"பேயரசு செய்தால் பிணந் தின்னும் சாத்திரங்கள்!' துரியோதனன் சபையில் திரௌபதி கூறியவை என "பாஞ்சாலி சபதத்தில்' பாரதியார் குறிப்பிட்ட இந்த வாசகம் தாம் இன்றைய அவல நிலையில் நினைவுக்கு வருகின்றது.
நாட்டில் இன்று நடக்கும் ஆட்சி முறையும் அதன் கீழ் இடம்பெறும் சம்பவங்களும் இதனைத்தான் உறு திப்படுத்துகின்றன.
தமிழர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் மிதவாதத் தலைவர்கள் வரிசையாகக் கொன்றொழிக் கப்படுகின்றார்கள். அவர்கள் புலிகள் சார்புடையவர்கள் என்றாலும், எதிரானவர்கள் என்றாலும் ஈழத் தமிழர்க ளின் நியாயமான உரிமைக்குக் குரல் எழுப்புவார் களாயின் கொல்லப்படுவார்கள் என்பதுதான் இந்த நாட்டின் சட்டம் சாஸ்திரம் போலும்.
அதுவும் தமிழ்த் தலைவர்கள், இந்த இலங்கைத் தீவின் சட்டத்தை யாக்கும் உயர்பீடமான நாடாளுமன் றின் அங்கத்தவர்களாக இருக்கும்போதே படுகொலை செய்யப்படுவது என்பதும் சர்வசாதாரணமாகிவிட்டது.
அவர்கள் பெரும்பான்மைச் சிங்களவர்களின் பிர தான இரு கட்சிகளில் இருந்தால் கூட அவர்கள் தமிழர் களின் உரிமை குறித்துக் குரல் எழுப்புவராயின் உரிய பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்பது இப்போது நிதர்சனமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் அரசுக்கு ஆதரவ ளிக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு உச்சப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசினால், ஜனநாயகரீதியில் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஏனைய மிதவா தத் தலைவர்களுக்கு, பாதுகாப்பை விலக்கி, அவர்களை ஆபத்தில் ஆழ்த்தத்தான் முடியும் என்பதும் இப்போது ஐயந்திரிபற நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்காக அவர்களுக்கு எதிராக பௌத்த, சிங்களப் பேரினவாத அரசுகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் எழுப் பிவரும் மனோ கணேசன் மற்றும் மகேஸ்வரன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு திடீரென பெருமளவில் வெட்டிக் குறைக்கப்பட்டது. அரசுக்கு எதிராக வரவு செலவுத்திட்டத்தின்போதும், அவசர காலச் சட்ட நீடிப்பு மீதான வாக்கெடுப்பின் போதும் எதிர்த்து வாக்களித்து, அரசைக் கடுமையாக விமர்சித்த குற்றத்துக்காக மனோ கணேசன் எம்.பி. நாட்டை விட்டு வெளியேற வேண்டியவரானார். மகேஸ்வரன் எம்.பி. உலகை விட்டே வெளியேற்றப்பட்டிருக்கின்றார்.
தமிழர் தம் அவலத்தை அகிலத்துக்கு எடுத்துரைத்த குற்றத்துக்காக ஜோஸப் பரராஜசிங்கம் எம்.பி. தேவாலயத்துக்குள் வைத்து கிறிஸ்மஸ் ஆராதனை யின்போது சுட்டுக்கொல்லப்பட்டார். மகேஸ்வரன் எம்.பி. புதுவருட வழிபாட்டில் ஆலய வழிபாட்டின் பின்னர், உள்வீதியைச் சுற்றிக் கும்பிட்டுக் கொண்டி ருந்தவேளை சுட்டுக் கருவறுக்கப்பட்டார். ரவிராஜ் எம்.பி. தலைநகர் கொழும்பில், பட்டப்பகலில், உயர் பாதுகாப்புப் பிரதேசத்தில் கொன்றொழிக்கப்பட்டார். இதேபோல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவும் படுகொலை செய்யப்பட்டார்.
யாழ். குடாநாட்டில் கோரமாகத் தலைவிரித்தாடும் படுகொலைகள், ஆள்கடத்தல்கள், கப்பம் கோரல்கள் போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களின் பின்னணி குறித்து நாடாளுமன்றத்தில் முழு விவரங் களோடு அம்பலப்படுத்துவேன் என மூன்று நாட்களுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும், சிங் கள இணையத்தளத்துக்கு அளித்த பேட்டி ஒன்றிலும் கூறிய பின்னரே அவர் இவ்வாறு படுகொலை செய்யப் பட்டிருக்கின்றார்.
இந்த அறிவிப்பு.
இதற்கு முன்னர் தமிழர்களுக்கு எதிராகத் தலைநகரி லும் பிற இடங்களிலும் அரச அராஜகம் அரங்கேறிய போது அவற்றுக்கு எதிராகக் கொதித்தெழுந்து நாடாளு மன்றிலும் வெளியிலும் பட்டவர்த்தனமாகக் கடும் எதிர்ப்பைக் காட்டி வந்த மகேஸ்வரனின் உறுதியான போக்கு
ஏற்கனவே ஒரு தடவை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக் காகி காயங்களுடன் தப்பிய மகேஸ்வரனின் உயிருக் குப் பெரும் அச்சுறுத்தல் இருந்தபோதும் அது குறித்து அண்மையில் கூட நாடாளுமன்றில் மகேஸ்வரன் சுட் டிக்காட்டிய நிலையில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை வேண்டுமென்றே விலக்கி, அவரை ஆபத்தில் ஆழ்த்திய அரச பாதுகாப்புத் தரப்பின் சூழ்ச்சி நடவடிக்கையாகும்.
கதிர்காமர் படுகொலைக்கும், நுகேகொடை குண்டு வெடிப்புக்கும் காரணமானவர்கள் யார் என்பது உறுதிப் படுத்தப்பட முன்னரே சூத்திரதாரிகளைக், "கண்டுபிடித்து' , கண்டித்து, நடவடிக்கை எடுத்து, விரைந்து செயற்பட்ட சர்வதேச சமூகம் இப்போது மகேஸ்வரன் படுகொலைக்கு என்ன செய்யப்போகிறது? வெறும் கண்டனத்துடன் அமைந்து விடப் போகின்றதா? அல்லது நியாயத்துடன் நடந்து கொள்ளப்போகின்றதா?
ரவிராஜ் படுகொலைக்கு "ஸ்கொட்லண்ட்யார்ட்' பொலிஸாரைக் கூட்டி வந்து விசாரணை செய்வோம் என்று "காதில் பூச்சுற்றியமை' போல, இப்போதும் சர்வ தேசம் உட்பட சகலரின் காதிலும் அரசு வைக்கப் போகும் பூவைச் சந்தோஷமாகச் சூடிக்கொண்டு சர்வதேசம் வாளாவிருக்கப் போகின்றதா? சர்வதேசத்தின் பிரதி பலிப்பை நன்கு அவதானத்துடன் பார்த்திருக்கின்றார்கள் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்கள்.
Uthayan.com
Wednesday, January 2, 2008
பேயரசு செய்யும் நாட்டின் பிணம் தின்னும் சாத்திரங்கள்
Posted by tamil at 7:06 AM 0 comments
Tuesday, January 1, 2008
விடுதலைப் போராட்டத்தில் தோல்வி நிரந்தரமில்லை
* கியூபா தேசிய விடுதலை தினத்தையும் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தினத்தையும் முன்னிட்டு இன்று மாலை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் `விடுதலைப் பண்பாட்டு மாலைப் பொழுது' நிகழ்வு நடைபெறுவதை யொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது
இ.தம்பையா
இலங்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது தற்போது தேசிய இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும்படி வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கக்கூடாது தடுப்பது என்பதாக சிங்கள மக்கள் மத்தியில் பலமான அபிப்பிராயமாக்கப்பட்டுள்ளது. அந்த எதிர்ப்பானது நாட்டுப் பிரிவினைக்கு எதிரானது பயங்கரவாதத்திற்கு எதிரானது ஈற்றில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிரானதாக கற்பிக்கப்பட்டுள்ளது.
அதனால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது சுயநிர்ணய உரிமை மறுப்பாக காட்டப்பட்டுள்ளது. அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற்றுத்தர வெளிநாடுகள் தயாராக இருப்பது போலவும் ஏகாதிபத்திய எதிர்ப்பின் காரணமாகத்தான் அது சாத்தியப்படவில்லை போலவும் காடப்படுகிறது.
ஆக ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது சுயநிர்ணய உரிமை மறுப்பு என்றும், சுயநிர்ணய உரிமை என்பது ஏகாதிபத்திய சார்பு என்றும் காட்டப்பட்டுள்ளது. இதற்கு சிங்கள மக்கள் மத்தியிலுள்ள தேசியவாத சக்திகளினதும் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள தேசிய வாத சக்திகளினதும் பிரசாரமாகும்.
பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிரான போராட்டங்களில் இடதுசாரி சக்திகள் அனைத்து மக்களையும் இணைத்துக் கொள்வதில் கவனஞ் செலுத்திய போதும் சிங்கள தேசியவாதிகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலையிலேயே அவையும் செயற்பட்ட சில சந்தர்ப்பங்கள் தமிழ் மக்கள் மத்தியில் கீறல்களை ஏற்படுத்தின. 1931 டொனமூர் சீர்திருத்தத்தை அடுத்து நடைபெற்ற தேர்தலை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் பகிஷ்கரித்த போது, அதனை ஆதரிப்பதாக தெரிவித்த இடதுசாரிகள் தேர்தலில் போட்டியிட்டனர். சோல்பரி சீர்திருத்தத்தில் தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படுவதிலும் கூடிய அழுத்தங்களை கொடுக்கவில்லை.
ஆங்கில கல்வி கற்ற மேட்டுக்குடி தமிழர்கள் பிரிட்டிஷ் காலனித்துவத்தின் கீழ் உயர்பதவிகள், வகித்தமையை, தமிழர்களுக்குப் பிரிட்டிஷார் சலுகைகளை வழங்கியதாக சிங்கள மக்களிடம் காட்டப்பட்டது. அந்த தமிழ் மேட்டுக்குடியினரில் அதிகமானோர் கிறிஸ்தவர்களாக இருந்தனர் என்பதும் பிரிட்டிஷாரின் செல்வாக்கினால் மதம் மாறியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அநாகரிக தர்மபால போன்றோரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு பௌத்த, சிங்கள மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டதாகவே இருந்தது.
1948 ஆம் ஆண்டு பிரிட்டிஷார் இலங்கையின் ஆட்சி விவகாரத்தை கைவிட்டபிறகும் தமிழ் மேட்டுக்குடியினரின் பிரிட்டிஷின் சார்பு நிலைப்பாடும் சிங்கள மக்கள் மத்தியில் இலங்கைத் தேசியம் என்பது சிங்களத் தேசிய வாதமாக வளர்த்தெடுக்கப்படுவதற்கு துணை புரிந்தது எனலாம்.
இதன் வளர்ச்சியாகவே 1972 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட குடியரசு அரசியல் யாப்பும் அமைந்தது. அதாவது பிரிட்டிஷாரிடமிருந்து முற்றாக விலகிக் கொள்வது என்ற சிங்கள தேசியவாத நிலைப்பாடு தமிழ் மக்கள் "பிரிட்டிஷாரிடம் அனுபவித்த சலுகைகளை" பறிப்பதாகவும் இந்நாட்டில் வாழும் ஏனைய இனங்களை முற்றாக நிரகரிப்பதாகவும் வளர்க்கப்பட்டது.
பின்னர் 1978 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் யாப்பு சிங்கள தேசியவாதம் இந்நாட்டில் வாழும் ஏனைய தேசிய இனங்களை நிராகரித்து ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாட்டை உறுதி செய்வதாக அமைந்தது. அந்த நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனால் தமிழ்த் தேசிய தலைமைகள் சிங்கள தேசியத்தைவிட ஏகாதிபத்தியத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் நிலைப்பாடுகளை எடுத்து அதற்கு நியாயம் கற்பிக்கலாயிற்று.
ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் எந்தவொரு மேலாதிக்கத்திற்கு அடிபணியா சுதந்திர இலங்கை நாடும் என்பதன் அவசியம் சிங்கள மக்களிடமோ, தமிழ் மக்களிடமோ சரியாக சென்றடையாமல் இலங்கையின் ஆளும் வர்க்கங்கள் இலங்கை அரசை ஏகாதிபத்தியத்தின் வாடிக்கை அரசாகவே வைத்திருப்பதன் அடிப்படையிலேயே ஏகாதிபத்தியம் பற்றி மக்களுக்கு மாயை ஊட்டி வருகின்றன. இது தமிழ் மக்கள் மத்தியிலும் ஆளும் வர்க்க நிலைப்பாட்டுடன் இருக்கும் சக்திகளுக்கும் பொருந்தும்.
பூகோளமயமாதல் எனும் நிகழ்ச்சி நிரலின்படி ஏகாதிபத்தியத்தின் அனைத்து தீர்மானங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவை யுத்தத்தின் போராலும், பொருளாதாரப் பிரச்சினைகளினாலும் மூடி மறைக்கப்படுகின்றன.
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த தேசிய முதலாளித்துவ சக்திகள் இன்று சர்வதேச மூலதனத்திடம் மண்டியிட்டிருக்கின்றன. ஏகாதிபத்தியத்திற்கும் இலங்கை மக்களுக்குமான முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு செயற்பட வேண்டிய இடதுசாரிகள் செயலிழந்துள்ளனர். மக்களோ வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாலும், யுத்தக் கொடுமையாலும் பெரும் துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தான் இன்று மாலை 5 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் விடுதலை பண்பாட்டு மாலைப் பொழுது என்ற நிகழ்ச்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு தினமாகவும் கியூப தேசிய விடுதலை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. இதனை இவ்வருடத்துடன் 5 ஆவது தடவையாக சர்வதேச ஒத்துழைப்பு மக்கள் அமையம் நடத்துகிறது.
கியூப தேசிய விடுதலை தினத்தை அடையாளமாகக் கொண்டு சோஷலிஸ கியூபாவினதும், கியூப மக்களினதும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான நிலைப்பாட்டிற்கும் போராட்டங்களுக்கும் ஒத்துழைப்பு தெரிவிப்பதாகவும் இந்நிகழ்வு அமைகிறது.
கியூபாவினுடைய தேசிய விடுதலைப் போராட்டத்தின் அனுபவங்களும் அதன் சோஷலிஸ கட்டுமான அனுபவங்கள் ஏனைய நாடுகளிலிருந்து வித்தியாசப்பட்டதாகும். அதேபோன்று தற்போது லத்தீன் அமெரிக்க மக்களிடையே ஏற்பட்டிருக்கும் விழிப்பும் வித்தியாசமாகும். கியூப மக்கள் ஜொசி மார்டி காலத்திலிருந்து `தேசம் அல்லது சாவு' என்ற சுலோகத்தின் கீழ் உண்மையாகவே தேசப்பற்றுக் கொண்டவர்களாக அவர்களது பண்பாட்டை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது தலைவர்களும் மக்களை உண்மையாக நேசிப்பவர்களாக மக்களுக்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர். பிடல் கஸ்ரோ, சேகுவேரா உட்பட பல தலைவர்கள் கியூப மக்களுக்கு கிடைத்தமை வரலாற்றில் முக்கிய பெறுமதியான விடயங்களாகும். இன்று ராவுல் கஸ்ரோ அவரது சகோதரனான பிடல் கஸ்ரோவின் சுகயீனத்தினால் நாட்டுத் தலைவர் பதவியை ஏற்று பலவிதமான சவால்களுக்கு மத்தியில் கியூப நாட்டிற்கும் மக்களுக்கும் தலைமை தாங்கி வருகிறார்.
சோவியத் யூனியானை சார்ந்தே இருந்து வந்த கியூபா சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு நின்று பிடிக்காது என்றே பல முதலாளித்துவ ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதற்கு மாறாக, பெரும் வல்லரசுகளுக்கு எதிராக சுயசார்புடன் இன்றும் நிமிர்ந்து நிற்கிறது. கியூபா வளர்முக நாடுகளுடன் இறுக்கமான உறவை வளர்த்துக் கொண்டு அவற்றுக்கும் உதவிக்கொண்டு அவற்றின் ஒத்துழைப்பை பெற்று வருகிறது.
கியூபாவில் அரசாங்கத்தின் இலவச கல்வி, மருத்துவம் போன்றவை சென்றடையாத மக்களே இல்லை. வேலைவாய்ப்பு இல்லாலும் இல்லை. குறிப்பாக மருத்துவம் விஞ்ஞான ஆய்வு போன்ற துறைகளில் வளர்ச்சியடைந்ததாக சொல்லப்படுகின்ற ஐரோப்பிய நாடுகளுக்கு இரு இணையாக இருக்கிறது.
அதன் முன்மாதிரிகளை வளர்முக நாடுகள் பின்பற்றுவது அவசியம். அதன் போராட்டப் பாரம்பரியத்தையும் விடுதலை உணர்வையும் போராடுகின்ற சக்திகள் பாடமாகக் கொள்வது அவசியம்.
இப்படி கியூபா ஏனைய நாடுகளுக்கும் மக்களுக்கும் முன்மாதிரியாகவும், பாடமாகவும் அமைந்துவிடுமென்பதால் தான் கியூபாவில் ஆட்சிக் கவிழ்ப்புகளை செய்ய ஏகாதிபத்திய சக்திகள் தொடர்ந்து சதிகளில் ஈடுபட்டு வருகின்றன. பிடல் கஸ்ரோவை பல தடவைகள் கொலை செய்ய சி.ஐ.ஏ. நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
ஜொசி மார்டி முதல் பிடல்கஸ்ரோ வரை கியூபாவில் பல தேசிய விடுதலைப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 1959 ஜனவரி முதலாம் திகதி தேசிய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிவரை பல பின்னடைவுகளும், தோல்விகளும் ஏற்பட்டன. அவை நிரந்தரமானவை அல்ல என்பது வரலாற்றினால் நிரூபிக்கப்பட்டுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிடல் கஸ்ரோவை மட்டுமல்ல, கியூபாவையும், கியூப மக்களையும் வரலாறு விடுதலை செய்தது. அயராது போராட்டத்தின் மூலம், போராட்டத்தினை வாழ்க்கையாக ஏற்றுக் கொண்ட பண்பாட்டின் காரணமாக கியூப மக்கள் இன்றும் எவருக்கும் அடிபணியாது இருக்கின்றனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் ஏகாதிபத்திய சதிகளிலிருந்தும் விடுபட்டு விடுதலைக்கு உதாரணமாக சோஷலிசக் கட்டுமானங்களுக்கு உதாரணமாக உலக வரலாற்றில் கியூபா, நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொள்ள வாழ்த்துவோம்.
(கட்டுரையாளர் சர்வதேச ஒத்துழைப்பு மக்கள் அமையத்தின் மத்திய இணைப்பாளர்)
thinakkural.com
Posted by tamil at 3:42 PM 0 comments
பொருளாதார நெருக்கடிகளை மூடி மறைக்கப் புலிப் பூச்சாண்டி!
நான்காம் ஈழ யுத்தம் முழு அளவில் வெடிப்பதற்கான சுவடுகளைப் பதித்து 2007 ஆம் ஆண்டு நம்மை விட்டுக் கழிந்திருக்கின்றது.
நாட்டின் களமுனையில் யுத்தம் வெடித்ததோ இல்லையோ, ஒவ்வொரு வீடுகளினதும் சமையல் களத்தில் சமர் வெடிக்கும் நிலைமை மட்டும் நிச்சயமாகிவிட்டது.
எகிறிக் குதிக்கும் விலைவாசி உயர்வுக்கு முகம் கொடுக்க முடியாமல் சாதாரண குடிமகன் ஒவ்வொருவனும் குடும்பத் தலைவன் ஒவ்வொருவனும் துடியாய்த்துடிக்கின்றான்.
நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதத்துக்கு மாதம் விலைவாசி அதிகரிப்பு என்று பெரும் நெருக்கடியைத் தந்து பிரிந்து சென்றிருக்கின்றது 2007 ஆம் ஆண்டு. பிறந்திருக்கும் புத்தாண்டு இன்னும் எத்தனை அவலத்தைத் தரப்போகின்றதோ என்று மலைத்துப்போய் இலங்கைத் தீவின் குடிமக்கள் ஏங்கி நிற்கின்றார்கள்.
இலங்கையில் தினசரி ஊதிப் பெருத்துவரும் பணவீக்கத்தைப் பார்க்கும்போது, அதனால் ஏற்படும் விலை அதிகரிப்புக்கு சாதாரண குடும்பத்தினால் முகம் கொடுத்துச் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.
பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் பத்து வீதமாக இருந்த பணவீக்கத்தை இப்போது இருபது வீதத்துக்கும் அதிகமாக உயர்த்தி சாதனை படைத்திருக்கின்றது மஹிந்தரின் இந்த அரசு.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தூரநோக்குக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள், காத்திரமான நடவடிக்கைகள், சிறப்பான செயற்பாடுகள் போன்றவை மூலம் பணவீக்கத்தை மூன்று முதல் ஐந்து சத வீதத்துக்குள் கட்டுமட்டாக வைத்திருக்க, இலங்கையில் மட்டும் அது கட்டுமட்டின்றி ஊதிப் பருக்கிறது. கடந்த ஒக்டோபரில் மட்டும் பணவீக்கம் 24 வீதத்தை எட்டியதாகப் பூர்வாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பின்னரான இறுதிக் காலாண்டில் அதன் அளவு இன்னும் மோசமாக இருக்கும். புள்ளி விவரங்கள் வெளிவரும்போதுதான் உண்மை நிலைவரம் அம்பலமாகும்.
மேலும், தீவிரமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் திணறும் அரசு, அப்பிரச்சினைகளை முகம் கொள்வதற்காக பண நோட்டுக்களைப் புதிதாகக் கண்மூடித்தனமாக அச்சிட்டுத் தள்ளுகின்றது. கடந்த வருடத்தில் ஏப்ரலுக்கும் செப்டெம்பருக்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்வாறு நாலாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகைக்குப் புதிய பண நோட்டுக்களை அச்சிட்டுத் தள்ளியிருக்கின்றது அரசு. இது, பண வீக்க வீதத்தை மேலும் முடுக்கிவிட்டிருக்கின்றது என்றால் மிகையாகாது.
கடந்த வாரத்தில் மக்களின் அன்றாட அத்தியாவசிய உணவுப் பொருளான கோதுமைமாவின் விலை 9 ரூபாவால் திடீரென அதிகரித்தது. இது சுமார் பதினைந்து வீத விலை அதிகரிப்பாகும்.
இதேசமயம் வீட்டு சமையலுக்கான எரிவாயுவின் விலையும் எகிறியிருக்கின்றது. 12.5 கிலோ எரிவாயு சிலின்டரின் விலை நாளை முதல் 175 ரூபாவால் அதிகரிக்கின்றது. இது சுமார் பன்னிரண்டரை வீத அதிகரிப்பாகும்.
இதேபோல அண்மைக்காலத்தில் பெற்றோல், டீசல், மண் எண்ணெய் போன்ற எரிபொருள்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்வடைந்துள்ளன.
போதாக்குறைக்குப் பிறக்கும் இந்தப் புத்தாண்டுடன் மின்சாரக் கட்டணங்களும் உயரப்போகின்றன என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியிருக்கின்றது.
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள்களை மானிய அடிப்படையில் வழங்குவது தொடர்பாக இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கை மின்சார சபைக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நேற்று முடிவடைந்த வருடத்துடன் காலாவதியாகி விட்டதாலேயே மின்சாரக் கட்டணம் "ஷொக்' அடிக்கும் விவகாரமாக மாறியிருக்கின்றது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவை தவிர, அரசியல் ஸ்திரமின்மை, உயர் பணவீக்கம், முதலீட்டு வீழ்ச்சி, சட்ட ஒழுங்குக் குழப்பம், வாழ்நிலைச் சீர்கேட்டால் வெடிக்கக் கூடிய வேலைநிறுத்தம் முதலிய தொழிற்சங்க நடவடிக்கைகள் போன்றவற்றால் இந்தப் புதுவருடத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் என ஊகம் கூறப்படுகின்றது.
ஆனால் இத்தகைய ஏதுநிலை குறித்தெல்லாம் கவலைப்படாமல் தன்பாட்டில் யுத்த வெறிப்போக்கில் முன்நகர்கின்றது மஹிந்தரின் அரசு.
"செல்லும் செல்லாது எல்லாம் செட்டியார் தலை மீது' என்பார்கள். அந்த மாதிரி நாட்டின் சீர்கெட்டு வரும் மோசமடைந்துவரும் பொருளாதார இக்கட்டு நிலைமைக்கான பொறுப்பெல்லாம் புலிகளின் மீதும் யுத்தத்தின் மீதும் சுமத்தப்பட்டு விடுகின்றன.
அடுத்த ஆறுமாத காலத்துக்குள் புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் பிரபாகரனையும் கூண்டோடு பூண்டோடு அழித்து விடுவோம், அதற்காகப் பெரும் யுத்தத் தயாரிப்புக்கு கட்டுமட்டில்லாமல் நிதியைச் செலவிடவேண்டியிருக்கின்றது, அதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை இலங்கைத் தீவின் மக்கள் முகம் கொண்டு சமாளித்தேயாக வேண்டும் என்றெல்லாம் அரசுத் தரப்பில் சமாதானம் கூறப்படுகின்றது.
தனது தீர்க்கதரிசனமற்ற பொருளாதாரக் கொள்கை, நிர்வாகச் சீர்கேடு, ஊழல் மோசடிகள் காரணமாக நாட்டின் நிதி நிலைமையை அதல பாதாளத்துக்குள் வீழ்த்தி, இக்கட்டில் சிக்கிக் கிடக்கும் அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையை மூடி மறைப்பதற்காகப் புலிப் பூச்சாண்டியைக் காட்டி எல்லாப் பிரச்சினைகளையும் அமுக்கப் பார்க்கின்றது. அனைத்து நெருக்கடிகளுக்குமான பொறுப்புக்களை யுத்தத்தின் மேல் சுமத்தித் தான் தப்பப் பார்க்கின்றது.
விலைவாசி உயர்வு உட்பட்ட பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் திணறி அல்லாடும் தென்னிலங்கை மக்களை புலிப்பூச்சாண்டி காட்டி எத்தனை காலத்துக்கு மஹிந்தரின் அரசு சமாளிக்கப் போகின்றது? முடிவு தெரிய நீண்ட காலம் செல்லாது. போர்முனை வெற்றி அல்லது பொதுமக்கள் கிளர்ச்சி அரசு எதிர்கொள்ளும் பரிசு எது என்பது விரைவில் தெரியவந்துவிடும்.
uthayan.com
Posted by tamil at 9:00 AM 0 comments
