Sunday, June 22, 2008

சர்வதேச அரசுகளும் தமிழர் பிரச்சினையும்

சர்வதேசம் அதாவது, அமெரிக்க மற்றும் ஜரோப்பிய ஒன்றிய அரசுகள் சிறிலங்கா அரசின் சமீபகால அணுகுமுறைகள் குறித்து, குறிப்பாக சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிருப்பி அடைந்து வருவதாகவும், அதன் விளைவாக எதிர்காலத்தில் சிறிலங்கா மீது மேற்கு அரசுகள் பாரிய அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடும் என்றும் பலவாறான அபிப்பிராயங்கள் நம் மத்தியில் உண்டு.

சமீப காலமாக மேற்கு அரசுகள் குறிப்பாக அமெரிக்க மற்றும் ஜரோப்பிய அரசுகள் வெளிப்படுத்தி வரும் கருத்துக்களினதும், சில நடவடிக்கைகளினதும் பின்புலத்தில் நோக்கினால் மேற்போன்ற அபிப்பிராயங்களை நோக்கி ஒருவர் செல்வதற்கான நியாயம் இல்லாமலில்லை.

இவ்வாறான அபிப்பிராயங்கள் ஈழத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்ததும் உண்மை.

புலம்பெயர் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மேற்கு அரசுகள் சிங்களத்திற்கு எதிரான நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டதன் பின்னணியில் தங்களது அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஒரு முக்கிய பங்குண்டு என்று கருதுகின்றனர்.

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பின்தளமாக, புலம்பெயர் தமிழர்களின் வாழ்விடங்கள் தொழிற்பட்டுவரும் சூழலில் புலம்பெயர் மக்கள் அவ்வாறு நம்புவதிலும் நியாயமுண்டு.

ஆனால் இவ்வாறான அபிப்பிராயங்கள், மகிழ்ச்சிகள் அனைத்திலும் பலமான அடி விழுந்தது போன்ற சில சம்பவங்கள் தற்போது இடம்பெற்றுள்ளன.

தற்போது கனடாவில் இயங்கி வந்த உலகத் தமிழர் இயக்கம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நிதி சேகரிப்பதான குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட்டுள்ளதுடன், இத்தாலியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என்ற பேரில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இப்பொழுது நாம் மீண்டும் சர்வதேச சமூகம் குறித்த எங்களது முன்னைய பரிசீலனைகளையே மீளவும் உரையாடல் பரப்பிற்கு கொண்டு வரப் போகின்றோமா அல்லது சர்வதேசம் இன்னும் எங்களது போராட்டத்தை விளங்கிக் கொள்ளவில்லையே என்று ஏக்கப்பெருமூச்சு விடப் போகின்றோமா?

பொதுவாக எங்களது சர்வதேச சமூகம் குறித்த அபிப்பிராயங்கள், நம்பிக்கைகள் எல்லாம் மேற்கு அரசுகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு அமைவாக இருப்பதை பார்க்கலாம்.

மேற்கு அரசுகள் சிங்களத்திற்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுக்கும் போது அதனால் மகிழ்ச்சி அடைபவர்களாகவும், பின்னர் அதே அரசுகள் புலிகளுக்கு எதிராக சில நடவடிக்கைளை எடுக்கும் போது அதனால் அதிர்ச்சி அடைபவர்களாகவும் நமது மக்கள் இருக்கின்றனர்.

எனவே சர்வதேச சமூகம் குறித்து நம்மிடம் ஒரு தெளிவான பார்வை இருப்பது அவசியம் என்றே நான் கருதுகிறேன்.

முதலில் சர்வதேச அரசுகளுக்கும் நமது பிரச்சினைக்கும் உள்ள உறவு மற்றும் முரண்பாடுகளை கணித்துக்கொள்வோம்.

ஆரம்பத்தில் எல்லா விடுதலைப் போராட்டங்களையும் போன்றே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டமும் முற்றிலும் இலங்கை விடயமாகவே இருந்தது.

ஆனால் அது இந்தியாவின் கரிசனைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்பட்ட போது முதன்முதலாக ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு தெற்காசிய முகம் கிடைத்தது.

இந்தியாவின் தலையீட்டுக்காலத்தில் ஒருவேளை ஈழப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால், அது இந்தியாவிற்கான சர்வதேச நன்மதிப்பை கூட்டும் ஒரு விடயமாக மட்டுமே மட்டுப்பட்டிருக்கும்.

ஆனால் இந்தியா விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக எதிர்கொண்டு பெரும் வரலாற்று தோல்விக்கு ஆளானதைத் தொடர்ந்தே விடுதலைப் புலிகளும், தமிழர் விடுதலைப் போராட்டமும் ஒரு தெற்காசிய முக்கியத்துவத்தை பெற முடிந்தது.

இது சர்வதேச அரசியலும் தமிழர் போராட்டமும் என்ற கணிப்பில் முதலாவது கட்டமாகும். இந்த போக்கின் இரண்டாவது கட்டம்தான் தமிழர் விடுதலைப் போராட்டமானது மேற்கு அரசுகளுடன் நேரடியாக தொடர்புபடும் கால கட்டமாகும். தமிழர் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் தெற்காசியாவில் அது பின்தளமைக்கக்கூடிய ஒரேயொரு இடம் இந்தியாவாகவே இருந்தது.

இதற்கு, தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் உள்ள வரலாற்று ரீதியான நெருக்கம் மற்றும் கலாசார ரீதியான தொடர்புகள் போன்ற காரணங்கள் உண்டு.

ஆனால் விடுதலைப் புலிகளை தனது மேலாதிக்க நலன்களுக்கு பயன்படுத்துவதில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 89-களின் இறுதியில் விடுதலைப் புலிகளை அங்கு செயற்பட முடியாத ஒரு இயக்கமாக இந்தியா தடை செய்தது.

இந்தியாவின் மேற்படி தடையைத் தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திற்கான பின்தளம் மேற்கு நாடுகளை நோக்கி நகர்ந்தது.

ஆரம்பத்தில் தமிழ் மக்கள் அதிகமாக செல்லக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்த கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளை நோக்கி நகர்ந்த விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுத்தளம், பின்னர் படிப்படியாக ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தையும் இணைத்துக்கொண்டது.

இவ்வாறான சூழல் உருவாவதற்கு மேற்கின் குடிவரவு கொள்கையும், அந்த நாடுகளில் உள்ளக அளவில் பலமாக இருக்கும் ஜனநாயக நடைமுறைகளும் முக்கிய பங்காற்றின எனலாம்.

நாம் மேலே பார்த்த இரண்டாவது கட்டம்தான் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் இராணுவ மற்றும் தகவல் பரிவர்தனை வளர்ச்சியில் பெரியளவில் பங்காற்றிய காலகட்டமாகும்.

முதலாவது கட்டத்தைப் பார்ப்போமானால், அதன்போது இந்தியாவை இராணுவ ரீதியாக எதிர்கொண்டதன் பின்னணியில் உள்ளக மட்டத்தில் விடுதலைப் புலிகள் மிகவும் வலுவான இயக்கமாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர் தவிர எத்தகையதொரு சந்தர்ப்பத்திலும் ஆக்கிரமிப்புச் சக்திகளுக்கு தலைசாய்க்காது போராடக்கூடிய ஒரோயொரு இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே என்பதை இந்தக்கால கட்டத்தில் புலிகள் நிரூபித்தனர்.

மேலும் இந்தக் காலகட்டம் விடுதலைப் புலிகளின் ஆட்பலத்தை அதிகரித்ததுடன், தமிழ் மக்களின் ஒரேயொரு தலைமை என்ற அந்தஸ்தையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.

இதனை இன்னும் சற்று மேலே சென்று போரியல் வளர்ச்சி நோக்கில் பார்ப்போமானால், இந்திய தலையீட்டு காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கமானது தெற்காசிய மட்டத்தில் ஒரு வலுவான கெரில்லா இயக்கமாக இருந்தது என்றால், போராட்ட பின்தளம் மேற்கிற்கு மாறியதைத் தொடர்ந்து அது ஒரு மரபுவழி விடுதலை இராணுவமாக பரிணமித்தது எனலாம்.

இந்தப் பின்னணிகளை கருத்தில் கொண்டுதான் மேற்கு அரசுகள், இலங்கை அரசியல் குறித்த தமது காய்களை நகர்த்தி வருகின்றன.

முன்னர் இந்தியாவின் காய்நகர்த்தல்களுக்கு பின்னால் விடுதலை இயக்கங்களுக்கு பின்தள வசதிகளை வழங்குதல், பயிற்சியளித்தல் மற்றும் ஆயுத உதவிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகள் காரணங்களாக இருந்தன என்றால், இன்று மேற்கின் தலையீடுகளுக்கு பின்னால் இருப்பது மேற்கில் தமிழர் உள்நுழைவதற்கான குடிவரவு சட்டங்களாகும்.

இது குறித்து திரு.பிரபாகரன் அவர்கள் கடந்த மாவீரர் தின உரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்ததும் இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

நான் மேலே குறிப்பிட்ட இரண்டாவது கட்டத்தின் ஒரு முக்கிய பகுதிதான் நோர்வேயின் தலைமையில் விடுதலைப் புலிகளும் அரசுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை.

இதன்போது நோர்வே என்பது உண்மையில் நோர்வே அல்ல அது மேற்கு அரசுகளின் குறியீடு. உண்மையில் இந்தக் கால கட்டம் தமிழர் விடுதலைப் போராட்டத்தினைப் பொறுத்த வரையில் அதனை அதுவரை இல்லாதளவிற்கு சர்வதேச மயப்படுத்தியது என்றே நான் சொல்வேன்.

அதுவரைக்கும் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கான சர்வதேச முகமானது புலம்பெயர் மக்களின் அவ்வப்போதைய நடவடிக்கைளிலேயே தங்கியிருந்தது. ஆனால் நோர்வேயின் தலையீட்டில் ஒரு தீர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டதும் அது தோல்வில் முடிவடைந்ததும் ஈழத் தமிழர் பிரச்சினையை முதன் முதலாக சர்வதேச அரசு மயப்படுத்தியது.

இங்கு சர்வதேச அரசுமயப்படுத்தல் என்பதும் சர்வதேச சமூக மயப்படுத்தல் என்பதற்கும் இடையில் இருக்கும் பிரிவை நாம் துல்லியமாக மதிப்பிட்டுக்கொள்வது அவசியமாகும். இதிலுள்ள சுவாரசியம் என்னவென்றால் இரண்டு காலகட்டங்களின் போதும் காலமும், பங்குபற்றுநர்களிலும் மாற்றங்கள் இருந்ததே ஒழிய விடயம் என்னவோ ஒன்றாகவே இருப்பதுதான்.

அதாவது, தமிழர் பிரச்சினை இலங்கை எல்லையை தாண்டிய இரண்டு முக்கிய சந்தர்ப்பங்களின் போதும், அதன் கருப்பொருள் இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வை காண்பதாகவே இருந்தது. ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களும் தோல்வியிலேயே முடிவடைந்தது.

முதலாவது தோல்வி ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை மேற்கு நோக்கி தள்ளியது. இரண்டாவது தோல்வி தற்போது எதை நோக்கி தள்ளப் போகின்றது என்பதே பிரச்சினை.

இந்த இரண்டு தலையீடுகளின் போதும் தலையிட்டவர்களின் எதிர்பார்ப்பு முதன்மைப்படுத்தப்படதே அன்றி, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் முதன்மைப்படுத்தப்படவில்லை. இந்த பின்புலத்தில்தான் நாம் நமது பிரச்சினையில் தலையீடு செய்ய முயலும் அன்னிய சக்திகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

எந்தவொரு அன்னிய அரசும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடுவதானது அந்த நாட்டின் சொந்த நலன்களை கருத்தில் கொண்டதாகவே அமைந்திருக்கும். இது இராஜதந்திர அரசியலின் அரிச்சுவடியாகும்.

அந்த வகையில் பார்ப்போமானால் இலங்கை அரசியலில் தலையீடு செய்து வரும் அன்னிய சக்திகள் ஒவ்வொன்றுக்கும் அதன் அளவில் நலன்கள் உண்டு. ஆனால் இந்தியாவிற்கு இருந்தது போன்ற மிகக்குறுகிய நலன்கள் மேற்கு அரசுகளுக்கு இல்லை. மேற்கு அரசுகளின் நலன்கள் எப்போதுமே நீண்டகால நோக்கம் கொண்டதாகவே இருக்கும். இதன் காரணமாகவே சிறிலங்கா அரசு மேற்கின் சில எதிர்பார்ப்புக்களை மீறி செயற்பட்ட போதும் மேற்கு முழுமையாக அதனை செயலிழக்க செய்ய முயலவில்லை.

இன்றைய சூழலில் சிங்களத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல் அமெரிக்காவிற்கு உண்டு. ஆனால் அமெரிக்கா அவ்வாறு நடந்து கொள்ளுமென்று எவரேனும் நினைத்தால் அது அவர்களின் அரசியல் அசட்டுத்தனமாகவே இருக்க முடியும்.

ஒருபோதும் மேற்கு அரசுகள் அவ்வாறு நடந்து கொள்ள மாட்டாது. இதனை நாம் அரசுகள் பிற அரசுகளுடன் வைத்திருக்கும் உறவுகள் வழியாகவே புரிந்துகொள்ள வேண்டும். இதனை தமிழர் விடுதலைப் போராட்டம் சந்தித்த இரண்டு வெளிநாட்டுத் தலையீடுகளின் போதும் நாம் தெளிவாக பார்க்கலாம்.

முதலாவது சந்தர்ப்பத்தில் தனது முயற்சியில் தோல்வியடைந்த இந்தியா அதனைப் பரிசீலனை செய்யாமல் உடனடியாகவே சிங்களத்தை பலப்படுத்துவதன் ஊடாக தனது எதிர்பார்ப்பை நிறைவுசெய்ய முயற்சித்தது. இன்றுவரை அதில் இந்தியா ஓய்வொழிச்சல் இல்லாமல் முயன்று வருகிறது.

இரண்டாவது மேற்கின் தலையீட்டின் போதும் தமிழ் மக்களிற்கு ஒரு நியாயமான தீர்வை பெற்றுக்கொடுப்பதில் தோல்வியடைந்த மேற்கு, அந்த சந்தர்ப்பத்திலும் அரசின் மீது வலுவான அழுத்தத்தை கொடுக்க முன்வரவில்லை.

இதில் தெளிவாக அடிக்கோடிட வேண்டிய விடயம், நோர்வே தலைமையிலா பேச்சுவார்தைக்கு அடிப்படையாக இருந்த, விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் நிலவிய இராணுவ வலுச்சமநிலையாகும். ஆனால் சிங்களம் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போதே அதனை சீர்குலைத்தது.

புலிகள் வசமிருந்த சில நிலப்பகுதிகளை கைப்பற்றியது. தனது கண்ணுக்கு முன்னாலேயே ஒப்பந்தத்தின் அடிப்படை கேள்விக்குள்ளாகிய போதும் அதனை சீர்செய்யும் நடவடிக்கைளை மேற்கு செய்யவில்லை.

எனவே மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் இரண்டாம் பட்சமாக்கப்பட்டிருப்பதானது வெள்ளிடை மலையாகிறது.

எனவே இந்த இடத்தில் நாம் ஒரு கேள்வியை கேட்டுக்கொள்வோம். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை இரண்டாம் பட்சமாக்காதவர்கள் யாரோ அவர்களே ஈழத் தமிழர்களின் ஆதரவாளர்கள் அவ்வாறான யாராவது இருக்கின்றனரா? இந்த கேள்வியிலிருந்துதான் தமிழர் போராட்டத்திற்கும் சர்வதேச அரசுகளுக்கும் உள்ள உறவு மற்றும் முரணை நாம் கணிக்க வேண்டும்.

அமெரிக்க மற்றும் ஜரோப்பிய அரசுகளைப் பொறுத்த வரையில் தெற்காசிய அரசியல் நோக்கிய நகர்வுகளின் போதே இலங்கை விடயம் அவைகளுக்கு முக்கியத்துவம் பெறுகின்றன. மற்றும்படி எந்த வகையான நியாயம் சார்ந்த ஈடுபாடுகளும் அவைகளுக்கு இல்லை.

ஆனால் இதில் ஒரு விடயத்தை நாம் பார்க்கலாம் சர்வதேச அரசுகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்தக் கூடிய, கட்டுப்படுத்தா விட்டாலும் சமநிலைப்படுத்தக்கூடிய ஆற்றல் சர்வதேச சமூகத்திற்குண்டு. இதுதான் நான் மேலே குறிப்பிட்ட சர்வதேச அரசு மயப்படுத்தலுக்கும், சர்வதேச சமூகமயப்படுத்தலுக்கும் உள்ள வித்தியாசம்.

இதில் ஈடுபடக்கூடிய ஆற்றல் புலம்பெயர் ஈழத் தமிழ் மக்களுக்கு மடடுமே உண்டு. ஏனெனில் போராட்டம் அல்லது விடுதலை நோக்கிய பயணம் என்பது வெறுமனே இராணுவ ரீதியானது மட்டுமல்ல.

இது விடயத்தில் புலிகளிடம் தெளிவான பார்வை உண்டு. இங்கு நானும் புலிகளுக்கு கருத்துக்கூறுவதற்காக இதனை எழுதவுமில்லை.

எதையும் கடந்த கால வரலாற்று அனுபவங்களின் ஊடாக அளவிட்டு அதற்கு ஏற்ப காய்களை நகர்த்தி வருபவர்கள் என்ற வகையில் புலிகளுக்கு நாம் யாரும் புதிதாக எதையும் சொல்லிவிடப் போவதில்லை.

இங்கு பிரச்சினை பேராட்டத்திற்கு வெளியில் இருக்கும் தமிழ் தேசிய சக்திகள் மற்றும் புலம்பெயர் மக்கள் மத்தியிலே சர்வதேச அரசுகள் குறித்த தெளிவான நிலைப்பாடு இருப்பது அவசியமாகும்.

அது மேற்கு அரசுகளின் நடவடிக்கைகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு அமைவாக இல்லாமல்;, அதன் பொதுப்போக்கை துல்லியமாக மத்திப்பீடுவதன் மூலம் பெறும் தெளிவாக இருக்க வேண்டும்.

நன்றி: தினக்குரல்
-தாரகா-

0 Comments: