Sunday, June 1, 2008

குடாநாடு மீது புலிகள் கடல்வழி முற்றுகையா?

யாழ்.குடாநாட்டை கடல் வழியால் பாதுகாக்கும் படையினரின் முயற்சிக்கு தொடர்ந்தும் அடிவிழுகிறது. வன்னியில் பலமுனைகளிலும் பாரிய படை நடவடிக்கைகள் தொடர்கையில் விடுதலைப்புலிகளின் பார்வை யாழ்.குடாவின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் குடாநாட்டின் மீதான நெருக்குதலை புலிகள் தொடர்ந்தும் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

யாழ்.குடாநாட்டின் மீது தரைவழியால் மேற்கொள்ளப்படும் நெருக்குதலில் புலிகள் சில நெருக்கடிகளை எதிர்கொள்கையில் கடல் வழியால் நெருக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குடாநாட்டுக்கு இரு வழிக் கடல் பாதைகளுள்ளன. இந்தக் கடல்வழிப் பாதைகளூடான நெருக்குதல்களையே புலிகள் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதனால், முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி ஊடான வடபகுதிக் கடற்பரப்பிலும் மன்னார் மற்றும் நெடுந்தீவு ஊடான மேற்கு கடற்பரப்பிலும் கடற்புலிகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. அண்மையில் முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் டோரா பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்டதும், திருகோணமலைத் துறைமுகத்தினுள் விநியோகக் கப்பலான, எம்.வி. இன்வின்சிபிள், அழிக்கப்பட்டதும் யாழ்.குடாவுக்கான கடல்வழிப் பாதுகாப்பையும் விநியோகப் பாதையையும் புலிகள் தகர்க்கத் தொடங்கிவிட்டதாகவே கருதப்படுகிறது.

யாழ்.குடாவைப் பொறுத்தவரை கிளாலி முகமாலை மற்றும் நாகர்கோவிலூடாகவே தரைவழியாலான புலிகளின் அச்சுறுத்தலுள்ளது. ஆனையிறவு படையினரின் வசமிருந்தபோது குடாநாட்டின் பாதுகாப்பை அவர்கள் முழுமையாக உறுதி செய்திருந்தனர். ஆனையிறவின் அதிஉயர் பாதுகாப்பை கருத்தில் கொண்டே பூநகரியிலிருந்து படையினர் விலகியிருந்தனர். இன்று பூநகரி மற்றும் அதனை அண்டிய கல்முனைப் பகுதியே குடாநாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாயிருக்கையில், ஆனையிறவுத் தளத்தின் உச்சநிலைப் பாதுகாப்பால் படையினர் பூநகரியிலிருந்து விலகியிருந்தனர்.

பின்னர் 1996 இன் பிற்பகுதியில் படையினர் கிளிநொச்சியையும் கைப்பற்றிவிடவே குடாநாட்டின் பாதுகாப்பு குறித்து சிறிதும் கவலைப்படத் தேவையில்லையென்ற நிலையேற்பட்டது. எனினும், கிளிநொச்சியையும் பின்னர் ஆனையிறவையும் புலிகள் கைப்பற்றிவிடவே யாழ்.குடாநாடு எவ்வேளையிலும் புலிகள் வசமாகி விடலாமென்றதொரு நிலையேற்பட்டது.

2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியை தொடர்ந்து புலிகள் யாழ்குடா மீதான முற்றுகையை ஆரம்பித்தபோது, ஆனையிறவு முகமாலையூடான தரைவழி முன்நகர்வை விட பூநகரி கல்முனை ஊடான கடல்வழி நகர்வே புலிகளுக்கு பெரிதும் கைகொடுத்திருந்தது.

புலிகள் குடாநாட்டின் மீதான முற்றுகையை கைவிட்டபின். கிளாலி முகமாலை நாகர்கோவில் என்ற அச்சில் தங்கள் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை மிகவும் வலுவாக அமைத்து, புலிகளால் இலகுவில் தகர்க்க முடியாதவாறு படையினர் இன்றுவரை அப்பகுதி பாதுகாப்பை பேணி வருகின்றனர். இதனால் தான் 2000 ஆம் ஆண்டின் போதும் சரி 2006 ஆம் ஆண்டின் போதும் சரி புலிகள் குடாநாடு மீதான முற்றுகையைத் தீவிரப்படுத்திய போது புலிகளால் கிளாலி மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளை தகர்த்துக்கொண்டு அப்பால் செல்ல முடியவில்லை.

2006 இல் முகமாலை முன்னரங்க நிலைகளை அழித்த புலிகளுக்கு அதனோடு அண்டிய எழுதுமட்டுவாள் முன்னரங்க நிலைகளை ஊடறுத்துச் செல்வதில் பெரும் நெருக்கடிகளிருந்தன. எழுதுமட்டுவாள் முன்னரங்க நிலை மட்டும் தகர்க்கப்பட்டிருந்தால் கிளாலியில் படையினர் பொறிக்குள் சிக்கியிருப்பர். குடாநாடு மீதான புலிகளின் முற்றுகையும் சாத்தியமடைந்திருக்கும். எனினும், தற்போது கிளாலி முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்க நிலைகளை மிக வலுவாக வைத்திருக்கும் படையினருக்கு புலிகளின் கடல்வழி அச்சுறுத்தலே பெரும் தலையிடியாக உள்ளது.

மண்டைதீவு முதல், யாழ் கரையோரத்தை அண்டி தென்மராட்சி வரை விரிந்து செல்லும் நீண்ட கடற்பரப்பு கடல்நீரேரியாகும். இது ஆழம் குறைந்த பரவைக்கடல். இதனால், இந்தக் கடல் நீரேரியில் நீருந்து விசைப் படகுகள் (வாட்டர் ஜெற்) மற்றும் சிறிய ரகப் படகுகள் மூலமே குடாநாட்டின் தெற்கு கரையோரப் பாதுகாப்பை கடற்படையினரால் பலப்படுத்த முடியும்.

புங்குடுதீவுக்கு அப்பால் நெடுந் தீவுக் கடற்பரப்பு மிகவும் ஆழமான தென்பதால் அந்தக் கடற்பரப்பில் கடற்படையினரின் அதிவேக டோரா பீரங்கிப் படகுகளின் தீவிர கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் அதிகமிருக்கும்.

இந்த நிலையில் கடற்புலிகளின் பலமானது யாழ். கரையோரப் பாதுகாப்புக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே உள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஆனையிறவு படைத்தள வீழ்ச்சியைத் தொடர்ந்து புலிகளின் அணிகள் பூநகரி மற்றும் கல்முனையிலிருந்து கடல் வழியாகச் சென்றே தென்மராட்சியின் தனங்கிளப்பு கரையிலும் யாழ்ப்பாணம், அரியாலை கரையிலும் தரையிறங்கி உட்சென்று பாரிய தாக்குதலைத் தொடுத்திருந்தனர். இதனால், தற்போது யாழ். கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்கப்பட்டு கண்காணிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

தென்மராட்சி தெற்கின் கரையோரப் பாதுகாப்பை இராணுவத்தினர் உச்சமட்டத்தில் அதிகரித்துள்ள அதேநேரம் கிளாலி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற் படையினர் கரையோரத்தில் 24 மணிநேர கடல்ரோந்தை மேற்கொண்டு கடற்புலிகளின் ஊடுருவலைத் தடுக்க முனைகின்றனர். அதேபோல் மண்டைதீவு முதல் அரியாலை வரையான யாழ்நகரின் தென்பகுதிக் கரையோரப் பாதுகாப்பை இராணுவத்தினர் உச்ச மட்டத்தில் வைத்திருப்பதுடன் யாழ். கடல்நீரேரியில் மண்டைதீவு கடற்படையினரும் குருநகர் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரும் 24 மணிநேர படகு ரோந்தில் ஈடுபட்டு கடற்புலிகளின் ஊடுருவலைத் தடுக்க முனைகின்றனர்.

யாழ்.குடாநாட்டிற்கு வடமராட்சி கிழக்கு கடற்பரப்பூடாக வரும் கடற்புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை தடுக்க காங்கேசன்துறை கடற்படையினர் ஆழ்கடல் ரோந்துகளை மேற்கொள்கையில் கரையோரங்களில் இராணுவத்தினர் பாதுகாப்பை வெகுவாக அதிகரித்துள்ளதுடன் புலிகள் கடல்வழித் தாக்குதல்களை அல்லது தரையிறக்கங்களை மேற்கொள்வதைத் தடுப்பதற்காக கடலை நோக்கி சகல பகுதிகளிலும் ஆட்லறிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் கடற்சமர் நடைபெற்று கடற்புலிகளின் கையோங்கும் போது கடலை நோக்கி ஆட்லறிகளும் ஷெல்களைப் பொழிந்து தங்கள் பாதுகாப்பின் இறுக்கத்தை பறைசாற்ற முயலும்.

இவ்வாறு யாழ். குடாவின் தரைவழிப் பாதுகாப்பையும் கடல்வழிப் பாதுகாப்பையும் இராணுவத்தினரும் கடற்படையினரும் உறுதி செய்ய முயல்கையில் யாழ். கரையோரப் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபட்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி குடாநாட்டின் மீது புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்த போது மண்டைதீவு கடற்படைத் தளம் மீதும் புலிகளின் ஈரூடகப் படையணி கடும் தாக்குதல் நடத்தியது.

மண்டைதீவு கடற்படைத்தளம் பாரியது. இந்த "வேலுசுமண' ராடர் நிலையமும் கடற்படகுகளின் தரிப்பிடம் அல்லது இறங்குதுறையும் மிகவும் வலுவாக உள்ளன. இங்கு புலிகளின் ஈரூடக அணிகள் தரையிறங்கி தென்பகுதியிலிருந்த கடற்படைத்தளம் மீது நீண்டநேரத் தாக்குதலை நடத்தியிருந்தன. எனினும், அது குறிப்பிடத்தக்களவு விளைவை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையிலேயே யாழ்.கரையோரப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டிய நிலை கடற்படையினருக்கு ஏற்பட்டது. கரையோரத்தில் யாழ்.கோட்டை முதல் கொழும்புத்துறைக்கு அப்பால் வரை கரையோரத்தில் பாரிய முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன. கடலுக்கடியிலும் முட்கம்பிச் சுருள்கள் போடப்பட்டன. கரையோரத்தில் முன்னரங்க காவல்நிலைகளில் பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து 24 மணிநேரமும் யாழ்.கடல் நீரேரி கண்காணிக்கப்படுகிறது. குருநகர், பாஷையூர் மற்றும் கொழும்புத்துறை மீனவர்கள் கூட அந்தந்தப் பகுதிகளிலுள்ள கடற்படையினரின் இறங்கு துறைகளாலே கடற்றொழிலுக்குச் செல்ல பலத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

2006 இல் மண்டைதீவு கடற்படைத்தளம் மீதான தாக்குதலையடுத்து யாழ்.கரையோரப் பாதுகாப்புக்கு புலிகளால் பெரும் அச்சுறுத்தலேற்பட்டது. பூநகரி மற்றும் கல்முனை பகுதியிலிருந்து யாழ். கரையோரப் பகுதிகளுக்கு அச்சுறுத்தலாயிருக்கும் கடற்புலிகளைக் கண்காணிக்க மண்டைதீவு கடற்படைத்தளம் வசதியானதாயிருந்தாலும் அத்தளம் மீதான புலிகளின் தாக்குதலானது, மண்டைதீவு கடற்படை முகாமிலிருந்து யாழ். கரையோரத்தை கண்காணிப்பதில் பெரும் சிக்கல்களை உருவாக்கியது. மண்டைதீவின் கிழக்கு பகுதியில் தான் கடற்படைத்தளமுள்ளது. மண்டைதீவின் கரையோரம் பெரும்பாலும் சதுப்பு நிலமானது. கண்டல்காடுகளும் உள்ளது. இதைவிட மண்டை தீவிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே சிறுத்தீவு என்றொரு தீவு உள்ளது.

மண்டைதீவிலிருந்து, குருநகர் முதல் கொழும்புத்துறைக்கு அப்பாலான யாழ். கரையோரத்தை நேரடியாகக் கண்காணிக்க முடியாதவாறு சிறுத்தீவு மறைத்துக் கொண்டிருப்பதால், மண்டைதீவு கடற்படையினரின் நேரடிக் கண்காணிப்புக்குள் யாழ்.கரையோரம் வரவில்லை. இதைவிட பூநகரி மற்றும் கல்முனையிலிருந்து மண்டைதீவு கடற்படைத் தளம்மீது பாரிய தாக்குதல்களைத் தொடுக்கும் வாய்ப்புமுள்ளது. இது யாழ். கரையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி விடுமென்பதால், மண்டைதீவிலும் கடற்படை முகாமொன்றை வைத்துக்கொண்டு மண்டைதீவுக்கும் யாழ். கரையோரத்திற்குமிடையிலுள்ள சிறுத்தீவிலும் சகல வசதிகளுடன் கூடிய கடற்படை முகாமொன்றை அமைக்க படையினர் திட்டமிட்டனர்.

பண்ணை முதல் கொழும்புத்துறைக்கு அப்பாலான கடல்நீரேரியையும் யாழ். கரையோரத்தையும் கண்காணிக்கும் விதத்தில் சிறுத்தீவில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டது. சிறுத்தீவானது மண்டைத்தீவிற்கு வடக்கே அரைக் கிலோமீற்றர் தூரத்திலும் குருநகருக்கு தெற்கே சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலும் பண்ணைப் பாலத்திலிருந்து முக்கால் கிலோமீற்றர் தூரத்திலும் இருப்பதுடன் இங்குள்ள கடற்படை முகாமிலிருந்து யாழ்.கரையோரத்தை கடல் நீரேரியூடாக கண்காணிப்பது மிகச் சுலபம்.

அத்துடன், மண்டைதீவைப் போல் சதுப்புநிலப் பிரதேசமல்ல. சிறுத்தீவின் பெரும்பாலான பகுதிகள் தரவையாகும். கடினமான நிலப்பரப்பானது. கரையோரப் பகுதியே சற்று சதுப்பு நிலமானது. மாரிகாலத்தில் மட்டுமே தண்ணீர் மட்டம் உயரும். சிறுத்தீவை அண்டிய கடல்நீரேரி ஆழம் குறைந்ததென்பதால் இத்தீவுக்கு படகுகள் மூலம் வருவது கடினம். அத்துடன், கரையெங்கும் பவளப் பாறைகள் நிறைந்து காணப்படுவதால் படகில் வந்தாலும், குறைந்தது அரைக் கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் படகுகளை நிறுத்திவிட்டே தீவுக்குள் நடந்துவந்து நுழைய முடியும்.

தீவைச் சுற்றி கற்பாறைகளும், வத்துக்கடலும், சதுப்பு நிலமும், கண்டல் காடும் கொண்டதால் இந்தத் தீவுக்குள் எவரும் நுழைய இயற்கையே பெரும் தடையாகவுள்ளது. அத்துடன், மண்டைதீவிலிருந்து உள்வாங்கியுமிருப்பதால் கடற்படையினருக்கு மிகவும் வாய்ப்பானதொரு பாதுகாப்பான இடமாகும். இதையடுத்து சிறுத்தீவில் கடற்படை முகாம் அமைக்கப்பட்டு அங்கு ராடர் நிலையமும் அமைக்கப்பட்டது. அத்துடன், சிறுத்தீவு கடற்படை முகாமின் பாதுகாப்பை வடக்கே யாழ். கரையோர படைமுகாம்களும் காவலரண்களும் உறுதிப்படுத்த மேற்கே உயரமான பண்ணைப் பாலத்தில் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டுள்ள இராணுவக் காவலரண்களும் காவல் கோபுரங்களும் உறுதிப்படுத்தின.

தெற்கே மண்டைதீவு "வேலுசுமண' கடற்படைத் தளமுமிருப்பதால் சிறுத்தீவு கடற்படை முகாமை நெருங்குவதென்பது நினைத்துப் பார்க்க முடியாததொன்றாகவேயிருந்தது. இவ்வாறான பாதுகாப்புகள் அந்தத் தீவை சுற்றிவளைத்திருக்கையில், தீவைச் சுற்றி முள்ளுக்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் கடலினடியிலும் முட்கம்பிச் சுருள்கள் போடப்பட்டு மிகப் பெரும் கோட்டையாக சிறுத்தீவும் அங்குள்ள கடற்படை முகாமும் விளங்கியது. சிறுத்தீவுக்கும் மண்டைத்தீவுக்குமிடையே ஒடுங்கிய மரப்பாலமொன்றுமுள்ளது.

இவற்றையெல்லாம் விட ஒன்றுக்கொன்று பாதுகாப்பென்பது போல் யாழ்.கரையோர இராணுவ முகாம்களும் பாதுகாப்பு அரண்களும், பண்ணை வீதி பாதுகாப்பு நிலைகளும், மண்டைதீவு கடற்படைத் தளமும், சிறுத்தீவு கடற்படை முகாமுமிருந்தன. அத்துடன், கடல்நீரேரியில் அல்லது பண்ணைப் பாலத்தில் அல்லது சிறுத்தீவு முகாமில் அல்லது மண்டைதீவு கடற்படைத்தளத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் அதனைச் சமாளிப்பதற்காகவும் அவற்றுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காகவும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆட்லறிகளும் பல்குழல் ரொக்கட் செலுத்திகளும் நிறுத்தப்பட்டிருந்தன.

இவற்றையெல்லாம் தாண்டியே கடந்த புதன்கிழமை அதிகாலை கடற்புலிகளின் துணையுடன் வந்த புலிகளின் ஈரூடகப் படையணி சிறுத்தீவுக்குள் தரையிறங்கி திடீர் தாக்குதலைத் தொடுத்து சில நிமிட நேரத்திற்குள் அந்த முகாமைத் தங்களின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து அதனை அழித்து ராடர், கனரக ஆயுதங்கள் மற்றும் பெருமளவு இராணுவப் பொருட்களையும் இந்த மோதலில் கொல்லப்பட்ட மூன்று கடற்படையினரின் சடலங்களையும் கைப்பற்றிச் சென்றுள்ளது. புலிகளின் இந்த அதிரடித் தாக்குதல் படையினரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள��
�ளது.

இந்தத் தாக்குதலில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் தங்கள் தரப்பில் எதுவித இழப்புமில்லையென்றும் புலிகள் கூறியுள்ளனர். இந்த கடற்படை முகாமில் 30 முதல் 35 கடற்படையினர் இருந்திருக்கலாமென நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பல கடற்படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. புலிகளின் திடீர் தாக்குதலையடுத்து சிறுத்தீவை நோக்கி படையினரின் அனைத்து கனரக ஆயுதங்களும் முழங்கின. கடற் படையினருக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் சிறுத்தீவைச் சுற்றிவளைத்து இந்தத் தாக்குதல் மிக உக்கிரமாக நடத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், மண்டைதீவு கடற் படைத் தளத்திலிருந்தும் பண்ணைப் பாலத்திலிருந்தும் யாழ். கரையோரப் பகுதியிலிருந்தும் படையினருக்கு உதவியாகத் தாக்குதல்கள் நடத்தப்படுவதை தடுப்பதற்காக புலிகள் இந்தப் பகுதிகள் மீது கடும் ஷெல் தாக்குதலை நடத்தவே, அந்த இடைவெளியைப் பயன்படுத்தி புலிகளின் ஈரூடக படையணி சிறுத்தீவு கடற்படை முகாமை அழித்து ராடர் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டு சில மணிநேரத்திற்குள் திரும்பிச் சென்றுவிட்டது.

மண்டைதீவு கடற்படை முகாமிலிருந்து சென்று புலிகளின் தாக்குதலை தடுக்க முடியாதவாறும், தாக்குதலின் பின் தப்பிச் செல்லும் கடற்புலிகளின் படகுகளை மண்டைதீவு கடற்படை முகாமிலிருந்து படகுகளில் சென்று தடுக்க முடியாதவாறும் புலிகள் மண்டைதீவு முகாம் மீது ஷெல் மழைபொழிந்துள்ளதுடன், கரையோரப் பகுதி முகாம்கள் மீதும் இறங்கு துறைகள் மீதும், பண்ணைப் பாலத்தின் மீதும், கடும் ஷெல் தாக்குதலை நடத்தி படையினரின் பெரும்பாலான செயற்பாடுகளை சில மணிநேரத்திற்கு நிறுத்தி அந்த இடைவெளியில் தங்கள் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டு பாதுகாப்பாக திரும்பியுள்ளனர்.

மிகத் துல்லியமான புலனாய்வுத் தகவல்கள் திரட்டப்பட்டே இந்தத் தாக்குதலை புலிகள் மிகத் துல்லியமாக நடத்தியுள்ளனர். நாலாபுறமும் பலத்த பாதுகாப்பு நிறைந்த அந்தக் கடற்பரப்பில், எந்தவொரு படைமுகாமிற்கும் எதுவித சந்தேகமும் ஏற்படாதவாறு படகுகளில் வந்து அல்லது நீந்திவந்து பலத்த பாதுகாப்புமிக்க அந்த முகாமினுள் நுழைந்து தாக்குதலை நடத்திவிட்டுச் செல்வதென்பது நினைத்துக் கூட பார்க்க முடியாததொன்று. அப்பகுதியிலுள்ள படைமுகாம்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்க்கும் போது, புலிகள் நடத்திய இந்தத் தாக்குதலை சினிமாக்களில் மட்டுமே பார்க்கமுடியும். அந்தளவுக்கு உளவுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு தாக்குதல் திட்டம் தயாரிக்கப்பட்டு எதிரியை சிலமணிநேரம் செயலிழக்கச் செய்து இலக்கு அழிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றிகரமாக முறியடித்து புலிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக படையினர் கூறுகின்ற போதும், கொல்லப்பட்ட படையினரில் மூவரது சடலத்தை புலிகள் கைப்பற்றிச் சென்றதன் மூலம் அங்கு என்ன நடந்ததென்பது தெளிவாகியுள்ளது. இந்த மூன்று சடலங்களையும் எதுவித சிக்கலுமின்றி புலிகளால் கொண்டு சென்றிருக்க முடியுமென்றால், மிகச் சாதாரணமாக அந்தச் சடலங்களை எடுத்துச் செல்லுமளவிற்கு புலிகள் அங்கு நின்றுள்ளனரென்பதும் இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதென்பதும் தெளிவாகிறது.

புலிகளின் இந்தத் தாக்குதல் படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மன்னாருக்கு வடக்கே நெடுந்தீவு கடற்பரப்பில் நடந்த கடற்சமரில் ஒரு டோரா பீரங்கிப் படகு அழிக்கப்பட்டதுடன் மற்றொரு டோரா படகு பலத்த சேதமடைந்து மூழ்கியது. நெடுந்தீவுக் கடற்பரப்பில் ஏற்பட்ட இந்த இழப்பானது மன்னாரை அண்டிய மேற்குக் கடலூடான யாழ். குடாவுக்கான விநியோகத்தையும் அந்தக் கடற்பரப்பின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியதுடன் குடாநாட்டின் மேற்கு கடல்வழியூடான பாதுகாப்பில் கடற்படையினரின் தாக்குதல் வலு குறித்த நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேநேரம், கடந்த வருடம் மே மாதம் 24 ஆம் திகதி புலிகளின் ஈரூடகப் படையணி பூநகரிப் பகுதியிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரம் சென்று, யாழ் நகரிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்திலுள்ள நெடுந்தீவின் தெற்கே நள்ளிரவில் தரையிறங்கி அதிரடித் தாக்குதலை நடத்தியது. சுமார் 20 நிமிடத் தாக்குதலில் கடற்படைத்தளம் புலிகளால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் அந்தத் தளம் புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு சுமார் 3 மணி நேரம் தக்க வைக்கப்பட்டிருந்தது. இதன்போது புலிகளால் நவீன ராடரும், கலிபர்கள் போன்ற கனரகத் துப்பாக்கிகள் மூன்றும் பெருமளவு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்தத் தளம் மீதான தாக்குதலின்போது காரைநகர் மற்றும் தலைமன்னார் கடற்படைத் தளங்களிலிருந்து அங்கு வந்த டோரா பீரங்கிப் படகுகளும் நீரூந்து விசைப் படகுகளும் புலிகளின் தாக்குதலுக்கிலக்காகின. இதில் டோரா படகொன்று பலத்த சேதமடைந்ததுடன் மேலுமிரு படகுகள் சேதமடைந்தன. இந்தத் தாக்குதல்களினால் 35 படையினர் கொல்லப்பட்டதாக புலிகள் தெரிவித்தனர்.

வடக்கே, குறிப்பாக யாழ். குடாவில் புலிகளின் வான்வழி மற்றும் கடல்வழி நடமாட்டங்களை கண்காணிப்பதற்காகவே நெடுந்தீவு மற்றும் மண்டைதீவு பகுதிகளில் படையினர் ராடர் நிலையங்களை அமைத்துள்ளனர். இவை குடாநாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் இன்றியமையாதவையென்பதால் இப்பகுதிகளில் நிறுவப்பட்ட ராடர்களின் பாதுகாப்புக்காக மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் நீண்டதூரப் பீரங்கிகளும் இந்தப் படைமுகாம்களில் அமைக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பும் வெகுவாக அதிகரிக்கப்பட்டிருந்தன.

இவற்றின் மீதான புலிகளின் தாக்குதல் படையினருக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. வன்னியில் வவுனியா, மன்னார் மற்றும் மணலாறில் தொடர்ந்து பாரிய படை நடவடிக்கை தொடர்கையில், புலிகள் யாழ்.குடாநாட்டை முற்றுகையிட்டு விடலாமென்ற அச்சம் படைத்தரப்புக்குள்ளது. இதனால் குடாநாட்டை சகல வழிகளிலும் பாதுகாப்பதுடன் குடாநாட்டின் பாதுகாப்புக்கு வெளியில் அச்சுறுத்தலாயிருக்கும் பகுதிகளிலிருந்தும் புலிகளை அப்புறப்படுத்திவிட வேண்டுமென்பதிலும் படைத்தரப்பு தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
நன்றி :-
விதுரன்
தினக்குரல்

0 Comments: