Wednesday, June 4, 2008

"தவிச்ச முயல் அடிக்கும்' தந்திரோபாயம் இது!

"குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' பொறுப்பற்ற போக்கில் இந்தியா செயற்படுகின்றது என்று விசனப்படுகின்றார்கள் ஈழத் தமிழர்கள்.

தங்களது நியாயமான உரிமைகளுக்காகவும், கௌரவ வாழ்வுக்காகவும், தமது தாயக மண்ணில் பாரம்பரிய பூமியில் தமது இனத்தின் இருப்புக்காகவும் வாழ்வா, சாவா போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள் தமிழர்கள்.

பாரத மாதாவைத் தமது பெரியன்னையாக வரித்து, மதித்துப் போற்றி வரும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பி, அவர்தம் துயர் துடைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு உண்டு.

ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொப்புள் கொடி இணைப்புப் போல தாய் சேய் நேசம் கொண்டது. "தானாடா விட்டாலும் தசை ஆடும் என்பார்கள்.' அது போல ஈழத் தமிழர்களுக்காக இந்தியா குரல் எழுப்பா விட்டாலும், தமிழகம் குரல் எழுப்பி, உதவ ஓடோடிவரும்; வரவேண்டும்.

ஆனால், யதார்த்தத்தில் தெனிலங்கைப் பேரினவாதத்தின் கொடூர அடக்குமுறையில் சிக்கி அவலப்படும் ஈழத் தமிழர்களுக்கு உதவ முன்வராத பாரதம், உபத்திரவம் செய்யத் துடியாய்த் துடிக்கின்றதோ என்ற சந்தேகம் விசனம் தமிழர் மனதில் எழுந்துள்ளது. அதைத் தமிழகம் பார்த்து வாளாவிருப்பது இன்னும் வேதனைக்குரியது.

ஒருபுறம் ஈழத் தமிழர்கள் மீது கொடூர யுத்த வெறிப் போக்கை வெளிப்படுத்தும் கொழும்பு நிர்வாகத்துக்கு ஆயுதத் தளபாடங்களை வாங்கிக் குவிக்க இந்தியா பெருந்தொகைக் கடனுதவி வழங்கி உதவுகின்றது. "ராடர்' போன்ற கண்காணிப்பு ஆயுதங்களை விநியோகித்து ஒத்துழைக்கின்றது. படை அதிகாரிகளுக்கு விசேட பயிற்சியளித்து தமிழர் எதிர்ப்புப் போராட்டத்தில் கொழும்பின் கையை வலுப்படுத்துகின்றது.

அதேசமயம், மறுபுறம் தமிழர் தாயக மண்ணை ஆக்கிரமிக்கும் கொழும்பின் செயற்பாடுகளிலும் இந்தியா நேரடியாகப் பங்களிக்கின்றது என்ற குற்றச்சாட்டு இப்போது முன்வைக்கப்படுகின்றது.
2006 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக சம்பூர்ப் பிரதேசத் தமிழ் மக்கள் பல்லாயிரக் கணக்கில் இடம் பெயர்ந்தனர். அவர்கள் இப்போது இடைத்தங்கல் முகாம்களில் அவல வாழ்வு வாழ்கின்றனர்.

பல நூற்றாண்டுகளாக பல தலைமுறை தலைமுறைகளாக சம்பூரில் தமிழர்கள் வசித்து வந்தார்கள். வரலாற்றுத் தொன்மையும் தமிழரின் பூர்வீகச் சிறப்பும் மிக்க பூமி அது.
அதனைத் தனது படை ஆக்கிரமிப்பு மூலம் கைப்பற்றிக் கபளீகரம் செய்த தென்னிலங்கை அரசுப் படைகள் சம்பூரையும் அதனை அண்டிய பிரதேசங்களையும் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்து, அப்பிரதேசத்தின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்கள் தமது இடங்களுக்குத் திரும்புவதற்கு நிரந்தரத் தடை போட்டுள்ளது.

சம்பூரில் தமிழர் தாயக மண் அரசின் திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்ற மையத்துக்கான இலக்காகும் சூழல் இதனால் உருவாகியிருக்கின்றது.

இந்தப் பின்புலத்திலேயே
தமிழரின் பூர்வீகத் தாயக மண்ணான சம்பூருக்குத் தமிழர்கள் இனித் திரும்பவே முடியாத வகையில் ஓர் அரண் அமைக்கும் நோக்கத்தோடு அங்கு அனல் மின் திட்டம் ஒன்றை உருவாக்க கொழும்பு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வளம் கொழிக்கும் தமிழர் தாயகத்திலிருந்து தமிழர்களை விரட்டியடிக்கும் இந்தக் கபட சதித் திட்டத்துக்கு முதுகு கொடுத்து உடந்தையாகும் ஈனச் செயலை இந்தியா முன்னெடுப்பதுதான் கேவலத்திலும் கேவலம்.

ஐம்பது கோடி அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டத்தை 2012 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்து, பல்லாயிரம் தமிழ்க் குடும்பங்களை சம்பூருக்கு தமது தாயக பூமிக்கு திரும்பி வரவே முடியாத கொடூரத்தை நிறைவேற்றிக் கொடுக்கப் போகிறாள் பாரத அன்னை.

இலங்கையில் ஓர் இனப்போர் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஐந்து தசாப்த காலமாக நீடித்த இனப்பிரச்சினை கொடூர உள்நாட்டுப் போராக இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்புகள் தங்களின் உரிமைகளுக்கான நியாயத்தை யுத்த களத்தில் உரசிப்பார்க்கும் நிலைமை நீடிக்கின்றது.

இந்நிலையில் ஆக்கிரமிப்புக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுபான்மை இனத்தின் நலிவுற்ற சமூகத்தின் தாயக பூமியில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு உள்ளூர் வளங்களைச் சூறையாடும் விதத்தில் அந்நிய சக்திகள் தலையிடுவது மிக மோசமான, நியாயப்படுத்த முடியாத, கேவல நடவடிக்கையாகும்.
மன்னாரை அண்டி, எண்ணெய் அகழ்வு என்ற பெயரிலும், திருகோணமலை சம்பூரில் அனல் மின்நிலையத் திட்டம் என்ற நாமத்திலும், புல்மோட்டையில் இல்மனைட் கனிவள அகழ்வு என்ற வடிவிலும் இந்த இக்கட்டுச் சமயத்தில் தமிழர் தாயக வளங்களைச் சூறையாடுவதும், அதில் அந்நிய நாடுகளும் சக்திகளும் தலையிடுவதும் "தவித்த முயல் அடிக்கும்' வேலையாகவும் "குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்' காரியமாகவுமே அர்த்தப்படுத்தப்படக் கூடியவை.

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் எப்போதுமே முறையற்ற விதத்தில் தலையிட்டு மூக்கறுபட்ட அனுபவத்தை ஏற்கனவே பெற்றுக்கெண்டுள்ள இந்தியா, இன்னும் அப்போக்கிலிருந்து மாறாமல் இருப்பது விசனத்துக்குரியது.

நன்றி :- சுடர் ஒளி

0 Comments: