Monday, June 8, 2009

உலக நீதிக்கு விடுக்கப்படும் சவால்.....!

இலங்கையில் நடைபெற்ற போரின்போது போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆகையால் அரசாங்கத்தினதும் தமிழீழ விடு தலைப் புலிகளினதும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அது மிக அவசியமானது.

இவ்வாறு அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர்நாயகம் பான்கீமூன்.

ஐ.நாவின் பாதுகாப்புச்சபையின் உறுப்பினர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய ஒரு விசேட கலந்துரையாடலிலேயேசெயலாளர்நாயகம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

நடந்தவற்றுக்குப் பதில் சொல்லவேண்டும் என்ற சர்வதேசத்தின் கோரிக்கையை இலங்கை அரசுமதிக்க வேண்டும்; அதனை அங்கீகரிக்கவேண்டும்.

எங்கு, எப்போது, மனிதஉரிமைச் சட்டங்கள் மீறப் பட்டதாக நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப் பெற்றாலும் அங்கு உரிய முறையிலான விசாரணை நடத்தப்பட்டாக வேண்டும்
இதுவிடயத்தில் இலங்கை அரசுவெளிப்படையாக இருக்கவேண்டும். சர்வதேசத்துக்குப் பொறுப்புக் கூறவேண்டும்.

என்றும் ஐ.நாவின் செயலாளர்நாயகம் இலங்கை அரசை மிகவும் அழுத்தி அழுத்தி, வலியுறுத்தி வலி யுறுத்திக் கேட்டிருக்கிறார்.

உலக மாமன்றமான ஐக்கியநாடுகள் சபையின் பொறுப்பு வாய்ந்த மிக உயர் அதிகாரியான செயலாளர்நாயகம் இந்த அளவுக்கு இலங்கை அரசைப் பார்த்து அழுத்தியும் வலி யுறுத்தியும் கேட்பது ஏன்?

தாம் சொல்வதை இலங்கை அரசுஏற்று போர்க்குற்ற விசாரணைக்கு இணங்குமா என்ற சந்தேகம் அவரது மனதில் ஆழப்பதிந்திருப்பதாலேயேதமது கோரிக்கையை இலங்கை காதில்போடாமல் ஏதேனும் சாக்குப்போக்குக் கூறி தட்டிக்கழிக்கலாம், ஏன் நிராகரிக்கவும் செய்து விடலாம் என்ற சந்தேகத்தாலேயே, ஐயுறவாலேயேதிருப்பித்திருப்பி வலியுறுத்தியிருக்கிறார்; இடித்துரைத்திருக்கிறார் பான்.

ஐ.நா செயலாளர்நாயகம் இலங்கை அரசின்மீது இவ்வாறு சந்தேகமுறுவதற்கு காரணகாரியங்கள் இல்லாமலில்லை.

ஏற்கனவே ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைக் கவுன்ஸிலின் விசேட அமர்வில் இலங்கையின் போர் பாதிப்புக் குறித்து விசாரணை செய்யப்படவேண்டும் என்று பதினேழு நாடுகள் கொண்டுவரவிருந்த பிரேரணையைத் தடுத்து, தனக்குச் சாதகமான பிரேரணை யொன்றை நிறைவேற்றச்செய்த "கெட்டித்தனம்"இலங்கை அரசிடம் இருந்தது!
இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றதை இலங்கை அரசே விசாரணை செய்யவேண்டும் என்றும், தன்னைக் கண்டிக்கும் வாசகங்களை நீக்கியும் 29 நாடு களைக்கொண்டு தனக்குச் சாதகமான தீர்மானத்தை வருவித்த "திறமை"இலங்கை அரசுக்கு இருந்தது. இதற்கு இந்தியா போன்ற பெரிய நாடுகளை அது வளைத்துப் போட்டிருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த பரகசியம்.

பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகள் எதிர்த்த போதிலும் தனக்குச் சாதகமான பிரேரணையை நிறைவேற்றுவதில் இலங்கை அரசுவெற்றிகண்டது. இதற்குப் பின்னால், திரைக்குப் பின்னால், என்னென்னவோ, ஏதேதோ எல்லாம் நடந்திருக்கலாம் என்ற ஐயப்பாடு தோன்றுவது ஒன்றும் புதியதும் அல்ல.

பாதுகாப்புச்சபையில் இலங்கை அரசுக்குச் சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட துணிவில்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை, பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணைகள் நடத்தவேண்டும் என்று இலங்கை விவகாரம் மீதான விசேட அமர்வின்போது வலியுறுத்தியிருந்தமையையும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தியிருந்தமையையும் பொருட் படுத்தாது, கணக்கிலெடுக்காது
இலங்கையிலேயேவிசாரணைகளை நடத்த இயலும் என்றும் இந்த நாட்டிலுள்ள நீதிமன்றங்கள் சீராக இயங்குவதால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றில் முறையிடலாம் என்றும் அரச தரப்பில் அமைச்சர் மகிந்த சமரசிங்க விட்டெறிந்து கூறியிருந்தார்.

போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை என்றதும் ஒவ்வாமை தலைக்கேறி இலங்கை அரசுசன்னதம் ஆடும் பின்புலத்தில், தாம் விடுக்கும் கோரிக்கையை இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளாது தூக்கிவீசிவிடுமோ என்ற "கௌரவ அச்சம்"பான் கீ மூன் மனதில் எழுவது இயல்பே.

சீனா, ரஷ்யா, இந்தியா மற்றும் வல்லமைகொண்ட நாடுகளின் ஆதரவு தனக்கு எப்போதும் உண்டு. அவற்றை எப்படியும் வளைத்துப்போட்டுவிடலாம் என்ற துணிச்சலிலும் இலங்கை அரசுசர்வதேச விசாரணையை தொடர்ந்து தட்டிக்கழித்துக் கொண்டிருந்தால்
ஐக்கியநாடுகள் சபையினாலேயேஇதுவிடயத்தில் இலங்கை அரசை வழிக்குக்கொண்டுவர முடியவில்லை யென்றால்
இலங்கைப் போரில் நடைபெற்ற மனிதாபிமான உரிமை மீறல்கள் வெளிச்சத்துக்கு வராமலேயேமறைக்கப்பட்டுவிடும்.

இது உலக சமூக நீதிக்கு விடுக்கப்படும் சவால் என் பதை சர்வதேசம் எப்போது உணருமோ......? இவ்வாறு எல்லா நாடுகளும் தம்மைத்தாமே காத்துக்கொண்டால் ஐக்கியநாடுகள்சபை மற்றும் ஏனைய மன்றங்கள் எதற்கு.....?
நன்றி
-உதயன்-

0 Comments: