Saturday, June 28, 2008

தனது விரலால் தனது கண்ணையே குத்திக் கொள்கின்றதா இந்தியா?

சிங்கள ஆட்சியாளர் தமது பிரதான பாரம்பரிய எதிரியாக கருதுவது இந்தியாவையே.

இந்த வகையில் சிங்கள அரசியல்வாதிகள் ஈழத்தமிழரை இந்திய விரிவாக்கத்திற்கான கருவியாகக்கண்டு அச்சமடைகிறார்கள்.

ஆதலால் ஈழத்தமிழரை தோற்கடிப்பதிலிருந்தே இந்தியாவிற்கு எதிரான தமது போரை சிங்கள ஆட்சியாளர் ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த விடயத்தில் இந்திய மத்திய அரசு ஈழத்தமிழரை ஒடுக்குவதற்கு சிறிலங்கா அரசுக்கு உதவுவதன் மூலம் அது தனக்கு எதிராகத் தானே போர் புரியும் நிலைக்குப் போய்விட்டது எனலாம்.

இதனை சற்று விரிவாக நோக்குவோம்.

ஈழத்தமிழரை தமிழகத்தின் நீட்டமாகவே சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள பௌத்த மகா சங்கத்தினரும் பார்க்கின்றனர்.

இது அவர்களின் மனதில் இருக்கும் ஒரு வரலாற்றுப் பதிவு.

பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை இதுதான் சிங்கள மாணவர்களுக்கும் கற்பிக்கப்படுகின்றது.

அதாவது, ஈழத்தமிழர் இந்தியாவின் கைக்கூலிகள் எனவும், இந்திய விரிவாக்க வாதத்தின் கருவியாக அவர்கள் செயற்படுகின்றனர் எனவும், போதித்தே அவர்களை சிங்கள அரசு கொன்றொழித்து வருகின்றது.

அந்த வகையில் இந்தியா மீதான அச்சத்தின் பெயரால்தான் ஈழத்தமிழரை சிங்கள அரசு தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது என்ற அடிப்படை அரசியல் உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.

இதனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அறிவுபூர்வமாய் கருத்தில் எடுக்க மறுத்து வருகின்றார்கள்.

அனைத்து முன்னணி சிங்கள கட்சிகளிடமும் இந்திய எதிர்ப்பு வாதம் உண்டு.

இதில் ஜே.வி.பி. கட்சியினர் மிகவும் வெளிப்படையாகவே இந்திய எதிர்ப்பு வாதத்தை முன்வைப்பவர்கள்.

1971 ஆம் ஆண்டு ஜே.வி.பியினர் கிளர்ச்சியில் ஈடுபட்ட காலத்தில் அவர்கள் முன்வைத்த 5 கொள்கைகளுள் 'இந்திய விரிவாக்க வாதம்" என்ற கொள்கையே முதலாவதாகும்.

இந்தக் கொள்கையின் படி இந்திய விரிவாக்க வாதத்தின் கருவிகள் ஈழத்தமிழர் என தெரிவித்தனர்.

இன்றும் இந்தக் கொள்கையையே அவர்கள் பின்பற்றி தமிழீழ மக்களை இராணுவ ரீதியில் அழித்தொழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

1977 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அன்றிலிருந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்திய எதிர்ப்புக் கொள்கையையே அனைத்துலக அரங்கில் தெளிவாய் பின்பற்றி வந்தது.

அன்று இந்தியாவிற்கு எதிராக இருந்த நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து ஜே.ஆர். ஈழத்தமிழரை இராணுவ ரீதியில் கொன்று குவித்து வந்தார்.

அப்போது இந்திய அரசு, இராணுவ ரீதியில் தலையிடும் நிலை தோன்றிய போது ஜே.ஆர். தந்திரோபாயமாக இந்திய அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஈழத்தமிழரை கொன்றொழிக்கும் இராஜதந்திர திட்டத்தை தீட்டினார்.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் 1987 ஆம் ஆண்டு ஜே.ஆர். இந்திய அரசுடன் கபடத்தனமான ஒரு ஒப்பந்ததை செய்து கொண்டார்.

இந்த ஒப்பந்தத்தை அவர் செய்தபோது சிங்கள தீவிரவாதிகள் இதனை முதலில் எதிர்த்தனர்.

அப்போது ஜே.ஆர். பின்வருமாறு கூறினார்: 'என்னை சில நாட்களுக்கு நீங்கள் எதிர்ப்பீர்கள். ஆனால் பின்பு காலம் எல்லாம் என்னைப் பாராட்டுவீர்கள்"

இவ்வாறு கூறிய ஜே.ஆர். இந்தியாவையும் ஈழத்தமிழரையும் தந்திரமாக மோதவிட்டார்.

இது ஈழத்தமிழருக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆழமான பகைமையை உருவாக்கியது.

தனது அரசியற் சாணக்கியத்தில் ஜே.ஆர். வெற்றி பெற்றார்.

மேற்படி இந்தியாவிற்கும் - ஈழத் தமிழருக்கும் இடையே மூட்டப்பட்ட அரசியல் பகைமையானது இரு தரப்பினருக்கும் பேரிழப்புக்களை உருவாக்கியதுடன் விரும்பத்தகாத துயரங்களுக்கும் வழிவகுத்தது.

இது விடயத்தில் வீழ்ந்தது இந்தியாவும் ஈழத் தமிழரும்தான்.
ஆனால் வாழ்ந்ததோ சிங்கள இனவாதம் ஆகும்.

கடந்த காலம் இருதரப்பினருக்கும் துயரத்தில் முடிந்து விட்டது.

சிறிலங்காவின் முதலாவது பிரதமராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கா ஒருமுறை ஒரு ஆங்கில இராஜதந்திரியுடன் பேசிக்கொண்டிருந்த போது 'வடக்கு-கிழக்கில் வாழும் தமிழர் ஒருகாலம் இந்தியாவுடன் தம்மை ஒரு மாநிலமாய் இணைத்துக்கொள்வர் என்ற அச்சம் தனக்கு உண்டு" என்றாராம்.

அதற்கு அந்த ஆங்கில அதிகாரி 'கிழக்கு மாகாணம் இல்லாத வட மாகாணம் இந்தியாவுக்கு தேவைப்படாது. ஆகவே, கேக்கை வெட்டிச் சாப்பிடுவது போல கிழக்கு மாகாணத்தைத் துண்டு துண்டாய் வெட்டி சிங்களமயமாக்கி விட்டால் மேற்படி அச்சம் அர்த்தமற்றதாகி விடும்" என்றாராம்.

இந்த வகையில் கிழக்கு மாகாணத்தை அரசியல்-இராணுவ அர்த்தத்திலும் புவியியல் அர்த்தத்திலும் கபளீகரம் செய்வதில் இன்றைய சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பெரிதும் அக்கறை காட்டி வருகின்றார்.

இந்த வகையில் கிழக்கு மாகாணம் சிங்கள இனவாதத்தால் கபளீகரம் செய்யப்படுவது என்பது கூடவே இந்தியாவும் ஈழத்தமிழரும் தோற்கடிக்கப்படுகின்றனர் என்பதுதான்.

சிங்கள ஆட்சியாளர் எவரும் இந்தியாவுக்கு நண்பரல்ல.
அவர்கள் 'பயங்கரவாதம்" என்ற பூச்சாண்டியை காட்டி இந்திய அரசை தம்பக்கம் அணைத்து ஈழத்தமிழரை ஒடுக்குவதற்காக இந்தியாவுடன் பாசாங்கான உறவைக் கொள்கின்றனர். அவ்வாறு ஈழத்தமிழர் ஒடுக்கப்பட்டதும் அவர்கள் இந்தியாவின் எதிர்நாடுகளுடன் பின்பு கூட்டுச்சேர்ந்து விடுவர்.

இதில் இந்திய இராஜதந்திரம் மோசம் போகப்போகின்றதா?

ஈழத்தமிழர் இல்லையேல் இலங்கையில் இந்தியாவுக்கு எதுவம் இல்லை.

இலங்கைத் தீவில் இந்தியாவுக்கு எதுவுமில்லையேல் தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியா எதிரிகளின் கையில் கைதியாகிவிடும்.

அதேவேளை இந்தியா இல்லையேல் ஈழத்தமிழருக்கும் எதுவுமில்லை என்ற உண்மையையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியது அவசியம்.

இலங்கைத்தீவு இந்தியாவுக்கு எதிரான அந்நிய நாடுகளின் கைக்குள் சிக்குண்ணுமானால் அதன் விளைவாக முதலில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியது தமிழகம்தான்.

ஆதலால் தமிழகத்தின் பாதுகாப்பு என்பது ஈழத்தமிழர்களின் பாதுகாப்பிலேயே உள்ளது.

