் தமிழினத்தின் அரசியல் அபிலாஷைகள் மீது, கரிசனை கொண்டவர்கள் போன்று சித்திரிப்பதற்காக, இந்தியா சில நகர்வுகளை மேற்கொள்ள எத்தனிக்கின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு சங்கமிக்க விரும்பாத ஏனைய அரச சார்பு தமிழ் கட்சிகளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு இணைத்து விடும் முயற்சிகளில் இந்தியா ஈடுபடலாம்.
இந்திய அமைதிப்படைக் காலத்தில் இவ்வகையான நகர்வொன்றில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருந்தது.
அப்போது மாகாண சபைத் தேர்தலில் இச் சூத்திரம் நிறைவேற்றப்பட்டாலும், நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்திய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஈரோஸ், அமைப்பு தனியாகப் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தகைய இந்திய நகர்வினை, இலங்கை ஆட்சியாளர்கள் கவனிக்கவில்லையென்று நினைப்பது தவறு.
இலங்கை நாடாளுமன்றத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெளியேற்றுவோமென அரசாங்க உயர் மட்டத்தினர் விடுக்கும் எச்சரிக்கைகளிலிருந்து, இந்திய இலங்கையின் புதிய உரசல் போக்குகளை அவதானிக்கலாம்.
ஏனைய தமிழ்க் கட்சிகள், தமது ஈழம் என்கிற பெயர் கொண்ட கட்சிகளை கலைத்து விட வேண்டுமென மேற்கொள்ளப்படும் அதிரடி நகர்வுகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முயலும் எத்தனிப்புகளும் பல செய்திகளை இந்தியாவிற்கு வழங்குமென்று எதிர்பார்க்கலாம்.
அதாவது ஜனநாயக அரசியல் முகமில்லாத மனிதர்களாக, ஈழத் தமிழர்களை ஆக்கும் முயற்சியில், பேரினவாத சக்திகள் ஒருமித்து செயல்படுகின்றன.
ஆனாலும், விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத்தை சிதைப்பதில் பேருதவி
புரிந்த, இந்தியாவை விட்டு அகல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னமும் போர்க்குற்றம், மனித உரிமை மீறல், இனப்படுகொலை என்கிற அரசாங் கத்தின் மீதான குற்றச்சாட்டுகள், சர்வதேச மட்டத்தில் உயிர்ப்புடன் உலா வருகின்றன.
இத்தகைய குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சீனாவைவிட, இந்தியாவின் சர்வதேச இராஜதந்திரப் பலமே இலங்கை அரசாங்கத்துக்குத் தேவை.
அதுவரை இந்தியாவுடன் அனுசரித்துச் செல்லும் தந்திரோபாயத்தை, இலங்கை மேற்கொள்ளுமென்பதை ஊகிப்பது கடினமான விடயமல்ல.கடந்த மாதம் 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகள் அரசிற்கு ஆதரவளித்தன.
இந்தியாவின் இராஜதந்திர நகர்விற்கு கிடைத்த வெற்றியாகவே பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஆனாலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மறுபடியும் இவ்விவகாரம் முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன. இதில் அமெரிக்காவும் இணைந்து கொள்ளலாம். யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்த இறுதி மூன்று நாட்களில், அங்கு என்ன நடந்தது என்பது தமக்கு நன்றாகத் தெரியுமென அமெரிக்கா ö தரிவித்த கருத்து இங்கு கவனிக்கத்தக்கது.
சீனாவைப் பொறுத்தவரை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு அண்மைக்காலமாக தெரிவித்து வரும் கருத்துகளையும் அவதானிக்க வேண்டும்.
இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடோ (இந்தியா) அல்லது சர்வதேசமோ தலையிடக் கூடாதென சீனா எச்சரிக்கிறது. அத்தோடு மனிதாபிமான உதவியினை மட்டுமே இவர்கள் இலங்கைக்கு வழங்கலாமென நிபந்தனைகளையும் விதிக்கின்றது.
இந்நிலையில் இந்திய நலனிற்காக, விரும்பியோ அல்லது விரும்பாமலோ தமது வாழ்வõதாரங்களை தொலைத்த ஈழத் தமிழ் மக்களுக்கு காந்தி தேசம் என்ன செய்யப் போகிறது?
சர்வதேச அரங்கில் முன்னெடுக்கப்படும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, இந்தியா தொடர்ந்தும் உதவி புரிந்தால், இடைவெளி நீளும், தென்னாசியாவில் எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களின் ஆதரவினையும் இந்திய அரசு இழக்கும்.
சி.இதயச்சந்திரன்
(வீரகேசரி வார வெளியீடு 07.06.2009)
Wednesday, June 10, 2009
இறுதி ஆட்டத்தில் இந்தியா சீன ஆதிக்கத்தில் இலங்கை
Posted by tamil at 6:40 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment