நாட்டில் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்து, அதர்ம ஆட்சிக்கு வழி செய்து நிற்கும் இந்த அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நாசூக்கான வார்த்தைகளில் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
*அரசுத் தரப்புடன் சேர்ந்து இயங்கும் துணைப் படைக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும்.
* நாட்டில் மனித உரிமைகளைப் பேணுவதற்கு நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதற்காக அரசு தனது தற்போதைய செயற்போக்கை அடியோடு மாற்றுவதுடன், அதனை வெளிப்படையாக வெளிப்படுத்திக்காட்டவும் வேண்டும்.
* செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு, ஐ.நா. தொண்டர் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் போன்றவை தமது மனித நேயப் பணிகளை ஆற்றுவதற்கான மார்க்கங்களைத் தடை விதிக்காமல் அரசு திறந்துவிட வேண்டும்.
இதுபோன்ற நியாயமான அர்த்த பூர்வமான விவகாரங்களைத் தனது கோரிக்கையாகவும், அதேசமயம் ஒரு புறத்தில் நிபந்தனை போன்றும் முன்வைத்திருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்.
போர் வெறித் தீவிரத்தில் மூர்க்கமாக நிற்கும் ஜனாதிபதி மஹிந்தரின் அரசு இந்தக் கோரிக்கைகளை ஏற்குமா, அவற்றை நிறைவு செய்யுமா என்பது கேள்விக்குறியே.
ஆனால் இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்க்காமல், "தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்' என்பது போல, போர் மோகத்தில் அரசு விடாப்பிடியாக நிற்குமானால் ஐரோப்பிய ஒன்றியத்தின் வற்புறுத்தல்கள் "செவிடன் காதில் ஊதிய சங்காக' நிராகரிக்கப்படுமானால் இலங் கைத் தீவு மோசமானதும் விபரீதமானதுமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருப்பது தவிர்க்க முடியாததாகும் என்பது தெளிவு.
இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்தான் இலங்கையின் மிகப் பெரிய பொருளாதார சகா. இலங்கையின் உற்பத்தி ஏற்றுமதியில் 37.5 சதவீதம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கானது என்பதால், இலங்கை போன்ற அபிவிருத்தியை எதிர்நோக்கும் மூன்றாம் மண்டல நாடு ஒன்று தனது பொருளாதார நிலையை ஸ்திரமாகப் பேணுவதற்கு இத்தகைய வலுக் கூடிய சர்வதேசத் தரப்புகளைத் தாஜா செய்து சமாளித்துச் செல்வது மிக முக்கியமாகும்.
அதேவேளை, இலங்கையின் ஆடை உற்பத்திகளை இறக்குமதி செய்வது உட்படப் பல்வேறு விடயங்களுக்குத் தான் வழங்கி வந்த "ஜி.எஸ்.பி. பிளஸ்' என்ற இறக்குமதி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் நீடித்து இலங்கைக்கு வழங்குவதா என்று மறுபரிசீலனை செய்யும் இந்தச் சமயத்தில் மேற்படி நிபந்தனைகளை அது முன்வைத்திருக்கின்றது.
இலங்கைக்கான இந்த இறக்குமதி வரிச்சலுகை நீடிப்புத் தீர்மானிப்பு விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் நியாயமாக நடந்து கொள்ளும் என்று இப்போதும் கூறப்பட்டு வந்தாலும்
இலங்கையில் மனித உரிமைகளை மதித்துப் பேணி நிலைநிறுத்துவதில் இலங்கை அரசு ஆக்கபூர்வமான செயற்போக்கை வெளிப்படுத்தாத வரை அந்த வசதியை சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் நீடிப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு என்கின்றன விடயமறிந்த வட்டாரங்கள்.
இந்தச் சலுகை நீடிப்பை ஐரோப்பிய ஒன்றியம் வெட்டுமானால் இலங்கையில் ஆடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சுமார் மூன்றரை லட்சம் பேர் அவர்களில் பெரும்பாலானோர் இளம் யுவதிகள் வேலையிழந்து வீதிக்கு வருவார்கள். பல நூற்றுக்கணக்கான ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படும். வருடாந்தம் பல்லாயிரம் கோடி ரூபா ஏற்றுமதி வருமான இழப்பை இலங்கை ஒரேயடியாகச் சந்திக்கும்.
சுருங்கக் கூறுவதானால் இலங்கையின் பொருளாதாரமே மரம் போல சாய்ந்து படுத்து விடும்.
ஏற்கனவே விலைவாசி ஏற்றம், பணவீக்கம், வாழ்க்கைச் செலவு உயர்வு என்று எகிறும் பொருளாதார நெருக்கடி களினால் துவண்டு போய்க் கிடக்கும் இலங்கைத் தீவை, இத்தகைய "ஜி.எஸ்.பி. பிளஸ்' சலுகை இழப்பும் சேர்ந்து நிரந்தரமாக மீளமுடியாத அதல பாதாளத்தில் வீழ்த்திவிடும்.
இதுதான் இன்றைய யதார்த்தப் புறநிலைமையாகும். கள நிலைவரமாகும்.
ஆனாலும் வானமே இடிந்து வீழ்ந்தாலும் போர்த் தீவிரத்திலிருந்து விலகோம் என்று ஒரே பிடிவாதமாக நிற்கும் இலங்கை ஆட்சியாளர்கள் குறிப்பாக "ராஜபக்ஷ அண்ட் பிறதர்ஸ் கம்பனி' அந்தப் போர்த் தீவிரப் போக்கின் பிரிக்க முடியாத அங்கமாகியிருக்கும் மோசமான மனித உரிமை மீறல் செயற்போக்கை விட்டுக் கொடுத்து மாறப் போவதில்லை என்பதும் தெளிவே.
ஆட்சிச் சகோதரர்களின் முழு அரசியலே இந்தப் போர்த் தீவிரப் போக்கில்தான் தங்கியிருக்கின்றது. அதிலிருந்து மீண்டால் அவர்களுக்கு தென்னிலங்கை அரசியலில் இடமேயில்லை என்றளவுக்கு நிலைமையை அவர்களே வளர்த்துக்கொண்டு விட்டார்கள்.
வெள்ளத்தில் கறுப்புத் திறணையாக மிதந்து வந்த கரடி யைத் தெரியாமல் கட்டிப்பிடித்தவன், பின்னர் "நான் விட்டா லும் அது விடுவதாக இல்லை' என்று கத்துவது போல
இன்று போர்த் தீவிரப் போக்கை வரித்துக்கொண்ட இந்த அரசுத் தலைமை, இப்போது அதிலிருந்து விலக முயன்றாலும், அதை விட முடியாத நிலையில் அது விடுவதாக இல்லை என்ற சூழலில் அத்தீவிரத்தைத் தொடர்ந்து பேண வேண்டியதாகச் சிக்கிக் கொண்டுள்ளது.
அந்தப் பின்புலத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இப்போது விடுத்துள்ள நிபந்தனைகளை இலங்கைத் தரப்பு நிறைவு செய்வது என்பது துர்லபமே.
thanks - uthayan
Friday, June 13, 2008
ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள நிபந்தனைகள் நிறைவு செய்யப்படுமா?
Posted by tamil at 5:56 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment