Tuesday, June 10, 2008

நடமாட்ட சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கை

வடக்கில் யாழ். மாவட்டத்தில் சிவிலியன்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு இப்போது வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றது.
இதுவரை, அரச படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ். மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் தெற்கே போவதற்குப் படையினரின் விசேட பாதுகாப்பு அனுமதி பெறவேண்டிய கட்டுப்பாடு நடைமுறையில் இருந்து வந்தது.

அதை ஒட்டிய கெடுபிடி வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வடமாகாண மாவட்டங்களுக்கும் இப்போது விஸ்தரிக்கப்பட்டிருக்கின்றது.

பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி, வடபகுதியைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக அதுவும் சிறுபான்மையினரான தமிழ் மக்களுக்கு எதிராக அரசமைப்பில் உறுதி செய்யப்பட்ட பிரதான அடிப்படைச் சுதந்திரங்களுக்குள் ஒன்றான நடமாட்டச் சுதந்திரத்திற்குத் தடை விதித்து, அதனை இப்படி மறுப்பது பெரும் அநீதியாகும்.

வாழ்வியல் உரிமைகளுக்காக கௌரவ வாழ்வுக்காக ஈழத் தமிழினம் இலங்கைத் தீவில் நடத்தும் பெரும் விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்தும் ஓர் அம்சமாகவே இந்த உரிமை மறுப்பும் அர்த்தம் பண்ணப்பட வேண்டும்.
இந்தத் தடையை ஒட்டி இரு அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள கருத்துகள் இங்கு கவனிக்கத்தக்கவை.

முதலாமவர் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவின் சார்பில் கருத்துக் கூறியுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்க.

""வடபகுதி மக்கள் தென்பகுதிக்கு வருவதற்கு மதவாச்சியில் தடை விதிப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். அப்படிப் போக்குவரத்துக்குத் தடை விதிப்பதன் மூலம் நாட்டைப் பாதுகாத்து விடமுடியாது.'' என்று திஸ்ஸ அத்தநாயக்க கூறியிருக்கின்றார்.
""இது ஒரு பாரதூரமான பிரச்சினையாகும். இத்தகைய செயற்பாட்டை ஐ.தே.கட்சி ஏற்றுக் கொள்ளாது.'' என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

நல்லது. இந்தக் கருத்தை ஐ.தே.கட்சி இப்போதாவது தெளிவுபடுத்தியது என்ற வகையில் அக்கட்சிக்கு நாம் நன்றி கூறியேயாகவேண்டும்.

வடக்கில் இருந்து தெற்கே செல்லும் தமிழர்களை வவுனியாவோடு வழிமறித்து மேற்கொண்டு தெற்கே போகவிடாமல் கட்டுப்படுத்தும் நடைமுறையை "பாஸ்' திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, நடைமுறைக்குக் கொண்டு வந்ததே தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஆட்சியில் இருந்த ஐ.தே.கட்சி அரசுதான். இப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும், ஐ.தே.கட்சித் தலைவராகவும் இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவும் அப்போது இடம்பெற்றிருந்த அமைச்சரவையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆட்சித் தீர்மானங்களுக்கு அமையவே இத்தகைய "கெடுபிடி' நடவடிக்கைக்கு முதன்முதலில் பிள்ளையார் சுழி போடப்பட்டது.

அப்போது மேற்கொள்ளப்பட்ட அந்த ஆரம்பம், பின்னர் 1995 களுக்குப் பின்னர் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் முழு அளவில் இறுக்கப்பட்டது. வடக்கிலிருந்து வருவோரைத்தெற்கே செல்லவிடாது தடுத்து, வழிமறித்துத் தடுத்து வைப்பதற்காக, வவுனியாவின் பூந்தோட்டம், தாண்டிக்குளம் போன்ற இடங்களில் தடுப்பு முகாம்கள் என்ற பெயரில் "திறந்த வெளிச் சிறைகள்' கூட அமைக்கப்பட்டன.
திரும்பவும் அந்தக் கெடுபிடி நிலையை நோக்கி இந்த அரசும் நகரத் தொடங்கியிருப்பதையே இப்போதைய நிகழ்வுப் போக்கு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

ஏற்கனவே, கொழும்பிலிருந்து தமிழர்கள் தமிழர்கள் என்ற காரணத்துக்காக பலவந்தமாக பஸ்களில் ஏற்றப்பட்டு வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கொடூரத்தை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பாக அரசுத் தரப்பு உயர்நீதிமன்றுக்கு ஓர் உறுதியை அளித்திருக்கின்றது. வடக்கிலிருந்து தெற்கே வரும் தமிழ் மக்களின் நடமாட்டச் சதந்திரத்துக்குப் பங்கம் ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட மாட்டாது என்பதே அரசுத் தரப்பு மேற்படி வழக்கை ஒட்டி அளித்த உறுதி மொழியாகும். அந்த வாக்குறுதியின் பெயராலேயே அந்த மனுக்களை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

இந்தப் பின்புலத்தில், இப்போது மீண்டும் வடபகுதி மக்களின் நடமாட்ட சுதந்திரத்துக்குத் தடை விதிக்கும் கெடுபிடி கொண்டுவரப்பட்டிருக்கின்றது. இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாக அர்த்தப்படுத்தப்பட்டு நீதிமன்றிலேயே நிவாரணம் தேடி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படக்கூடிய செயற்பாடாகும்.

அடுத்தது இந்தக் கெடுபிடி நடவடிக்கையை ஒட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பியான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ள கருத்துகள் கவனிக்கத்தக்கவை.
""தமிழ் மக்கள் தென்பகுதிக்கு வரக்கூடாது என்பதில் முனைப்புக் காட்டுகின்ற அரசு வடக்குக் கிழக்கில் தான் குவித்து வைத்திருக்கும் படையினரை விலக்கிக் கொள்வதன் மூலம் வடக்கையும், கிழக்கையும் தமிழ் மக்களிடம் ஒப்படைத்துவிட்டால் தமிழ் மக்கள் தென்பகுதிக்கு வரவேண்டிய அவசியமே இல்லையே......?'' என்று காட்டமாக அவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
அந்தக் கேள்வியிலும் நியாயம் இருப்பதாகத்தான் படுகின்றது.

நன்றி - உதயன்

0 Comments: