சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்திய கடற்படைத் தலைமையகம் மீது வான்புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தியுள்ள தாக்குதலானது களநிலைமை குறித்த மறு மதிப்பீடு ஒன்றிற்குச் செல்ல வேண்டியதானதொரு நிர்ப்பந்தத்தைச் சிறிலங்காப் படைத்தரப்பிற்கு மட்டுமல்ல வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளுக்கும் நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும் என்றே உறுதியாக நம்பலாம்.
கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள் மற்றும் உடமை இழப்புக்கள் என்பனவற்றின் அளவு, தொகை என்பன இங்கு முக்கியமானதொரு விடயம் அல்ல.
சிறிலங்காப் படைத்தரப்பின் அதி முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையம் ஒன்றின் மீது இலக்குத் தவறாது வான்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளமையும், விடுதலைப் புலிகளின் வான் கலங்கள் தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளமை என்பதுமே இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சிறிலங்கா அரசும், அதன் ஆயுதப் படைத்தரப்பும் அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் பிரச்சாரத்தின் பிரகாரம் விடுதலைப் புலிகள் இயக்கமானது மிக விரைவில்- குறிப்பாக இவ்வாண்டின் இறுதிக்குள் தோற்கடிக்கப்பட்டுவிடும் என்பதே.
அதிலும் குறிப்பாக இராணுவம் கிளிநொச்சி நகரை நெருங்கிவிட்டது. இன்னமும் ஓர் கடுமையான மோதலின் பின்னர் கிளிநொச்சி நகர் கைப்பற்றப்படுவதோடு, விடுதலைப் புலிகளும் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்பது முக்கியமானதாகும்.
ஆனால், சிங்கள ஊடகங்களோ அதற்கும் சற்று மேலானதாக, மல்லாவி, துணுக்காய், நாச்சிக்குடா ஆகிய மூன்று இடங்களும் கைப்பற்றப்படுமானால் விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டதாகி விடும் எனக் கூறுகின்றன.
ஏனெனில், அங்குதான் - விடுதலைப் புலிகளின் மூன்று முக்கிய தளங்கள் இருப்பதாகவும், அங்கேயே தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தங்கியிருப்பதாகவும் அவை பிரச்சாரம் செய்கின்றன. ஆகையினால், இத்தளங்கள் கைப்பற்றப்பட்டால் புலிகள் ஒழிக்கப்பட்டு விடுவார்கள் என அவை கூறுகின்றன.
இத்தகையதொரு நிலையில் வான்புலிகள் கடற்படையின் கிழக்குத் தலைமையகம் மீது தாக்குதலை நடத்தி விட்டுத் திரும்பி வந்தமை இரு பிரதான கேள்விகளை எழுப்புபவையாகவுள்ளன.
01. சிறிலங்காப் படைத்தரப்பு கூறிக்கொள்வது போன்று விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தும் சக்தியை இழந்துவிட்டார்களா?
02. சிறிலங்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகளினால் வான்புலிகளைத் தடுத்து நிறுத்திவிட முடியுமா? என்பவை இவையாகும்.
வான்புலிகள் தற்பொழுது நடத்திய தாக்குதலில் தமக்குப் பாரிய சேதங்கள் ஏற்படவில்லை என்றும், இதுபோன்ற தாக்குதல்கள் தமது இராணுவ நடவடிக்கைகளைப் பாதிக்கமாட்டாது எனச் சிறிலங்கா அரச தரப்பும், படைத் தலைமையும் விளக்கம் அளிக்கவும், பிரச்சாரம் செய்யவும் முற்படலாம்.
ஆனால், இத்தாக்குதல்களை அடுத்து எழுப்பப்படும் கேள்விகள் சிலவற்றைச் சிறிலங்காப் படைத்தரப்பு புறந்தள்ளி விடுதல் என்பது இலகுவான விடயம் அல்ல. இதில் முதலாவதாக தனது வான்படைகளை விடுதலைப் புலிகள் இன்னும் செயல்திறன் மிக்கதாக வைத்துக்கொண்டுள்ளனர் என்பதை அது ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
ஏனெனில், விடுதலைப் புலிகள் இன்னமும் தனது வான்படை மூலம் தாக்குதலை மேற்கொள்ளும் சக்தி கொண்டவர்களாகவுள்ளனர் என்பதை நிரூபணம் செய்துள்ளனர். இதன் காரணமாக விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியிலான செயல்திறன் முடக்கப்பட்டுவிட்டது என்ற பிரச்சாரம் இனி ஏற்றுக் கொள்ளப் படத்தக்கதொன்றாக இருக்கப்போவதில்லை.
அத்தோடு, விடுதலைப் புலிகள் தமது வான் படையை வன்னிப் பிரதேசத்தில் வைத்துப் பராமரிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பது பராமரிப்புக் குறித்த விடயத்தைச் சுட்டிக்காட்டுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
அதாவது, ஏனைய படையணிகள் போன்றில்லாது வான்படையை பராமரிப்பது என்பது கடினமானதொரு விடயமாகும். அதாவது, விமான ஓடுபாதையில் இருந்து விமானங்கள் வரை பாதுகாப்புடன் பராமரிக்க வேண்டியவையாகவுள்ளன.
இத்தகைய நிலையில் வான்புலிகள் சிறிலங்காவின் கேந்திர நிலை ஒன்றின் மீது தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் தளம் திரும்பியுள்ளமையானது வான்புலிகள் முழு மூச்சில் செயற்படும் ஆற்றலைக் கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தும் ஒன்றாகவே கொள்ளத்தக்கதாகும்.
அதிலும் குறிப்பாக வான்புலிகள் சிறிலங்காக் கடற்படையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மீது தாக்குதல் நடத்தியமையானது வான்புலிகள் தமது இருப்பை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கையாக மட்டும் கொள்ளத்தக்கதொன்றல்ல. சிறிலங்காவின் பாதுகாப்பிற்கு அவர்கள் விடுத்துள்ள சவாலாகவே கொள்ளத்தக்கதாகும்.
வான்புலிகள் 2007 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீது தாக்குதலை நடத்தியபோது இத்தாக்குதலானது எதிர்பாராத வேளையில் வான்புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் எனச் சிறிலங்காப் படைத்தரப்பினாலும், அரச தரப்பினாலும் கூறப்பட்டது. அத்தோடு, சிறிலங்காப் படைத்தரப்பு வான் எதிர்ப்பு நடவடிக்கைக்குத் தயாராக இருக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இதனை அடுத்து வான் பாதுகாப்பு செயற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டன. நவீன ராடர் கருவிகள் தென்னிலங்கை உட்பட கேந்திர நிலையங்களில் பொருத்தப்பட்டன. இவற்றில் சிலவற்றைச் சில நாடுகள் அன்பளிப்பாகவும் வழங்கின. அத்தோடு வான் பாதுகாப்பிற்கென நவீன பீரங்கிகளும், ஏவுகணைகள் பொருத்தப்பட்ட விமானங்களும், உலங்குவானூர்திகளும் கொள்வனவு செய்யப்பட்டதோடு, அவை எவ்வேளையிலும் தயார் நிலையிலும் வைக்கப்பட்டன. வெளிநாட்டுப் பயிற்சியாளர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இவற்றிற்கும் மேலாக ராடர் தொகுதியுடன் இணைக்கப்பட்ட தானியங்கிப் பீரங்கிகளும் கொள்வனவு செய்யப்பட்டன.
ஆனால், இரண்டாவது முறையும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு வான்புலிகளின் தாக்குதலுக்குள்ளானபோது இப்பாதுகாப்பு ஏற்பாடுகளினால் வான்புலிகளுக்கு இடையூறு ஏற்படவில்லை. இலக்கைத் தாக்கிவிட்டு வான்புலிகள் தளம் திரும்பியிருந்தனர்.
ஆனால் சிறிலங்காப் படைத்தரப்பில் பயன்படுத்தப்பட்டிருந்த ஆயுத தளவாடங்கள் மீது குறை கூறப்பட்டன. குறிப்பாக இந்தியா அன்பளிப்பாக வழங்கிய 'இந்திய ராடர்கள்" திறம்பட செயலாற்றவில்லை எனக் குறை கூறப்பட்டது. அதன் பின்னர் தாக்குதல் வேளையில் ராடர் இயங்கிக்கொண்டிருக்கவில்லை எனக் கூறப்பட்டது.
இதன் பின்னர் வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரமாகின. நவீன விமானங்கள் விமானப்படையில் இணைக்கவும் பட்டன. இந்த வகையில் வான்படையும், வான் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்ட நிலையில், விடுதலைப் புலிகளின் வான்படையைச் செயலிழக்கச் செய்யும் வகையில் தொடர்ச்சியான வான் தாக்குதல்களை படைத்தரப்பு வான் புலிகளின் நிலைகள் மற்றும் வான்புலிகளின் விமான ஓடுபாதை என்பவற்றின் மீது சிறிலங்கா வான்படை விமானங்கள் மேற்கொண்டன.
சிறிலங்கா வான்படை விடுதலைப் புலிகளின் வான்படையின் ஓடுபாதை மீதான தாக்குதல் எனக் கூறி நடத்திய தாக்குதலை மதிப்பிட்டால் - அப்பகுதியானது பெரும் குன்றும், குழியும் நிறைந்த பகுதியாக இன்று இருத்தல் முடியும்.
இத்தகைய நிலையில் சிறிலங்கா அரச தரப்பும் சரி, வான்படைத் தரப்பும் சரி விடுதலைப் புலிகளின் வான்கலம் எதுவும் இனிமேல் வானில் பறக்க முடியாது எனவும் பறக்க முற்படும் அடுத்த கணமே அவை சுட்டுவீழ்த்தப்படும் எனச் சவால் விடுத்தும் இருந்தன - பல மாதங்கள் வான்புலிகள் தாக்குதல் நடத்தாது இருந்தமை சிறிலங்கா அரச தரப்பிற்கு வாய்ப்பாகவும் இருந்தது.
இத்தகையதொரு நிலையில்தான் வான்புலிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருமலைத் துறைமுகப் பகுதியில் வெற்றிகரமான தாக்குதல் ஒன்றை நடத்திவிட்டுத் தளம் திரும்பியுள்ளனர்.
இத்தாக்குதல் குறித்து சிறிலங்கா அரசும், படைத்தலைமையும் எதனைக் கூறிக்கொண்டாலும், இத்தாக்குதலை அவர்கள் புறம் தள்ளிவிட முடியாது. இதனை ஏ.எப்.பி. செய்திச் சேவையின் மதிப்பீடு வெளிப்படுத்தியது.
'கடந்த 16 மாதகால இடைவெளியில் சிறிலங்காப் படையினர் மீது வான்புலிகள் நடத்திய முதன்மைத் தாக்குதல் திருமலைத் துறைமுகத்தின் மீது நடத்தப்பட்டுள்ளது" எனத் ஏ.எப்.பி. செய்திச் சேவை தனது மதிப்பீட்டினை வெளிப்படுத்தியிருந்தது.
அடிப்படையில், வான்புலிகளின் இத்தாக்குதலானது, சிறிலங்காவின் வான் பாதுகாப்புச் செயற்பாடுகள் குறித்து மறு பரிசீலனை செய்யவேண்டியதான கட்டாயம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, வான்புலிகளின் பறப்பை சிறிலங்கா வான்படையாலோ, சிறிலங்கா வான் பாதுகாப்பு செயற்பாடுகளினாலோ கட்டுப்படுத்த முடியாது என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, விடுதலைப் புலிகளின் வான் படையைச் செயலிழக்கச் செய்வதற்காக இதுவரை சிறிலங்கா மேற்கொண்ட வான் தாக்குதல்கள் எவையும் வான்புலிகளை முடக்கி விடுபவையாகவோ அவர்களின் செயற்பாட்டை ஒழித்து விட்டனவையாகவோ அமையவில்லை என்பதாகும்.
இதேவேளை, வான்புலிகள் தாக்குதலுக்கு நீண்டகால இடைவெளியை எடுத்துக்கொண்டமையானது வான்புலிகளின் செயல்திறன் பாதிக்கப்பட்டதினால் அல்ல, தேவைக்கான காத்திருத்தல் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இது தனியாக வான்புலிகளுக்கு மட்டும் தான் பொருத்தப்பாடானதொன்றல்ல. விடுதலைப் புலிகளைப் பொறுத்து - அதாவது, அதன் பல்வேறு வகை படைக் கட்டுமானங்களைப் பொறுத்தும் பொருத்தப்பாடான தொன்றாகவே கொள்ளத்தக்கதாகும்.
எடுத்துக்காட்டாகக் கடற்புலிகளின் நடவடிக்கைகள் இன்று மட்டுப்படுத்தப்பட்டுள்ள வேளையில் அது சிறிலங்காக் கடற்படையின் மேலாண்மையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கொள்ளப்படுதல் சரியானதொரு மதிப்பீடாக இருக்கமாட்டாது. ஏனெனில், கடற்புலிகளின் செயற்பாட்டைச் செயலிழக்கச் செய்யும் வகையில் சிறிலங்காக் கடற்படை சாதனைகள் எதையும் செய்துவிடவில்லை.
மாறாகக் கடற்புலிகளின் சில தாக்குதல் குறித்து இன்னமும் குழப்பமடைந்த நிலையிலேயே சிறிலங்காக் கடற்படை உள்ளது. ஆகையினால், சிறிலங்காப் படைத்தரப்பின் பிரச்சாரத்தின் அடிப்படையிலோ அன்றி களமுனையில் வெளிப்படையாகத் தெரியும் சில விடயங்களின் அடிப்படையிலோ யுத்தம் குறித்து தீர்மானம் எடுப்பவர்கள் தவறாக மதிப்பீடு ஒன்றிற்குச் செல்பவர்களாகவே இருப்பர்.
நன்றி: - ஜெயராஜ் - வெள்ளிநாதம் (29.08.08)
Friday, August 29, 2008
வான்புலிகளின் தாக்குதல் எழுப்பும் கேள்விகள்!
Posted by tamil at 6:21 AM 0 comments
Wednesday, August 20, 2008
சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆளும் வர்க்கம் தொடர்ந்து வளைந்து கொடுப்பது தேசத் துரோகம்
கடந்த 10 ஆம் திகதி வெளிவந்த ""சன்டே லீடர்' ஆங்கில வார இதழுக்கு நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன வழங்கிய விலாவாரியான செவ்வியில் ""பயங்கரவாதம் தோற்றம் பெறுவதற்கு சிங்கள தீவிரவாதிகளே காரணம்' எனும் விடயத்தினை பிரதானமாகக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவரால் முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான இரண்டொரு அபிப்பிராயங்களை மேற்கோள்காட்டுவது அவசியமாகிறது. அதில் முதலாவது அம்சம் வருமாறு; "" நாம் 25 வருட காலமாக நடைபெற்று வந்த போராட்டத்தைப் பற்றிப் பேசுகின்றோம். இதனை நாம் இராணுவ அணுகுமுறையினூடாக வென்று விடக்கூடும். பயங்கரவாதத்தினை நாம் தோற்கடிக்கக்கூடும். ஆனால், பயங்கரவாதமானது நோயின் அறிகுறி மட்டுமே. அடிப்படைக் காரணம் எதோ அதற்கே பரிகாரம் காணப்பட வேண்டும். தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் அடக்கியொடுக்கி வந்தமையே அந்த அடிப்படைக் காரணமாகும். அவர்கள் திரும்பத்திரும்ப நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர். 1956 முதல் அவர்கள் சிங்கள தலைமைகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். பிரச்சினையை பிசாசுபோல் வளரச் செய்தவர்கள் சிங்கள தீவிரவாதிகளே... உண்மையில் சிங்கள தீவிரவாதிகளின் கைவரிசை காரணமாகவே இன்று நாம் பயங்கரவாதத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.' இங்கே பயங்கரவாதம் என சேனாரத்ன குறிப்பிடுவது தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரச் செயற்பாடுகள் என்பது தெளிவாகிறது. ""சிங்கள தீவிரவாதிகளின் கைவரிசை காரணமாகவே இன்று நாம் பயங்கரவாதத்திற்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது' என அவர் குறிப்பிட்டுள்ளாரே ஒழிய, ""சிறுபான்மையினரின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கென அதிகாரப்பகிர்வு செய்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளையும் முறியடித்து நாடு யுத்தத்தில் சிக்குண்டிருப்பதற்குப் பாத்திரவாளிகளாயுள்ள சிங்கள தீவிரவாதிகள்' எவ்வாறு கையாளப்பட வேண்டுமென்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார்.
சேனாரத்ன தெரிவித்த கருத்துகளின் இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம். சமஷ்டி எனும் சொற்பதம் அதிகப்பெரும்பான்மையான சிங்கள மக்களால் தவறாகப் புரிந்துவைக்கப்பட்டுள்ளது. பிரச்சினை இதுதான். அதாவது சமஷ்டி முறைமையானது இரு சமூகங்களுக்கும் இடையில் ஒரு நியாயம் நீதியான அரசியல் நிலைப்பாடாக அமையக்கூடியது என முதன்முதலாக தமிழ் அரசியல்வாதிகளாலேயே முன்வைக்கப்பட்டது. அன்று முதல் சமஷ்டி என்பது பிரிவினைக்கு ஒப்பானது என்ற எண்ணம் சிங்கள மக்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கின்றது. சமஷ்டிவாதிகள் நீண்டகாலத்தின் பின் தனிநாடு அல்லது தமிழீழம் கோரினர். எனவே, சமஷ்டி முறைமையானது ஏற்றுக்கொள்ளப்பட்டால் தமிழ் அரசியல் கட்சிகள் என்றாவது தனிநாட்டுக்காகப் போர்க்கொடி உயர்த்தக்கூடும் என்ற உட்பயம் இருக்கவே செய்கிறது. ஆனால், சமஷ்டி என்பது ஐரோப்பிய நாடுகளிலோ அண்டை நாடான இந்தியாவிலோ விரும்பத்தகாத ஒன்றல்ல. அவை இலங்கையின் அனுபவத்தைச் சந்திக்காத படியால் கூடுதலான விட்டுக்கொடுப்பு மனப்பாங்குடன் அதனை அதிகாரப்பகிர்வு என்ற கருத்தியலாகக் கையாள்வதற்குரிய பக்குவத்தினைக் கொண்டிருக்கின்றன.'
சிங்கள தீவிரவாதிகள் செய்துள்ள நாட்டுத்துரோகம்
இங்கே கவனிக்கப்படவேண்டியது யாதெனில், அதிகப்பெரும்பான்மையான சிங்கள மக்கள் சமஷ்டி என்பதை முற்றிலும் தவறாகப் புரிந்துவைத்துள்ளனர் என்றாலும் கூட சிங்கள தீவிரவாதிகள் சிங்கள பொதுமக்கள் மத்தியில் மேற்கொண்டுவந்த விசமத்தனமான பிரசாரமே அதற்குக் காரணமாகும். 10 விழுக்காட்டுக்கும் குறைவான எண்ணிக்கையிலான சிங்கள தீவிரவாதிகளுக்கு இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் வளைந்து கொடுத்து வந்துள்ளன. நிச்சயமாக அதன் காரணமாகவே நாட்டின் சமாதானம், சுபீட்சம் மற்றும் ஒட்டுமொத்தமான முன்னேற்றத்திற்கு பலத்த குந்தகம் ஏற்பட்டுவந்துள்ளதை முதலாளித்துவ பிற்போக்குவாத ஆட்சியாளர் கிஞ்சித்தும் பொருட்படுத்துவது கிடையாது. இதுவே நாட்டுக்குச் செய்யப்பட்ட பெரிய துரோகமாகும்.
பிரிவினையைத் தவிர்க்கும் நோக்கிலேயே செல்வநாயகம் சமஷ்டி முறைமையை முன்வைத்தார்
சமஷ்டி முறைமையானது தமிழ் அரசியல்வாதிகளாலேயே முதன்முதலாக முன்வைக்கப்பட்டது என்பது தவறாகும். முதன்முதலாக 1926 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவாலும் பின்பு 1947 இல் கண்டியில் சிங்களத் தலைவர்களாலுமே அது முன்வைக்கப்பட்டது. 1949 இல் தமிழரசுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே தமிழர் சார்பில் அக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தால் சமஷ்டி முறைமை கோரப்பட்டது. என்றாவது ஒருநாள் நாடு பிரிந்து போவதைத்தவிர்க்கும் நோக்கிலேயே அக்கோரிக்கையை பிரேரிக்கத்தலைப்பட்டதாக செல்வநாயகம் அன்று சூளுரைத்திருந்தார். ஆனால் சிங்கள தீவிரவாதிகள் சமஷ்டி முறைமையை இடையறாது அழுங்குப்பிடியாக எதிர்த்தமையால் அரசாங்கங்களும் தத்தம் ஆட்சியை தக்கவைப்பதற்காக அரசியல் உறுதியின்றி அவர்கட்குத் தலை வணங்கிச் செயற்பட்டு வந்தமையால், 1976 இல் தமிழ் தலைமைகள் தனிநாட்டுக்காகப் போராட வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டன. அதுவும் வெறுமனே சாத்வீகப் போராட்டத்தின் மூலம் எட்டக்கூடியதல்ல என்ற நிலையில் அன்றைய ஜே.ஆர்.ஜயவர்த்தன அரசாங்கம் 1977 இல் பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மற்றும் 1981 இல் யாழ்.நூல் நிலையம் அரச தரப்பினரால் எரியூட்டி சாம்பலாக்கப்பட்டதும் மற்றும் இன்னோரன்ன சூழ்நிலையில்தான் தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத்தள்ளப்பட்டனர். இந்த வரலாற்றுப் பின்புலத்தினை வெகுஇலகுவாக மறந்துவிட்டது மட்டுமல்லாமல், சின்னாபின்னப்பட்டிருக்கும் நாட்டை ஒருங்கிணைக்கும் வகையிலான ஆக்கபூர்வமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு வக்கற்ற நிலையிலேயே ஆட்சியாளர் பயங்கரவாதத்தை துடைத்தெறியப்போவதாக பறைசாற்றி வருகின்றனர்.
மரணித்துவிட்ட 13 ஆவது திருத்தம் பற்றி பேசி அர்த்தமில்லை
இந்த நிலையிலேயே அமைச்சர் சேனாரத்ன தான் அமைச்சர் நாற்காலியில் வீற்றிருந்தாலும் கூட ஜாதிக ஹெல உறுமய (ஜே.எச்.யூ.) மற்றும் தேசபக்த தேசிய முன்னணி (கNM) போன்ற அமைப்புகள் தன்மீது தொடுத்துவரும் கடுமையான தாக்குதல்களையும் பொருட்படுத்தாமல் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்செய்யப்பட வேண்டுமென தான் உருகி உழைப்பதாகக் கூறியுள்ளார்! அவ்வாறாக அவர்கள் பெற்றுக்கொள்ளும் அனுபவத்தின் ஊடாக மனமாற்றமடைந்து சமஷ்டி முறைமையை எதிர்ப்பதைக் கைவிட்டுவிடுவார்கள் என சேனாரத்ன கூறியிருப்பது வேடிக்கையாயுள்ளது. 13 ஆவது திருத்தமானது வடக்கு, கிழக்குக்கென சமச்சீரற்ற அதிகாரப்பகிர்வு அடங்கலானதோ தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் காத்திரமான சுயாட்சி அதிகாரம் கொண்டதாகவோ இல்லை. அதுமட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கை சிங்கள தீவிரவாதிகளின் விருப்பத்திற்கேற்ப நீதித்துறையை நாடித் துண்டாடிய பின் முற்றாக மரணித்துவிட்டதாகிய 13 ஆவது திருத்தம் பற்றி பேசுவதில் அர்த்தமில்லை என்பதை சேனாரத்ன போன்றோர் புரிந்துகொள்ளட்டும்.
நாராயணன் கோத்தபாயா கருத்துக்கள்
சென்ற வாரம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சிங்கப்பூர் ""ஸ்றெயிற்ஸ் ரைம்ஸ்' இதழுக்கு வழங்கியிருந்த செவ்வியில் ""தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமரில் இலங்கை (அரசாங்கம்) வெற்றியீட்டினாலும் கூட, தமிழ் மக்கள் அரசாங்கம்பக்கம் இல்லாத படியால் யுத்தத்தில் வெற்றியடைய முடியாது. தமிழர் கொண்டுள்ள கடுமையான விரக்தியையும் வெறுப்புணர்வையும் சகல இலங்கையர்களும் கருத்தில் எடுக்கவில்லை. தமிழருக்கு கூடுதலான அதிகாரங்களை பகிர்ந்தளித்து அவர்கள் இலங்கை அரசின் ஒரு பகுதியினர் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும்' எனக் கூறிவைத்தார். நாராயணன் தெரிவித்த மேற்குறித்த கருத்துகள் தொடர்பாக இந்திய தேசிய செய்திச்சேவை (ஐஅNகு) மையம் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் வினவிய போது, ""நாராயணன் கூறியதில் எதிர்மறையானது ஒன்றுமில்லை. ஜனாதிபதி என்றும் கூறி வந்ததையே நாராயணன் தனது வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, ""பயங்கரவாதம் தோற்கடிக்கப்படவேண்டும். பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்' என தனது கருத்தை கூறியுள்ளார். கோத்தாபய மேலும் கூறியதாவது; ""கடந்த 25 30 வருடங்களாக தமிழ் சமூகத்திற்கு கொழும்பு அரசாங்கங்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை' என்பதாகும்.
உண்மையில் கடந்த 6 தசாப்தங்களாக தமிழருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன என்பதை எவரும் மறந்துவிட முடியாது. 1957 இல் பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் 1965 இல் டட்லி செல்வநாயகம் ஒப்பந்தம் குறிப்பிட்ட சிங்கள தலைவர்களால் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்டவை இரு உதாரணங்கள் மட்டுமே. அத்தோடு, நின்றுவிடாது தமிழ் தலைமைகள் மேற்கொண்டு வந்த சாத்வீகப் போராட்டங்களும் 1960கள் முதல் அரச படைபலம் கொண்டு பட்டவர்த்தனமாக நசுக்கப்பட்டு தமிழரை அழித்தொழிக்கும் கட்டம் வந்துவிட்ட நிலையிலேயே தமிழ் இளைஞர் ஆயுதம் ஏந்தி போராடத் தலைப்பட்டதோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தன்னைப் பலப்படுத்திக்கொண்டது. எனவே, இலங்கை அரசுதான், அந்த இயக்கம் 1980களில் தோற்றம் பெறுவதற்கு வழிசமைத்தது எனும் யதார்த்தத்தினை ஆட்சியாளர் எவராயினும் நிதானமாக புரிந்துகொள்வது அவசியமாகும்.
கோத்தாபய தனது மேற்குறித்த செவ்வியில் மேலும் ஒரு முக்கியமான கருத்தினை கூறிவைத்துள்ளார். அதாவது ""இறுதியில் நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்று சிந்திக்க பழகிக்கொள்ள வேண்டும் என்று. நாம் முதலில் இலங்கையர், அதன் பின்னரே தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் என்று சிந்திப்பதற்கு தலைப்படுகின்றோமோ அன்றுதான் எமது வெற்றி நாள்' என்பதாகும்.
இது உண்மைதான். ஆனால், குறிப்பாக பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் படிப்படியாக சிங்கள பௌத்த மேலாதிக்கம் தலைதூக்கி வந்தபடியால் முரண்பாடுகளும் கசப்புணர்வுகளும் மேற்கிளம்பி தமிழ் மக்கள் அந்நியப்படுத்தப்பட்டு தமிழ்த் தேசியவாதம் வலுப்பெற்றெழுந்தது. மறுபுறத்தில் இலங்கையின் பல்லினத் தன்மையை மனதிற்கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காணவேண்டும் என சிந்தித்து மதச்சார்பின்மைக் கொள்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் என்றோ காணப்பட்டிருக்கும் எனலாம்.
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் கண்ட கனவு
இதனை எழுதும்போது 1920/ 1930 களில் பிரபல கல்விமான் ஹன்டி பேரின்பநாயகத்தின் வழிகாட்டலில் செயற்பட்டு வந்த யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (ஒஙுஇ) அமைப்பின் வரலாறு ஞாபகத்திற்கு வருகிறது. அவ் அமைப்பானது சிங்கள, தமிழ் ஒற்றுமைக்காகவும் பொதுவான இலங்கை தேசிய அடையாளத்திற்குமாக விடாப்பிடியாக சலிக்காது உழைத்து வந்தது. பல வருடாந்த அமர்வுகளை நடத்திவந்தது. வருடாந்த அமர்வுகளின்போது உரையாற்றுவதற்கு தென்னிலங்கையின் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் வருடாவருடம் அழைக்கப்பட்டனர். இளைஞர் காங்கிரஸ் முன்னெடுத்து வந்த சீரிய பணிகளை பண்டாரநாயக்க தவிர மற்றைய தலைவர்கள் குறிப்பாக அன்றைய இடதுசாரித் தலைவர்கள் வெகுவாகப் பாராட்டினர். மற்றும் தென்னிலங்கையில் இருந்து அழைக்கப்பட்ட கல்விமான்களுள் அன்று ஆனந்தா கல்லூரியின் அதிபராய் இருந்தவராகிய பி.டீ.எஸ்.குலரத்தின மிகத் தலைசிறந்து விளங்கியவர். உண்மையில் இரு வருடங்களுக்கான அமர்வுகளில் தலைமை தாங்கும் கௌரவம் குலரத்தினவுக்கு வழங்கப்பட்டது.
1956 இல் நாட்டின் ஒற்றுமைக்கு உலை வைக்கப்பட்டது
துரதிஷ்ர்டவசமாக குறிப்பாக 1956 இல் பண்டாரநாயக்க அரசாங்கத்தால் ""தனிச் சிங்களம்' சட்டம் இயற்றப்பட்டு நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இனவாதம் தலைவிரித்தாடிய நிலையில் ஹன்டி பேரின்பநாயகம் பெரிதும் மனமுடைந்துபோனார். அதாவது இரு தசாப்தங்களாக நாட்டின் ஒற்றுமைக்காக அயராது உழைத்து வந்தவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு நிறைந்த செயற்பாடுகள் விழலுக்கு இறைத்த நீர்போல் ஆகிவிட்டதே என்ற ஆழ்ந்த கவலை யாழ். இளைஞர் காங்கிரஸ் முன்னோடிகள் மத்தியில் ஏற்பட்டது. இலங்கைக்கு சுதந்திரம் வேண்டுமென ""பூர்ண சுவராஜ்' எனக் கோஷமிட்டு இளைஞர் காங்கிரஸ்தான் முதன்முதலில் போர்க்கொடி உயர்த்தியது. இதனை ஜனாதிபதி ராஜபக்ஷ 60 ஆவது சுதந்திர தினத்தில் ஆற்றிய தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான முன்னுதாரணமான விடயங்களை சம்பிரதாயமாகக் கூறுவதைக் காட்டிலும் சிங்கள மக்கள் மத்தியில் அயராது பிரசாரப்படுத்த வேண்டுமல்லவா?
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் ஐக்கியதேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கழுத்தறுப்புப் ப&
நன்றி :- வ.திருநாவுக்கரசு
தினக்குரல்
Posted by tamil at 7:30 AM 0 comments
Sunday, August 17, 2008
பின்வாங்கி முன்னேறும் தந்திரோபாயம்
'ஓரடி பின்னே ஈரடி முன்னே" என்று சீனப் புரட்சித் தலைவர் மாவோ சொன்னார்.
சுனாமி அலை போல் பின்னுக்குச் சென்று முன்னேறி வந்து தாக்குதல் தொடுக்கும் இராணுவத் தந்திரோபாயத்தை அவர் இப்படிப் புலப்படுத்தினார்.
எதிரியின் எதிர்பார்ப்புக்கு இணங்க நாம் எமது உத்திகளை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எமது வசதிதான் எமக்கு முக்கியம். எதற்காகப் பின்னோக்கி வரவேண்டும் என்பதற்கு முக்கிய காரணங்கள் உண்டு.
சண்டைக்குப் பொருத்தமில்லாத களச் சூழலிலிருந்து தந்திரோபாயமாக விலகிவிட வேண்டும். எதிரியை உள்வரவிட்டுத் தாக்குதல் நடத்துவதால் கிடைக்கும் அனுகூலம் பற்றிக் கணிப்பிட வேண்டும்.
தனது அணிக்கு வரவிருந்த இழப்பைத் தவிர்த்து அணியின் கட்டுக்கோப்பைப் பாதுகாக்க வேண்டும். அத்தோடு தட்பவெப்ப மாற்றங்களையும் கருத்தில் எடுக்க வேண்டும். படைய விஞ்ஞானத்தில் பின்வாங்கல் றிற்ரிறீற் (Retreat) (Retreat) எனப்படுகிறது.
முன்னேறித் தாக்குவது எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்குப் பின்வாங்குதலும் முக்கியமானது. றிற்ரிறீற் நன்கு திட்டமிட்டு ஒழுங்கமைவாக நடத்தப்படுகிறது. சிதறி ஓடுவது றிற்ரிறீற் ஆகமாட்டாது. அதையொரு இராணுவத் தந்திரோபாயமாகவும் கணிப்பிட இயலாது.
பெருவிலை கொடுத்துப் பெற்ற வெற்றியால் பயன் இல்லை. அப்படியான வெற்றி கண்ணை விற்றுச்சித்திரம் வாங்குவதற்கு நிகரானது. சிறந்த வீரர்களை இழந்து பெற்ற வெற்றியைப் பைறிக் விக்ரறி (Pyrric Victory) என்பார்கள்.
உண்மையில் அப்படியானதொரு வெற்றி வெற்றியல்ல. எப்பிறுஸ் (Epirus) நாட்டின் மன்னன் பைறுஸ் (Pyrrus கி.மு.319 -கி.மு.272) ரோமாபுரிக்கு எதிராகச் சிசிலியிலும் இத்தாலியிலும் தொடர்ச்சியாகப் போராடினான்.
அஸ்கூலம்(Asculum) என்ற போரில் அவன் பெருவெற்றி ஈட்டினான். ஆனால் இந்தப் போரில் தனது தலைசிறந்த முன்னணி வீரர்களை இழந்துவிட்டான். மரணித்த வீரர்களை எண்ணி அவன், 'இந்த மாதிரி இன்னுமொரு வெற்றிபெற்றால் நாம் தொலைந்தோம்" என்றான். ஒரு பைறிக் விக்ரறியிலும் பார்க்கப் பின்வாங்குவது உத்தமம்.
ஒரு படைத் தலைவனின் முக்கிய கடமை எதிரிக்கு அதியுச்ச உயிர் இழப்பை ஏற்படுத்துவதோடு தனது படையணியின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி அதன் கட்டுக்கோப்பை குலையாமல் வைத்திருப்பதாகும்.
எண்ணிக்கையில் குறைந்த இனங்கள் நடத்தும் விடுதலைப் போரில் உயிரிழப்பை இயன்றளவு குறைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கு மனித அலைப் போர்முறை (Human Wave Warfare) சரிவராது. குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களை வைத்துக்கொண்டு போரியல் தந்திரோபாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.
தரை அமைவின் முக்கியத்துவத்தை இவ்விடத்தில் குறைத்து மதிப்பிட முடியாது. எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் தரை அமைவு தனது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் தரை அமைவு ஆகிய இரண்டும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை.
தரை அமைவு என்றால் மேடு, பள்ளம், வெட்டைவெளி, அடர்ந்த காடு, பாலை நிலம் என்பன உள்ளடங்கும். தீர்மானிக்கும் வலு தரை அமைவுக்கு உண்டு.
(Terrain is Decisive) என்பது படைத் துறைக் கோட்பாடு. தரை அமைவு பொருத்தமில்லாது விட்டால் பின்வாங்கு அல்லது விலகிவிடு என்பது பொதுவிதி. இதை அசட்டை செய்தால் பெரும் விலைகொடுக்க நேரிடும்.
பின்வாங்கிச் செல்லும் போது எதிரியால் மறக்க முடியாத மின்னல் அடியைக்கொடுத்துச் செல்வதைப் பார்த்தியன் சொட் (Parthian Shot) என்று சொல்வார்கள்.
கஸ்பியன் கடலுக்குத் தென் கிழக்கில் இருந்த பார்த்தியா (Parthia) என்ற பழைய நாட்டின் வில் அம்பு ஏந்திய குதிரைப் படைவீரர்கள் ஒரு விசேட தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்தார்கள். இதைத் தான் பார்த்தியன் சொட் என்கிறார்கள்.
களத்தை விட்டுவெளியேறும் போது குதிரை முதுகில் இருந்த படியே உடலைத் திருப்பி இரு கைகளாலும் அம்பை வில்லில் பொருத்தி எதிரி மீது எய்வார்கள். குதிரை வீரனின் முழங்காலால் செலுத்தப்பட்டு குதிரை ஓடிக்கொண்டிருக்கும். களத்தைவிட்டு வெளியேறுவது போல் பாசாங்குசெய்தபடி எதிரி மீது அம்புகளைப் பொழிவார்கள்.
உண்மையிலேயே களத்தில் இருந்து பின்வாங்கும் போதும் அப்படிச் செய்வார்கள். இரண்டும் பார்த்தியன் சொட் என்று அழைக்கப்படுகின்றன. இந்தச் சொற்றொடர் இன்றும் பாவனையில் இருக்கிறது.
நவீன ஐரோப்பிய வரலாற்றில் பின்வாங்கல் தந்திரோபாயத்தை மிகத் திறமையாகக் கையாண்டவர் என்று ரஷ்யத் தளபதி மிக்கெயில் குட்டு சோவ் (Mikhail Kutuzov 1745 - 1813) குறிப்பிடப்படுகிறார்.
ஐரோப்பாக் கண்டம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தனது திட்டத்திற்கும் பரந்த நிலப்பரப்பைக் கொண்ட ரஷ்யா பெரும் தடங்கலாக இருக்கும் என்று நெப்போலியன் பொனாப்பாட் தீர்மானித்தார். ரஷ்யாவைக் கைப்பற்றுவதற்காக 600,000 வீரர்கள் அடங்கிய பெரும் படையை 1812 இல் அவர் வழிநடத்திச் சென்றார்.
ரஷ்யத் தளபதி குட்டுசோவ் அப்போது 67 வயதினராக இருந்தார். 29 வயதில் துருக்கியப் படைகளோடு மோதியபோது ஒரு கண்ணை இழந்துவிட்டார். அவரை ரஷ்யப் படைத்தளபதி நிலைக்கு உயர்த்திய ஜெனரல் அலெக்சாந்தர் சுவரோவ் (Alexander Suvor0v) குட்டுசோவை தந்திரத்தில் நரி என்று வர்ணித்தார்.
1812 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ரஷ்யா மீதான தாக்குதலை நெப்போலியன் தொடங்கினார். தான் கைப்பற்றிய பல நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட அந்தப் பெரும்படையை முகாமைத்துவம் செய்வது பெரும்பாடாக இருந்தது.
உணவு வழங்கல், மருத்துவ வசதி என்பன சிறிது காலத்தின் பின் தட்டுப்பாடு நிலையை அடையத் தொடங்கின. பெரும் எண்ணிக்கையில் குதிரைகள் கொண்டுவரப்பட்டதால் குதிரைகளுக்கான உணவும் பெருமளவில் குறைந்துவிட்டது.
குட்டுசோவ் ஒரு வித்தியாசமான போர்முறையைத் தொடக்கினார். தாக்குவதும் பின்வாங்குவதுமாக அவர் நெப்போலியன் படைகளை வெகுதூரம் நாட்டிற்குள் கொண்டுவந்து விட்டார். ஒரு இறுதி வெற்றியைப் பெற நெப்போலியன் ஆவலாக இருந்தார். அது கிடைக்கவில்லை. குட்டுசோவின் கீழ் நிலைத் தளபதிகளுக்குத் தங்கள் தலைவனின் நடைமுறை பெரும் புதிராக இருந்தது.
ஆனால் மிகக் குறைந்த அழிவுகளோடு ரஷ்யப் படைகள் பின்வாங்கிச் கொண்டிருந்தன. தந்திரோபாயமாகத் தப்பிச் செல்லும் எதிரிப் படையைத் துரத்திச் செல்லும் நிலையில் பிரெஞ்சுப் படைகள் இருந்தன. இது வெறும் கால விரயத்தை ஏற்படுத்தியது..
நெப்போலியனின் இந்தப் படையெடுப்புப் பற்றிய ஆய்வுகளும் வரலாற்று ஆவணங்களும் குட்டுசோவ் நடைமுறைபடுத்திய போர் முறையை வானளாவப் புகழ்கின்றன.
வேறு விதமான போர்முறை படுதோல்வியில் முடிந்திருக்கலாம் என்றும் அவை கூறுகின்றன. குட்டுசோவின் கட்டளைக்கு அமைவாக பின்வாங்கு முன் இயற்கை வளங்களையும், குடியிருப்புக்களையும் ரஷ்யர்கள் தீயிட்டு அழித்தார்கள். இதனால் நெப்போலியனின் படைகளுக்குக் கிடைத்ததை உண்ணவும் சூறையாடவும் வசதி ஏற்படவில்லை.
ரஷ்யப் படைகள் பின்வாங்கியபோது ரஷ்ய மக்களும் கிராமம் கிராமமாக படைகளுக்குப் பின்னால் இடம்பெயர்ந்தனர். பெரும் மனித அவலம் ஏற்பட்டது. ஆனால் அந்தக் காலத்தில் அதுபற்றிக் கவலைப்பட அரசோ அமைப்போ தயாராக இல்லை.
பொறொடினோ (Borodino) என்ற தூங்கு மூஞ்சிக் கிராமத்தில் நெப்போலியனின் படைகளோடு நேருக்கு நேராக மோதுவதற்கு குட்டுசோவ் செப்டம்பர் 1812 இல் தயாரானார்.
1805 ஆம் ஆண்டில் அவுஸ்திரிய ரஷ்யக் கூட்டுப்படைகளை நெப்போலியன் ஒஸ்ரலிற்ஸ் (Austerlitz) களத்தில் புறமுதுகு காட்டச் செய்தார். ஒஸ்ரலிற்ஸ் இப்போதைய செக் குடியரசில் இருக்கிறது. ஒஸ்ரலிற்ஸ் போரில் ரஷ்யப்படைகளின் தளபதியாகக் குட்டுசோவ் இருந்தார்.
'மீண்டும் ஒஸ்ரலிற்ஸ் சூரியன் உதயமாகிவிட்டது" என்று நெப்போலியன் பொறொடினோப் போர் தொடங்குமுன் சொன்னார். 'என்னுடைய போர்களில் எல்லாவற்றிலும் மிகக் கொடியது" என்று பொறொடினோப் போர் முடிந்தபின் நெப்போலியன் சொல்லுமளவுக்கு நிலைமை மாறிவிட்டது.
இருபகுதிக்கும் பேரிழப்பு ஏற்பட்டது. ஆனால் ரஷ்யப் படைகள் முற்றாக அழியாமல் தலைநகர் மொஸ்கோவுக்குத் தப்பிச்சென்றன. துரத்திச்சென்ற நெப்போலியனின் படைகள் மொஸ்கோவைக் கைப்பற்றின.
கிறெம்லின் (Kremlin) எனப்படும் அரச பீடக் கட்டடத் தொகுதிக்குள் நெப்போலியன் நுழைந்தார். இறுதிச் சண்டை மொஸ்கோவில் நடக்கும் என்று இருபகுதியினரும் நினைத்தார்கள். ஆனால் குட்டுசோவ் என்ற நரி பின்வாங்குதல் தொடரும் என்று கட்டளை பிறப்பித்தார். அத்தோடு தலைநகர் மொஸ்கோவைத் தீயிட்டுப் பொசுக்கும்படி கட்டளையிட்டார். இந்த எதிர்பாராத விளைவு பிரெஞ்சுப் படைகளுக்குப் பேரிடியாக வீழ்ந்தது. நெப்போலியன் தங்கியிருந்த விடுதியில் தீ பற்றிக்கொண்டது. அவர் உயிர்தப்பியது அதிர்ஷ்டமாகக் கருதப்பட்டது. அந்த நேரம் பார்த்துக் கடும்காற்று வீசியது.
கொழுந்துவிட்டு எரியும் மொஸ்கோவில் தங்குவது பிரெஞ்சுப் படைகளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. துருப்புக்கள் களைத்து விட்டன, குதிரைகள் வலுவிழந்துவிட்டன, ரஷ்ய எல்லையைக் கடந்து 120 மைல் வந்தாயிற்று, தொடர்புப் பாதைகள் சிதைந்துவிட்டன, வெடிபொருட்களும் தீர்ந்துவிட்டன.
ரஷ்யப் பனி கொட்டும் அச்சம் தோன்றியது. பீற்றர்ஸ்பேர்க்கில் தங்கியிருந்த சார் அலெக்சாந்தருடன் ஒரு அமைதி உடன்படிக்கையைச் செய்ய நெப்போலியன் ஆவலாக இருந்தார். அது நிறைவேறவில்லை. நிலைமை படுமோசமாக மாறியது.
ஒக்ரோபர் 19 ஆம் நாள் பிரெஞ்சுப் படைகள் வெளியேறத் தொடங்கின. பின்வாங்கும் பிரெஞ்சுப் படைகளைத் துரத்தும் நடவடிக்கையை ரஷ்யப் படைகள் தொடங்கின.
பயங்கரமான ரஷ்யக் குளிர் பரவியபோது உணவுத் தட்டுப்பாடும் ஏற்பட்டது. தமது குதிரைகளை பிரெஞ்சுப் படைகள் உணவாக்கினர். அதன் பின் இறந்த படையினரின் தசையை வெட்டி நெருப்பில் வாட்டி உண்டனர். இதைப் பிரெஞ்சுப் படையெடுப்பு பற்றிய நூல்கள் உறுதிப்படுத்துகின்றன.
நெப்போலியனின் படுதோல்வி உறுதியாகி விட்டது. இனித் தங்கினால் ஆபத்து என்று உணர்ந்த அவர் பனிச்சறுக்கு வாகனத்தில் ஏறிக்கொண்டு (Ice Sled) தலைநகர் பாரிஸ் வந்து சேர்ந்தார்.
பின்வாங்குதல் வரலாற்றில் மிகப் பெரிய கண்ணீர்க் கதையாக இந்தப் படையெடுப்பு முடிந்தது. 600,000 பேர் கொண்ட பெரும் படையில் 100,000 இற்கும் குறைவானோர் உயிர் தப்பிக் கரைசேர்ந்தனர்.
2000 ஆம் ஆண்டுக்குப் பின்பு பின்லாந்தில் நகர விரிவாக்கத்திற்காக ஒரு பாரிய குழி தோண்டப்பட்டபோது 1812 ஆம் ஆண்டு ரஷ்யப் படையெடுப்பில் பங்கு பற்றிய பிரெஞ்சுப் படையினரின் எச்சங்கள் மீட்கப்பட்டன. பின்லாந்து ரஷ்யாவின் அயல் நாடு.
வரலாறு மீண்டும் வரும் என்கிறார்கள். புதிய வடிவத்தில் அது வருவதால் அடையாளம் காண்பது கடினம். வந்து சென்ற பின்பு அடையாளம் காண்பது சுலபம்.
நெப்போலியன் விட்ட பெருந்தவறை 130 வருடங்களுக்கு பின்பு ஜேர்மன் சர்வாதிகாரி ஆடொல்ப் கிட்லரும் விட்டார். ரஷ்யத் தாக்குதலுக்கு கிட்லர் நான்கு மில்லியன் துருப்புக்களைப் பயன்படுத்தினார்;.
மனித வரலாற்றில் இந்தப் பெரிய எண்ணிக்கையில் ஒரு பெரும் படையாவது தாக்குதலில் ஈடுபடுத்தப்படவில்லை. 3,350 போர் தாங்கிகள், 7000 ஆட்லறிகள், 2000 போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. இழுவைப் பணிக்காக 600,000 குதிரைகளும் கொண்டு செல்லப்பட்டன.
ஜுன் 1941 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒப்பரேசன் பார்பரோசா Barbarossa) என்று பெயரிடப்பட்ட இந்தப் படையெடுப்பு சனவரி 1943 இல் தோல்வியுடன் முடிவுற்றது. குட்டுசோவைப் பின்பற்றிய மார்சல் சுக்கோவ் (Zhukov) பின்வாங்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்தி ரஷ்ய வெற்றியை உறுதிப்படுத்தினார்.
நன்றி: -அன்பரசு-வெள்ளிநாதம் (15.08.08)
Posted by tamil at 8:43 PM 0 comments
Friday, August 15, 2008
அகலக்கால் பதிக்கும் மகிந்தவின் படைகள் செலுத்தப்போகும் விலை என்ன?
'ஒவ்வொரு குடிமகனும் ஒரு தீரமிக்க போராளியாக வேண்டும். ஒவ்வொரு கிராமமும் அல்லது தெரு வட்டாரமும் ஓர் அரணாக மாற வேண்டும். ஒவ்வொரு கூட்டுறவுப் பண்ணையும் தொழில் நிறுவனமும் மக்கள் போரின் வழங்கல் விநியோக அடித்தளமாக வேண்டும். இவ்வாறு நாம் எமது தேசம் முழுவதையும் ஒரு பெரும் போர்க்களமாக மாற்றி எந்த ஆக்கிரமிப்பாளனையும் துடைத்தெறிய முடியும்" - வியட்நாமின் தந்தை ஹோ சி மின்
சிறிலங்கா அரசும் அதன் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரிலே முன்னேற்றங்களைக் கண்டு வருவதாக பாரியளவிற்கு பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றபோதிலும் சிறிலங்காப் படையினர் தமிழர் தாயகப் பிரதேசத்திலே அகலக்கால் பதித்ததற்கான விலைகளை செலுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதே படைத்துறை ஆய்வாளர்கள் பலரதும் தற்போதைய கணிப்பாக இருக்கின்றது.
அண்மைக்காலங்களாக சிறிலங்காப் படையினர் மன்னார், வவுனியா மற்றும் மணலாறு பகுதிகளிலும் யாழ். குடாநாட்டின் முன்னரங்கப் பகுதியிலும் மேற்கொண்ட அனைத்து முன்னேற்ற முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் வெற்றிகரமாக முறியடித்ததோடு படையினரின் சடலங்களையும், ஆயுத தளவாடங்களையும் கைப்பற்றியுள்ளமையானது, சிறிலங்காப் படையினருக்கு இனிவரும் காலங்களில் சமர்க்களமானது இலகுவாக இருக்கப் போவதில்லை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.
கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில மற்றும் சிங்கள வார இதழ்களின் பத்தி எழுத்தாளர்களும் விடுதலைப் புலிகள் தம்மிடம் இருக்கின்ற நன்கு பயிற்சிபெற்ற களப் பட்டறிவுகள் கொண்ட படையணிகளை தற்போது களமுனைகளிலே இறக்கியுள்ளதால் இனிவரும் காலங்களில் சிறிலங்காப் படையினர் பலத்த எதிர்ப்புக்களையும், இழப்புக்களையும் எதிர்கொள்ளப்போகின்றார்கள் என்று தமது படைத்துறை ஆய்வுக்கட்டுரைகளிலே தெரிவித்துள்ளார்கள்.
கடந்த வாரம் அநுராதபுரத்திலே பொதுமக்கள் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச படையில் இருந்து ஓடியவர்கள், விடுப்பில் சென்றோர் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகச் சென்றோர் போன்றவர்கள் உடனடியாகக் களமுனையில் நிற்கின்ற படையினரின் கைகளைப் பலப்படுத்துவதற்காக மீள இணைந்துகொள்ளவேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டிருக்கின்றார்.
கிட்டத்தட்ட 60,000 வரையிலான சிறிலங்காப் படையினர் படைகளைவிட்டு ஓடியிருப்பதாக தென்னிலங்கையில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த சிறிலங்காவின் படைத் துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார, 'கடந்த இரண்டு ஆண்டுகளில் படையை விட்டு ஓடியவர்களில் குறைந்தது 12,000 பேர்களையாவது மீள இணைப்பதற்காகவே இந்த இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது" என்று தெரிவித்தார்.
அநுராதபுரம், பொலனறுவை, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே படைகளைவிட்டு அதிகம் ஓடுவதாகத் தெரிவித்த நாணயக்கார இவ்வாறு மீளப் படைகளில் இணைவதற்கு மறுப்போர் இராணுவ நீதிமன்றில் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
இவை எல்லாமே, சிறிலங்கா அரச தரப்பினரும் சிங்களப் படைத்தளபதிகளும் விடுதலைப் புலிகள் தந்திரோபாய ரீதியாக மேற்கொண்ட பின்னகர்வுகளைத் தாம் போரில் வெற்றிபெறுகின்றோம் என்று தவறாகப் புரிந்து கொண்டதாலேயே ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.
கடந்த காலங்களிலும் விடுதலைப் புலிகள் தமது தந்திரோபாய, மூலோபாயச் செயற்பாடுகளுக்கு அமைவாக யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேறிய போதும் ஜெயசிக்குறு நடவடிக்கையின்போதும் சிங்களப் பேரின மேலாண்மைவாதிகளும் சிங்கள புத்திஜீவிகளும் விடுதலைப் புலிகள் போரிலே தோல்வியடைந்துகொண்டிருக்கின��
�றார்கள் என்றும் அவர்கள் முற்றுமுழுதாக அழியப்போகும் காலம் விரைவில் வந்துவிடும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் விடுதலைப் புலிகளோ ஒவ்வொரு தடவையும் அனைவரினதும் கணிப்புகளுக்கு மாறாகப் புதிய பலத்துடனும் வீச்சுடனும் நெருக்கடிகளில் இருந்து மீண்டு பாரிய பாய்ச்சல்களை படைத்துறை ரீதியாவும் போராட்ட ரீதியாகவும் ஏற்படுத்தினார்கள். ஆனால் சிங்கள தேசமோ அல்லது அதன் தலைவர்களோ இந்த வரலாற்றுப் பாடத்தினை மறந்துவிட்டார்கள் அல்லது கற்பதற்கு மறுக்கின்றார்கள்.
இதேபோன்ற ஒரு நெருக்கடி சீன விடுதலைப் போராட்டத்தினை மேற்கொண்ட மாவோ சேதுங்கின் படைகளுக்கு ஏற்பட்டபோது, அவர்கள் அதனை எவ்வாறு இந்தத் தடைக்கற்களை வெற்றிக்கான படிக்கற்களாக மாற்றினார்கள் என்பதை ~சீன வானில் சிவப்பு நட்சத்திரம்| என்ற புத்தகத்திலே எட்கர் ஸ்னோ பின்வருமாறு பதிவுசெய்து வைத்திருக்கின்றார்.
'1933 ஆம் ஆண்டு ஒக்டோபரிலே நான்கிங் அரசானது சியாங் கை சேக் அவர்களின் தலைமையில் சீனப் பொதுவுடமைவாதிகளுக்கு எதிரான தனது ஐந்தாவது போருக்காக அணிகளைத் திரட்டியது. இந்தப்போரிலே ஓராண்டு கடுமையான சமர்களைப் புரிந்த பின்னர் பொதுவுடமைவாதிகள் பின்வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
கிட்டத்தட்ட அனைத்துத் தரப்பினரும் அதுதான் முடிவு என்றும் பொதுவுடமைவாதிகளின் இந்த நீண்ட பயணம் சீனச் செஞ்சேனையின் இறுதி ஊர்வலம் என்றும் கூட நினைத்தனர். அவர்களது நினைப்பு எவ்வளவு தவறானது என்ற உண்மையை இரண்டே ஆண்டுகளில் செஞ்சேனை நிரூபித்தது.
இந்த இரண்டு ஆண்டிற்குள் செஞ்சேனையானது வரலாற்றில் தனக்கு ஈடு இணையற்றதாக ஒருவரும் இல்லை என்பதுபோல, பின்னடைவுகளில் இருந்து மீண்டெழுந்து தனது போரியல் வரலாற்றில் உச்சக்கட்டத்தை எட்டியது. பொதுவுடமை அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிவிட்டதாகக் கூறிக்கொண்ட, தனது சுய தம்பட்டத்தை முழுமையாகவும் உண்மையாகவும் நம்பிய கொமிண்டாங்கின் தலைமைத் தளபதியின் உயிர் இறுதியில் பொதுவுடமைவாதிகளின் கையிலே ஊசலாடிக் கொண் டிருந்ததுதான் இதன் நகைமுரண் ஆகும்."
'போரின் ஆரம்பத்திலே பொதுவுடமைவாதிகள் முழுமையாக அழிக்கப்படுவார்கள் என்றே நான்கிங் ஆட்சியாளர்கள் நம்பினார்கள். எதிரி கூண்டில் அடைக்கப்பட்டிருக்கின்றான். அவனால் தப்பித்துப்போக முடியாது. நாளாந்தம் குண்டுவீச்சு, வானத்தில் இருந்து விமானத் தாக்குதல்கள், இயந்திரத் துப்பாக்கிகளின் மூலம் சூடு ஆகியவற்றின் மூலமும், செஞ்சேனை முற்றாக அழிக்கப்படும் என்று பரப்புரை செய்யப்பட்டது. அத்துடன் கொமிண் டாங் திரும்பக் கைப்பற்றிய மாவட்டங்களில் நடத்திய ~சுத்திகரிப்பு| நடவடிக்கைகளின் மூலமும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப் பட்டனர். இந்த ஒரு முற்றுகையின்போது மட்டுமே சூ என்- லாயின் கூற்றுப்படி செஞ்சேனையிலேயே 60,000 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல பிரதேசங்கள் முழுவதும் மக்களே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன."
இவ்வாறு ஐந்தாவது போரானது பொதுவுடமைவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போது, இந்த நடவடிக்கையானது முற்றுப் பெறாமல் நீடித்து இழுபட்டுக்கொண்டே செல்லத்தொடங்கியது. அத்துடன் செஞ்சேனையின் உயிரோட்டமான படைகளை அழிக்க அது தவறியது. பொதுவுடமைவாதிகள் ஒரு மாநாட்டினைக்கூட்டி அதிலே பொதுவுடமைவாதிகள் கியாங்கியிலிருந்து பின்வாங்கி செஞ்சேனையின் முக்கியமான பலத்தை ஒரு புதிய தளத்திற்கு மாற்றுவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதன்படி 1934 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் நாள் இந்த நீண்ட பயணம் தொடங்கப்பட்டது.
செஞ்சேனையின் முக்கிய வலிமையாகத் திகழ்ந்த படைகள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பொதுவுடமை விவசாயிகளும் இந்தப் பயணத்திலே இணைந்து கொண்டார்கள். அவர்களிடையே முதியோர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பொதுவுடமைவாதிகள், பொதுவுடமை தத்துவத்தை ஏற்காதோர் என அனைவரும் காணப்பட்டனர். அவர்கள் வெளியேறிய இடங்களிலே ஆயுதக் கிடங்குகள் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டன. தொழிற்சாலைக் கருவிகள், பொருட்கள் எனத் தனித்தனியாகக் கழற்றப்பட்டு இயந்திரங்கள் கோவேறு கழுதைகள் மீதும், கழுதைகள் மீதும் ஏற்றப்பட்டன. மதிப்புடைய, கையில் எடுத்துச் செல்லப்படக் கூடிய பொருட்கள் அனைத்துமே இந்த வியப்பளிக்கின்ற நடைபயணத்தில் எடுத்துச்செல்லப்பட்டன.
இந்தப் பயணத்தின்போது செஞ்சேனையானது தம்மை மீள ஒழுங்கமைப்பதிலும் படையினர் தமது பாதைகளில் குறுக்கிட்டாலோ அல்லது படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு பாதைகளை ஏற்படுத்த வேண்டிய தேவையேற்பட்டலோ அதனை மிக விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் மேற்கொண்டனர்.
டாடு ஆற்றைக் கடக்கும்போது செஞ்சேனையானது தாமதங்களைச் செய்தாலோ அல்லது கவனயீனமாக இருந்தாலோ முழுப்படையும் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அவ்வாறு ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்திலேயே டாடு ஆறு அமைந்திருந்தது. இதே பள்ளத்தாக்குகளில்தான் இளவரசர் சிடா காய் தலைமையிலான ஒரு இலட்சம் போர் வீரர்கள் 19 ஆம் நூற்றாண்டிலே புகழ்பெற்ற ட்செங் குவோ பான் தலைமையின் கீழ் இருந்த மஞ்சு படையினரால் நாற்புறமும் சுற்றிவளைக்கப்பட்டு முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டனர். இந்த வரலாறு பற்றி செஞ்சேனை வீரர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.
அதாவது, இளவரசர் சிடா காய் அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது விலை மதிப்பற்ற அவரது கால தாமதம்தான். டாடுவின் கரையை வந்தடைந்த இளவரசர், சி அரச வாரிசாக உதித்த தனது மகனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் மூன்று நாட்கள் படை நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாது தாமதித்தார். அவர் தனது படைகளுக்கு வழங்கிய மூன்று நாட்கள் ஓய்வு என்பது அவருக்கு எதிராகத் தாக்குதலை ஒரு முனைப்படுத்த அவரது எதிரிகளுக்கு வாய்ப்புக்களை வழங்கியது. அதுவே அவரினதும் அவரது படைவீரர்களினதும் முழுமையான அழிவிற்கு இட்டுச்சென்றது.
எனவே சீனச் செஞ்சேனையினர் தமது நடவடிக்கைகளிலே எதுவித தளர்வுகளையோ தாமதங்களையோ ஏற்படுத்தாமல் விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் தமது மூலோபாய தந்திரோபாய ரீதியிலான திட்டங்களுக்கு அமைவாக, செயற்பட்டதன் காரணமாகத் தமது படைகளை மீளக் கட்டமைத்துக்கொண்டு மக்கள் படைக்கட்டுமானங்களின் உதவியுடன் பாரிய ஒரு படையணியாக எழுச்சிபெற்று முழு சீனத் தேசத்தையுமே கடுங்கோன்மை அரசிடம் இருந்து மீட்டெடுத்தார்கள்.
இந்த வரலாற்று உதாரணங்கள் சொல்லுகின்ற செய்திகள் இதுதான். எந்தப் பெரிய படைபலத்துடன் ஆக்கிரமிப்பாளர்கள் போரிலே ஈடுபட்டு மக்களின் மீது சொல்லொணாத் துன்பங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்தினாலும், அடக்குமுறைக்கு உட்பட்ட மக்கள் அனை வரும் ஒன்றுபட்ட சக்தியாக ஒரு தலைவனின் அணியிலே ஆக்கிரமிப்பாளர்களை எதிர்ப்பதற்கு தயாராகும்போது ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருமே இறுதியில் பாரிய அழிவு களையும் தோல்விகளையும் சந்திப்பார்கள். வியட்நாம், ஆப்கானிஸ்தான், சீனா, எரித்திரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டங்கள் இதனையே வரலாறாகப் பதிந்து வைத்திருக்கின்றன.
நன்றி: -எரிமலை-
வெள்ளிநாதம் (15.08.08)
Posted by tamil at 9:36 PM 0 comments
அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன?
கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும்.
விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது.
மகிந்த படைகளால் விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், வடக்கிற்குத்தான் போர் அரங்கு என்ற இடம்பெயர்க்கப்பட்ட ஒரு போரியல் பார்வையின் பின்னணியில் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை.
கிழக்கில் புலிகளை முற்றாக அழித்தொழித்து விட்டு தற்போது வடக்கில் பெரும் படை நடவடிக்கையை மேற்கொண்டு அங்கு புலிகளை அடியோடு ஒழிப்பதாக மகிந்த அரசு குவியப்படுத்தியிருக்கும் ஒருவித மாயத்தோற்றம், சிறிலங்காவின் படைத்துறை தொடர்பாக ஆய்வு செய்பவர்களையும் வடக்கின்பால் ஈர்த்து வைத்திருக்கிறது.
ஆனால், கிழக்கில் புலிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சிறிலங்கா படைகளுக்கு நாள்தோறும் எவ்வகையான இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றன என்பதை விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை அண்மையில் விடுத்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
மகிந்தவின் கிழக்கு விடுதலை என்ற கோசத்திற்கு பிறகு அம்பாறையில் மாத்திரம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர், ஊர்காவல் படையினர், துணை இராணுவக்குழுவினர் என 165 பேர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனர். 208 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த அறிக்கை விடுக்கப்பட்ட நாள்வரை பார்க்கப்போனால், கிழக்கு முற்றுமுழுதாக தம்மால் கைப்பற்றப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்தநாள் முதல் - கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் - இற்றைவரை கடந்த ஒருவருட காலப்பகுதியில் சிறிலங்கா அரசு 165 பேரை இழந்திருக்கிறது.
அதாவது, மாதம் ஒன்றுக்கு சராசரியாக - அண்ணளவாக - 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு ஒருவர் கொலை, ஒருவர் காயம் என்ற ரீதியில் தாக்குதலை சந்தித்துவரும் ஒரு படை, தான் கைப்பற்றியிருக்கும் நிலப்பகுதியை எதிரியிடமிருந்து மீட்டுவிட்டதாக கூறுவதில் எவ்வளவு தூரம் உண்மை உள்ளது என்பதை சிறிலங்கவில் உள்ள எந்த இராணுவ ஆய்வாளர்களும் தமது பத்திரிகைகளில் எழுதி இராணுவத்தின் தாக்குதலுக்கு முகம்கொடுக்க தயாராக இல்லை என்பதே யதார்த்தம்.
இதன் பின்னணியில், அம்பாறையில் முற்றுமுழுதான பொறுப்பை எடுத்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் எவ்வாறு புலிகளின் தாக்குதல்களை சந்தித்து வருகின்றனர் என்ற களநிலை நோக்குவது இங்கு அவசியமாகிறது.
அம்பாறையில் விடுதலைப் புலிகளின் முக்கிய இருப்பிடமாக கருதப்படுவது கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியாகும். இந்த விடயம் படையினருக்கும் நன்கு தெரியும். ஆனால், அங்குள்ள புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில்தான் பெரும்பாலான படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இவற்றைவிட, அங்குள்ள புலிகள் காட்டை சுற்றி அமைக்கப்பட்டுள்ள உன்னிப்பான பாதுகாப்பு அரண்களை ஊடறுத்து வந்து அம்பாறையின் முக்கிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினர் மீதும் பல துணிகரத்தாக்குதல்களை மேற்கொண்டு படைத்தரப்புக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியின் உள்ளிருந்து வெளியேயோ வெளியிலிருந்து உள்ளேயோ புலிகளின் ஊடுருவல் இடம்பெறக்கூடாது என்பதற்காக அந்த வனப்பகுதியை சுற்றி சமார் 20 க்கும் மேற்பட்ட பாரிய காவலரண்களை படையினர் அமைத்துள்ளனர்.
அந்த வனப்பகுதியை சுற்றி வடக்கிலிருந்து தெற்காக சாகாமம், காஞ்சிரங்குடா, கஞ்சிகுடிச்சாறு, கோட்டையாறு, சங்கம்சந்தி, தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், கோமாரி, ஊரணி, நொட்டை ஆகிய பகுதிகளிலிலும் -
வனப்பகுதியின் மறுபகுதியில் தெற்கிலிருந்து வடக்காக வக்குமுட்டியாவ, கோயில்கண்ட, பன்னரகம ஆகிய பகுதிகளிலும் -
வனப்பகுதியின் கிழக்கிலிருந்து மேற்காக நொட்டை, செங்காமம், லகுவனை, காணுவ, உலானுவ ஆகிய பகுதிகளிலும் -
வனத்தின் மறுபகுதியில் மேற்கிலிருந்து கிழக்காக மாந்தோட்டம், வம்மியடி, வேட்டேரி, முகமாலகட ஆகிய பகுதிகளிலும் - பாரிய படை முகாம்கள் அமைக்கபட்டுள்ளன.
இவற்றில், வக்குமுட்டடியாவ, கோயில்கண்ட, பன்னரகம, மாந்தோட்டம், ஊரணி, நொட்டை ஆகிய படை முகாம்களில் இராணுவத்தினரும் ஏனைய படை முகாம்களிலும் சிறப்பு அதிரடிப்படையினரும் நிலைகொண்டுள்ளனர்.
இவற்றைவிட கண்ணகிபுரம், திருக்கோவில், அக்கரைப்பற்று, கேரைதீவு உட்பட அம்பாறையின் ஏனைய பகுதிகளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட முக்கிய முகாம்களிலும் ஏனைய சிறு முகாம்களிலும் நிலைகொண்டுள்ள அதிரடிப்படையினர் அந்தந்த பகுதிகளில் புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கைகளை தினமும் மேற்கொண்டு வருகின்றனர்.
இவற்றுக்கு எல்லாம் தலைமையகமாக அம்பாறை கொண்டயீட்டுவானில் அதிரடிப்படை தலைமைப்பீடம் அமைந்துள்ளது.
களத்தில் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் பிரதான தளமாக அதிரடிப்படையினரின் கஞ்சிகுடிச்சாறு படைமுகாம் செயற்பட்டு வருகிறது.
இவற்றில் மாந்தோட்டம் இராணுவ முகாமில் உள்ள படையினரின் ஆட்லறித்தளத்திலிருந்தும் கோட்டையாறு உட்பட சில முக்கிய அதிரடிப்படை முகாம்களிலிருந்தும் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியை நோக்கி அடிக்கடி ஆட்லறித்தாக்குதல் மற்றும் மோட்டார் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு.
அம்பாறை பூராகவும் பரந்துள்ள ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட இந்த அரச படையினர் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் உள்ள புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் இதுவரை சுமார் நூறுக்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டனர். ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குறைந்தது 600 முதல் சுமார் 2,000 வரையான படையினர் பயன்படுத்தப்படுகின்றனர்.
காட்டுப்பகுதிகளுக்குள் ஊடுருவி அங்கு புலிகளின் நிலைகளை அழித்து அங்குள்ள புலிகளை ஒழிக்கும் நோக்குடன் கடந்த தடவைகளில் மேற்கொள்ளப்பட்ட படையினரின் பாரிய நடவடிக்கைகள் எவையும் இதுவரை எந்த வெற்றியையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுக்கவில்லை.
மாறாக, இவ்வாறு ஊடுருவும் படையினர் புலிகளின் பொறிவெடிகள், மிதிவெடிகள் ஆகியவற்றினால் பாரிய இழப்புக்களையே சந்தித்துள்ளனர்.
இக்காட்டுப்பகுதிக்குள் ஊடுருவும் மற்றும் ரோந்து வரும் படையினரின் வருகைக்கு ஏற்றவாறு புலிகள் மேற்கொள்ளும் கச்சிதமான பொறிவெடி தாக்குதல்கள் படையினருக்கு உயிழப்புக்களைவிட களமுனைக்கு மீளதிரும்ப முடியாத படுகாயங்களை ஏற்படுத்தி அவயவங்களை காவு கொண்டுள்ளன.
இவ்வாறு அம்பாறை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்து புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஊடகங்களில் பேசப்பட்ட சம்பவங்களாக மகிந்தவின் பாதுகாப்பு அணியிலுள்ள உலங்குவானூர்தி மீதான தாக்குதலும் படையினரின் யால முகாம் தாக்குதலையும் குறிப்பிடலாம்.
ஆனால், இவற்றை விட பல்வேறு வகைகளில் அம்பாறையின் பல்வேறு இடங்களில் புலிகள் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் படையினருக்கு புலிகளின் கெரில்லா போர்முறை தொடர்பான தேர்ச்சியை உணர்த்தியிருக்கிறது.
இவற்றில் முக்கியமான சம்பவங்களாக -
அம்பாறை மாவட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் நிலாமதியின் முதலாம் மாத நினைவாக கடந்த ஜனவரி மாதம் நான்காம் திகதி பொத்துவில் - மொனராகல வீதியில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் பொத்துவில் பிரதேச உதவி கட்டளைத் தளபதி சிசிரகுமார உட்பட மூவர் கொல்லப்பட்டமை -
அம்பாறையில் தமிழ்மக்கள் கடத்தப்பட்டு படுகொலை மற்றும் சித்திரவதை ஆகியவற்றுக்கு பிரதான சூத்திரதாரியாக காணப்பட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை உயரதிகாரி கராட்டி என்பவரது அணியை வழிமறித்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டமை ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.
அம்பாறை பகுதிகளில் பல்வேறு இடங்களில் படையினருக்கு எதிராக துணிகரத் தாக்குதல்களை மேற்கொண்ட லெப். கேணல் பவமாறனின் துணிச்சல் அங்குள்ள படையினருக்கு உண்மையிலேயே கலக்கத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.
அவர் உட்பட லெப். கேணல் அயோனி, லெப். கேணல். மிதுலன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி தவறுதலாக வெடிவிபத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.
இவர்களது ஒரு மாத நினைவு தின தாக்குதலாகவே யால முகாம் மீது புலிகளின் அணிகள் ஊடுருவி தாக்குதல் ஒன்றை அதே ஆண்டு ஒக்டோபர் 15 ஆம் திகதி மேற்கொண்டிருந்தனர்.
தவமாறன் தலைமையில் புலிகளின் இரண்டு மூன்று பேர் கொண்ட அணி அம்பாறையின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடிப்படையினருக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்கள் படையினருக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன.
வக்குமுட்டியாவ அதிரடிப்படை முகாமிலிருந்து வரும் ரோந்து அணிகள் மற்றும் காட்டுக்குள் ஊடுருவும் அணிகள் ஆகியவற்றின் மீது பவமாறனின் தலைமையிலான அணி தொடுத்த தாக்குதல்கள் அதிகம் என்று கூறலாம்.
பவமாறன் உயிரிழப்பதற்கு முதல் நாளும் கஞ்சிகுடிச்சாறு பகுதியில் ரோந்து சென்ற படையினரை பின்தொடர்ந்து சென்ற பவமாறனின் ஐந்து பேர் கொண்ட அணி சரமாரியான தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிவந்தது.
அதேநாள் - காஞ்சிரங்குடா - கோட்டயாறு வீதியில் பவமாறன் மூன்று பேருடன் சென்று கண்ணிவெடித்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரும் வக்குமுட்டியாவ படைமுகாமுக்கு அண்மையாக உள்ள வீதியில் 18 கிலோகிராம் எடையுள்ள கிளைமோர் ஒன்றை பொருத்திவிட்டு அருகிலிருந்த சிங்கள குடியேற்றத்திட்டத்திலிருந்��
� வாழைத்தோட்டத்திற்குள் பதுங்கியிருந்து படையினர் ரோந்துவந்த போது நடத்திய தாக்குதலில் எட்டுப் படையினர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இவ்வாறாக படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கும்போதெல்லாம் - 'இறந்த படையினரின் ஆத்மா சாந்தியடையும் முகமாக" - மாந்தோட்டம் மற்றும் இதர பகுதிகளிலிருந்து கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியை நோக்கி படையினர் ஆட்லறி மற்றும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொள்வது வழக்கம்.
இதேவேளை, படையினருக்கு எதிராக அரச கட்டுப்பாட்டு பகுதியில் தாக்குதல் நடத்த சென்ற விடுதலைப் புலிகளின் போராளிகள் சிலர் காட்டிக்கொடுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
அம்பாறை அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள முல்லைத்தீவு என்ற இடத்தில் பணிநிர்த்தம் சென்றுகொண்டிருந்த மேஜர் புரட்சிமாறன், லெப். தனோஜன் ஆகியோரை பிற சமூக கடை உரிமையாளர் ஒருவர் தகவல் கொடுத்ததால் அதிரடிப்படையினர் சுற்றிவளைக்க அவர்கள் இருவரும் நஞ்சுண்டு வீரச்சாவடைந்தனர்.
அண்மையில் அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட நிமால் லுகோ என்ற படைப்பொறுப்பதிகாரியை படுகொலை செய்யும் நோக்குடன் அரச கட்டுப்பாட்டுபகுதிக்கு கிளைமோருடன் சென்ற மூன்று போராளிகள் காட்டிக்கொடுக்கப்பட்டதால் வீரச்சாவடைந்தார்கள்.
இவ்வாறு, அம்பாறை களம் என்பது செய்தி வெளிவராத மர்மமான மயானமாக அதிரடிப்படையினருக்கு இருந்து வருகிறது என்பதுதான் உண்மை.
வடக்கில் போர் நடத்தும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா - 'தமது நடவடிக்கையின் நோக்கம் இடங்களை பிடிப்பதல்ல. புலிகளை அழிப்பதே" - என்று கூறியுள்ளார்.
ஆனால், அம்மாதிரியாக நடவடிக்கையை விடுதலைப் புலிகளே கிழக்கில் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.
அண்மையில், அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட நிமால் லுகே என்ற படைப்பொறுப்பதிகாரி என்பவரின் மீதான புலிகளின் மின்னல் வேக அதிரடி தாக்குதலையும் அரச தரப்பு மூடிமறைத்துள்ளது.
ஆனால், நிமால் லுகே என்ற பெயரின் கீழ் அம்பாறை வைத்தியசாலையில் உடலம் கையேற்கப்பட்டிருக்கின்றமை மற்றும் உடலத்தை சம்பவ இடத்திலிருந்து எடுத்துச் செல்வதற்கு முக்கிய படை அதிகாரிகள் வந்தமை மற்றும் உயிரிழந்தவர் இரண்டு சிவப்பு நட்சத்திர சின்னம் அணிந்திருந்தமை ஆகியவற்றின் மூலம் உயிரிழந்தவர் முக்கிய அதிகாரியே என்ற விடயம் உறுதியாகியிருக்கிறது.
இவ்வாறு, கிழக்கில் இன்னமும் சந்தித்துவரும் இழப்புக்களை மறைக்கும் நோக்குடன் தமது வடபகுதி இராணுவ நடவடிக்கை தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தும் இராணுவம், தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கிழக்கில் அரச கொடி பறப்பதாக பொய்யான பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.
1992 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்கா அரசு தலைவராக டி.பி.விஜயதுங்க பதவி வகித்த காலப்பகுதியிலும் கிழக்கு விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அங்கு தேர்தல் நடத்தி பெரிய பெரிய அரசியல் நாடகங்கள் எல்லாம் அரங்கேற்றப்பட்டன. சர்வதேச சமூகத்துக்கு பல சங்கதிகள் கூறப்பட்டன. ஆனால், அதன் பின்னர் என்ன நடந்தது என்பது சகலருக்கும் தெரியும்.
சிறிலங்காவை பொறுத்தவரை தமிழ் மக்கள் விடயத்தில் நடைபெறும் அரசியல், இராணுவ சம்பவங்கள் எல்லாமே தென்னிலங்கை மக்களுக்கு தாம் இந்த நாட்டின் மகாபிரபுக்கள் என்பதாக காட்டிக்கொள்வதற்காக அவ்வப்போது ஆட்சிபீடம் ஏறுபவர்களால் நடத்தப்படும் போலி நாடகங்கள். அதன் ஒரு காட்சிதான் இன்று மகிந்த தரித்திருக்கும் கிழக்கு விடுதலை என்ற பாத்திரம். அதன் தொடர்ச்சியாக வடக்கில் ஒரு மாயத்தோற்றம்.
இவற்றின் முடிவுகளை அன்று முதல் இன்று வரை தமிழ்மக்களின் உரிமைகளுக்காக போராடிவரும் விடுதலைப்புலிகளே தீர்மானிக்கிறார்கள். இந்த களநிலைமையே என்றைக்கும் தொடரும்.
நன்றி:-
-ப.தெய்வீகன்-
Posted by tamil at 7:28 AM 0 comments
Thursday, August 14, 2008
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் ஆரூடம் கூறும் நாராயணர்கள்
"அறப் படித்த பல்லி கூழ்ப் பானைக்குள் வீழ்ந்ததாம்!' என் றொரு பேச்சுமொழி நம் மத்தியில் உண்டு. கூரை விட்டத்திலிருந்தபடி பலருக்கும் எதிர்காலம் குறித்துச் சாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கும் பல்லி, தனது எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் இருந்துவிட்டு, விட்டத்திலிருந்து தவறு தலாகக் கூழ்ப் பானைக்குள் விழுந்து இறந்துபோனதாம் என்ற பேச்சு வழக்குக் கதைபோல இவ்வாறு கிண்டலாகக் கூறப்படுகின்றது.
இதுபோலவே இலங்கை விவகாரத்தில் இலங்கை அரசுக்குப் புரியாத விடயம் என்று குறிப்பிட்டு ஓர் ஆலோச னையை போதனையை வெளிப்படுத்தும் இந்தியத் தேசி யப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தாம் கூறும் அதே கருத்துத் தமக்கும் புரியாதமை போல நடந்து கொள் வதுதான் விநோதமாக இருக்கின்றது.
மற்றவர்களுக்கு ஆரூடம் கூறும் பல்லி, தனக்கு ஆரூ டம் பார்க்க முடியாமல் இயலாமல் கூழ்ப்பானைக்குள் விழுந்து இறந்தமைபோல இருக்கின்றது ஈழத் தமிழர் பிரச் சினை தொடர்பாக இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறும் இந்தியா, அந்த ஆலோசனையின் தாற்பரியத்தைத் தானே புரிந்து கொள்ளாமல் செயற்படுவது.
இலங்கை இனப்பிரச்சினையோடு நீண்டகாலம் சம்பந்தப்பட்டவர் எம்.கே.நாராயணன்.
விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் ஒன்றுக்கு முழுத் தயாரான அரசியல் சூழ்நிலையை ஈழத் தமிழினம் எட்டு வதற்கு முன்னரே, தமிழ் இளைஞர்களை இந்தியாவுக்குத் வருவித்து, மறைமுகமாக அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டு ஒருபுறம் கொழும்பு அர சுக்கு எதிராக வன்முறைச் செயற்பாடுகளுக்குத் தூண்டி விட்டுக் கொழும்பைக் குழப்பிக் கொண்டு, மறுபுறம் தமிழ் இளைஞர்களைப் பல்வேறு இயக்கங்களாகத் துண்டுபட வைத்து, அவற்றுக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி, அவற்றில் ஒன்று கூட விஞ்சிய போராட்ட கட்டமைப்பாக மேலெழும்ப விடாமல் குழப்புகின்ற செயற்பாட்டுத் திட் டத்தையே 1980 களின் நடுப்பகுதியில் புதுடில்லி கைக்கொண்டது. அச்சமயம் இந்தத் திருகுதாளப் பணிக்குப் பொறுப்பான உளவு அமைப்பின் தலைவராகச் செயற் பட்டவர் இந்த நாராயணன்தான்.
இப்படி இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்ட வடிவத்தை நோக்கித் திரும்பிய காலகட்டம் முதல் இவ்விடயத்துடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட அவர், இந்தப் போராட்டத்தின் போக்குக் குறித்தும், தாற் பரியம் குறித்தும் கருத்தும் ஆரூடமும் கூற முற்றிலும் பொருத்தமானவரே. ஆனால் தாம் கூறும் தாற்பரியத்தின் உண்மையின் யதார்த்தத்தைத் தாமே புரியாதவராக அவர் செயற்படுவதுதான் குளறுபடித்தனமாகும்.
""புலிகளுக்கு எதிரான மோதல்களில் இலங்கை அரச படைகள் வெற்றி பெறலாம். எனினும், ஈழத் தமிழர்கள் அர சுப் பக்கம் இல்லாததால் அரசினால் யுத்தத்தில் வெல்ல முடி யாது'' என்று கூறியிருக்கின்றார் இந்தியத் தேசியப் பாது காப்பு ஆலோசகர் நாராயணன்.
அவரின் அந்தப் பேட்டியின் வாசகங்கள் இரண்டு விட யங்களில் தீர்க்கமான முடிவான கருத்து நிலைப்பாட்டில் அவர் இருக்கின்றமையை வெளிப்படுத்துகின்றன.
ஒன்று இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக நியா யமான அரசியல் தீர்வு ஒன்றைத் தரும் எண்ணப்பாடோ, பற்று றுதியோ, திடசங்கற்பமோ சிங்கள அரசுத் தலைமைக்கு இல்லை என்பதில் தமிழர்கள் தெளிவாக இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் இலங்கை அரசுப் பக்கத்தில் இல்லை.
மற்றது ஈழத் தமிழர்கள் இலங்கை அரசுப் பக்கத்தில் இல்லாத காரணத்தினால் அரச துருப்புகள் மோதல்களில் வெற்றி பெற்றாலும் யுத்தத்தில் வெற்றி பெறமுடியாது.
இலங்கை நிலைவரத்தை மதிப்பாய்வு செய்து, இந்த இரண்டு கருத்து நிலைப்பாட்டையும் தெரிவிக்கும் தகுதி யும் தரமும் உடையவர் நாராயணன் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
ஆனால்
தமக்கு நீதியான அதிகாரப் பகிர்வு ஒன்றை இலங்கை அரசுத் தலைமை தரமாட்டாது என்ற கருத்து நிலையில் ஈழத் தமிழர்கள் உள்ளனர் என்ற யதார்த்தத்தை அப்பட்ட மாக வெளிப்படுத்திப் போட்டுடைக்கும் அவர், தமிழர் களுக்கு நீதியான அரசியல் தீர்வு ஒன்றை மஹிந் தரின் தற்போதைய அரசுத் தலைமை வழங்கும் அல்லது வழங்காது என்ற நம்பிக்கை தமது புதுடில்லி அரசுக்கு உள் ளதா அல்லது இல்லையா என்பதை மட்டும் பகிரங்கமாக வெளிப்படுத்தவேயில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஈழத் தமிழர்களை ஆயுத ரீதியில் பலாத்காரம் மூலம் அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்தும் பேரினவாத ஆக் கிர மிப்பும் மேலாதிக்கச் சிந்தனைத் திட்டமும் மட்டுமே தற் போதைய சிங்கள அரசுத் தலைமையிடம் உள்ளது என்றும்
நீதி, நியாயமான அரசியல் தீர்வு ஒன்றைத் தமிழர்களுக்கு வழங்கும் சிந்தனைப் போக்கே கொழும்பு அரசுக்குக் கிஞ் சித்தும் கிடையாது என்றும்
ஈழத் தமிழினத்தின் பிரதிநிதிகள், நாராயணன் உட்பட்ட இந்திய அரசுத் தலைமையிடம் தொடர்ந்து வற்புறுத்த லாகச் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
கொழும்பின் அத்தகைய ஆக்கிரமிப்பு, அராஜக அத்துமீறல் போக்குக் குறித்து ஈழத் தமிழர்கள் தொடர்ந்து முறைப்பாடு செய்யும்போது, அதை செவிமடுத்துக் கொண்டு, உருப்படி யான பதில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வாளாவிருந்து விட்டு, இப்போது ஈழத் தமிழினம் சுட்டிக்காட்டிய உண்மை களைத் தாமும் (நாராயணனும்) ஒருதரம் மந்திரம் போல திருப்பி உரக்கக் கூறுவதில் அர்த்தமில்லை.
ஈழத் தமிழினத்துக்கு நியாயம் செய்ய முடியாத விரும் பாத தலைமையே கொழும்பு அரசு என்பதை உணர்ந்த பின்னரும், அந்த விடயத்தில் கொழும்பைச் சரியான வழி யில் வழிப்படுத்தும் தார்மீக ரீதியான பொறுப்பிலும், கடமையிலும், அதிகாரத்திலும் இருக்கும் ஒருவர், இப்படி வெளியாளாக நின்று வெறும் "ஆரூடம்' கூறுவதும் அபத்தமே. அதையும் விட இவ்விடயத்தில் இலங்கையைச் சரியாகச் செயற்பட வைக்கும் வழிக்கு நெட்டித்தள்ள நடவடிக்கை எடுப்பதே இந்தியாவின் நியாயமான செயற்பாடாக இருக்க முடியும். புதுடில்லி நாராயணர்களுக்கு இது புரியுமா?
நன்றி உதயன்
Posted by tamil at 12:51 PM 0 comments
Wednesday, August 13, 2008
சப்பிரகமுவ, வடமத்திய, மாகாண சபைத் தேர்தல்களில் போர் வெறியா? அல்லது பொருளாதாரமா?
நாடு என்றுமில்லா பொருளாதார நெருக்கடியில் அமிழ்ந்திருக்கும் வேளையில், சப்பிரகமுவா மாகாண வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்துவதின் நோக்கம் எதுவாக இருக்கும் என்பது நோக்கப்பட வேண்டியதோர் விடயமாகும்.
இவ்விரு சபைகளுக்குமான ஆயுட்காலம், முடிவடைவதற்கு முன்னதாக அச்சபைகள் கலைக்கப்பட்டு எதிர்வரும் 23.08.2008 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
நிறைவேற்று சனாதிபதியாக இருக்கும் ஒருவர் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற சனாதிபதித் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு, உள்ராட்சி, மாகாண சபைகளின் நிர்வாகங்கள் தமக்குச் சார்பானதாக அமைக்கப்படுவதும், தனது ஆட்சியை மக்கள் எவ்வாறு கணிப்பீடு செய்துள்ளார்கள் என்பதை நாடி பிடித்துப் பார்ப்பதற்கும், இவ்வாறான தேர்தல்களை நடாத்துவது ஒரு மரபுமுறையாக இருந்து வருகின்றது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடாத்தி முடிக்கப்பட்ட கையுடன், மற்றைய எட்டு மாகாணங்களில், ஆறையும் புறமொதுக்கி விட்டு, சப்பிரகமுவா மாகாணம், வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலை நடாத்துவதன் நோக்கம் எதுவாக இருக்கும் என மக்கள் மனங்களில் ஏற்பட்ட கேள்வி நியாயத்தின் பாற்பட்டதாகும்.
மற்றைய மாகாணங்களில் தமிழர், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மை இனத்தவர்கள், இவ்விரு மாகாணங்களையும் விட கூடுதலாகக் இருப்பதாலும், சிறுபான்மை இனத்தவர்கள் அரச சார்புக் கட்சியான மகிந்த அரசுக்கு வாக்களிக்கும் வாய்ப்புக்கள் அருகி இருப்பதைத் தெரிந்து கொண்டதாலும், சிறுபான்மை மக்கள் குறைவாக இருக்கும் இவ்விரு மாகாணங்களிலும் தேர்தலை நடாத்தி வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையில், தேர்தலை நாடாத்துகின்றது.
இதேவேளை கடந்த சனாதிபதித் தேர்தலிலும் அரசு இவ்விரு மாகாணங்களிலும் ஐ.தே.கட்சியை விட கூடுதலான வாக்குகளைப் பெற்றிருந்தது.
மகிந்த ராஜபக்ச அரசுக்கு, விலைவாசி உயர்வால் மக்கள் படும் துன்ப துயரங்களை, யுத்த பேரிகையையும் கூட்டி இதன்பால் ஈர்த்தெடுக்க வேண்டிய கடப்பாடுடன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் போது, அதற்கான ஆதரவுத்தளமாக மாகாண சபைகளின் நிர்வாகத்தைத் தனது கைக்குக் கொண்டுவர வேண்டிய தீர்க்கதரிசன எண்ணமும் உண்டு.
ஜே.வி.பி.கட்சியினரால் கொண்டுவரப்பட்ட வேலை நிறுத்தம், உண்மையான வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பதற்கும் அப்பால், தன்னால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற யுத்த வெறிகளுக்கு ஓர் எதிர்மறைத் தோற்றத்தை ஏற்படுத்தும் ஒரு தேசிய விரோத நடவடிக்கையேயாகும் என்ற நிலையை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டிய காலத்தின் கட்டாயமும் உண்டு.
முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இத்தேர்தல் ஒரு மரணப் பொறியாகவுள்ளது.
கடந்த சனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்து வந்ததற்கு இக்கட்சியின்; தலைமைத்துவப் பலயீனமே முக்கிய காரணம் என்ற முணுமுணுப்புக்கள் இக்கட்சிக்குள்ளும் எழத்தொடங்கியதால், இத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடையும் போது கட்சித் தலைமைத்துவம் ருக்மன் சேனநாயக்கவிற்கு வழங்கப்பட வேண்டுமென்ற பலமான கோரிக்கைகள் எழுந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
எனவே இக்கட்சி இவ்விரு மாகாணசபைத் தேர்தல்களையும், அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டக்களமாக மாற்றி மக்கள் சக்தியை ஒன்றுதிரட்டி தேர்தல் முடிவுகள் வெளிவரும் அதேவேளை, அரசாங்கமும் கலைக்கப்பட்ட செய்தி வெளிவரவேண்டும் எனப் பிரச்சாரம் செய்ய முற்பட்டிருப்பதுடன் மக்களின் கைகளில்தான் சனநாயகத்தைப் பாதுகாக்கும் சக்தி உண்டு எனவும் கூறிவருகின்றது.
மகிந்த ராஜபக்ச அரசு புலிகளைத் தோற்கடிப்போமென்று யுத்த வெறியூட்டப்பட்ட சிங்கள மக்களுக்குப் புலிகள் பலவீனமடையவில்லை, அவர்கள் இராணுவத்தை வலிந்து தாக்க முற்படும் போது யுத்த மாயை கலைந்து விடும் என்பது சாதாரண சிங்கள மக்களுக்கு தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்கள் இல்லை.
இதனால் அரசினுடைய பிரச்சாரம் மக்களிடையே பலித்து வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி வடமத்திய மாகாண சபையின் தலைமை வேட்பாளராக முன்னை நாள் இராணுவத் தளபதி ஜானக பெரேரா சிங்கள மக்கள் மத்தியில் பரீட்சையமானவர், புலிகளுடன் போரிட்டவர் என்ற சிறப்பு மேலாண்மைத் தகைமைகளைக் கொண்டும், இம்மாகாணத்தில் முப்பத்தையாயிரம் குடும்பங்கள் நேரடியாக இராணுவத்துடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற வகையிலும் இப்பதவிக்கு இவரைத் தேர்ந்தெடுத்தது.
ஜானக பெரேரா இராணுவத் தளபதியாக இருந்த போதிலும், இவர் இம்மாகாணத்தைச் சேர்ந்தவர் அல்ல எனவும் ஜே.வி.பி. கட்சிக்காரர் மேற்கொண்ட புரட்சியின் போது இக்கட்சியின் உறுப்பினர்கள் பலரைக் கொலை செய்ததில் பெரும் பங்கு வகித்தவர் என்பதாலும் இவருக்கான ஆதரவலை எழுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கப்போவதில்லை என்ற அபிப்பிராயமும் காணப்படுகின்றது.
சப்பிரகமுவா மாகாணசபையின் தலைமை வேட்பாளராக ரஞ்சன் ராமநாயக்க என்ற சிங்களத் திரைப்பட நடிகரை ஐ.தே.கட்சி நியமித்துள்ளது. இவரும் சந்திரிகாவின் கணவர் விஜய குமாரதுங்கவைப் போல, கரையோர மீனவ சமுதாயத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவர். இந்தவகையில் இவரது திரைப்பட எழுச்சி கண்டு பீதியடைந்த மகிந்த அரசு, அவரது சமூகப் பின்னணியிலுள்ள தாழ் நிலையையும், எடுத்துக்காட்டி வருகின்றது. ரஞ்சன் ராமநாயக்க சம்பிரகமுவ மாகாணத்தைச் சேர்ந்தவராக இல்லாத போதிலும் சிங்களச் சினிமாவின் சண்டைப்பட வீரனாக நடித்து மக்கள் மனங்களில் ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டவர் என்பதால் இவ்வாறான ஒருவரின் நியமனம் வெற்றிக்கு வாய்ப்பாகும் என எண்ணிய ஐக்கிய தேசியக் கட்சி இவரைத் தலைமை வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தது.
மகிந்த அரசு வடமத்திய மாகாணசபையின் தலைமை வேட்பாளராக பேர்டி பிரேம்;லால் திசாநாயக்க என்பவரையும், சப்பிரகமுவா மாகாண சபையின் தலைமை வேட்பாளராக மதிபால கேரத் என்பரையும் நியமித்த போதிலும், இவ்விருவரும் அவ்வவ் மாகாண மக்களால் ஏற்கெனவே பரீட்சித்துப் பார்க்கப்பட்டதாலும், இவர்களிடமிருந்து புதிய எதிர்பார்ப்புக்களைக் கண்டு கொள்ளமுடியாது என்ற ஆதங்கமும் மக்களிடத்தில் நிலவுகின்றது.
இவ்விரு மாகாணங்களிலும் ஜே.வி.பி.கட்சி மூன்றாவதோர் அணியாகப் போட்டியிடுகின்றபோதிலும் ஆளும் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே கடும் போட்டி நிலவுவதாகவும் ஜே.வி.பி. ஆட்சியதிகாரத்தைத் தீர்மானிக்கின்ற சக்தியாக அமையலாம் என்ற கருத்துக் கணிப்புடனான ஆரூடமொன்றும் நிலவுகின்றது.
ஜே.வி.பி. அரச அடக்குமுறையையும், விலைவாசி உயர்வையும் முக்கிய பிரச்சினையாகச் சித்தரித்துக் காட்டுவதுடன் மாகாண சபை முறைமை அதிகாரமற்றதும், ஊழல் மோசடிகள் நிறைந்து காணப்படும் நிறுவன மென்றும், இதை நிரூபித்துக் காட்டுவதாகவே தாம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் கூறுகின்றனர்.
இடதுசாரிக் கட்சியாகத் தம்மை அடையாளப்படுத்தியவர்கள் சிறுபான்மை இனங்களின் பிரச்சினையை அரசியல் ரீதியாக ஆராய முற்படாது இராணுவ ரீதியாக ஒடுக்குதல், அடக்குதல் என்ற பேரினவாதக் கோட்பாட்டை ஆதரித்து இனப்பிரச்சினைத் தீர்வுக்காகக் கொண்டுவரப்பட்ட இம் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான அருகதை உண்டா? என்ற இடதுசாரிச் சிந்தனைகளும் தேர்தல் பிரதிபலிப்புக்களாகக் காணப்படுகின்றன.
இலங்கை அரசியலில் காணப்படும் அடாவடித்தனம், மிரட்டல், காடைத்தனம் போன்ற பாசிசக் கலப்பு சனநாயக வழிமுறை கடந்த பல ஆண்டுகளாகத் தொடருகின்றது. இவ்வழிமுறை ஆளும் தரப்புக்கு பெரும் அனுகூலங்களைக் கொடுத்ததால், ராஜபக்ச அரசும் தனது சண்டித்தன அமைச்சர்கள் மேர்வின் டி சில்வாவை இத்தேர்தலில் களமிறக்கியுள்ளதாகவும் தெரிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி பிரபல்யம் வாய்ந்த இரு புது முகங்களை நிறுத்திய நிலையில், ஆளும் கட்சி சரியான தலைமைத்துவங்களைப் பெற்றுக்கொடுக்கத் திறனற்றும் போயுள்ளது.
ஆயினும் வட மத்திய மாகாண மக்களுக்கு நெல்லுக்கான அதிகரித்த விலையையும் சப்பிரகமுவா மாகாண மக்களுக்கான றப்பருக்குக் கிட்டிய அதிகரித்த விலையையும் சுட்டிக்காட்டி தனது வெற்றிக்கான வாய்ப்பைப் பெற முயற்சிக்கிறது.
ஒரு நியாயமான தேர்தல் என்பது மக்களைச் சுயமாகச் சிந்திக்க வைப்பதன் மூலம் பெறப்படும் முடிவேயாகும். அந்த வகையில் கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் நடாத்தப்பட்டு வந்த தேர்தல்கள் யாவும் சரியான சனநாயகத் தீர்ப்பைப் பெறத் தவறியதை பல்வேறு தரப்புக்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுவரும் இவ்வேளையில் இவ்விரு மாகாணசபைகளின் தேர்தலும், நட்டாமுட்டித் தனத்துடன் ஆரம்பித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி: க.கிருஷ்ணபிள்ளை B.A (Cey)
வெள்ளிநாதம் (10.08.08)
Posted by tamil at 8:27 AM 0 comments
Sunday, August 10, 2008
யூதர்களுக்கு ஹிட்லர் போல, தமிழர்களுக்கு வாய்த்த ராஜபக்ச
குடியானவன் ஒருவன் கடும் பிரயத்தனங்களின் இறுதியிலே பேராற்றல் மிக்க முனிவர் ஒருவரைச் சந்திக்கிறான். 'சுவாமி! வாழ்க்கையில் துன்பங்களை மாத்திரமே சந்தித்து வரும் எனக்கு விரும்பியவற்றை எல்லாம் பெற்று மேன்மையான வாழ்க்கையை அடைந்துகொள்வதற்கான சக்தியை நீங்கள் அளிக்கவேண்டும்" என்று அவரை வணங்கினான். அவனுடைய வேண்டுதலுக்கு இரங்கிய முனிவர் தன் கைகளினால் அவனை ஆசீர்வதித்து விட்டு 'நீ கேட்டுக்கொண்ட சக்தியை இக் கணத்திலிருந்தே நான் உனக்கு அருளிவிட்டேன். இனிமேல் எது உனக்குத் தேவைப்பட்டாலும் என்னை நினைத்துக்கொண்டு தேவையானதை உரத்துக்கூறு! உடனே அது உனக்குக் கிடைக்கும். ஆனாலும், ஒரு நிபந்தனை: என்னை நினைக்கும்போது எத்தருணத்திலும் குரங்கை நீ எண்ணிப்பார்க்கக்கூடாது!" என்றார்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய குடியானவன் தான் விரும்பியவற்றை எல்லாம் பட்டியல் போட்டுக்கொண்டு, முனிவரை நினைந்தவாறு அவற்றை உரத்துக் கூற முற்பட்டான். ஆனாலும், ஒவ்வொரு தடவையும் குரங்கை நினைத்துப்பார்க்கக்கூடாது என்பதே அவனுடைய எண்ணங்களை அதிகம் ஆக்கிரமித்திருந்தது. மீண்டும் மீண்டும் முயன்று பார்த்தபோதிலும் ~எங்கே குரங்கு வந்துவிடப் போகிறதோ!| என்பதே அவனது சிந்தனையை அதிகம் நிறைத்தது.
இவ்வாறு வேண்டும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளக்கூடிய அபார சக்தியைப் பெற்றிருந்த போதிலும், எதிர்மறை உணர்வுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளாமல் அந்த அற்பம் தன்னைப் பீடிப்பதற்கு அனுமதித்ததால், குடியானவனால் அந்த அபார சக்தியின் பயனை எட்டிக்கொள்ள முடியாதிருந்தது. தனக்கு நன்மை பயக்கும் எனத் தெரிந்திருந்தும், அதன் கனிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு எதிர்மறை உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் தன்னை இரையாக்கிக்கொள்ளும் இந்த மனித இயல்பு மனிதனை எந்தளவிற்குப் பாதிக்கின்றது?.
ஆரம்பத்திலே மதுக்குவளை (அல்லது போத்தலாகட்டும்!) மனிதனின் கையில் தவழ்கிறது. பின்னரோ மதுக்குவளையின் காலடிக்குள் மனிதன் தவழ்கிறான். இதைப்போலத்தான் எதிர்மறை உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளும்! இதில் எது எதிர்மறை? எது நேர்மறை என யாராவது கேட்கக்கூடும். ஒவ்வொரு தனிமனிதனின் வளர்ச்சியும் நீண்டகால அடிப்படையில் அவனது சமூகத்தின் வளர்ச்சியைச் சார்ந்ததாகவே இருக்கும்.
ஆகவே, ஒவ்வொரு சமூகத்தினதும் நன்மை கருதிய நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளுக்கு எதிரான சகலவற்றையும் எதிர்மறை உணர்வுகளாகக் கொள்ளலாம். அந்தி சாய்கிறதே என்பதற்காக 'ஐயைய்யோ! இருள் சூழப்போகின்றதே" என அடித்துவைத்துக் குழறுவதா அல்லது அழகிய அடுத்த நாள் காலைக்காகத் தயாராகுவதா உகந்தது?
சொந்த நாட்டைப் பிரிந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக உலகின் திக்கெங்கும் சிதறி வாழ்ந்த யூத மக்கள் ஒவ்வொருவரும் மூடிய தங்களின் விழிகளுக்குள்ளும் தாயகத்தையே தேடும் கனவுகளால் செதுக்கப்பட்டிருந்தார்கள். அதிலும் அவர்களில் எவருமே பார்த்தறியாத ஒரு தேசம்! தலைமுறை தலை முறையாகப் பரிமாறிக்கொள்ளப்பட்ட அந்தத் தாயகம் பற்றிய கனவுகளே இறுதியில் ஒரு சொந்த நாட்டினை அவர்கள் காணச் செய்தது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆபிரிக்கா, ரஸ்யா என வளங் கொழிக்கும் உலகின் திசைகளெங்கும் வாழ்ந்துவந்த போதிலும் அந்த மத்திய கிழக்குப் பாலைவனம் தான் அவர்கள் ஏங்கிக் கிடந்த தாய்மடி! அதில் ஒருமுறையேனும் கால்பதிப்பதே அவர்களின் கனவாக இருந்தது. அந்தக் கனவையே நாளை மீதான நம்பிக்கையில் தோய்த்தெடுத்து அவர்கள் எழுந்தார்கள். எண்ணெய் வளங்கொழிக்கும் பாரிய அரபு நாடுகள் சுற்றியிருந்தும் அந்தப் பாலைவன இஸ்ரேல் மீதான அவர்களின் காதல் தணியவில்லை. எண்ணெய் வளமே உலகில் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தபோதிலும், அந்த வளத்தினால் முழு உலகினதும் தீர்மானங்களை வளைத்துப்போடும் வல்லமையை அரபு தேசங்கள் கொண்டிருக்குமென்ற முற்கற்பிதம் இருந்தபோதிலும், தாயகம் நோக்கிய அவர்களின் ~எக்சோடஸ்| தன் இலக்கிலிருந்து திரும்பவேயில்லை. இயற்கை வளம் என்று சொல்வதற்கு ஏதுமற்ற பாலைவனப் பெருவெளி மீதான அவர்களின் தாகமே, இன்று அமெரிக்கா உட்பட முழு உலகையும் தங்களின் சுட்டுவிரல் ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கக்கூடிய செல்வாக்குடன் கூடிய ஒரு தேசம் கட்டியெழுப்பப்படுவதற்குக் காரணமாகியது.
நான்கு நூற்றாண்டுகளாக ஐரோப்பிய ஆக்கிரமிப்பிற்குள் அடிமைப்பட்டிருந்த தமிழர் தாயகம் சிங்கள ஏகாதிபத்தியத்தின் கொடூரப் பிடிக்குள் கொண்டுவரப்பட்ட அதே 1948 இல் தான் இரண்டாயிரம் ஆண்டுகால ஏதிலி வாழ்க்கைக்கு யூத இனம் முற்றுப்புள்ளி வைத்து, தமக்கென ஒரு தாயகத்தை நிறுவிக்கொண்டது.
அதுசரி 2000 ஆண்டுகளாக வாய்க்காத ஒரு வசந்தம் 1948 இல் மட்டும் அவர்களுக்குச் சாத்தியப்பட்டதற்கான உத்வேகத்தை அளித்தது எது? இந்தக் கேள்விக்கான பதில் ஒன்று மட்டுமே: ஆடொல்ப் ஹிட்லர்! நிச்சயமாக இது வலிந்து திணிக்கப்படும் பதிலல்ல! யூதர்கள் தாம் தாம் வாழ்ந்து வந்த நாடுகளிலே தங்களின் தனித்துவத்தை இழந்துவிடாமல் கூட்டுணர்வுடன் சகல துறைகளிலும் முன்னேறிய காரணத்தினால் இயல்பாகவே அவர்களுக்கெதிரான வெறுப்புணர்வு அங்கெல்லாம் பரந்திருந்தது.
ஜேர்மனியின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான ஹைனெ ஹைன்றிச் (1797-1856) வழக்கறிஞருக்கான தனது பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 1825 இல் கிறிஸ்தவ மதத்திற்கு மாறவேண்டியிருந்தது.
ஏனென்றால் அக்காலத்திலேயே யூதர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த துறைகளில் சட்டமும் ஒன்றாக இருந்தது. இவ்வளவிற்கும் நூற்றுக்கணக்கான சிற்றரசுகளை ஒன்றிணைத்து பாரிய ஜேர்மனிய இராச்சியம் அமைக்கப்பட்டது. 1871 இலேயே! அதாவது, சமூக மட்டத்திலே யூத எதிர்ப்புணர்வு மேலோங்கியிருந்ததும் அதற்குச் சட்டரீதியான அங்கீகாரங்கள் வழங்கப்பட்டமையும் ஏற்கெனவே நீண்ட காலமாக இருந்துவந்த ஒன்றுதான்! இந்த வழமைகளை அனுசரித்து வாழ்வதற்கு யூத மக்களும் பழக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும், ஏற்கெனவே வேரோடியிருந்த யூத எதிர்ப்புணர்வினை இனங்கண்ட ஹிட்லர் அதைத் தனது அரசியல் கோட்பாடுகளுக்குள் பிரதானமான ஒன்றாக்கி நிறுவனமயப்படுத்தியபோதுதான், யூதர்கள் மேலும் சகித்திருந்து தம்மினம் அழிந்துபோவதை அனுமதிக்க முடியாதென எண்ணுவதற்குத் தலைப்பட்டார்கள்.
ஆக, ஹிட்லரின் மூர்க்கமான யூத அழிப்பு நடவடிக்கைகளே தனித்தாயகம் ஒன்றே தமக்கான ஒரே தீர்வென்பதை அவர்களை உணரவைத்து, அதற்காக முழு உத்வேகத்துடன் அவர்களை உழைக்கவும் உயரவும் வைத்தது.
இவ்வாறிருக்க தான் சிறுவயதிலே விரும்பியவாறு உண்மையிலேயே ஒரு கலைஞனாக ஹிட்லர் ஆகியிருப்பானெனில், இஸ்ரேல் என்ற ஒரு தேசம் உருவாகுவதற்கான புறச்சூழல் ஏற்பட்டிருக்குமா என்பதற்கப்பால், காலங்காலமாகவே பழக்கப்பட்ட நெருக்கடிகளை வழக்கப்படுத்திக்கொண்டு வாழத்தெரிந்திருந்த யூத இனத்தின் எதிர்காலம் இன்றுபோல் மேன்மையுற்றிருக்குமா? எண்ணிப்பார்க்க வேண்டாமா நாம்! அதேவேளை 'ஹிட்லர் மட்டும் கலைஞனாக ஆகியிருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்!" என்று யூதர்கள் அற்பத்தனமாக ஆதங்கப்படாதபோதிலும், 'இவனை விட அவள் பரவாயில்லை! அவளைவிட முன்னையவன் திறம்" என்றெல்லாம் சிங்களத்தின் பேரினவாதத் தலைமைகளுக்குப் புள்ளிகள் வழங்கும் மடமை இன்னும் எம்மிடையே சிலரிடம் நிலவுவது வேதனைக்குரியது. இதற்கும் அப்பாற்சென்று ~எதிரியே வெல்வான்| என்ற தங்களின் (தன்)நம்பிக்கை(யின்மை)யை வலியுறுத்துவதில் ஈடுபடும் சிலரையும் காணக்கூடியதாக இருக்கின்றது. வால்மீகியின் இராமாயணம் கூறுவதைப் புறந்தள்ளிவிட்டு கம்பராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு திராவிட ஒழிப்பை நாமே நியாயப்படுத்துவதைப்போலவே, ஆரியர்களால் அசுரர்கள் கொல்லப் பட்டதையெல்லாம் பண்டிகை நாட்களெனப் பாரம்பரியம் பேணுவதைப்போலவே, சுயத்தை விடுத்து அந்நியங்களையே ஓம்பும் இந்த எதிர்மறையான நம்பிக்கை எமக்கு எந்தவிதத்திலும் நன்மைதராது. அப்பர் சுவாமிகள் எப்போதும் உரத்துக்கூறிய ~நமனை அஞ்சோம்!| என்ற அடிகளில் உள்ளவாறே எதிரியும் எம்மைப்போன்ற மனி தனே! எம்மை அழிப்பதில் அவனுக்கிருக்கும் ஆக்ரோசத்தைவிட, தமிழினத்தைக் காப்பாற்றுவதில் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டிய ஓர்மம் அதிகமாய் இருக்கவேண்டும்!
ஆகவே, எமது தேசிய இருப்பின் மேன்மைக்கு உதவாத எந்த எதிர்மறையான உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் நாம் களைந்துவிடவேண்டும். வெற்றிமீது முழு நம்பிக்கை கொண்டவர்களாக அதனை மற்றவர்களுக்கும் ஊடுகடத்தக்கூடியவர்களாக எம் அனைவரினதும் செயற்பாடுகள் அமையவேண்டும். அச்சமே மனிதனை அடிமை ஆக்குகின்றது. அப்படிப்பட்ட அச்சத்திற்கு ஆட்படாதவர்களாகத் துணிவைத் தோழமை கொள்வோம்! ஏற்படும் இன்னல்களெல்லாம் தாயகத்தை நிர்மாணித்துக் கொள்வதற்கான தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தங்களாக எடுத்துக்கொள்வோம்.
யூதர்களுக்கு ஒரு ஹிட்லர் வாய்த்ததுபோல, தமிழர்களுக்கு வாய்த்த ராஜபக்ச குடும்பத்திற்கு மானசீகமான நன்றிகளைக் கூறிக்கொள்வோம். அபார ஆற்றலாக எமக்கு வாய்த்த தேசியச் சூரியனை மட்டும் உள்ளுக்குள் நிறைத்துக் கொள்வோம்! இசைத்தமிழை உலகறியச் செய்த விபுலானந்த அடிகள் யூலியஸ் சீசருக்காக சேக்ஸ்பியர் எழுதிய வசனத்தை அழகுற மொழிபெயர்த்ததிலிருந்து சில வரிகளை சிந்தையில் இருத்திக்கொள்ளலாம்: 'அஞ்சினர்க்குச் சதாமரணம் அஞ்சாத நெஞ்சத்து ஆடவனுக்கு ஒரு மரணம்! அவனிமிசைப் பிறந்தோர் துஞ்சுவரென்று அறிந்திருந்தும் சாதலுக்கு நடுங்கும் துன்மதி மூடரைக் கண்டால் புன்னகை செய்வேன்! இன்னலும் யானும் பிறந்தது ஒரு தினத்தில் அறிவாய்! இளஞ்சிங்கக்குருளைகள் யாம்! யான் மூத்தோன், எனது பின்வருவது இன்னலெனப் பகைமன்னர் அறிவார்! பேதுறல் பெண்ழூ அணங்கே யான் போய்வருதல் வேண்டும்'
(பேதுறல் பெண் அணங்கே| என்ற அடியினை அது எழுதப்பட்ட காலத்தைக் கவனத்திலெடுத்து மன்னிக்குமாறு வாசகிகள் வேண்டப்படுகிறீர்கள்)
நன்றி: வெள்ளிநாதம்
Posted by tamil at 7:56 PM 0 comments
அண்ணன் அரசாண்டால் தம்பி சண்டப் பிரசண்டன்!
"தட்டிக் கேட்க ஆளில்லா விட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்' என்றொரு பேச்சு மொழி நம் மத்தியில் உண்டு.
அதனை நடைமுறையில் இலங்கை மக்கள் இப் போது நேரடியாகவே கண்டறிந்து பட்டுணர்ந்து வருகின்றார்கள்.
அண்ணன்தம்பி இருவர் மாத்திரமல்லர். நான்கு சகோதரர்கள் அணியே நாட்டை நாசப்படுத்தித் துவம்சம் செய்து வருகின்றமையைக் காண்கிறார்கள்.
நிறைவேற்று அதிகாரம் உட்பட நாட்டின் முழு ஆட்சி அதிகாரமுமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம். பெயருக்கு நாடாளுமன்றமும் அமைச்சரவையும் வரவுசெலவுத் திட்டத்தின் கீழான எழுபது வீத நிதியைக் கையாளும் பொறுப்பு மஹிந்த ராஜபக்ஷவிட மும், ஏனைய ராஜபக்ஷ சகோதரர்களிடமுந்தான் உள்ளன.
நல்லாட்சி, நீதியை நிலைநாட்டுதல், பக்கச் சார்பற்ற நிர்வாகம், ஊழல்முறைகேடுகளை ஒழித்தல் போன்ற நன்னோக்கு இலக்குகளை அடையும் எண்ணத்தில் அரசமைப்புக்கு 17 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட் டது. நல்லாட்சியை நெறிப்படுத்துவதற்காக அந்தத் திருத்தத்தின் மூலம் பல்வேறு ஆணைக் குழுக்களை அமைக்க வழியும் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் எல்லாக் கட்சிகளினதும் இணக்கத் துடனேயே அந்தஅரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப் பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது நாடாளு மன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தார். அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அதிகாரச் சிறகுகளை வெட்டுவதாக அந்த அரசமைப் புத் திருத்தம் இருந்ததால், அதனை அப்போதே முழுமூச்சில் ஆதரித்து வரவேற்றார் ராஜபக்ஷ.
ஆனால் இன்று அவரே ஜனாதிபதி. இச் சமயத்தில் அந்த அரசமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப் பட்டால் தமது அதிகாரம் செல்வாக்கு வெட்டப்படும், தனது சர்வாதிகார போக்கின் வீரியம் குறைக்கப்படும் என்ற காரணத்தால் அத்திருத்தத்தை நடைமுறைப் படுத்தவிடாமல் இடக்குப்போட்டு அதனை முடக்கு கின்றார் அவர்.
அரசமைப்பு கவுன்ஸில் ஒன்றை ஸ்தாபிக்கும் படி அரசமைப்பின் 17 ஆவது திருத்தம் வலியுறுத்துகிறது. அப்படி அரசமைப்புக் கவுன்ஸில் இயங்கத் தொடங்கி னால் தேர்தல், நீதித்துறை, காவல் (பொலிஸ்) துறை, அரச கணக்காய்வுத்துறை ஆகியவை தொடர்பான வழிகாட்டு அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட துறைசார்ந்த சுயாதீன ஆணைக்குழுவிடம் போய்விடும். இந்த நான்கு துறைகளினதும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளை நியமித்து அவர்களை வழிகாட்டும் அதிகாரம் ஜனாதி பதியிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும். இதனால் இத் துறைகளை தம் விருப்பப்படி நடத்திச் சீரழிக்கும் வாய்பை ஜனாதிபதி இழந்துவிடுவார்.
இதன்காரணமாகவே அரசமைப்புக் கவுன்ஸிலுக்கு ஆள்களை நியமித்து அதனை முறைப்படி இயங்கவைக் காமல் காலத்தை இழுத்தடித்து வருகிறார் ஜனாதிபதி.
ஜனாதிபதியின் இந்த விட்டேத்தியான போக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. முதல் தடவை யாக, ஜனாதிபதி ஒருவரின் பெயர் குறிப்பிட்டு, அவரை பிரதிவாதியாகப் பிரேரித்து தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ள தோடு, ஜனாதிபதிக்கு நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க வும் உத்தரவிட்டிருக்கிறது.
நீதிமன்றத்துக்கான விண்ணப்பம் மூலம், நியாயம் நிலைநாட்டப்பட்டு, அதன் வாயிலாக அரசமைப்புக் கவுன் ஸில் இயங்க வைக்கப்படுமாயின், அதனால் ஜனாதிபதி யின் சர்வாதிகாரத்தில் கணிசமான இடிவிழ வாய்ப்புண்டு.
அப்படி இல்லாதவரை "மஹிந்த அண்ட் பிறதர்ஸ்' கூட்டுக் கம்பனியின் நாட்டை குட்டிச்சுவராக்கும் திட்டம் வெற்றிகரமாகவே தொடர்ந்து அரங்கேறும்.
தென்னிலங்கையில் சகல ஒப்பந்த வேலைகளை யும் திட்டங்களையும் தீர்மானிக்கும் பொறுப்பு ஜனாதிபதி மஹிந்தவின் மூத்த சகோதரர் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம்.
கிழக்கு மாகாணத்தின் புனர்வாழ்வு, புனரமைப்புத் திட்டங்கள் என்ற பெயரில் சகல நிதிச்செலவினங் களை யும் கையாளும் அதிகாரம் இளைய சகோதரரும், ஜனாதிப தியின் ஆலோசகரும், எம்.பியுமான பஸில் ராஜபக்ஷவிடம்.
பாதுகாப்பு, யுத்தம் ஆகியவற்றின் பெயரால் நாட்டைச் "சுத்தும்' அதிகாரமும் பொறுப்பும் மற்றொரு தம்பியான கோத்தபாய ராஜபக்ஷவிடம்.
இப்படி சகோதரர்களின் சர்வாதிகாரம் நாட்டையே அதல பாதாளத்தில் தள்ளிவிடும்.
அதிலும் பாதுகாப்புத் துறையில் கோத்தபாயவும், அரசி யலில் பஸிலும் பண்ணும் அதிகாரத்தனத்துக்கு அளவே இல்லை.
போதாக்குறைக்கு, இந்தச் சகோதரர்கள் அணிக்கு காவடிதூக்கியபடி மேர்வின் சில்வா போன்ற தரப்புகள் பண்ணும் அட்டகாசங்கள்.
இந்த அரசியல் அராஜகங்களைப் பார்க்கும் போது "தட்டிக்கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிர சண்டன்' என்ற முதுமொழி "அண்ணன் அரசாண்டால் தம்பி சண்டப்பிரசண்டன்!' என்று மாறிவிட்டதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.
இந்த அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தி, நெறிப்ப டுத்தும் அரசியல் வரன்முறைகளை நடைமுறைப்படுத்த விரைந்து செயற்படுத்த இலங்கை தவறுமானால் நாடு முற்றாகச் சீரழிவது தவிர்க்கமுடியாததாகிவிடும்.
நன்றி - உதயன்
Posted by tamil at 2:12 PM 0 comments