Thursday, June 18, 2009

காலாவதியாகி முடிவுக்கு வரும் மற்றொரு கண்துடைப்பு நாடகம்

அரசுக்குக் கெட்ட பெயர் வாங்கித் தருகின்ற அல்லது அரசுஉடனடியாக தீர்வு காண விரும்பாத ஒரு சர்ச்சைக்குரிய விடயம் எழும் என்றால் அதனை சமாளித்து, காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசுத் தலைமைக்கு ஒரு வழியுண்டு.
சம்பந்தப்பட்ட விடயம் குறித்து ஆராய்ந்து, விரிவாக விசாரித்து, உரிய சிபாரிசுகளை நீண்ட அறிக்கை வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர்களையோ, பிரமுகர்களையோ கொண்ட ஆணைக்குழு ஒன்றை அவ்விடயம் குறித்து விசாரிக்க நியமிப் பதுதான் அந்த ஒரே வழி.
ஆணைக்குழு அமைக்கப்படுவதற்கான அறிவிப்புடன் அந்த சர்ச்சைஅடங்கிப் போய்விடும். காலத்தை இழுத்து, நேரத்தை விழுங்கி, பெருமளவு நிதியைச் செலவிட்டு சில சமயங்களில் விசாரணை பூர்த்தியடையாமலேயே ஆணைக் குழு காலாவதியாகிச் செத்துவிடும். இல்லையேல் கண் துடைப்புக்காக இடைக்கால அறிக்கை, இறுதி அறிக்கை என்று பெரும் ஆரவாரத்துடன் அது சமர்ப்பிக்கும் மிக மொத்த மான கோவைகள், அவற்றை அரசுத் தலைவரிடம் கையளிப் பது தொடர்பான படங்கள் ஊடகங்களில் வெளியாவதுடன் அடங்கிப் போய்விடும். அதற்கு மேல் எதுவும் நடக்காமல் அந்த விடயம் கிணற்றில் போட்ட கல்லாக அமுங்கி விடும்.
இதுதான் பொதுவாக இந்த தேசத்தின் ஆணைக்குழுக்கள் பற்றிய பொதுவான பட்டறிவு.மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் நிஸங்க உடலகம தலைமையிலான எட்டு ஆணையாளர்களைக் கொண்ட ஆணைக்குழுவின் கதியும் கடைசியில் இப்படித் தான் போய்முடிந்திருப்பது போலத் தெரிகின்றது.
மர்மமான முறையில் யாழ் வண.பிதா ஜிம் பிறவுண் காணாமற் போனமை, வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர், ரவிராஜ் எம்.பி., ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி., அரசசமாதானச் செயலகத்தின் பிரதி இயக்குநர் லோகநாதன் கேதீஸ்வரன் ஆகியோரின் படுகொலைகள், திருகோணமலை நகரில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை, மூதூரில் இருந்து கந்தளாய்க்குப் பயணித்துக் கொண்டிருந்த 14 கிராம வாசிகள் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டமை, செஞ்சோலையில் 51 பேர் கொல்லப்பட்டமை, ரதல்ல கிராமத்தின் பத்து முஸ்லிம் கிராமவாசிகள் கொலையுண்டமை, கெப்பிட் டிக்கொலாவையில் 68 பயணிகள் கிளைமோரில் கொல்லப் பட்டமை, தம்புள்ளவில் 98 படையினர் தற்கொலைத் தாக் குதலில் கொல்லப்பட்டமை, வெலிகந்தவில் தலையில்லா ஐந்து முண்டங்கள் கண்டு பிடிக்கப்பட்டமை போன்ற மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதினாறு குறித்து விசாரிப்பதற்காக இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவங்கள் யாவும் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற் றவையாகும்.
நாட்டில் இடம் பெற்று வந்த மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் கண்டனக்குரல்கள் எழுந்தபோது அவற்றைச் சமாளிப் பதற்காக பெயருக்கு இந்த ஆணைக்குழு நியமனம் பற்றிய அறிவிப்பு அரசுத் தலைமையால் வெளியிடப்பட்டது. அப்போதே இது வெறும் கண்துடைப்பு நாடகம் என்று இப் பத்தியில் சுட்டிக்காட்டியிருந்தோம்.சுமார் இரண்டு வருடங்கள் இழுத்துப்பறித்து, காலத்தை விழுங்கிய பின், உருப்படியாக எதையும் சாதிக்காமலேயே இப்போது அந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவுற்று, அது செத்துச்செல்லாக்காசாகி விட்டது. நாம் குறிப்பிட்ட மாதிரியே அது கண்துடைப்பு நாடகமாக இப்போது முடிவுக்கு வந்திருக்கின்றது.

இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போதே அதன் விசா ரணைப் போக்குக் குறித்து உள்நாட்டிலும் சர்வதேசமட்டத் திலும் பல்வேறு சந்தேகங்களும் முன் ஆட்சேபனைகளும் தெரிவிக்கப்பட்டன.இதனையடுத்து, இந்த ஆணைக்குழுவின் விசாரணை களைக் கண்காணிப்பதற்காக அவை ஒழுங்காக நடைபெறு கின்றனவா என்பதை மதிப்பீடு செய்வதற்காக சர்வதேசபிரமுகர்களைக்கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றை இந்தியாவின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் பகவதி தலை மையில் இலங்கை அரசுத் தலைவர் நியமித்தார்.அந்தக் கண்காணிப்புக் குழுவும் இலங்கையில் வந்து தங்கியிருந்து இந்த ஆணைக்குழு விசாரணைகளின் போக்கை யும் நோக்கையும் ஆற அமர அவதானித்தது. விசாரணை களை ஆரம்பிப்பதில் காட்டப்பட்ட வேண்டுமென்ற போக்கிலான இழுத்தடிப்பு, விசாரணைகளில் அரசுசட்ட முகவர்களின் அளவுக்கு மீறிய பங்களிப்பு, அழுத்தம் போன்ற வற்றை எல்லாம் கவனத்தில் கொண்ட சர்வதேசபிரமுகர்களின் கண்காணிப்புக்குழுவும், இந்த விசாரணைகள் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் இவற்றைக் கண்காணிப்பதில் அர்த்தமில்லை என்றும் பகிரங்க அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டது.ஆக, பெரிய ஆரவாரத்துடன், பெருமளவு நிதியையும் காலத்தையும் விழுங்கியவாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த கண் துடைப்பு நாடகம் அந்த ஆணைக்குழுவின் சேவைக்காலம் திரும்பவும் நீடிக்கப்படாமல் காலாவதியாக விடப்பட்ட நிலையில் இப்போது தானாகவே முடிவுக்கு வந்துவிட்டது.இனி என்ன?
இதுவரை நடைபெற்ற "சமாளிப்பு"விசாரணை தொடர் பான அறிக்கைகளை அரசுத் தலைவரிடம் கையளிப்பது போன்ற மற்றொரு நாடக அங்கத்தை அரங்கேற்றி விட்டு இவ்விவகாரத்தை அப்படியே கிடப்பில் போடவேண்டியது தான்.
2006 இல் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான கண்டனங்களையும், ஆட்சேபங்களையும், கடும் எதிர்ப்புக்களையும் மீறும் வகையில் அண்மைக் காலத்தில் மிகமிக மோசமாக அரங்கேறிய இனவழிப்புக் கொலைகள், மனித உரிமை மீறல் கொடூரங்கள் தொடர்பான ஆட்சேபனைகள் வந்து விட்டதால் பழையவற்றைக் கிடப்பில் போட்டு அப்படியே அமுங்கிப் போகவிடுவது சில சமயங் களில் நியாயமானதாகவும் கூட அர்த்தப்படுத்தப்பட்டு விட லாம். என்ன செய்வது, அப்படித்தான் உள்ளது நமது நாட்டு நிலைமை.....!

நன்றி
உதயன்

0 Comments: