Wednesday, June 18, 2008

அரசியல் சமாளிப்புகளுக்கும் கைகொடுத்து உதவும் யுத்தம்

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஐயாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து 366 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அடுத்த மாதம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒரு நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித் துள்ளன.
இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் பேச்சு மூலமாக தீர்வு காண்பதில் உடன்பாடற்ற இலங்கை அரசுத் தலைமை, தமிழரை இராணுவ ரீதியில் அடக்கி, ஒடுக்கி, அவர்களின் பேரம் பேசும் வலுவைச் சிதறடித்த பின்னர், தான் விரும்பிய முடிவை அவர்கள் மீது தீர்வாகத் திணிக் கும் ஒரே இலக்கில் செயற்படுகின்றது.

அதனால் போர்த் தீவிர முனைப்பில் அது வெறி கொண்டு நிற்கிறது என்பது ஏலவே பல தடவைகள் இப்பத்தியில் சுட்டிக்காட்டியாகி விட்டது.

இத்தகைய போர்த் தீவிரப் போக்கினால் முழு நாடுமே யுத்தப் பேரழிவுக்குள் சிக்கிச் சின்னாபின்ன மாகும் ஏதுநிலை ஏற்பட்டுள்ளது.

யுத்தத் தீவிரப் போக்கினாலும், தீர்க்க தரிசனமற்ற பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றுவதா லும், சீர்கெட்ட ஆட்சி முறையாலும், ஊழல், முறை கேடு கள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள், வீண், விர யம் போன்றவற்றாலும் நாட்டின் பொருளாதாரம் அதல பாதா ளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விலைவாசி எகிறுகிறது. பணவீக்கம் மோசமாகப் பெருகுகிறது.

அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு அல்லாடும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

அடுத்த மாதம் பத்தாம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் பொது வேலை நிறுத்தம் பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக வளர்ந்து வரும் அதிருப்தி, கசப்புணர்வு, இயலாமை, எரிச்சல், சீற்றம் ஆகியவற்றுக்கான கட்டியமாகவே கொள்ளப்பட வேண்டும்.
அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் அல்லாடுகின்ற அப்பாவிப் பொதுமக்க ளுக்கு நிவாரணம் அளிக்கவும், மானியம் வழங்கவும் முடியாது எனக் கைவிரிக்கும் அரசு, மாகாண சபை களைக் கலைத்து அநாவசியத் தேர்தல்களுக்குப் பல கோடி ரூபாவை வீண் விரயம் செய்கிறது; நூறுக்கும் அதிகமாக அமைச்சர்களைப் பட்டாளமாக நியமித்து, அரச கஜானாவைக் காலியாக்கி, கண்மூடித்தனமாகச் செலவிட்டுக் காசைக் கரியாக்குகின்றது.

அரச வருமானத்தை இப்படி அரசியல் குளறுபடி களுக்காக வீணாக்குவதன் மூலம் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கிறது அது.
இதுபற்றியெல்லாம் கேட்டால், "செல்லும் செல் லாததற்கெல்லாம் செட்டியார் பொறுப்பு' என்பது போல, எல்லாப் பின்னடைவுகளுக்குமான பொறுப் புகளும் யுத்தம் மீதே போடப்படுகின்றன.

""நாட்டைப் பிரிக்க முயலும் புலிகளை இராணுவ ரீதியில் அழித்தொழிக்காவிட்டால் நாட்டைக் காப் பாற்ற முடியாது. புலிகளை அழிப்பதாயின் யுத்தம் புரியவேண்டும். யுத்தம் புரிவதற்கு நிதி செலவாகும். இப்போது மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு, யுத்தத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதே முக்கிய காரணம். எனவே புலிகளை அழித் தொழிக்கும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பதற்காக இந்தச் சுமைகளை எல்லாம் பொதுமக்கள் சுமந்துதா னாக வேண்டும்.'' என்று கொழும்பு அரசு விடும் கயிறைத் தென்னிலங்கை மக்கள் விழுங்கிக் களைத்துப்போய் விட்டார்கள்.

இப்போது இந்தத் தேவையற்ற மாகாணசபைக் கலைப்புக்கும், அதற்காக முற்கூட்டியே நடத்தப் படும் தேர்தலுக்காக விரயமாகப் போகும் நிதிக்கும் சமாளிப்புக் காரணம் கூறக்கூட இந்த யுத்தமும் இனப்பிரச்சினையும்தான் கையாலாகாத இந்த அரசுக்குக் கைகொடுக்கின்றன.
""இந்த யுத்தத்தில் புலிகளுடன் போராடி வெல் வதாயின் அரசுக்கு ஸ்திரமான அரசியல் பலம் இருக்க வேண்டும். அரசின் ஸ்திரத்தை அரசியல் ரீதி யாக உறுதி செய்தால்தான் பிரிவினைவாதப் புலிகளுடன் திடமான உறுதியான போர் ஒன்றை நடத்த முடியும். அப்படி அரசின் ஸ்திரத்தை உறுதிப் படுத்துவதற்காகவே அரசின் அரசியல் பலத்தை வலுப்படுத்துவதற்காகவே இப்படி முற்கூட்டித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய தேர்தல் கள் மூலம் மக்கள் பலத்தை வரித்துக்கொண்டு, அதன் வலிமையில் புலிகளுடன் தீவிர யுத்தத்தைத் தொடர அரசு எத்தனிக்கின்றது.'' என இப்போது அரசுத் தரப்பில் புது விளக்கம் கூறப்படுகின்றது.

ஆக, எதற்கெடுத்தாலும் யுத்தத்தை ஒரு சாக்காகக் காட்டி, தென்னிலங்கை மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முடியும் என இந்த அரசுத் தலைமை நம்புகின்றது போலும்.
எத்தனை நாட்களுக்கு இத்தகைய அரசியல் உத்தி அரசுக்குப் பயன்தரும் என்பதற்கான பதிலை காலம் விரைவில் தந்துவிடும் என எதிர்பார்க்கலாம். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.
thanks - uthayan

0 Comments: