Tuesday, June 9, 2009

தார்மீகப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கலாமா?

வன்னியில் நடைபெற்ற போர் காரணமாக இடம் பெயர்ந்து, வவுனியாவில் அரசாங்கம் அமைத்துள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ளோரின் நிலைமை மிகவும் மோச மடைந்து வருவது குறித்து நாளாந்தம் வெவ் வேறு பாதகமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அங்கு பணியாற்றுவதற்கோ நேரில் சென்று அம்மக்களின் குறைகளை, கஷ்டங்களை கேட்டறிவதற்கோ வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களுக்குக்கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் அனுபவிக்கும் நரக வேதனைகள் குறித்து போதிய தகவல்கள் வெளிவரும் சாத்திய நிலை இல்லை.

அம்மக்கள் படும் துன்பங்கள், அனுபவிக்கும் கஷ்டங் கள் குறித்துச் சிறிய அளவிலேயே அவ்வப்போது தகவல் கள் வெளியே கசிந்து வருகின்றன. அவற்றை அறியும் போது அந்த அகதிகள், மிருகங்களைவிட மோசமான நிலையில் நடத்தப்படுவது, வாழ்க்கை நடத்துவது கல் நெஞ்சரையும் கவலை கொள்ள வைப்பனவாக வே உள்ளன.

சுமார் 3 லட்சம் மக்கள் 40 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அலுவலகத்தின் செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது. அங்கு நாள்களை ஓட்டும் மக்கள் அனுபவிக்கும் அவலங்கள், துன்பங்கள், கஷ்டங்கள், இயலாமை உட்பட உயிர் வாழும் நிலையை கற்பனையும் செய்ய முடியாத, அதற்கு அப்பாற்பட்ட நிலையை அது எவருக்கும் உண் டாக்கும் என்பதில் ஒரு துளி ஐயமும் இல்லை.

அவர்களுக்குரிய வசதிகள் யாவும் செய்யப்பட்டுள்ளதாக அரச தரப்பில் கூறப்பட்டாலும், அகதி மக்கள் அடிப் படை வாழ்க்கை வசதிகள் இன்றியே நரகத்தில் உழல்வது போன்றே ஒவ்வொரு நிமிடத்தையும் கழிக்கிறார்கள் என் பதே உண்மை என்று எவரும் ஊகித்து உணரமுடியும். ஐ.நா. மனிதாபிமான அலுவலகத்தின் ஐ.ஆர்.ஐ.என்.செய்திச் சேவை பல சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகளை மேற் கோள்காட்டி வன்னி அகதி முகாம்களின் நிலை குறித்து வெளியிட்டிருக்கும் தகவல்கள் யாவுமே நெஞ்சை உருக்கு வனவாக வே உள்ளன.
40 அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர் களில் 13 வீத சதமானவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். அவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போசாக்கின்மையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பொருள்களை பெறுவதற்காக 10 மணித் தியாலங்களுக்கும் மேலாக வரிசையில் நிற்க வேண்டி உள்ளதால், குழந்தைகள் மற்றும் முதியோர், நோயுற்றோர், காய முற்றோர் என்று பலதரப்பினராலும் அப்பொருள்களைப் பெறமுடியாத கஷ்ட நிலையும் உண்டு.
13 முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளில் 25.5 வீத மானோர் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5.2 வீதமானோர் போசாக்கின்மையால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புள்ளிவிபரங்கள் சில மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டதால் மேலும் அதிக எண்ணிக்கையான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று "யுனிசெவ்" "கவலை தெரிவிக்கிறது.

இந்தப் புள்ளி விபரங்களை எடுத்துக்கூறிய "யுனிசெவ்", சிறுவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டு நிலை எமக்கு முக்கிய கவலைக்குரியதாக உள்ளது. ஆனால் அகதி முகாம்களுக்குள் செல்வதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளதால், போசாக்கின்மையைக் கட்டுப்படுத்த எதுவும் செய்ய முடியாதுள்ளது என்பதையும் அப்பட்டமாகச் சுட்டிக் காட்டி உள்ளது.

இன்றைய குழந்தைகள் நாளைய பிரசைகள். அவர்கள் போசாக்கின்மையால் பாதிப்புற்றுள்ளார்கள் என்பது அவர் களில் ஒரு பகுதியினர் மடிந்து போகக்கூட வழி செய்ய லாம். இன்னொரு சதவீதத்தினர் சமூகத்திற்குப் பயன்படமுடி யாத "நோஞ்சான்"களாக வளரலாம். மொத்தத்தில் எதிர்காலத் தமிழ்ச் சந்ததியினரை மறைமுகமாக அழிக்கும் ஒரு செயற் பாடாகவும் இது கருதக்கூடியதாகும்.

தனக்கு அத்தகைய உள்நோக்கம் இல்லையென்று அர சாங்கம் மறுதலிப்பதாயின், அவர்களைக் காப்பாற்றும் பணியைச் செய்வதற்கு "யுனிசெவ் "போன்ற சர்வதேச சிறு வர் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்.

வவுனியாவில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் தமிழ் மக்கள் அவர்களின் குழந்தைகள் இந்த நாட்டு எதிர்காலச் சந்ததியினரே என்று அரசுஉரிமை கூறுவதாயின், இதயசுத் தியுடன் அவ்வாறே கருதுவதாயின், "யுனிசெவ் "அமைப் பினர் அங்கு சென்று கட்டுப்பாடின்றிப் பணிசெய்து தமிழ்க் குழந்தைகளைக் காப்பாற்ற அனுமதிக்க வேண்டும்.

அகதி முகாம்களில் உள்ள தமிழ் இளைஞர்களை விசா ரணை செய்த பின்னர், அவர்களுக்கு புனர்வாழ்வு தந்து புது வாழ்வு அளிக்கப்போவதாக அரச தரப்பில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகிறார்கள். அதற்கான திட்டங்கள் குறித் துப் பெரும் பிரசாரம் செய்யப்படுகின்றது. அதுவும் நேர்மை யாக நடைமுறையாகுமெனில் முகாம்களில் உள்ள தமிழ்ப் பிஞ்சுக் குழந்தைகளைக் காப்பதற்கு, குழந்தைகள் நலனில் உண்மையான அக்கறைகொண்ட சர்வதேச மட்டத்தில் பெயர் பெற்ற "யுனிசெவ் "அமைப்பை முகாம்களில் பணி செய்ய ஏன் அரசுஅனுமதிக்கக்கூடாது?

வவுனியா முகாம்களில் உள்ள மக்கள் மோசமான வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் என்ற "பொட்டுக்கேடு "வெளிவந்துவிடும் என்பதற்காக, அதைத் தடுப்பதற்காக, தமிழ் மக்களின் எதிர்காலச் சந்ததியை சாகடிக்கலாமா? ஓர் அரசாங்கம் என்ற வகையில், நாட்டின் எதிர்காலச் சந்ததி யினரை காப்பாற்ற வேண்டிய தட்டிக்கழிக்கமுடியாத பெரும் தார்மீகப் பொறுப்பு தனக்கு உண்டு என்பதனை உணர்ந் தாக வேண்டும்.

ஏனைய சமாச்சாரங்கள் போலன்றி, குழந்தைகள் மடிந்துபோகும் ஆபத்தான விவகாரம் தனித்துப் பிரித்து நோக்கப்பட வேண்டியது என்பதனை அரசாங்கம் உணரக் கூடாதா?
நன்றி
- உதயன் -

0 Comments: