Wednesday, December 26, 2007

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தமிழர் தாயகத்தில் செல்லாதா?

""நீதி நிலைநாட்டப்படுவது மாத்திரமின்றி நிலைநாட்டப்படுவது போலக் காட்டப்படவும் வேண்டும்.'' என்பது நீதித்துறையின் உயர் வாசகமாகும்.
ஆனால், இலங்கை நீதித்துறையைப் பொறுத்தவரை இத்தீவின் சிறுபான்மையினரான தமிழருக்கு அதன் நியாயமான அரவணைப்பு எட்டாக்கனியோ என்ற அங்கலாய்ப்புத்தான் அம்மக்களுக்கு உள்ளது.

பெரும்பான்மையினரான சிங்களவர்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி, அவர்களின் ஏகபோக அரசியல் அதிகாரச் செல்வாக்கை உறுதிப்படுத்தும் விதத்தில் இறுக்கமான இரும்புச்சட்டப் பெட்டகம் போல அமைந்திருக்கின்றது இலங்கை அரசமைப்பும் அதன் சட்டங்களும்.
தமிழர் தரப்பின் இசைவின்றி இணக்கமின்றி பெரும்பான்மைச் சிங்களவர்களின் தன்னிச்சை முடிவாக உருவாக்கப்பட்ட இந்த அரசமைப்பு தமிழ் இனத்தின் மீது அதன் தலைவிதியாகப் பலவந்தமாகத் திணிக்கப்பட்டிருக்கின்றது.

சிறிதும் நெகிழ்த்தவோ, விலத்தவோ, அரக்கவோ இடமளியாமல் நட்ட நெடுமரம் போல இறுகிக் கிடக்கும் இந்த அரசமைப்பு சிறுபான்மையினரான தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடக் கொண்டிருக்கவில்லை.
1972 இற்கு முந்திய அரசமைப்பில் சிறுபான்மையினரின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் வரையப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகள், 1972 இலும் பின்னர் 1978 இலும் தனித்துவமாக சிங்கள ஆட்சியாளர்களினால் தமிழர் தரப்பின் சம்மதம் இன்றியே ஒருதலைப்பட்சமாகக் கொண்டுவரப்பட்ட அரசமைப்புகளினால் இல்லாதொழிக்கப்பட, இலங்கைத் தீவில் தமிழர்களின் உயிர் வாழ்க்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. சட்ட உத்தரவாத அங்கீகாரம் பறிக்கப்பட்டது.
சிறுபான்மையினரின் சிறப்புரிமைகளைப் பறித்து, அவர்களை மூன்றாந்தரப் பிரஜைகளாக்கி, அடக்கி, ஒடுக்கும் சட்டங்கள் நாடாளுமன்றத்தினால் யாக்கப்பட்டு வருகின்றன.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான பௌத்த சிங்கள மேலாண்மைப் போக்கின் அடக்குமுறைக் கரங்கள் சட்ட நீதித்துறை வரை விரிந்தன. தமிழர் தாயகத்தின் புவியியல் நிலப்பரப்பைத் துண்டாடும் ஏற்பாடுகளை நீதிமன்றங்கள் மூலம் செயற்படுத்தும் அளவுக்கு இலங்கைத் தீவின் சட்ட ஏற்பாடுகளும், ஒழுங்கு முறைகளும் இறுக்கமடைவதற்கு அரசமைப்புச் சட்டமும் அதை ஒட்டிய சட்ட முறைமைகளும் வழிகோலின.


இலங்கைத் தீவு முழுவதற்குமாக இலங்கையின் நீதித்துறை வழங்கிய தீர்ப்புகள், வடக்கு கிழக்குத் தமிழர் தாயக விவகாரத்தில் மட்டும் சட்டத்துக்குப் புறம்பான முறையில் புறக்கணிக்கப்பட்டன.
இலங்கையின் மிக உயர்ந்த அதிகாரமும், நியாயாதிக்கமும் கொண்ட நீதிமன்றம் உயர்நீதிமன்ற ஆயமாகும். அந்த நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளும், உத்தரவுகளும் மறு கேள்விக்கு இடமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பது இத்தீவின் சட்ட ஒழுங்கு முறையாகும்.
ஆனால் தமிழர் தாயகத்தைப் பொறுத்தமட்டில் மட்டும் இத்தகைய தீர்ப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவது ஓரவஞ்சனையாக ஒதுக்கப்படுகின்றன என்பதே உண்மை நிலைவரமாகும்.
அதற்கு உதாரணமாக உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

சிங்களவர் ஒருவர் கொழும்பு சோதனைத் தடை முகாம் ஒன்றில் வைத்து சட்டத்துக்கு முரணான வகையில் தாம் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், வீதிகளுக்குக் குறுக்கே சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டு, வாகனங்கள் வழி மறிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்படுவது மிகத் தவறு எனத் தெரிவித்தது.

இவ்வாறு வீதிகளுக்குக் குறுக்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை அகற்றும்படியும் உயர்நீதிமன்ற ஆயம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இறுக்கமான தீர்ப்பை உணர்ந்துகொண்ட அரசுத் தலைமை உயர்நீதிமன்றம் அமைந்துள்ள கொழும்பு வட்டகைக்குள் உள்ள சோதனைச் சாவடிகளை அவசர அவசரமாக அகற்றியது.

ஆனால் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு நிலைமை மாறவில்லை. ஒரு வகையில் முன்னர் இருந்ததை விட மோசமாக போக்குவரத்துக்கு நெருக்கடியான ஏற்பாடுகள் வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டன. புதிது புதிதாக வீதிகளுக்குக் குறுக்காக சோதனைச் சாவடிகள் எழுந்தன.
தலைநகர் கொழும்பிலும், கொழும்பை அண்டிய பிற இடங்களிலும் வீதிக்குக் குறுக்காகப் போடப்பட்ட தடை நிலைகள் உயர்நீதிமன்றத் தீர்ப்புக் காரணமாக மறைய, மறுபுறத்தில் தமிழர் தாயகத்தில் அவை புதிது புதிதாக எழுந்தன.

இது விடயத்தில் உயர்நீதிமன்ற உத்தரவு சரிவரக் கைக்கொள்ளப்பட்டு, பின்பற்றப்படுகின்றமையை உறுதிப்படுத்த வேண்டிய கருத்துருவாக்கிகள் இதுகுறித்து கவலையுற்றிருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

யாழ். மாவட்ட நீதிபதி இ.த.விக்கினராஜாவும், வவுனியா மாவட்ட நீதிபதி இளஞ்செழியனும் இந்நிலைமை குறித்து படை மற்றும் பொலிஸ் தரப்பு அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துரைத்திருக்கின்றனர்.

அவர்களது உத்தரவுகள் செல்லுபடியாகுமா? கொழும்பில் நடைமுறைப்படுத்தப்பட்ட மேற்படி உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அம்சங்கள் தமிழர் தாயகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுமா? அதற்கான வாய்ப்புகள் எவை? போன்றவற்றுக்கு விடைகாண நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டியிருக்கின்றது.

"சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படுவது மாத்திரமல்ல, அது நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்' என்ற தத்துவத்துக்கு அமைய கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பு தமிழர் தாயகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவது வெளிப்படையாகக் காட்டப்படவும் வேண்டும். செய்யுமா அரசு?

Uthayan.com

Tuesday, December 25, 2007

''தடுமாறும் சர்வதேசமும் தப்பித்த அரசாங்கமும்''

சர்வதேச சமூகம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வரவு செலவுத்திட்ட இறுதி வாக்கெடுப்பு நிகழ்ந்து விட்டது. 2008ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டினை மலையகக் கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன.

யுத்தத்திற்கான வரவு செலவுத்திட்டத்திற்கு ஆறுமுகம் தொண்டமானும் சந்திரசேகரனும் ஆதரவளித்ததை உலகத் தமிழினம் மிகுந்த சோகத்துடன் பார்வையிடுகிறது. இரண்டாவது தடவையாக மறுபடியும் ரணில் குழுவினர் ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்குமெனக் காத்திருந்த மேற்குலகம் அது பலனளிக்காமல் இனிப் புதிய அழுத்தங்களை அரசின்மீது செலுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

இந்த கயிறு இழுத்தல் போட்டியில் ஜே.வி.பி.யினரின் பங்கு முக்கிய பாத்திரத்தினை வகுத்துள்ளதென்பதே உண்மையான விடயமாகும். முன்பு சர்வதேச சதிவலையொன்று சு.க. ஐ.தே.க. புரிந்துணர்வு ஒப்பந்த மூலமாக பின்னப்பட்ட வேளையில் ரணிலின் வலது இடது கரங்களை தம்பக்கம் இழுத்தெடுத்து அவ்வலைகளை ஜனாதிபதி மஹிந்த கிழித்தெறிந்திருந்தார்.

தற்போது, ஜே.வி.பி.யின் ஆதரவோடு கவிழும் நிலையிலிருந்த ஆட்சியினையும் காப்பாற்றி புதிய சர்வதேசப் பொறியிலிருந்து தப்பி வெளியே வந்துள்ளது அரசாங்கம்.

ஜே.வி.பி.யானது ஆட்சிபீடமேறும் கனவில் வாழும் வரைக்கும் ஜனாதிபதி மஹிந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பது மிகவும் கடினமான விடயந்தான்.

இலங்கை அரசியலில் ஐ.தே.கட்சியை மூன்றாவது நிலைக்குத் தள்ளிவிட்டோமென்கிற கற்பிதமே ஜே.வி.பி. யினர் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

ஜே.வி.பி.யின் அரசியல் சூத்திரத்தில் இரண்டு விதமான போக்குக் காணப்படுகிறது.

கைவசமுள்ள 38 நாடாளுமன்ற கதிரைகளும், இன்னொரு தேர்தல் நடத்தப்பட்டால் மீண்டும் கிடைக்குமாவென்கிற சந்தேகம் ஒரு புறமும், மேற்குலக ஆசியுடன் ரணில் கட்சி ஆட்சிபீட மேறினால், இடதுசாரிகள் என்று கூறி நசுக்கி விடுவார்களோவென்கிற அச்சமும் இவர்களிடம் மேலோங்கியுள்ளது.

ஜே.வி.பி. யோ அல்லது மஹிந்தவின் பொதுஜன ஐக்கிய முன்னணியோ அதிகம் இனவாதம் பேசுகிறார்களென்று ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தினால் அதிலும் ஜே.வி.பி. தோற்றுப் போகக்கூடும்.

விமல் வீரவன்சவை பார்க்கிலும் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, கெஹெலிய ரம்புக்வெல போன்றோரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு அதி உச்ச நிலையை அடைந்துள்ளது.

ஐ.நா. சபையின் உயர் நிலை பிரதிநிதிகளையும் காட்டமாகத் திட்டும் வைராக்கியமும், அசட்டுத்துணிச்சலும் ஜே.வி.பி.யைவிட ஜனாதிபதி மஹிந்தவின் மந்திரிகளிடம் அதிகமாக காணப்படுகிறது.

யுத்த வெற்றிகளை பூதாகரமாக்கி, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை அரசாங்கம் மூடி மறைக்கின்றதென சோசலிசம் பேசியும் ஒன்றுமே மாற்றமடையவில்லை.

ஒரே உறையில் இரண்டு பௌத்த சிங்கள பேரினவாதக் கத்திகள் இருப்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களென்றும் ஜே.வி.பி.க்குத் தெரியும்.

ஆகவே, சீரழிந்த பொருளாதாரத்தால் அல்லல்படும் மக்கள் சார்பாக பேசும் ஒரே குழு பேரினவாத சோசலிசச் சக்தியாக தம்மை இனங்காட்டும் புதிய முயற்சியில் ஜே.வி.பி. இறங்கியுள்ளது.

அரசாங்கத்தின் மீது, சர்வதேசம் போல் அதிக அழுத்தம் கொடுத்தால், கட்சியை உடைத்து விடுவார்களென்கிற பயம், வரவு செலவுத் திட்ட காலத்தில் இவர்களுக்குள் உருவாகியுள்ளது.

உபத்திரவம் கொடுப்பவர்களின் ஆட்பலத்தை உடைத்து விடுவதே, இலங்கை அரசியலின் ஜனநாயகப் பாரம்பரியம் என்பதை வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.

பிரித்தாளும் சூத்திரத்தின் பிதாமகர்கள், தமது 150 ஆண்டுகால ஆட்சியில் விட்டுச் சென்ற ஏகாதிபத்திய மனோபாவம், இந்த நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடியினரின் ஆளுமையிலும் செருகப்பட்டுள்ளது.

கட்சியை உடைக்க முடியாவிட்டால், அதன் உறுப்பினர்களின் உறவினர்களைக் கடத்தி, ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கும் நவீன அரசியல் பாரம்பரியமும் இலங்கையில் நடைமுறையிலுள்ளது.

அடங்க மறுக்கும் தனிநபர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கி, அச்சுறுத்தும் பாணியில் அரசியலும் நடக்கிறது. அமெரிக்க ஜனநாயகத்தின், சுதந்திர பாதுகாவலர் விருது பெற்ற "மக்கள் கண்காணிப்புக்குழு' ஏற்பாட்டாளர் மனோகணேசனிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விலக்கி, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடுபவரின் மனித உரிமையையும் மீறி இருக்கிறது இந்த அரசாங்கம்.

ஆனாலும் தமிழ் மக்களின் பாதுகாப்புக் குறித்து, இந்த சர்வதேச சமூகம் எதுவித உத்தரவாதமும் இதுவரை வழங்கவில்லையென்பதை இத்தருணத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் அறிக்கைகளை வாசித்தாலும் இந்தியா, ஜப்பான் போன்ற தென்னாசிய காந்தியவாதிகள், அரசாங்கத்திற்கெதிராக எவ்வகையான தீர்மானங்களையும் கொண்டுவர அனுமதிக்க வில்லை. அணுஆயுத பொருளாதார வல்லரசுகள் யாவும் உப்புச் சத்தியாக் கிரகப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துமாறே தமிழ் மக்களை வலியுறுத்துகின்றன.

அதனையும் இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள் அகதி முகாம்களில் இருந்தவாறு மேற்கொள்ளும்படி ஆலோசனை வழங்குகிறார்கள்.

இத்தகைய குசும்புச் சித்தர்களின் அரசாங்கச் சார்பு நிலைப்பாடுகள் எவரையும் நம்ப முடியாததொரு முடிவிற்கே தமிழ் மக்களை நகர்த்திச் செல்கிறது.

இதேவேளை, உலக மயமாக்கல் கோட்பாட்டினை அடியொற்றிய புதியமுறையிலான உளவியல் சமரொன்றையும் சர்வதேச நாடுகள் மேற்கொள்வதை அவதானிக்கலாம்.

முன் நிபந்தனைகள் ஏதுமின்றி நிதி உதவிகள் அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்றன. ஐ.நா. மனித உரிமைக் கண்காணிப்பகத்தை இலங்கையில் நிறுவ அனுமதித்தால் நிதி வழங்கப்படுமென சிறியதொரு துருப்புச் சீட்டை முன்வைத்து காலஅவகாசம் வழங்குகிறது அமெரிக்கா.

அதேவேளை ரஷ்யா, இந்திய, பாகிஸ்தான் நாடுகளின் அதியுயர் படைத்தளபதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கை அரசுக்குச் சார்பான அணியில் தாமும் இணைந்துள்ளோமென நவீன அணிசேராக் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

திருமண வைபவத்தில் " மொய்' எழுதும் பாணியில், போட்டி போட்டுக்கொண்டு நிதி உதவி வழங்கலும், இராணுவ ஜாம்பவான்களின் அதிரடி விஜயங்களும், தமிழ் மக்களின் போராடும் உளவுரணை சிதைத்து விடுமென சில சர்வதேச நாடுகள் கற்பிதம் கொண்டுள்ளன. இவ்வாறான உளச் சிதைவுச் சித்தாந்தங்களை தமிழ் மக்களின் தலைமை மீது பிரயோகித்தவாறு, புற்றீசல் போன்று புதிய தமிழ் தலைமைகளை உருவாக்கும் முயற்சிகளை ஒரு பக்கம் முடுக்கிவிட்டுள்ளன.

இலங்கையிலிருந்து முக்கூட்டணியினர் இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ள வேளையில் மோதிக் கொள்ளும் முன்னை நாள் ஈரோஸ் கொள்கை வகுப்பாளர்கள் நேசன் சங்கர் ராஜு தலைமையில் கனடாவிலும், இந்தியக்கொள்கை கருத்துருவாக்கிகளின் இணையத் தளமூடாக ரவி சுந்தரலிங்கம் என்பவர் தமது குழுவின் சித்தாந்த அரசியல் கோட்பாடுகளை முன்வைத்த வண்ணமுள்ளனர்.

விடுதலைப் புலிகளுடன் இனி ஒரு அரசியல்தீர்விற்கான பேச்சுவார்த்தை சாத்தியப்பாடுகள் இல்லையென்பதால், மிதவாத தமிழ்த் தலைமையொன்றுடன் பேசித் தீர்ப்பது சரியான வழிமுறையென்று பிரித்தானிய தூதுவர் டொமினிக் சில்கொட் கூறியதன் விளைவாகவே புதிய தமிழ்த்தலைமைகள் உருவாக ஆரம்பித்துள்ளன. தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான ஒருங்கிணைந்த பங்களிப்பினை அளிப்பதை விடுத்து, இடைவெளி நிரப்பும் குறுகிய நோக்கங்களை நிறைவேற்ற, முளைவிடும் சக்திகளை யிட்டு மக்கள் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

தமிழ் மக்களின் மாற்றுத்தலைமையாக தம்மை உருவகித்துக் கொள்ளும் சகல அணிகளும், தனிநபர்களும் விடுதலைப் புலிகளை ஒருவகையான பயங்கரவாத இயக்கமென்கிற வட்டத்தினுள்ளேயே அடக்க முயற்சிக்கின்றன. புலிகளைத் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டால் தமது பங்கானது அரசியல் தளத்தினுள் கரைந்து போகுமென்கின்ற அச்சமும் மக்களாதரவற்ற நிலையில் படைபலமும் இல்லாமல் நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் இல்லாமல் தலைமைத்துவத்தை உருவாக்கும் சிக்கலும் இவர்கள் மத்தியில் உண்டு.

இவை ஏதுமற்றவர்களையே தமிழர் தலைமையõக இலங்கையும் சர்வதேச சமூகமும் வெளிக்காட்ட விரும்புகிறது.

ஆயினும் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட தனியரசுத் தீர்மானமும் அதற்கு தமிழ் மக்கள் வழங்கிய நாடாளுமன்ற பிரதிநிதித்துவமும் கடந்த தேர்தலில் விடுதலைப் புலிகளே ஏக தலைமையென ஏற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பிற்கு வழங்கிய அமோக ஆதரவும் பல விடயங்களை சர்வதேசத்திற்கு வெளிச்சமாக்கியுள்ளது.

தமிழ் மக்கள் ஏகமனதாக அங்கீகரிக்கும் தலைமையினை பயங்கரவாதிகளாகச் சித்தரிப்போரை மக்கள் ஜனநாயகக் கோட்பாட்டினை மறுதலிப்பவர்களாகவே கருத இடமுண்டு.

அதேவேளை விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட முறைமையினை நிராகரிக்கும் இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் அவர்கள் தமிழ் மக்களின் ஈழத் தனியரசிற்கான அரசியல் அபிலாசையினை சட்டபூர்வமானதாக ஏற்று பிரித்தானிய ஜனநாயகத்தின் சில நல்ல அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

வட அயர்லாந்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாகப் பெருமிதம் கொள்ளும் டொமினிக் சில்கொட் போராடிய கத்தோலிக்க ஜரிஸ் மக்கள்மீது விமானத் தாக்குதல்களையும் பொருளாதாரத் தடைகளையும் பிரயோகித்திருந்தால் புலிகளின் போராட்ட வழிமுறையின் நியாயப்பாட்டினை உணர்ந்திருப்பர்.

கொசோவாப் பிரச்சினையில் சகல பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றதாக அறிவித்திருக்கும் ஐரோப்பிய சங்கம் இலங்கையில் மட்டும் மாற்றுத் தமிழர் தலைமையினை தேடியலையும் தாற்பரியம் ஏனென்று புரியவில்லை.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் உருவான வல்லரசுகளின் பனிப்போர் காலத்து மிச்ச சொச்சங்கள் கொசோவாவில் இன்னமும் நீண்டு செல்கிறது.

கொசோவாவில் இருமுகாம்களின் மோதலும் இலங்கையில் மூன்று முகாம்களின் காய்நகர்த்தல்களும் வேறுபட்ட பிராந்திய நலன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.

கொசோவாப் பிரிவினைக்கு எதிராக சேர்பியாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ரஷ்யா போன்று ஈழப்பிரிவினையை நிராகரித்தவாறு இலங்கையுடன் கை கோர்த்துள்ளது இந்திய அரசு. இலங்கையைப் பொறுத்தவரை மேற்குலகச் சிந்தனையில் சீனாவை மையப்படுத்தியநகர்வுகள் அதிகம் மேலோங்கியுள்ளன.

ஆகவே, இரு முகாம்கள் என்கிற பொதுத்தளம் இலங்கையில் தோற்றமுறும் பொழுதே கொசோவாப் பார்வைகளும், கிழக்குத் தீமோர் கொள்கைகளும் உருவாகலாம்.

அதுவரை "பயாப்ரா (Biafra)] சித்தாந்தமே இலங்கையில் பிரயோகிக்கப்படும்

இதயச்சந்திரன்

போர் இனநெருக்கடியை சர்வதேச மயப்படுத்த உதவியதைத் தவிர, வேறு எந்தப் பயனுமேயில்லை

* மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமுதாய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெ.சந்திரசேகரன் வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் B?-? E?

இந்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருந்துவரும் இனப்பிரச்சினையை அடுத்தடுத்து வந்த பல அரசுகள் வெவ்வேறு விதமாக அணுக முயற்சித்து வந்திருக்கின்றன. சிறுபான்மை மக்களின் அரசியல் உணர்வுகளை அலட்சியம் செய்தல், புறக்கணித்தல், உதாசீனப்படுத்தல், அக்கறை காட்ட மறுத்தல் போன்ற வழிமுறைகளை ஆரம்பகால அரசுகள் மேற்கொண்டு வந்துள்ளன. ஆனால், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தேவை என்ற கட்டாயத்தை இந்த அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு காலகட்டத்தில் உருவாகிற்று. சில அரசுகள் அச்சுறுத்தல் மூலமும், அடக்குமுறை மூலமும் இந்த பிரச்சினையைத் திரைபோட்டு மறைக்க முயற்சித்திருக்கின்றன. ஆனால், அவர்களின் முயற்சிகளையும் மீறி இந்த இனப்பிரச்சினை விஸ்வரூபமெடுத்துள்ளமையை வரலாற்றிருந்து மறைத்துவிட முடியாது.

அண்மைக்கால அரசுகள் யுத்தத்தினால் இந்த பிரச்சினையைத் தீர்த்து விடலாம் என நம்பி யுத்தத்தின் கடுமையை அதிகரிக்கத் தொடங்கின. இதனால், உள்நாட்டுப் பிரச்சினை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து, அப்பிரச்சினை சர்வதேச அந்தஸ்தைப் பெற்றதேயன்றி, இனப்பிரச்சினைத் தீர்வை நோக்கி ஒரு அடிதானும் நகர முடியவில்லை. இப்போதுங்கூட, எப்போதுமில்லாதவாறு யுத்தம் முடுக்கி விடப்பட்டுள்ளபோதும், சமரச தீர்வு ஒன்று தான் இனப்பிரச்சினைக்கு முடிவாகும் என அவ்வப்போது அரசாங்கம் ஆமோதிக்கவேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. எல்லா அழிவுகளுக்கும் பின்னர் பேச்சு வார்த்தையைப்பற்றி சிந்திப்பதை விடுத்து, இப்போதே இந்த அழிவுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் - சமரச நிலைக்கு அரசாங்கம் இறங்கி வரவேண்டும் என்பதே மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தும் அரசியல் நிலைப்பாடாகும். இந்த இனப்பிரச்சினைக்கு, இடையில் ஆரம்பம் முதலே மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி வருபவர்கள் அப்பாவி இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களே! ஒவ்வொரு கலவரத்தின்போதும் மோசமான இழப்புக்களையும் சீரழிவுகளையும் சந்தித்து வருபவர்கள் அவர்களே! இனிமேலும் இனப்பிரச்சினை கலவரமாக மாறினால், அதிலே அழியப்போகும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பவர்களும் மலையக மக்கள் தான்!

அண்மைக்காலம் முதல் நடைபெற்று வரும் சுற்றிவளைப்புத் தேடுதல், சோதனைச் சாவடிகளில் பயணிகள் கூட்டங் கூட்டமாக கைதாகி தடுத்து வைக்கப்படல் போன்றவற்றில்,பரிதாபகரமாக இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதும் பெருமளவில் மலையக மக்கள் தாம்! இத்தகைய கைதுகளால் வடக்கு, கிழக்கு மக்களும், மலையக மக்களும் சொல்லில் அடங்கா பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இது இந்த அரசின் செயற்பாட்டில் கரும்புள்ளியாக மாறிவிடக் கூடாது என்பதையும், தமிழ் மக்களின் வெறுப்புக்கு இவ்வரசு உள்ளாகிவிடக் கூடாது என்பதை ஜனாதிபதி அவர்களிடம் மலையக மக்கள் முன்னணி மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றது. சமீபத்தில் சுற்றிவளைப்பில், அடையாள அட்டையின்மையால் மட்டும் கைதானவர்களை விடுவிக்க வேண்டுமென்றும்,கொழும்பிலோ அல்லது ஏனைய பிரதேசங்களிலோ இத்தகைய கைதுகளைத் தவிர்ப்பதற்கு மாற்றுத்திட்டத்தினை ஜனாதிபதியவர்கள் வகுக்கவேண்டுமென்றும் நாம் வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வித ஆறுதலும் சொல்லமுடியாத நிலையிலேயே அந்த அரசோடு இணைந்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் எமக்குள்ளது என்பதையும், ஜனாதிபதியும் அரசும் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் இவ்வேளையில் தெரிவிக்க விரும்புகிறேன்.

எனவே, அன்றாடம் நடைபெறும் இந்தப் பிரச்சினையில் சிக்குண்டு திணறுகின்ற மலையக மக்கள், தமது அரசியல் உரிமைகள், சமூக அபிவிருத்தி, அடிப்படை வசதிகள் போன்றவற்றைக்கூட இரண்டாம் பட்ஷமாக்கிவிட்டு தற்போதைய கைதுகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே அதிகளவு அக்கறை கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்கள்! இனப்பிரச்சினை, வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினையாகக் கருதாமல், எமது நாட்டு பொருளாதாரத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணவைக்கின்ற சாபக்கேடு என்பதை உளமார சிந்திக்கவேண்டிய தேவை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்நாட்டின் வளமிக்க பொருளாதாரத்தை எவர் கட்டி எழுப்புகின்றாரோ, அவரை இந்நாட்டின் இலட்சியத் தலைவராக இலங்கை வரலாறு ஏற்றுக்கொள்ளும். அதை விடுத்து, இன அழிவுக்கும் நாட்டின் பொருளாதார சீரழிவுக்கும் களம் அமைக்கின்ற ஆட்சிக் காலங்களை வரலாற்றில் கறைபடிந்த ஏடுகளாகவே எதிர்காலம் கணிக்கும்.

மலையக சமூக அபிவிருத்தி என்பது பேரளவில் அமைச்சுப் பதிவிகளாலோ ஒரு சிறு நிதி ஒதுக்கீட்டாலோ சாத்தியப்படக் கூடியதல்ல. நூற்றாண்டு காலமாக அசட்டை செய்யப்பட்ட இந்த சமூகம் ஏனைய சமூகத்துக்கு நிகரான அந்தஸ்தைப் பெறவேண்டுமென்றால் நீண்ட கால பாரிய செயல்திட்டம் உருவாக்கப்படல் வேண்டும். அதனை செய்து முடிப்பதற்கேற்ப, கால இலக்கும் தீர்மானிக்கப்படல் வேண்டும். இந்த கால அவகாசத்தில் செய்து முடிக்கத் தக்கதான நிதி வழங்கப்படுவதோடு தேவையான மேலதிக நிதியை வெளிநாட்டு உதவிகளோடு பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இவற்றைப்பற்றியெல்லாம் தீர்மானிக்காமல், வெறுமனே எனக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அமைச்சினூடாக மட்டும் சமூக அபிவிருத்தியை சாதிக்க முடியுமென எதிர்பார்ப்பது கயிற்றால் கட்டி மலையை இழுப்பதற்குச் சமனாகும். எனவே, சாதிக்கக் கூடிய இலக்கைச் சென்றடைவதும், தற்காலிக நிவாரணத்தையேனும் ஏற்படுத்தித் தருவதுமே இந்த அமைச்சின் மூலம் செய்யக்கூடிய ஆகக் கூடுதலான செயல்பாடுகளாக இருக்கின்றன. இந்த அடிப்படையில்தான், இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்றுள்ளதை பெரிய சாதனையாகக் கருதாமல், கிடைத்த சந்தர்ப்பமாகக் கருதி சில திட்டங்களை செயல்படுத்த முனைந்திருக்கின்றேன்.

நான் வீடமைப்பு அமைச்சிலே 1994 ஆம் ஆண்டு தொடக்கம் "தோட்ட வீடமைப்பு" பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் 50 ஆயிரம் தனித்தனி வீடுகளை தோட்டத் தொழிலாளர்கள் அமைத்துக் கொள்வதற்கேற்றத் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருந்தேன். அதே விதமான வீடமைப்புத் திட்டங்களை தற்போதைய எனது அமைச்சின் மூலமாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதியிடம் கோரியிருக்கின்றேன். இது செயற்படுத்தப்படத் தொடங்கும்போது இவ்வமைச்சின் பணி மிக முக்கியமானதாக மலையக மக்கள் வரலாற்றில் பதியப்படும் என எதிர்பார்க்கின்றேன். மலையக மேம்பாட்டுக்கான நீண்டகால பாரிய திட்டமொன்று கல்விமான்களாலும் மலையக சமூக ஆய்வாளர்களாலும் வரையப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தையும் அமைச்சரவை ஏற்கனவே வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் பல அம்சங்கள் "மகிந்த சிந்தனையாலும்" தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. இதனை நடைமுறைப்படுத்துவதற்கு எனது அமைச்சுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதும் எனது கோரிக்கையாகும். இதற்கான வாய்ப்பையும் ஜனாதிபதி ஏற்படுத்தித் தருவாரென எதிர்பாக்கின்றேன். இதனால் பாரிய முன்னேற்றங்களை மலையகத்தில் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.

எனது அமைச்சின் வேலைத்திட்டங்களை உருவாக்குவதிலும் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதிலும் எனக்கு பக்க பலமாக இருந்துள்ள எனது அமைச்சின் செயலாளர் யு.ஏ.செனவிரத்ன அவர்களுக்கு விஷேடமாக எனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவிக்க விரும்புகிறேன்.

மேற்படி பணிகளில் உற்சாகமான பங்களிப்பை நல்கிய அமைச்சின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், தனிப்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் எனது அன்பான பாராட்டுக்கள் உரித்தாகும்! மாவட்டங்கள் தோறும் அமைச்சின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெரும் துணையாக இருந்து செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன்.

சமுதாதய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சின் 2007 ஆம் ஆண்டுக்குரிய கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள்ளான அமைச்சின் செயலாற்றங்கள், அமுல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றிய பணிகள் என்பன தொடர்பாகவும், எதிர்வரும் 2008 ஆம் ஆண்டு நிதியாண்டில் எனது அமைச்சினால் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் மற்றும் அது தொடர்பாக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படும் தேவைகள், உதவிகள் தொடர்பானவற்றை பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களிடம் சமர்பிக்க கிடைத்தமையையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சமூக ஏற்றத்தாழ்வுகளற்ற தேசத்தை கட்டியெழுப்பும் இலக்கினையும் அபிவிருத்தியில் சமூக நீதியையும் சமத்துவத்தையும் பரவலாக்கும் உயர் எதிர்பார்ப்புடனும் "சமத்துவத்தினைக் கொண்டதொரு சமூகத்தை நோக்கி" என்ற நோக்குடன் 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 14 ஆம் திகதி சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு,மஹிந்த சிந்தனையின் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு, ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்பட்டு, அதன் அமைச்சராக நான் நியமிக்கப்பட்டேன். சமுதாய அபிவிருத்தி செயற்பாட்டின் மூலமான வலுவூட்டலினூடாக குறைந்த வரப்பிரசாதங்களைக் கொண்ட சமூகங்கள் எதிர்நோக்குகின்ற சமூக முரண்பாடுகளை ஒழித்தல் எனும் செயற்பணியை இவ்வமைச்சு மேற்கொண்டுள்ளது.

இச்செயற்பணியின் உப கூறுகளான; சமுதாய அபிவிருத்திக்கான கொள்கைகளைத் தயார் செய்வதும் அமுல்படுத்துவதும், சமுதாய அபிவிருத்தி மற்றும் சமூக முரண்பாடுகளை ஒழிப்பது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல், சமூக முரண்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான வசதிகளைச் செய்தல், குறைந்த உரிமைகளைக் கொண்ட சமூகத்திற்கு வலுவூட்டல், அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல், சமூக அமைப்புக்களின் ஆற்றல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்தல் என்பனவாகும். சமூக முரண்பாடுகளை நீக்கி, சமூகங்களுக்கிடையில் நிலவும் அபிவிருத்தியில் சமத்துவமின்மையை இல்லாதொழிப்பதுடன், பாகுபாடு காட்டல்,மற்றும் இன, கலாசார,சமய அந்தஸ்து ரீதியிலான புறக்கணிப்பு என்பனவற்றின் விளைவாக வறுமை, கல்வி அறிவின்மை, குடியியல் அந்தஸ்து இன்மை, தொழிலின்மை, மனித உரிமை மீறல்கள், போன்ற இன்னோரன்ன சமூக அநீதிகளை ஒழித்து சமூதாய அபிவிருத்தியை ஏற்படுத்துவதனை நோக்காகக் கொண்டதாக இவ்வமைச்சு விளங்குகிறது. மேலும் இவ்வமைச்சு இந்நாட்டின் குறைந்த வரப்பிரசாதங்களைக் கொண்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது.

சுதந்திர இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள், இந்நாட்டின் வாழும் வேறுபட்ட சமூகப் பிரிவினர்களுக்கு இடையில் பரவலாக்கப்படாமல் சமூகங்களிடையே சமத்துவம் ஏற்படுவதை ஊக்கப்படுத்தவில்லை. அரசியல் நோக்கில், பிரதேசம் மற்றும் இன நலன்களை மையப்படுத்தி, ஐம்பது வருடங்களுக்கு மேலாக கைக்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளின் விளைவாக மலையக சமூகத்தைப்போன்று பல சமூகங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலும், அனைத்து அம்சங்களிலும் பலவீனமடைந்த நிலையிலும், தேசிய நீரோட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டதாயும் காணப்படுகின்றன

*மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமுதாய அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான பெ.சந்திரசேகரன் வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை

பெருந்தோட்டத்துறை சமூகம்,மீனவர் சமூகம், நகர்ப்புற சேரிகளில் வாழும் சமூகம், நகர்ப்புற சுத்திகரிப்பு தொழிலாளர் சமூகம், பின் தங்கிய கிராமப்புற சமூகம் போன்றவை இவற்றுள் சிலவாகும். இச்சமூகத்தினர் நாட்டின் பல பாகங்களிலும் பரந்து வாழ்கின்றனர். இச்சமூகத்தினரிடையே நிலவும் சமூக சமத்துவமின்மையை இல்லாதொழித்து அவர்களும் தேசிய நீரோட்டத்துடன் ஒன்றிணையும் வகையில் சமூதாய அபிவிருத்தி செயற்பாடுகளையும், வேலைத்திட்டங்களையும் ஒதுக்கப்பட்ட இச்சமூகத்தினரிடையே முன்னெடுப்பதே இவ்வமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். இந்த அமைச்சும் அதன் செயற்பாடுகளும் புதிதாக ஏற்படுத்தப்பட்டவையாகும். இந்த அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டபோது அமைச்சிற்கான ஆளணியினரோ, அமைச்சிற்கான கட்டிடமோ, ஏனைய பௌதீக வளங்களோ இருக்கவில்லை, இன்றைய முன்னேற்றமும் வளர்ச்சியும் கடந்த ஒருவருட காலப்பகுதியில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்டவையாகும்.

வேலைத் திட்டங்களை அமுல்படுத்த போதியளவு உத்தியோகத்தர் இல்லாதிருந்தமையும், அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அமுலாக்க அமைச்சின் கீழ் நிறுவனமேதும் இன்மையும், அடித்தள மக்களுடன் அமைச்சின் செயற்பாடுகளை ஒன்றிணைப்பதற்கான வலையமைப்பு இல்லாதிருந்தமையும் நாம் எதிர்நோக்கிய தலையாய பிரச்சினைகளாக இருந்தன. இச்சிக்கல்களை எமது அபிவிருத்தி செயற்பாடுகளுக்குத் தடையாகக் கொள்ளாது மாற்று வழிகளைப் பின்பற்றி அமைச்சின் பணிகளை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்துள்ளோம். எனது அமைச்சின் செயலாற்றத்துக்கான பரப்பு, புவியியல் மற்றும் சமூக வரையறைகளைக் கொண்டிராது, நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தக்கூடியதும், பின்தங்கிய சமூகங்களின் மேம்பாடு தொடர்பில் அனைத்து சமூகங்களுக்கும் சேவையாற்றக் கூடியதாகும். ஆயினும், கடந்த நிதியாண்டில் எமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு, அமைச்சின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நிலவிய ஆளணியினர் பற்றாக்குறை, பௌதிக வளங்களின் பற்றாக்குறை, அமைச்சின் செயற்பாடுகளை புதிதாக கட்டியெழுப்புவதில் நாம் எதிர்நோக்கிய சவால்கள் காரணமாக, 2007 ஆம் ஆண்டில், சமூக அநீதிக்கு ஆட்பட்டு பலவீனமான நிலையிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் எனது அமைச்சின் பணிகளை விரிவுபடுத்த இயலாத நிலையேற்பட்டது. எனினும், இந்நாட்டில் வாழும் பின்தங்கிய சமூகங்களில் பிரதானமானதும், முழுவதும் பாதிப்புக்குள்ளானதும் 15 இலட்சம் மக்களையும், தோட்டத் தொழிலாளர்களை பெருமளவில் உள்ளடக்கியதுமான மலையக சமூகத்தினரிடையே சமுதாய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தல் மற்றும் சமூக அநீதியை இல்லாதொழித்தல் தொடர்பாக பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை எனது அமைச்சு சிறப்பாக முன்னெடுத்திருப்பதை இந்த சபையில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஒன்றரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கும், அந்நிய செலாவணி உழைப்பிற்கும், அரசின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் வரி வழங்கல் மூலம் நிதியீட்டம் செய்து வருவதன் மூலமும் இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய கைத்தொழில் ஒன்றாக விளங்கும் பெருந்தோட்டத்துறை சார்ந்த சமூகத்தின் மேம்பாடு தொடர்பில் இவ்வரசாங்கம் அதிக கவனம் செலுத்துவது பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பின்னடைவான சமூக, பொருளாதார நிலைமைகளையும் சமூக உட்கட்டமைப்பில் பல்வேறு பலவீனங்களையும் கொண்டுள்ள இந்த சமூகத்தை சமத்துவம்,கௌரவமான வாழ்க்கைச் சூழல், சமூக பாதுகாப்பு ஆகியன நிறைந்த ஒரு சமூகமாக கட்டியெழுப்புவதில் பல சவால்களை எனது அமைச்சு சந்திக்கிறது.

2007 ஆம் ஆண்டில் எமக்கு வழங்கப்பட்ட மூலதன நிதி 150 மில்லியன் ரூபா. இச்சிறுதொகையினை உச்ச அளவிலும் திறனான முறையிலும் பயன்படுத்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு, தற்போது அவை முழுமையாக நிறைவேற்றப்பட்ட நிலையில் உள்ளன.

அடுத்துவரும் நிதியாண்டில் எமது அமைச்சு பின்வரும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்.

குழந்தை பராமரிப்பு மற்றும் பாலர் கல்வி அபிவிருத்தியினை முன்னெடுத்தல்,

சனசமூக நிலையங்களை நிறுவுதல்,

சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வினையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தல்.

விளையாட்டு பயிற்சி முகாமை நடாத்துதல், பொழுதுபோக்கு வசதிகளை விஸ்தரித்தல் மற்றும், விளையாட்டு மைதானங்களை புனரமைத்தலும் ஸ்தாபித்தலும்,

மனித உரிமைகள் பற்றிய வழிப்புணர்வினையும் பயிற்சியையும் வழங்குதல்,

வீதி மற்றும் நடைபாதைகளை புனரமைத்தல்.

தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.

கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்தலும் கலாசார நிலையங்களை ஸ்தாபித்தலும்.

முதியோர் பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பினை ஏற்படுத்தல்.

வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழிற்பயிற்சிகளை வழங்குதல்

மாற்று ஜீவனோபாயத்தினை அபிவிருத்திசெய்தல்.

சமூகத்தில் பெண்கள் மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுத்தல்,

சுயதொழில் பயிற்சிகளை வழங்குதல்

வாசிகசாலையை ஏற்படுத்தலும் வயதுவந்தோருக்கான கல்வியை வழங்கலும்,

இளைஞர் பயிற்சி முகாமினை நடத்தலும் பல்திறன்சார் பயிற்சினை வழங்கலும்.

சுகாதாரம் மற்றும் போசாக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.

மது பாவனை எதிர்ப்புப் பிரசாரம் மேற்கொள்ளல்,

நீர்வழங்கல், வடிகாலமைப்புகள் சீர்செய்தல்,

மின்சாரம் வழங்கல்

ஆளுமை விருத்திக்கான பயிற்சினையும் வழிகாட்டுதலையும் வழங்குதல்

குடியியல் ஆவணங்களைப் பெற்றுக்கொடுத்தல் மூலம் பிரஜைக்கான அந்தஸ்தினை மேம்படுத்தல்.

முறைசார் கல்வியினை விரிவுபடுத்துவதற்கான ஊக்குவிப்புகளை வழங்குதல்.

உயர் கல்விக்கான வாய்ப்புக்களை விருத்திசெய்தல்.

மேற்படி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான உபாய மார்க்கமாக பின்வரும் செயற்பாடுகளை எமது அமைச்சு எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

தோட்டங்களில் கிராம அபிவிருத்தி சங்கங்களை ஸ்தாபித்தல்.

சமுதாய அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கு ஏற்றவாறு இளைஞர்களை உள்ளடக்கிய தொண்டர் அபிவிருத்திக் குழுக்களை கட்டியெழுப்புதல்.

மக்கள் அடிப்படை அமைப்புகளை உருவாக்கி பலவீனப்பட்ட மக்கள் குழுக்களை வலுப்படுத்தலுக்கூடாக சுய அபிவிருத்திக்கான உந்துதலை வழங்குதல்.

பெருந்தோட்ட குடியிருப்புகளை தேசிய நீரோட்டத்துடன் ஒன்றிணைப்பதற்கும் பொது நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கும் ஏற்றவாறு புதிய பிரதேச செயலகங்களை ஸ்தாபிப்பதற்கான வழிமுறைகளையும் மேற்கொள்ளல்,

உயர் கல்வி நிறுவனங்களையும் தொழில்நுட்ப நிலையங்களையும் ஸ்தாபிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்குமான நடவடிக்கை மேற்கொள்ளல்.

பல்வேறு சர்வதேச உதவியமைப்புகளின் நிதியுதவியுடனும் அரசினது வழிகாட்டலுடனும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்கி அமுலாக்குதல்.

வேறு அமைச்சுகளுடன் கூட்டிணைந்து பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

அரசசார்பற்ற அமைப்புகள், தொண்டர் அமைப்புகள், சமூக தாபனங்கள் என்பவற்றுடனான வலைப்பின்னலொன்றை உருவாக்குதல்.

எனவே எதிர்வரும் நிதியாண்டில் மேற்குறித்த வேலைத்திட்டங்களையும் சீரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அரசினதும் வழிகாட்டலையும் போதுமான நிதியொதுக்கீட்டையும் ஏனைய உதவிகளையும் ஆதரவினையும் நானும் எனது அமைச்சின் செயலாளரும் ஏனைய உத்தியோகத்தர்களும் எதிர்பார்க்கின்றோம்.