Wednesday, June 4, 2008

மேலும் முடங்குகின்றது ஆணைக்குழுவின் செயற்பாடு

"கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை' போல "உலக்கை தேய்ந்து உளிப்பிடியான' மாதிரி இலங்கையில் 2006 இற்குப் பின்னர் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட ஆணைக்குழுவின் செயற்பாடும் குன்றிக் குறுகிப் போய்விட்டது.

ஆள்கடத்தல்கள், பலவந்தமாகக் காணாமற் போகச் செய்தல், சட்ட விரோதப் படுகொலைகள், ஊடகங்கள் மீதான அராஜகங்கள், சிறுபான்மைத் தமிழருக்கு எதிரான அட்டூழியங்கள் என்று இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றமை குறித்து சர்வதேச ரீதியில் கடும் கண்டனமும், அதிருப்தியும், சீற்றமும், விசனமும் எழுந்திருப்பது தெரிந்த விடயம்தான்.

தற்போதைய ஆட்சிப் போக்கின் சீத்துவம் பகிரங்கமாகத் தொடங்கியதும் அதைச் சமாளிப்பதற்காக கண்துடைப் புக்காக ஆணைக்குழு ஒன்றை நியமித்தார் ஆட்சித் தலை வர். நியமித்தார் என்பதை விட நியமிக்க வேண்டியவரா னார் என்பதே பொருத்தம்.
இத்தகைய ஆணைக்குழுக்கள் மூலம் காலத்தை இழுத்தடித்து, சர்வதேசத்தை ஏமாற்றுவதுதான் மிச்சம் என்ற கருத்து அப்போது வலுப்பட்டபோது அதைச் சமாளிப்பதற் காக, அந்த ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளைக் கண் காணித்து வழிப்படுத்துவதற்காக சர்வதேசப் பிரமுகர்களைக் கொண்ட கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்கவும் ஜனா திபதி இணங்கினார். சர்வதேசப் பிரமுகர்களை பிரசித்தி பெற்றவர்களை கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.

எனினும் எதிர்பார்க்கப்பட்டபடி வழமைபோல ஆணைக்குழுவின் செயற்பாடு மந்த கதியிலேயே அமைந்தது.

ஆணைக்குழு விசாரணைகளுக்கு சட்ட அதிகாரம் தேவைப்படுவதாகத் தெரிவித்து ஆரம்பத்தில் ஒரு வரு டத்தை இழுத்தடித்தார்கள். பின்னர்தான் ஒருவாறு விசார ணைகள் ஆரம்பமாகின.

விசாரணையின் போக்கையும், அரசுக்கு எதிரான மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பற்றிய விசாரணையை வழக்குத் தொடுநராக இருந்து வழிநடத்தும் பொறுப்பை அரசின் சட்ட ஆலோசகரான சட்டமா அதிபரே வகிப்ப தையும் குறை கூறிய சர்வதேசப் பிரமுகர்கள் குழு இச் செயற் பாட்டில் மாற்றம் கொண்டுவருமாறு பகிரங்கமாகக் கோரியது.
ஆனால் போக்கில் மாற்றம் ஏற்படாததால் இந்தக் கண் துடைப்பு விசாரணைகளைத் தொடர்ந்தும் கண்காணிப்பதில் அர்த்தமில்லை என்பதைப் பகிரங்கமாகவே அம் பலப்படுத்திவிட்டுத் தனது மூடை, முடிச்சுகளைக் கட் டிக்கொண்டு புறப்பட்டது சர்வதேசப் பிரமுகர்கள் குழு.

இந்த விசாரணைகளில் நேரில் சாட்சியமளிக்க வேண் டிய சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் ஏற்பாடு களோ, சட்டப் பாதுகாப்போ கிடையாது என்பதும் பெருங் குறைபாடு என்பதைச் சுட்டிக்காட்டிய சர்வதேசப் பிரமுகர் கள், இதனால் இந்த விசாரணைகளில் தகவல் வெளியிட்டு உண்மையை அம்பலப்படுத்த பல சாட்சிகள் பின்னடிக் கின்றனர் என்றும் தெரிவித்திருந்தனர்.

இத்தகைய மிக மோசமான மனித உரிமை மீறல்களின் சூத்திரதாரிகள் பற்றிய முக்கிய சாட்சிகள் தாங்கள் என்பதால் தங்களின் உயிருக்கு உலை வைக்கப்படும் என அஞ்சி இந்தச் சாட்சிகள் நாட்டை விட்டே ஓடித்தப்பி வெளியேறிவிட்டனர்.
இந்தப் பின்புலத்தில்தான், அத்தகைய சாட்சிகளிடமிருந்து உண்மைத் தகவல்களை அறிந்து கொள்வதற்காக, வெளிநாட்டில் தங்கியிருக்கும் சம்பந்தப்பட்ட சாட்சிகளின் சாட்சியங்களை தொலைக்காட்சி உரையாடல் மூலம் பதிவு செய்யும் முறையை ஆணைக்குழு அறிமுகப்படுத்தியது.

வெளிநாட்டிலிருந்தபடியே பாதுகாப்பாக இருந்த வாறு உண்மையைக் கூறலாம் என்றானதும், அதுவரை பயந்திருந்த சாட்சிகளில் சிலர் நடந்தவற்றை அம்பலப் படுத்தத் துணிந்து முன்வந்தனர். அரசுப் படைகளின் நிஜப் போக்கை அம்பலப்படுத்தும் விதத்தில் உண்மைகளைக் கக்கத் தொடங்கினர் அந்தச் சாட்சிகள்.
இதனால் அரண்டுபோன அரசுத் தலைமை, இப்போது அந்தத் தொலைக்காட்சி உரையாடல் மூலமாக சாட்சிக ளின் தகவல்களைப் பதிவு செய்யும் நடைமுறையையே அடியோடு ரத்துச் செய்து கட்டளை பிறப்பித்துவிட்டது.

உண்மைகள் பகிரங்கமாவதைச் சகிக்க முடியாமலேயே இந்த உத்தரவு.
முக்கிய சாட்சிகளைப் பாதுகாப்பது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் அந்தச் சட்டத்தின் கீழ் முக்கிய சாட்சிகளுக்குப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும், அவர்கள் அந்தப் பாதுகாப்புடனேயே நேரில் ஆணைக்குழு முன் பிரசன்னமாகி, தமது சாட்சியங்களைத் தெரியப்படுத்தலாம் என்றும் அரசு இப்போது கூறுகின்றது.

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் ஏற்கனவே கெட்டுக் குட்டிச்சுவராகி விட்டன. அரசமைப்பிலிருந்து சகல சட்டங்களிலும் எழுத்து எழுத்தாக, வசனம் வசனமாக உறுதி செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகளே இன்று இங்கு துச்சமாக மதிக்கப்பட்டு உலகம் பரிகசிக்கும் அளவுக்கு மீறப்பட்டு, துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், சாட்சிகளைப் பாதுகாப்பதற்குரிய சட்டத்தைக் கொண்டுவந்துவிடுவோம், அதற்குப் பின்னர் சாட்சிகளே நேரில் வந்து உண்மைகளைப் பயமின்றி எடுத்துரைக்கலாம் என்று "சல்ஜாப்பு' கூறி, தொலைக்காட்சி மற்றும் செய்மதி ஊடாக சாட்சியமளிக்கும் முறையைத் தடை செய்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் குறித்து சர்வதேசப் பிரமுகர்கள் குழு உட்படப் பல்வேறு தரப்பும் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டிவந்த சந்தேகச் செயற் பாட்டை உறுதிப்படுத்துவது போல அமைந்திருக்கின்றது மேற்படி தொலைக்காட்சி மூலம் சாட்சியமளிக்கும் வசதியை அரசுத் தலைமை தலையிட்டுத் தடை செய்த நடவடிக்கை.

நன்றி - உதயன்

0 Comments: