Wednesday, June 11, 2008

கொழும்புக்கு எதிராகத் திரளும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு

""சர்வதேச சமூகம் இலங்கையை மறந்து விடவில்லை என்பதை இலங்கை அரசும் அதன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புரிந்து கொள்ள வேண்டும்.'' என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கின்றது.

""இலங்கையில் நிலைமை மிகவும் மோசமடைந்து செல்வதால் அந்த நாட்டின் போக்கு உலகின் கவலைக்குரிய கவனத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது.
""ஆனால், இலங்கை நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகளும் வெளியிட்டு வரும் கவலையை செவிமடுக்க இலங்கை அரசு தயாராக இல்லைப் போலத் தோன்றுகின்றது.
""ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இது உலகினால் மறக்கப்பட்ட ஒரு மோதல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.''
இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் சாம் ஜரிவி தெரிவித்திருக்கின்றார்.

அதாவது, இலங்கை நிலைமை தொடர்பான சர்வதேச சமூகத்தின் கருத்து நிலைப்பாடு, இலங்கைக்கு உறைப்பாக உணர்த்தப்பட்டாலும் அக்கருத்தை "செவிடன் காதில் ஊதிய சங்கு' ஆகக் கருதி, கவனத்தில் எடுக்காமல் தன்போக்கில் இலங்கைத் தலைமை கருமம் ஆற்றுகின்றது என்பதையே அவர் இப்படி மென்மையான வார்த்தையினால் சுட்டிக்காட்டுகின்றார்.

"நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள். நாம் செய்வதைத்தான் தொடர்வோம். உங்கள் கருத்தைக் கவனத்தில் கூட எடுக்க மாட்டோம்' என்பது போலத் தனது போர்வெறித் தீவிரத்தில் கொழும்பு அரசு பிடிவாதமாய் இருப்பதைத்தான், மேற்படி இராஜதந்திர வார்த்தைகளால் நாசூக்காக சர்வதேச மன்னிப்புச் சபையின் பேச்சாளர் கோடிகாட்டியிருக்கின்றார்.

"முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா' என்பார்கள்.
கொழும்பு அரசின் இப்போதைய போர்வெறிப் போக்கும் கூட அதன் மூர்க்கத்தனத்தின் உச்சம்தான்.

ஆகவே, அந்த மூர்க்கத்தனம் காரணமாகத் தான் கொண்ட போர் வெறித் தீவிரத்தைக் கொழும்புத் தலைமை கைவிடப் போவதில்லை என்பது உறுதி.
அதே மூர்க்கத்தனம் காரணமாக இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் நல்லாலோசனைகளையோ, வழிகாட்டல்களையோ கூட இலங்கை கவனத்திற் கொள்ளப் போவதில்லை என்பதும் தெளிவு.

ஆனால் அதற்காக சர்வதேச சமூகத்தின் கருத்து நிலைப்பாட்டை கொழும்பு சுலபமாகத் தூக்கியெறிந்துவிட்டு, தன்பாட்டில் மனித உரிமைகளை அத்துமீறும் வகையில், கீழ்த்தரமாகச் செயற்படவும் சர்வதேச சமூகம் அனுமதிக்காது என்பதும் நிச்சயம்.

அதையே, "இலங்கை விவகாரம் சர்வதேச சமூகத்தினால் மறக்கப்பட்ட விடயமல்ல என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனத்தில் கொள்ளவேண்டும். என சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி சுட்டிக்காட்டுகின்றார்.

இதேசமயம், "உலகில் மிகச் சிக்கலான பிணக்குகள் நிலவும் நாடுகள்' என்ற வரிசையில் இலங்கையும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

2007 ஆம் ஆண்டின் மோசமான ஆயுதப் பிணக்குகள் நிலவிய 14 நாடுகளில் நான்கில் ஆயுதப் பிரச்சினை மிகப் பெரும் சர்ச்சையாக உருவாகியிருக்கின்றது என சுவீடனைத் தளமாகக் கொண்டு இயங்கும் "ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம்' என்ற சமாதான அமைப்பு அடையாளம் கண்டிருக்கின்றது.

இலங்கை, ஆப்கானிஸ்தான், மியன்மார் (பர்மா) மற்றும் துருக்கி ஆகிய நாடுகளிலேயே இந்தப் பிணக்கு மிகத் தீவிரமடைந்திருப்பதாக அந்த அமைப்பின் 2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு உலகின் கவனம் இலங்கை பக்கம் திரும்பினாலும், இலங்கை அரசுக்குத் தனது நாட்டின் மக்கள் என்று, தான் உரிமை கோரும் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத் தான் தொடுத்திருக்கும் பெரும் போர்த் தாக்குதல் நடவடிக்கைத் தொடரை நிறுத்தும் உத்தேசம் ஏதும் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.

இப்படிச் சர்வதேச சமூகத்தின் கருத்தையும், ஆழத்தையும், எதிர்பார்ப்பையும் துச்சமாக நிராகரித்து, தன்பாட்டில் போர்வெறிப் போக்கோடு, விட்டேத்தியாக நட்ந்துகொள்ளும் கொழும்பு அரசுத் தலைமை குறித்து சர்வதேசம் என்ன செய்யப் போகின்றது?
தொடர்ந்தும் வெறும் கண்டன அறிக்கைகளையும், அதிருப்தி அறிவிப்புகளையும் வெளியிட்டுக்கொண்டு சர்வதேச சமூகம் ஒன்றும் செய்ய இயலாமல் பார்த்திருக்கப் போகின்றதா? அல்லது கொழும்புக்கு எதிராகக் காத்திரமாக நடவடிக்கை ஏதும் எடுத்து இலங்கையை வழிக்குக் கொண்டுவரப் போகின்றதா?

கொழும்பு அரசுத் தலைமை இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தான் பெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கின்றது என்ற பெயரில் பெரும் அரச பயங்கரவாதம் ஒன்றை இங்கு கட்டவிழ்த்து விட்டுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் அவசரமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது.
அத்தேவையை சர்வதேச சமூகம் நன்கு புரிந்து கொண்டிருந்தாலும் கூட அது எவ்வாறான பதில் நடவடிக்கையை எடுக்கப்போகிறது என்பதே இன்றைய கேள்வியாகும்.
சர்வதேச கருத்தியல் நிலைப்பாடு கொழும்பு நிர்வாகத்துக்கு எதிராகக் கருக்கட்டித் திரண்டு வருகையில், அதைப் புரிந்து கொள்ளாமல் அல்லது அதைக் கருத்தில் எடுக்காமல் செயற்படும் கொழும்பு, இறுதியில் இதன் விளைவாக விபரீதத்தை சர்வதேச மட்டத்தில் சம்பாதிக்கப் போகின்றது என்பது மட்டும் திண்ணம்.


நன்றி - உதயன்

0 Comments: