முன் நாட்களில், மாகோச் சந்தியில் இருந்து கொழும்பு நோக்கித் தொடர்வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில், நட்பாகப் பழகும் பாமரத் தோற்றம் கொண்ட சிங்களவர்கள் இருவர் அல்லது மூவர், மூன்றாம் வகுப்புப் பயணிகளின் ஊடாக நடந்து, தனியாகப் பயணிக்கும் கொஞ்சம் நாகரிகமான, கையில் பணமுள்ளவர் போலத் தெரியும் ஒருவரின் அருகே உட்காருவார்கள். அவரின் இருக்கைக்கு அருகே தரையில் உட்காருவதும் உண்டு.
அவ்வாறு உட்கார்ந்த பின் தங்களுக்குள்ளே சீட்டுக்களைப் பிரித்து சில்லறைகளை வைத்துச் சூதாட ஆரம்பிப்பார்கள். நமது நாகரிகர் இவர்களைக் கொஞ்ச நேரம் ஓரக்கண்ணால் பார்ப்பார். இவர்களின் சுவாரசியமான உரையாடல்களால் ஈர்க்கப்படுவார்.
நீங்களும் விளையாட வருகிறீர்களா என்று இவரையும் அழைப்பார்கள். இவர் மறுக்கும் பட்சத்தில், மாத்தையா, நீங்கள் யோசிக்க வேண்டாம். உங்கள் முகராசி நல்லாயிருக்கு. உங்கள் பெயருக்கு நான் காசு வைக்கிறேன் என்று சூதாடிகளில் ஒருவர் ஒரு பத்து ரூபாய்த் தாளை வைப்பார். அதிர்ஷ்டவசமாக அந்தத் தாள் வென்று விடும்.
பணம் வைத்த சூதாடி, எடுத்துக்கொண்டு வெற்றிப் பணத்தை இவரின் கையில் திணிப்பார். தனது முகராசி பற்றிய நம்பிக்கை மேலிட்ட நமது நாகரிகர், வலிய வந்த பணத்தை வைத்து விளையாடினால் என்ன என்று விளையாடத் தொடங்குவர். அவரின் கைப்பணம், மணிக்கூடு, தங்கச்சங்கிலி, மற்றும் பெறுமதியான பொருட்கள் என்று எல்லாமே ஒட்டம் வைத்துத் தோற்கப்படும் வரை விளையாட்டை நிறுத்துவதற்கு அந்தக்கும்பல் இவரை விடாது.
தொடர்வண்டிக் காவலரையோ அல்லது காவற்றுறையினரையோ அழைக்கவும் முடியாது. ஏனென்றால் தொடர்வண்டியில் சூதாடுவது கடும் குற்றம். பகல் கொள்ளையர் இடைவழியில் இறங்கிவிட, நமது நாகரிகர் மீதிப் பயணத்தை உடுத்த உடையோடும் திகைத்த முகத்தோடும் கழிப்பார்.
இவ்வாறான இடையில் விலகி வரமுடியாத யுத்த-இராசதந்திரப் பாதைக்குள் சிறிலங்காவை மகிந்தர் இட்டுச்செல்கின்றாரோ என்ற எண்ணம் அவதானிகளிடையே இப்போது எழுந்துள்ளது.
தமிழருக்கு எதிராக வெளிப்படையான யுத்தப் பிரகடனத்தைச் செய்த ஜே.ஆர்.ஜயவர்த்தன, போருக்கான தனது திட்டத்தினை வகுக்கும்போது, இது நீண்டகாலத்திற்கு நிகழக்கூடியது என்பதை ஓரளவு எதிர்பார்த்தார். அப்போதைய இந்திய ஆட்சியாளர் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வந்ததும் அதற்கு ஒரு காரணம்.
அந்நிலையில், போருக்கான புறவளங்களைத் திரட்டும்போது, குறிப்பாகப் படைக்கலன்கள், பயிற்சி, ஆலோசனை என்பவை மட்டில், அணிசேரா நாடு என்ற நிலைப்பாட்டிற்குக் குந்தகம் ஏற்படா வண்ணம் அவதானமாக ஜே.ஆர். இருந்தார் என்ற கருத்தும் அவதானிகளிடையே உண்டு.
தவிர, போரை நடத்தும் மூலோபாயத்தில் கூட, தனியே படை வலிமையை நம்பியிராமல் தனது நரித்தனமான சூழ்ச்சித் திட்டங்களுக்கும் ஜே.ஆர். முக்கியத்துவம் தந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இரஜபக்ச நிருவாகமோ, படையின் தொகையையும், அவர்கள் பயன்படுத்தும் வெடிப்பொருட்களின் அளவையும் நம்பிய ஒரு உபாயத்தைக் கைக்கொண்டுள்ளது.
அவ்வுபாயத்தின் படி, ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் போருக்குத் தொடர்ச்சியாக ஆட்களையும் படைப் பொருட்களையும் அனுப்பிக்கொண்டே இருக்கவேண்டும். சிறிலங்கா போன்ற, பொருளாதார வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு இது பிரமாண்டமான வேலை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
கொழும்பின் அதிகாரத்தை அடுத்தடுத்துக் கைப்பற்றியவர்கள், தமது ஆட்சிக்காலத்தில் தமிழரின் படை பலத்தை அழித்திட வேண்டும் என்ற அவாவில் யுத்தத்தை நடத்தும் தரப்பினருக்கான அதிகாரங்களையும் வளங்களையும் அதிகரித்துக்கொண்டே வந்தார்கள்.
இதை மறுவளமாகப் பார்த்தால், ஒவ்வொரு ஆட்சிக்காலத்தின் அல்லது படைநடவடிக்கைக் காலத்தின் போதான சிங்களப் படைகளின் வலுவள விரிவாக்கம், எதிராளிகளான புலிகளின் ஆற்றல் விருத்தியின் அங்கீகாரச் சுட்டியாகத் திகழ்ந்து வந்தது எனலாம்.
தேசிய வரும்படி மற்றும் வெளியில் இருந்து வரும் உதவிகளில் இருந்து போருக்காக ஒதுக்கும் அளவிலும் அதே விகிதமான பெருக்கம் ஏற்பட்டு வந்தது, அதன் இன்னுமோர் பக்கம் ஆகும். இதை அறிவதற்கு 1984 ஆம் நிதியாண்டில் இருந்து சிறிலங்காவின் வருடாந்த பாதீட்டில் பாதுகாப்பிற்கெனச் செய்யப்படும் ஒதுக்கீடுகளையும் இடையில் வரும் குறைநிரப்புத் தீர்மானங்களையும் பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.
ஆயினும், எவ்வளவுதான் படைத்துறையின் செயற்பாடுகளை ஒட்டி கொழும்பு அரசியல் சுழன்றபோதும், ராஜபக்ச ஆட்சியின் அளவிற்கு, படை மூலோபாயத்தை ஒட்டியதாகப் பட்டவர்த்தனமாகத் தெரியும் அளவிற்கு வெளியுறவு மூலோபாயத்தில் தோற்றப்பாட்டு மாற்றம் நிகழ்ந்தது இதுதான் முதன்முறை.
எந்தவொரு நாட்டிடம் இருந்தும் சொல்லிக்கொள்ளும்படி உதவிகள் எதையும் பெறாத உள்ளுர்க் கிளர்ச்சி அமைப்பு ஒன்றுடனான உள்நாட்டுப் போர் வெளியுறவில் தீவிரமான சலனங்களை ஏற்படுத்தும் அளவிற்குக் கட்டுமீறிப் போய் விட்டதையே இது காட்டுகிறது என்பதை பெரும்பாலான அவதானிகள் ஏற்றுள்ளார்கள்.
சிறிலங்காவின் வெளியுறவில் ஏற்பட்ட சலனத்தின் அறிகுறிகள் கடந்த சில மாதங்களாக பலவாறு வெளிப்பட்டு வந்தன. 2006 இன் நடுப்பகுதியின் பின்னர் லூயிஸ் ஆர்பர் போன்ற மேற்குலக முக்கியர்கள் சிறிலங்காவிற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதே இதற்கான ஆரம்பம் எனலாம். அக்கருத்துக்களில், யுத்தம் நடத்தப்படும் முறை நேரடியாகவும், யுத்தம் மறைமுகமாகவும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது. மொத்தத்தில் யுத்தம் இறுதித் தீர்விற்கு இட்டுச் செல்லாது என்ற கருத்தை மேற்குலகத் தரப்பினர் முன்வைத்தார்கள்.
அவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு தனது மூத்த அமைச்சர்கள் வாயிலாக அதிகார வகையில் ராஜபக்ச பதிலளித்தாலும், விமல் வீரவன்ச போன்றோரின் கருத்துக்களும் ராஜபக்சவின் கண்ணோட்டத்தையே பிரதிநிதித்துவப்படுத்தி வந்ததை மேற்குலகம் இப்போது நன்கு புரிந்து கொண்டுள்ளது.
குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான சிறிலங்கா தரப்பின் பதிலாடல்களில், குற்றம் சாட்டியவரின் நிறுவனத்தையும் தனிப்பட அவரின் ஆளுமையையும் அவதூறு பேசும் பாங்கு இருந்தமை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.
இவ்வாறு சிறிது சிறிதாக முறுக்கேறி வந்த முரண்பாடுகள், தைத்த ஆடைக்கான ஏற்றுமதி வரிச்சலுகை பற்றிய மிரட்டல், போருக்கான உதவியை மட்டுப்படுத்துவதான தகவல், மேற்குல முக்கியர்களின் வருகை குறைதல், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒதுங்கல் எனப் படிப்படியாகத் திடவுருவம் கொள்ளத் தொடங்கின.
பதிலுக்கு, சற்றும் மனந்தளராத விக்கிரமன் போலத் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்ற ராஜபக்ச, சீனாவில் நின்று, தாய்வான் சீனாவின் ஒரு மாகாணமே என்று கூறி, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மீது வெளிப்படையான சவால் ஒன்றை விடுத்தார்.
அத்தோடு நிற்காத அவர், அமெரிக்காவின் மிகப்பெரும் வைரியான ஈரானிய சனாதிபதி அகமத்நிஜாரை அழைத்து வந்து மேற்குலகின் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க கொழும்பில் அவருக்கு மேடையிட்டுத் தந்தார்.
நல்ல பாம்மை நாவால் தொட நினைக்கிறார் ராஜபக்ச என்று சிங்கள ஆய்வாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
புலிகளின் ஆயுதக் கொள்வனவை இறுக்கமாகக் கண்காணித்து வரும் மேற்குலகம் ஒரு சில வான் எதிர்ப்பு ஏவுகணைகளைப் புலிகள் கொள்வனவு செய்யும் போது மட்டும் பாராமுகமாக இருக்குமானால் மறுகணமே கிளிநொச்சிக்கு எதிரான கொழும்பின் வான் மேலாதிக்கம் தொபுகடீர் என்று கவிழும் என கொழும்பு ஆய்வாளர்கள் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினர்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தோல்வியடைந்த வான் வழி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அமெரிக்க சனாதிபதியும் நோபல் பரிசாளியுமான ஜிம்மி கார்ட்டர் முதலானோரின் காட்டமான கருத்துக்களும், அதையடுத்து, ஐ.நா. மனித உரிமைச் சபை அங்கத்துவத்திற்கான போட்டியில் சிறிலங்கா மண்ணைக் கவ்வியதும், ராஜபக்ச அணியின் துடுக்குத்;தனத்திற்குக் கிடைத்த பரிசு என்ற கருத்தைப் பெரும்பாலான அவதானிகள் மறுக்கவில்லை.
இது தீர்ப்புத்தான். தண்டனை இனிமேல்தான் இருக்கிறது எனவும் சிலர் கருதுகின்றார்கள். தைத்த ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகை ஊசலாடிக்கொண்டிருப்பதையும் இந்த விவகாரங்களோடு சேர்த்துப் பார்க்கலாம்.
ஆனாலும் ராஜபக்ச நிறுவனம் எதற்கும் தியங்குவதாகத் தெரியவில்லை. முகராசிக்காரத் தொடர்வண்டிப் பயணியைப் போன்ற மிதப்பில், கேள்விப் பார்வையின்றி ஆயுதங்களைத் தரும் நாடுகளோடும் அவற்றின் கொள்கை நிலைப்பாடுகளோடும் சகட்டு மேனிக்குத் தன்னை அடையாளப்படுத்தி வருகிறது கொழும்பு நிருவாகம்.
தனது ஆட்சிக்காலத்தின் மீதிக்காலத்தைக் கடப்பதற்குத் திடமான படைய வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது அரசியல் சக்தியையும், நாட்டின் தேசிய வளங்களையும், வெளியுறவுக் கொள்கையையும் யுத்தத்தில் ஒட்டம் வைத்துவிட்டுக் காத்து நிற்பவராகவே அவர் தென்படுகிறார்.
அவருக்குத் தொடர் வெற்றிகள் கிட்டுமா அல்லது வழியிலே சூதாடியதால் முடிவிலே கையேந்திய தொடர்வண்டிப் பயணியின் நிலைக்கு நாட்டை இட்டுச்செல்வாரா என்பற்கான விடையைக் களமுனையைத் தவிர வேறெங்கும் தேடவேண்டியிருக்காது.
நன்றி:
-சேனாதி-
வெள்ளிநாதம் (30.05.08)
Monday, June 2, 2008
ஓட்டம்
Posted by tamil at 3:39 PM 0 comments
Sunday, June 1, 2008
குடாநாடு மீது புலிகள் கடல்வழி முற்றுகையா?
யாழ்.குடாநாட்டை கடல் வழியால் பாதுகாக்கும் படையினரின் முயற்சிக்கு தொடர்ந்தும் அடிவிழுகிறது. வன்னியில் பலமுனைகளிலும் பாரிய படை நடவடிக்கைகள் தொடர்கையில் விடுதலைப்புலிகளின் பார்வை யாழ்.குடாவின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் குடாநாட்டின் மீதான நெருக்குதலை புலிகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
யாழ்.குடாநாட்டின் மீது தரைவழியால் மேற்கொள்ளப்படும் நெருக்குதலில் புலிகள் சில நெருக்கடிகளை எதிர்கொள்கையில் கடல் வழியால் நெருக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குடாநாட்டுக்கு இரு வழிக் கடல் பாதைகளுள்ளன. இந்தக் கடல்வழிப் பாதைகளூடான நெருக்குதல்களையே புலிகள் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனால், முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி ஊடான வடபகுதிக் கடற்பரப்பிலும் மன்னார் மற்றும் நெடுந்தீவு ஊடான மேற்கு கடற்பரப்பிலும் கடற்புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் டோரா பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்டதும், திருகோணமலைத் துறைமுகத்தினுள் விநியோகக் கப்பலான, எம்.வி. இன்வின்சிபிள், அழிக்கப்பட்டதும் யாழ்.குடாவுக்கான கடல்வழிப் பாதுகாப்பையும் விநியோகப் பாதையையும் புலிகள் தகர்க்கத் தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.
யாழ்.குடாவைப் பொறுத்தவரை கிளாலி முகமாலை மற்றும் நாகர்கோவிலூடாகவே தரைவழியாலான புலிகளின் அச்சுறுத்தலுள்ளது. ஆனையிறவு படையினரின் வசமிருந்தபோது குடாநாட்டின் பாதுகாப்பை அவர்கள் முழுமையாக உறுதி செய்திருந்தனர். ஆனையிறவின் அதிஉயர் பாதுகாப்பை கருத்தில் கொண்டே பூநகரியிலிருந்து படையினர் விலகியிருந்தனர். இன்று பூநகரி மற்றும் அதனை அண்டிய கல்முனைப் பகுதியே குடாநாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாயிருக்கையில், ஆனையிறவுத் தளத்தின் உச்சநிலைப் பாதுகாப்பால் படையினர் பூநகரியிலிருந்து விலகியிருந்தனர்.
பின்னர் 1996 இன் பிற்பகுதியில் படையினர் கிளிநொச்சியையும் கைப்பற்றிவிடவே குடாநாட்டின் பாதுகாப்பு குறித்து சிறிதும் கவலைப்படத் தேவையில்லையென்ற நிலையேற்பட்டது. எனினும், கிளிநொச்சியையும் பின்னர் ஆனையிறவையும் புலிகள் கைப்பற்றிவிடவே யாழ்.குடாநாடு எவ்வேளையிலும் புலிகள் வசமாகி விடலாமென்றதொரு நிலையேற்பட்டது.
2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியை தொடர்ந்து புலிகள் யாழ்குடா மீதான முற்றுகையை ஆரம்பித்தபோது, ஆனையிறவு முகமாலையூடான தரைவழி முன்நகர்வை விட பூநகரி கல்முனை ஊடான கடல்வழி நகர்வே புலிகளுக்கு பெரிதும் கைகொடுத்திருந்தது.
புலிகள் குடாநாட்டின் மீதான முற்றுகையை கைவிட்டபின். கிளாலி முகமாலை நாகர்கோவில் என்ற அச்சில் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை மிகவும் வலுவாக அமைத்து, புலிகளால் இலகுவில் தகர்க்க முடியாதவாறு படையினர் இன்றுவரை அப்பகுதி பாதுகாப்பை பேணி வருகின்றனர். இதனால் தான் 2000 ஆம் ஆண்டின் போதும் சரி 2006 ஆம் ஆண்டின் போதும் சரி புலிகள் குடாநாடு மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்திய போது புலிகளால் கிளாலி மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளை தகர்த்துக்கொண்டு அப்பால் செல்ல முடியவில்லை.
2006 இல் முகமாலை முன்னரங்க நிலைகளை அழித்த புலிகளுக்கு அதனோடு அண்டிய எழுதுமட்டுவாள் முன்னரங்க நிலைகளை ஊடறுத்துச் செல்வதில் பெரும் நெருக்கடிகளிருந்தன. எழுதுமட்டுவாள் முன்னரங்க நிலை மட்டும் தகர்க்கப்பட்டிருந்தால் கிளாலியில் படையினர் பொறிக்குள் சிக்கியிருப்பர். குடாநாடு மீதான புலிகளின் முற்றுகையும் சாத்தியமடைந்திருக்கும். எனினும், தற்போது கிளாலி முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளை மிக வலுவாக வைத்திருக்கும் படையினருக்கு புலிகளின் கடல்வழி அச்சுறுத்தலே பெரும் தலையிடியாக உள்ளது.
மண்டைதீவு முதல், யாழ் கரையோரத்தை அண்டி தென்மராட்சி வரை விரிந்து செல்லும் நீண்ட கடற்பரப்பு கடல்நீரேரியாகும். இது ஆழம் குறைந்த பரவைக்கடல். இதனால், இந்தக் கடல் நீரேரியில் நீருந்து விசைப் படகுகள் (வாட்டர் ஜெற்) மற்றும் சிறிய ரகப் படகுகள் மூலமே குடாநாட்டின் தெற்கு கரையோரப் பாதுகாப்பை கடற்படையினரால் பலப்படுத்த முடியும்.
புங்குடுதீவுக்கு அப்பால் நெடுந் தீவுக் கடற்பரப்பு மிகவும் ஆழமான தென்பதால் அந்தக் கடற்பரப்பில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகளின் தீவிர கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் அதிகமிருக்கும்.
இந்த நிலையில் கடற்புலிகளின் பலமானது யாழ். கரையோரப் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே உள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியைத் தொடர்ந்து புலிகளின் அணிகள் பூநகரி மற்றும் கல்முனையிலிருந்து கடல் வழியாகச் சென்றே தென்மராட்சியின் தனங்கிளப்பு கரையிலும் யாழ்ப்பாணம், அரியாலை கரையிலும் தரையிறங்கி உட்சென்று பாரிய தாக்குதலைத் தொடுத்திருந்தனர். இதனால், தற்போது யாழ். கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டு கண்காணிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.
தென்மராட்சி தெற்கின் கரையோரப் பாதுகாப்பை இராணுவத்தினர் உச்சமட்டத்தில் அதிகரித்துள்ள அதேநேரம் கிளாலி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற் படையினர் கரையோரத்தில் 24 மணிநேர கடல்ரோந்தை மேற்கொண்டு கடற்புலிகளின் ஊடுருவலைத் தடுக்க முனைகின்றனர். அதேபோல் மண்டைதீவு முதல் அரியாலை வரையான யாழ்நகரின் தென்பகுதிக் கரையோரப் பாதுகாப்பை இராணுவத்தினர் உச்ச மட்டத்தில் வைத்திருப்பதுடன் யாழ். கடல்நீரேரியில் மண்டைதீவு கடற்படையினரும் குருநகர் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரும் 24 மணிநேர படகு ரோந்தில் ஈடுபட்டு கடற்புலிகளின் ஊடுருவலைத் தடுக்க முனைகின்றனர்.
யாழ்.குடாநாட்டிற்கு வடமராட்சி கிழக்கு கடற்பரப்பூடாக வரும் கடற்புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்க காங்கேசன்துறை கடற்படையினர் ஆழ்கடல் ரோந்துகளை மேற்கொள்கையில் கரையோரங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பை வெகுவாக அதிகரித்துள்ளதுடன் புலிகள் கடல்வழித் தாக்குதல்களை அல்லது தரையிறக்கங்களை மேற்கொள்வதைத் தடுப்பதற்காக கடலை நோக்கி சகல பகுதிகளிலும் ஆட்லறிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கடற்சமர் நடைபெற்று கடற்புலிகளின் கையோங்கும் போது கடலை நோக்கி ஆட்லறிகளும் ஷெல்களைப் பொழிந்து தங்கள் பாதுகாப்பின் இறுக்கத்தை பறைசாற்ற முயலும்.
இவ்வாறு யாழ். குடாவின் தரைவழிப் பாதுகாப்பையும் கடல்வழிப் பாதுகாப்பையும் இராணுவத்தினரும் கடற்படையினரும் உறுதி செய்ய முயல்கையில் யாழ். கரையோரப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி குடாநாட்டின் மீது புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்த போது மண்டைதீவு கடற்படைத் தளம் மீதும் புலிகளின் ஈரூடகப் படையணி கடும் தாக்குதல் நடத்தியது.
மண்டைதீவு கடற்படைத்தளம் பாரியது. இந்த "வேலுசுமண' ராடர் நிலையமும் கடற்படகுகளின் தரிப்பிடம் அல்லது இறங்குதுறையும் மிகவும் வலுவாக உள்ளன. இங்கு புலிகளின் ஈரூடக அணிகள் தரையிறங்கி தென்பகுதியிலிருந்த கடற்படைத்தளம் மீது நீண்டநேரத் தாக்குதலை நடத்தியிருந்தன. எனினும், அது குறிப்பிடத்தக்களவு விளைவை ஏற்படுத்தவில்லை.
இந்த நிலையிலேயே யாழ்.கரையோரப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய நிலை கடற்படையினருக்கு ஏற்பட்டது. கரையோரத்தில் யாழ்.கோட்டை முதல் கொழும்புத்துறைக்கு அப்பால் வரை கரையோரத்தில் பாரிய முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. கடலுக்கடியிலும் முட்கம்பிச் சுருள்கள் போடப்பட்டன. கரையோரத்தில் முன்னரங்க காவல்நிலைகளில் பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து 24 மணிநேரமும் யாழ்.கடல் நீரேரி கண்காணிக்கப்படுகிறது. குருநகர், பாஷையூர் மற்றும் கொழும்புத்துறை மீனவர்கள் கூட அந்தந்தப் பகுதிகளிலுள்ள கடற்படையினரின் இறங்கு துறைகளாலே கடற்றொழிலுக்குச் செல்ல பலத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
2006 இல் மண்டைதீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து யாழ்.கரையோரப் பாதுகாப்புக்கு புலிகளால் பெரும் அச்சுறுத்தலேற்பட்டது. பூநகரி மற்றும் கல்முனை பகுதியிலிருந்து யாழ். கரையோரப் பகுதிகளுக்கு அச்சுறுத்தலாயிருக்கும் கடற்புலிகளைக் கண்காணிக்க மண்டைதீவு கடற்படைத்தளம் வசதியானதாயிருந்தாலும் அத்தளம் மீதான புலிகளின் தாக்குதலானது, மண்டைதீவு கடற்படை முகாமிலிருந்து யாழ். கரையோரத்தை கண்காணிப்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கியது. மண்டைதீவின் கிழக்கு பகுதியில் தான் கடற்படைத்தளமுள்ளது. மண்டைதீவின் கரையோரம் பெரும்பாலும் சதுப்பு நிலமானது. கண்டல்காடுகளும் உள்ளது. இதைவிட மண்டை தீவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே சிறுத்தீவு என்றொரு தீவு உள்ளது.
மண்டைதீவிலிருந்து, குருநகர் முதல் கொழும்புத்துறைக்கு அப்பாலான யாழ். கரையோரத்தை நேரடியாகக் கண்காணிக்க முடியாதவாறு சிறுத்தீவு மறைத்துக் கொண்டிருப்பதால், மண்டைதீவு கடற்படையினரின் நேரடிக் கண்காணிப்புக்குள் யாழ்.கரையோரம் வரவில்லை. இதைவிட பூநகரி மற்றும் கல்முனையிலிருந்து மண்டைதீவு கடற்படைத் தளம்மீது பாரிய தாக்குதல்களைத் தொடுக்கும் வாய்ப்புமுள்ளது. இது யாழ். கரையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விடுமென்பதால், மண்டைதீவிலும் கடற்படை முகாமொன்றை வைத்துக்கொண்டு மண்டைதீவுக்கும் யாழ். கரையோரத்திற்குமிடையிலுள்ள சிறுத்தீவிலும் சகல வசதிகளுடன் கூடிய கடற்படை முகாமொன்றை அமைக்க படையினர் திட்டமிட்டனர்.
பண்ணை முதல் கொழும்புத்துறைக்கு அப்பாலான கடல்நீரேரியையும் யாழ். கரையோரத்தையும் கண்காணிக்கும் விதத்தில் சிறுத்தீவில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டது. சிறுத்தீவானது மண்டைத்தீவிற்கு வடக்கே அரைக் கிலோமீற்றர் தூரத்திலும் குருநகருக்கு தெற்கே சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலும் பண்ணைப் பாலத்திலிருந்து முக்கால் கிலோமீற்றர் தூரத்திலும் இருப்பதுடன் இங்குள்ள கடற்படை முகாமிலிருந்து யாழ்.கரையோரத்தை கடல் நீரேரியூடாக கண்காணிப்பது மிகச் சுலபம்.
அத்துடன், மண்டைதீவைப் போல் சதுப்புநிலப் பிரதேசமல்ல. சிறுத்தீவின் பெரும்பாலான பகுதிகள் தரவையாகும். கடினமான நிலப்பரப்பானது. கரையோரப் பகுதியே சற்று சதுப்பு நிலமானது. மாரிகாலத்தில் மட்டுமே தண்ணீர் மட்டம் உயரும். சிறுத்தீவை அண்டிய கடல்நீரேரி ஆழம் குறைந்ததென்பதால் இத்தீவுக்கு படகுகள் மூலம் வருவது கடினம். அத்துடன், கரையெங்கும் பவளப் பாறைகள் நிறைந்து காணப்படுவதால் படகில் வந்தாலும், குறைந்தது அரைக் கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் படகுகளை நிறுத்திவிட்டே தீவுக்குள் நடந்துவந்து நுழைய முடியும்.
தீவைச் சுற்றி கற்பாறைகளும், வத்துக்கடலும், சதுப்பு நிலமும், கண்டல் காடும் கொண்டதால் இந்தத் தீவுக்குள் எவரும் நுழைய இயற்கையே பெரும் தடையாகவுள்ளது. அத்துடன், மண்டைதீவிலிருந்து உள்வாங்கியுமிருப்பதால் கடற்படையினருக்கு மிகவும் வாய்ப்பானதொரு பாதுகாப்பான இடமாகும். இதையடுத்து சிறுத்தீவில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டு அங்கு ராடர் நிலையமும் அமைக்கப்பட்டது. அத்துடன், சிறுத்தீவு கடற்படை முகாமின் பாதுகாப்பை வடக்கே யாழ். கரையோர படைமுகாம்களும் காவலரண்களும் உறுதிப்படுத்த மேற்கே உயரமான பண்ணைப் பாலத்தில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ள இராணுவக் காவலரண்களும் காவல் கோபுரங்களும் உறுதிப்படுத்தின.
தெற்கே மண்டைதீவு "வேலுசுமண' கடற்படைத் தளமுமிருப்பதால் சிறுத்தீவு கடற்படை முகாமை நெருங்குவதென்பது நினைத்துப் பார்க்க முடியாததொன்றாகவேயிருந்தது. இவ்வாறான பாதுகாப்புகள் அந்தத் தீவை சுற்றிவளைத்திருக்கையில், தீவைச் சுற்றி முள்ளுக்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கடலினடியிலும் முட்கம்பிச் சுருள்கள் போடப்பட்டு மிகப் பெரும் கோட்டையாக சிறுத்தீவும் அங்குள்ள கடற்படை முகாமும் விளங்கியது. சிறுத்தீவுக்கும் மண்டைத்தீவுக்குமிடையே ஒடுங்கிய மரப்பாலமொன்றுமுள்ளது.
இவற்றையெல்லாம் விட ஒன்றுக்கொன்று பாதுகாப்பென்பது போல் யாழ்.கரையோர இராணுவ முகாம்களும் பாதுகாப்பு அரண்களும், பண்ணை வீதி பாதுகாப்பு நிலைகளும், மண்டைதீவு கடற்படைத் தளமும், சிறுத்தீவு கடற்படை முகாமுமிருந்தன. அத்துடன், கடல்நீரேரியில் அல்லது பண்ணைப் பாலத்தில் அல்லது சிறுத்தீவு முகாமில் அல்லது மண்டைதீவு கடற்படைத்தளத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் அதனைச் சமாளிப்பதற்காகவும் அவற்றுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆட்லறிகளும் பல்குழல் ரொக்கட் செலுத்திகளும் நிறுத்தப்பட்டிருந்தன.
இவற்றையெல்லாம் தாண்டியே கடந்த புதன்கிழமை அதிகாலை கடற்புலிகளின் துணையுடன் வந்த புலிகளின் ஈரூடகப் படையணி சிறுத்தீவுக்குள் தரையிறங்கி திடீர் தாக்குதலைத் தொடுத்து சில நிமிட நேரத்திற்குள் அந்த முகாமைத் தங்களின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து அதனை அழித்து ராடர், கனரக ஆயுதங்கள் மற்றும் பெருமளவு இராணுவப் பொருட்களையும் இந்த மோதலில் கொல்லப்பட்ட மூன்று கடற்படையினரின் சடலங்களையும் கைப்பற்றிச் சென்றுள்ளது. புலிகளின் இந்த அதிரடித் தாக்குதல் படையினரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள��
�ளது.
இந்தத் தாக்குதலில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் தங்கள் தரப்பில் எதுவித இழப்புமில்லையென்றும் புலிகள் கூறியுள்ளனர். இந்த கடற்படை முகாமில் 30 முதல் 35 கடற்படையினர் இருந்திருக்கலாமென நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பல கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. புலிகளின் திடீர் தாக்குதலையடுத்து சிறுத்தீவை நோக்கி படையினரின் அனைத்து கனரக ஆயுதங்களும் முழங்கின. கடற் படையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் சிறுத்தீவைச் சுற்றிவளைத்து இந்தத் தாக்குதல் மிக உக்கிரமாக நடத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், மண்டைதீவு கடற் படைத் தளத்திலிருந்தும் பண்ணைப் பாலத்திலிருந்தும் யாழ். கரையோரப் பகுதியிலிருந்தும் படையினருக்கு உதவியாகத் தாக்குதல்கள் நடத்தப்படுவதை தடுப்பதற்காக புலிகள் இந்தப் பகுதிகள் மீது கடும் ஷெல் தாக்குதலை நடத்தவே, அந்த இடைவெளியைப் பயன்படுத்தி புலிகளின் ஈரூடக படையணி சிறுத்தீவு கடற்படை முகாமை அழித்து ராடர் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டு சில மணிநேரத்திற்குள் திரும்பிச் சென்றுவிட்டது.
மண்டைதீவு கடற்படை முகாமிலிருந்து சென்று புலிகளின் தாக்குதலை தடுக்க முடியாதவாறும், தாக்குதலின் பின் தப்பிச் செல்லும் கடற்புலிகளின் படகுகளை மண்டைதீவு கடற்படை முகாமிலிருந்து படகுகளில் சென்று தடுக்க முடியாதவாறும் புலிகள் மண்டைதீவு முகாம் மீது ஷெல் மழைபொழிந்துள்ளதுடன், கரையோரப் பகுதி முகாம்கள் மீதும் இறங்கு துறைகள் மீதும், பண்ணைப் பாலத்தின் மீதும், கடும் ஷெல் தாக்குதலை நடத்தி படையினரின் பெரும்பாலான செயற்பாடுகளை சில மணிநேரத்திற்கு நிறுத்தி அந்த இடைவெளியில் தங்கள் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.
மிகத் துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டே இந்தத் தாக்குதலை புலிகள் மிகத் துல்லியமாக நடத்தியுள்ளனர். நாலாபுறமும் பலத்த பாதுகாப்பு நிறைந்த அந்தக் கடற்பரப்பில், எந்தவொரு படைமுகாமிற்கும் எதுவித சந்தேகமும் ஏற்படாதவாறு படகுகளில் வந்து அல்லது நீந்திவந்து பலத்த பாதுகாப்புமிக்க அந்த முகாமினுள் நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டுச் செல்வதென்பது நினைத்துக் கூட பார்க்க முடியாததொன்று. அப்பகுதியிலுள்ள படைமுகாம்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்கும் போது, புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலை சினிமாக்களில் மட்டுமே பார்க்கமுடியும். அந்தளவுக்கு உளவுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டு எதிரியை சிலமணிநேரம் செயலிழக்கச் செய்து இலக்கு அழிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றிகரமாக முறியடித்து புலிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக படையினர் கூறுகின்ற போதும், கொல்லப்பட்ட படையினரில் மூவரது சடலத்தை புலிகள் கைப்பற்றிச் சென்றதன் மூலம் அங்கு என்ன நடந்ததென்பது தெளிவாகியுள்ளது. இந்த மூன்று சடலங்களையும் எதுவித சிக்கலுமின்றி புலிகளால் கொண்டு சென்றிருக்க முடியுமென்றால், மிகச் சாதாரணமாக அந்தச் சடலங்களை எடுத்துச் செல்லுமளவிற்கு புலிகள் அங்கு நின்றுள்ளனரென்பதும் இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதென்பதும் தெளிவாகிறது.
புலிகளின் இந்தத் தாக்குதல் படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மன்னாருக்கு வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் நடந்த கடற்சமரில் ஒரு டோரா பீரங்கிப் படகு அழிக்கப்பட்டதுடன் மற்றொரு டோரா படகு பலத்த சேதமடைந்து மூழ்கியது. நெடுந்தீவுக் கடற்பரப்பில் ஏற்பட்ட இந்த இழப்பானது மன்னாரை அண்டிய மேற்குக் கடலூடான யாழ். குடாவுக்கான விநியோகத்தையும் அந்தக் கடற்பரப்பின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியதுடன் குடாநாட்டின் மேற்கு கடல்வழியூடான பாதுகாப்பில் கடற்படையினரின் தாக்குதல் வலு குறித்த நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேநேரம், கடந்த வருடம் மே மாதம் 24 ஆம் திகதி புலிகளின் ஈரூடகப் படையணி பூநகரிப் பகுதியிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரம் சென்று, யாழ் நகரிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்திலுள்ள நெடுந்தீவின் தெற்கே நள்ளிரவில் தரையிறங்கி அதிரடித் தாக்குதலை நடத்தியது. சுமார் 20 நிமிடத் தாக்குதலில் கடற்படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் அந்தத் தளம் புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு சுமார் 3 மணி நேரம் தக்க வைக்கப்பட்டிருந்தது. இதன்போது புலிகளால் நவீன ராடரும், கலிபர்கள் போன்ற கனரகத் துப்பாக்கிகள் மூன்றும் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்தத் தளம் மீதான தாக்குதலின்போது காரைநகர் மற்றும் தலைமன்னார் கடற்படைத் தளங்களிலிருந்து அங்கு வந்த டோரா பீரங்கிப் படகுகளும் நீரூந்து விசைப் படகுகளும் புலிகளின் தாக்குதலுக்கிலக்காகின. இதில் டோரா படகொன்று பலத்த சேதமடைந்ததுடன் மேலுமிரு படகுகள் சேதமடைந்தன. இந்தத் தாக்குதல்களினால் 35 படையினர் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர்.
வடக்கே, குறிப்பாக யாழ். குடாவில் புலிகளின் வான்வழி மற்றும் கடல்வழி நடமாட்டங்களை கண்காணிப்பதற்காகவே நெடுந்தீவு மற்றும் மண்டைதீவு பகுதிகளில் படையினர் ராடர் நிலையங்களை அமைத்துள்ளனர். இவை குடாநாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாதவையென்பதால் இப்பகுதிகளில் நிறுவப்பட்ட ராடர்களின் பாதுகாப்புக்காக மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் நீண்டதூரப் பீரங்கிகளும் இந்தப் படைமுகாம்களில் அமைக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பும் வெகுவாக அதிகரிக்கப்பட்டிருந்தன.
இவற்றின் மீதான புலிகளின் தாக்குதல் படையினருக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. வன்னியில் வவுனியா, மன்னார் மற்றும் மணலாறில் தொடர்ந்து பாரிய படை நடவடிக்கை தொடர்கையில், புலிகள் யாழ்.குடாநாட்டை முற்றுகையிட்டு விடலாமென்ற அச்சம் படைத்தரப்புக்குள்ளது. இதனால் குடாநாட்டை சகல வழிகளிலும் பாதுகாப்பதுடன் குடாநாட்டின் பாதுகாப்புக்கு வெளியில் அச்சுறுத்தலாயிருக்கும் பகுதிகளிலிருந்தும் புலிகளை அப்புறப்படுத்திவிட வேண்டுமென்பதிலும் படைத்தரப்பு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
நன்றி :-
விதுரன்
தினக்குரல்
Posted by tamil at 6:16 PM 0 comments
குழம்பிப் போயுள்ள மட்டக்களப்பில் கேள்விக்குறியாகியுள்ள அமைதி
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியின் மத்திய பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி பிரதேசப் பொறுப்பாளர் சாந்தன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து உருவான சூழல் காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் கொல்லப்படுவதற்கும் மேலும் 6 பேர் படுகாயம் அடைவதற்கும் 4 பேர் கடத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
மட்டக்களப்பு - கல்லடியில் வைத்துப் பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களையும் விடுவிக்கக்கோரி ஏறாவூரில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 முஸ்லிம் இளைஞர்கள் கைதாகித் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர். இது ஓயாத பிரச்சினையாக மட்டக்களப்பின் முஸ்லிம் பிரதேசங்களில் தொடர்ந்தும் எரிந்து வருகிறது.
கொல்லப்பட்ட சாந்தன் அம்பாறை சவளக்கடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ராசிக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்து விடுதலைப் புலகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர், கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவருடன் இணைந்து கொண்டார்.
கருணாவி;ற்கும் பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவின் போது பிள்ளையானை ஆதரித்த இவர், தமிழ் - முஸ்லிம் எல்லைக் கிராமமான ஆரையம்பதி பிரதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதனைப் பயன்படுத்தி முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்துவதில் முன் நின்றார். இவரது செயற்பாடுகள் தமிழ் - முஸ்லிம் நல்லுறவில் பாரிய விரிசலுக்கு வித்திட்டதுடன் இப்பிரதேசத்தில் தொடர்ச்சியான பதட்ட நிலைக்கும் காரணமானது.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திலே தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் இணைந்து செயற்பட்ட இரு இனங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் பிரித்தாழும் சூழ்ச்சிக்குப் பலியாகியதில் சகோதர இனங்கள் இரண்டுமே ஒன்றையொன்று பரஸ்பரம் சந்தேகப்பட வேண்டிய சூழல் தோற்;றுவிக்கப்பட்டு விட்டது. இரண்டு தரப்பிலும் உள்ள கடும் போக்காளர்கள் இந்த இரு இனங்களுக்கும் இடையே உருவாகக்கூடிய நல்லுறவைச் சிதைத்து விடத் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவான ஜிகாத் தனியாகவும், ஊர்காவல் படை என்ற போர்வையில் இராணுவத்துடன் இணைந்து கூட்டாகவும் தமிழ் மக்களைக் கொலை செய்தும் துன்புறுத்தியும் வருகின்றது. இக்குழுவினருக்கு சிறிலங்கா அரசு மட்டுமன்றி பாகிஸ்தான் உள்ளிட்டு இஸ்லாமிய நாடுகள் ஆயுத பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.
தமிழ்த் தரப்பைப் பொறுத்த வரை இராணுவத்துடன் ஒட்டி உறவாடும் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் கூட தமிழ் மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், தமது பழைய பகைமைகளைத் தீர்த்துக்கொள்ளவும் அப்பாவி முஸ்லிம்களைப் பழிவாங்கி வருகின்றனர்.
இதேவேளை, முஸ்லிம் மக்களிடையே தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும், தமது எஜமானர்களின் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்றவும் அப்பாவித் தமிழ் மக்களையும், வாய்ப்புக் கிடைக்கும் போது போராளிகளையும், ஒருசில வேளைகளில் தமக்கு இடைஞ்சலாக உள்ள ஒட்டுக்குழு உறுப்பினர்களையும் ஜிகாத் குழுவினர் கொலை செய்து வருகின்றனர்.
இவர்களைத் தவிர, கருணா 2004 ஏப்ரலில் அடைக்கலம் தேடிக் கொழும்புக்குச் சென்ற போது அவரது சகாக்களால் ஐநூறு, ஆயிரம் ரூபாய்க்கென விற்கப்பட்ட ஆயுதங்களும் கூட முஸ்லிம்களிடம நிறையவே உள்ளன.
இந்நிலையில், சாந்தனை விடுதலைப் புலிகளே சுட்டுக்கொண்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாத பிள்ளையான் குழு, பழியை முஸ்லிம்கள் மீது போட்டுவிட்டு துப்பாக்கிப் பிரயோகம், கடத்தல் என வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளது. தனது பேச்சாளராக முஸ்லிம் ஒருவரைக் கொண்டுள்ள பிள்ளையான் குழுவால் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயற்பட முடியும்? தனது அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சரை வைத்துக்கொண்டு தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து அவரால் எவ்வாறு காப்பாற்ற முடியும்?
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரை முஸ்லிம்களின் முதன்மைப் பிரதேசமாக காத்தான்குடியே விளங்கி வருகின்றது. முஸ்லிம்களின் கருத்துருவாக்கம் இங்கிருந்து வருவதை விரும்பாத ஏறாவூர், ஓட்டமாவடி ஆகியவை எப்போதுமே காத்தான்குடியின் தலைமைத்துவத்தை நிராகரிப்பவர்களாக இருந்து வருகின்றன. இந்த முரண்பாடு தேர்தல் சமயங்களின் போது துலாம்பரமாக வெளிப்படுபதைக் காணலாம்.
சனத்தொகை நிறைந்த பிரதேசமான காத்தான்குடி தனது இரு மருங்கிலுமுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புச் செய்வதும், இதனால் தமிழ் மக்களோடு அடிக்கடி உரசல்கள் ஏற்படுவதும் வழக்கமானது. சனத்தொகைப் பெருக்கத்திற்கேற்ப இடவசதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லை என்பதனால் ஆரையம்பதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளைக் கையகப்படுத்துவதில் 1978 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வரையறுக்கப்பட்ட ஆரையம்பதி எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை மூக்கை நுழைப்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனால் ஆரையம்பதியினுடைய பல நிலப்பரப்புக்கள் பறிபோய் விட்டன. இப்போது ஆரையம்பதி மக்கள் சுற்றியுள்ள 46 இந்துக்கோயில் திருவிழாக்களுக்காக தீர்த்தமாடுவதற்காகக் கூட கடற்கரைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. (இதே போன்ற நிலை காத்தான்குடியின் வடக்கு எல்லையான கல்லடி - மஞ்சந்தொடுவாய் பகுதியிலும் உள்ளது.)
1978 ஆம் ஆண்டில் ஆரையம்பதி கிழக்குப் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் அரசும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து செயற்படுத்திய திட்டத்தினால் கர்பலா என்ற கிராமம் உருவாக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் ஆரையம்பதியைச் சுற்றி காங்கேயனோடை, ஒல்லிக்குளம், கிச்சான் பள்ளம், சிகரம், பாலமுனை எனப் பல முஸ்லிம் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்தகைய செயற்பாடுகளால், தமிழ் - முஸ்லிம் உறவு என்பது எப்போதும் வெடிக்கக்கூடிய ஒரு கொதி நிலையிலேயே இருந்து வருகின்றது.
சாதாரண முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை அவர்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ விரும்பினாலும், பல்வேறு காரணங்களால் முஸ்லிம் மக்கள் என்ற வட்டத்துக்குள் நின்றே செயற்படுகிறார்கள். இது அரசியல்வாதிகள் அவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.
1990 இல் இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை வருடா வருடம் பாரிய நினைவு கூரலாக அனுட்டிக்கப்பட்டு வருவதன் ஊடாக பழைய விடயங்கள் மக்கள் மனதில் இருந்து மறக்கப்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றத��
�.
இதேவேளை, காத்தான்குடியில் கொல்லப்படும் தமிழர்கள் யாவரும் முஸ்லிம்களால் கொல்லப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுப்பப்படுவது வழமையாகி விட்டது. இந்தப் பின்னணியிலேயே சாந்தனின் கொலையும் ஜிகாத்தினால் செய்யப்பட்டது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வரதன் மற்றும் ரெலோ அமைப்பின் அன்வர் ஆகியோரை சாந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட அதே இடத்திலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் முஸ்லிம் தீவரவாதத்துக்கு எதிரான கடும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். அதனால் இவர்கள் முஸ்லிம்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருக்கல��
�ம் என்ற பேச்சுக்கள் அடிபட்டன.
இவை தவிர, ஆரையம்பதி எல்லை விவகாரத்தில்; தமிழர்களுக்குச் சார்பாக இருந்த விடுதலைப் புலிகளின் லக்ஸ்மன் என்றழைக்கப்பட்ட வரதன், ஆனைக்குட்டி, நீலன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ரெலோவின் மத்திய குழு உறுப்பினராகவும் ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளராக இருந்தவருமான க.நவரத்தினராசா (ரொபர்ட்) அவர்களும் சுட்டுக்கொல்லபட்டார். இவர்களின் கொலைகளிலும் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டடிருந்ததாக அப்போது கதைகள் அடிபட்டன.
சாந்தன் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத்தால் சுட்டுக்கொல்ப்பட்டிருக்கலா��
�் என்று கூறுவதற்கு வேறொரு காரணமும் முன்வைக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சமயத்தில் கிழப்பி விடப்பட்ட இனவாதம், தேர்தல் முடிவடைந்த பின்னர் முதலமைச்சர் நியமனத்தில் காத்தன்குடியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கும் பிள்ளையானுக்கும் ஏற்பட்ட இழுபறி, இதனையொட்டி காத்தான்குடியில் நடாத்தப்பட்ட கதவடைப்பு என்பவை இக்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
காரணம் எதுவானாலும், மட்டக்களப்பைப் பொறுத்த வரை தமிழ்-முஸ்லிம் உறவு என்பது மிக மோசமான கட்டத்திலேயே இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இனவாதத்தைக் கிளப்பி விட்டவர் யாராக இருந்தாலும் முஸ்லிம்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதை அண்மைய நாட்களில் உணர்ந்திருப்பர்.
கடத்தப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமைதியான முறையில் ஏறாவூரில் நடைபெற்ற ஹர்த்தால், ஏறாவூரின் எல்லைக் கிராமமான ஐயங்கேணியில் வைத்து மிராகேணியைச் சேர்ந்த இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பிள்ளையான் தரப்பினரால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை நிறைந்ததாக மாறியது. அதனால், வீதியில் திரண்ட முஸ்லிம் இளைஞர்கள் வாகனங்களுக்கு கல் எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதன்போது, விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு வயோதிப் பெண் கொல்லப்பட்டதுடன் முஸ்லிம் இளைஞர்கள் இருவர் காயமடைந்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறையினை அடக்க படையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையில் 1,500-க்கும் அதிகமான ஈருருளிகளும் பத்திற்கும் மேற்பட்ட உந்துருளிகளும்; காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்டதுடன் கைப்பற்றவும்பட்டன. 24 இளைஞர்கள் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர்.
ஏறாவூரில் அமுலுக்குக்குக் கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் மாறி மாறி அமுல்படுத்தப்படுவதாகவே இருக்கிறது. மட்டக்களப்பில் அமைதி நிலவுவதாகவும் வழமை நிலை தோன்றியுள்ளதாகவும் அரச தரப்பினர் வெளிப்படுத்த நினைத்தாலும் அது சாத்தியமற்றதாகவே இருக்கிறது.
கடும் போக்காளர்களான சிங்களப் பேரினவாதிகள் தமது செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதாக இதுவரைக்கும் எந்தவிதமான வரலாறுகளும் இல்லை. 40.1 வீதமான முஸ்லிம்களும் 39.9 வீதமான தமிழர்களும் சுமார் 20 வீதமான சிங்களவர்களும் வாழும் பிரதேசமாக கிழக்கு மாகாணம் உள்ளது. ஆரம்ப கால சிங்களக் குடியேற்றங்களுக்கு முன்னர் இருந்த தமிழர்களது தொகை மிகவும் குறைவடைந்துள்ளது. இது கிழக்குத் தேர்தலின் முடிவிலிருந்தும் புலப்படுவதாக இருந்தது.
வடக்கு - கிழக்கில் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம் சமூகம் மேலும் சிறுமைப்படுத்தப்பட்டதையடுத��
�து காலம் சென்ற முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கட்சியைத் தோற்றுவித்து இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சம அந்தஸ்தினை கோரியிருந்தார்.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் தன்மானத்தோடும் சுய பாதுகாப்போடும் கிழக்கு மகாணத்தில் வாழவேண்டும் என்பதற்காகவே அவர் இணைந்த வடக்கு - கிழக்கில் முஸ்லிம்களுக்கென்று சம அந்தஸ்தினைக் கோரியிருந்தார். இந்த அடிப்படையில் செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் நடந்து கொண்டிருக்கும் கலவரங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது தோன்றியிருக்கின்றது.
எது எவ்வாறானாலும் கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்கின்ற தமிழ் முஸ்லிம் முறுகலானது சாதாரணமான மக்களிடையே ஏற்பட்டதல்ல. கிழக்கில் பலத்துடன் செயற்பட்டு வரும் பிள்ளையான் தரப்பினருடன் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்னும் சில தினங்களில் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக அமைந்தாலும் நீண்ட காலத்தில் முஸ்லிம் ஆயுதக்குழுவிற்கு பெரும் கெடுபிடியை ஏற்படுத்தும் என்பதில் இரண்டுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு மிகத் தேவைப்படுபவர்களாக இருப்பது பிள்ளையான் குழுவே.
இதேவேளை, நடைபெற்று வரும் சம்பவங்கள் ~கிழக்கில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு விட்டது| எனப் பறைசாற்றிக் கொண்டிருந்த அரசுக்கு தலையிடிக்கு மேல் தலையிடியைத் தந்த வண்ணம் இருக்கிறது.
தமிழர்களுக்கு தீர்வொன்றை முன்வைத்து விட்டதாக உலகிற்குக் காட்டுவதற்கும், கிழக்கை முழுமையான சிங்கள மயமாக்குவதற்குமே கிழக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அத்துடன் தமிழ் - முஸ்லிம் உறவினுள் விரிசலை உருவாக்கி இலாபமடைய பேரினவாதம் திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டம் பலித்து வருவதாக அவதானிக்க முடிகிறது.
'தனது மேலாதிக்கப்போக்கை மேலும் பலமுடையதாக வைத்திருக்க வேண்டிய தேவையை உணர்ந்திருக்கும் அரசு ஆயுத பலத்துடனுள்ள பிள்ளையானை முதலமைச்சாராக்க ஹிஸ்புல்லாவுக்கு கைவிரிக்கும் நிலை ஏற்பட்டால் கிழக்கில் தமது ஆயுதப் பலத்தை முஸ்லிம் தரப்பு பயன்படுத்த முனையலாம் என்ற அச்சம் இப்போது தோன்றியிருக்கிறது. தம்மிடமுள்ள ஆயுதங்களை குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக மட்டும் பயன்படுத்தி வரும் ஒருதரப்பு தமது பலத்தைக் காட்டுவதற்காக பயன்படுத்த முனைந்தால் அதன் விளைவு பெரும் சிக்கலை தமிழர் தரப்புக்குத் தரலாம்" என சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன்.
ஹிஸ்புல்லா தனது பிரதேசமான காத்தான்குடியில் வன்முறைகள் இடம்பெறுவதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். அரசின் கீழ் அமைச்சராக இருக்கும் அமீர் அலி தனது பிரதேசமான ஓட்டமாவடியையும் வன்முறைகள் இன்றி வைத்திருக்கிறார். ஆனால், ஏறாவூர் பிரதேசம் இவை இரண்டிற்கும் இடையில் உள்ள பிரதேசமாகும். ஏறாவூர் பிரதேசத்தில் இன்றுள்ள தலைவராகக் கருதப்படும் பசீர் சேகுதாவூத் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அணியைச் சேர்ந்தவர் என்பதால் வன்முறைகளின் பின்னணியில் அவர் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் தொடங்கி ஏறாவூரில் மையம் கொண்டிருக்கும் இப்போதைய வன்முறைக்கு விரைந்த தீர்வு எட்டப்படாவிட்டால் முஸ்லிம் சமூகம் நீண்டகால நோக்கில் அவர்களுடைய வியாபாரம் சம்பந்தப்பட்ட இழப்பினைப் பெருமளவில் சந்திக்க வேண்டி ஏற்படலாம்.
தற்போதைய நிலையில் தமிழர்களை மாத்திரம் கடத்தி வரும் பிள்ளையான் குழு முஸ்லிம்களையும் மையப்படுத்தி இனச் சுத்திகரிப்பில் ஈடுபட முனைந்தால் கிழக்கில் முஸ்லிம்களுடைய இருப்பு நிச்சயமாக சஞ்சலத்துக்குள் தள்ளப்படும்.
'கிழக்கு மாகாணம் முஸ்லிம்களது தாயகம் வடக்கு மாகாணமே தமிழர்களது தாயகம். எனவே கிழக்கு மாகாணத்தின் அரசு முஸ்லிம் சமூகத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும்" என்ற சிந்தைனையுடன் செயற்படும் முஸ்லிம் தலைமைகள் சில கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சாராக நியமிக்கப்படாதமைக்கான எதிர்ப்பை இன்னமும் காட்டிய வண்ணமேயே இருக்கின்றனர்.
தமிழர் தாயகத்தைத் துண்டாடுதல், சர்வதேசத்திடமிருந்தான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளுதல், சிங்கள மக்களை திருப்திப்படுத்துதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நடத்தப்பட்ட கிழக்கு தேர்தல் இப்போது தமிழ் பேசும் இனங்களுக்;கு இடையே முறுகலுக்கு வழிவகுத்து நிற்பது அரசுக்குப் பெரும் தர்மசங்கடத்தைத் தோற்றுவித்துள்ளது.
நீண்ட இன மோதலை ஏற்படுத்துவது அரசின் நோக்கமாக இருந்தால் பிள்ளையான் குழுவினரைப் பயன்படுத்தி அரசு முஸ்லிம் ஆயுதக்குழுக்களை அழிக்க முனையலாம்;.
அத்தகைய நோக்கம் இல்லாவிட்டால், குழம்பிப் போயுள்ள மட்டக்களப்பில் கேள்வியாகியுள்ள அமைதி நிலையைக்கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு முஸ்லிம் தலைமைகளுடன் கடுமையாக உழைக்க வேண்டும்.
நன்றி: நிலவரம் (30.05.08)
Posted by tamil at 5:21 AM 0 comments