மொத்தத்தில் இந்தியாவினதும் தமிழகத்தினதும் பாதுகாப்பானது ஈழத்தமிழரின் பாதுகாப்பில்தான் தங்கி உள்ளது. ஆதலால் வெள்ளம் வரும் முன்னே அணைகட்ட வேண்டும்.

பனிப்போரின் பின்னான காலத்திலும் பனிப்போரின் பின் பின்னான காலத்திலும் என தேசிய இனங்கள் பிரிந்து சென்ற தேசிய அரசுகள் உருவான வரலாறு சர்வதேச அரசியலில் அரங்கேறியுள்ளது.

இவ்வாறு 1990 ஆம் ஆண்டின் பின்பு இன்றுவரை 23 தேசிய இனங்கள் பிரிந்து சென்று தேசிய அரசுகளை உருவாக்கியுள்ள்மை சர்வதேச அரசியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட யதார்த்தமாய் உள்ளது.

பெரிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரானவே மேற்படி தேசிய இனங்கள் பிரிந்து சென்று தேசிய அரசுகளை உருவாக்கின.

இத்தகைய நியதியும் நியாயமும் தமிழீழ மக்களுக்கும் முற்றிலும் பொருந்தும்.

அவர்களும் தேசிய உரிமையினதும், அதன் மிக அடிப்படையான ஜனநாயக உரிமையின் நிமித்தமும், அனைத்து வகை மனித உரிமைகளின் நிமித்தமும், சிங்கள இன ஒடுக்குமுறை ஆட்சியிலிருந்து பிரிந்து சென்று தனியரசை அமைக்க வேண்டியது ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாய் உள்ளது.

தமிழீழ மக்கள் ஏமாற்றப்பட்டவர்களாய், துரோகமிழைக்கப்பட்டவர்களாய், நீதியின் முன் கைவிடப்பட்டவர்களாய் பாதுகாப்பற்றவர்களாய், துயரப்படுபவர்களாய், தமது வாழ்வுரிமைகள் அனைத்தையும் இழந்தவர்களாய், ஐனநாயக வாழ்வை அடியோடு இழந்தவர்களாய், குரலற்றவர்களாய், வாழ்விடங்களை இழந்தவர்களாய், பிள்ளைகளை, சகோதரர்களை, உறவினர்களை, நண்பர்களை, காதலர்களை இழந்தவர்களாய், அங்கவீனம் உற்றவர்களாய், சொத்துக்களை இழந்தவர்களாய், சுகத்தை இழந்தவர்களாய், அடுத்து என்ன? அடுத்த நிமிடம் நடக்கபோவது என்ன? என்ற கேள்விகளுக்கு பதிலற்றவர்களாய், தொழில்துறைகளை இழந்தவர்களாய், மிகச்சாதாரண மிருகங்கள், பிராணிகள் என்பவற்றிற்கு இருக்கக்கூடிய உரிமைகள் கூட அற்றவர்களாய் அவதியுறுகின்றனர்.

இத்தகைய அவலங்களும் துயரங்களும் ஏன் ஏற்பட்டன? யாருக்காக துயருறுகிறார்கள்? ஏன் இத்துயரத்தை அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் தீர்க்கவோ கடக்கவோ முடியவில்லை?

மேற்படி தமிழீழ மக்களின் துயரத்திற்கான காரணங்களும் அத்துயரங்கள் நீண்டு செல்வதற்கான காரணங்களும் வெறும் மன வேகங்களுக்கு வெளியே அறிவுபூர்வமாகக் கண்டறிந்து யதார்த்தபூர்வமாக தீர்வுகாண வேண்டியது அவசியமானதாகும்.

அறிஞர்களே, ஆய்வாளர்களே, நீதிமான்களே உங்கள் புயங்களை விடவும் புருவங்களை உயர்த்தி நுண்மான் நுழை புலத்தால் கூர்ந்து பாருங்கள் இதயம் உள்ளவர்களே தமிழீழக் குழந்தைகளை, பருவப் பிள்ளைகளை, காதல் கனியத் துடிக்கும் இளம் உள்ளங்களை ஒருகணம் உங்கள் இதயங்களால் உரசிப்பாருங்கள். தமிழீழ மண்ணில் அவதியுறும் மக்களின் துயரங்களை அளர்ந்து பார்க்க பூமியின் அளவுமானி எதுவுமில்லை.

தமிழக மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் தெரியாத ஓர் உண்மை இருக்கிறது. கொள்கை வகுப்பாளர்களும், தீர்மானம் எடுப்போரும், தெரிய விரும்பாத, புரியமறுக்கின்ற ஒரு பக்கம் இருக்கின்றது.

அதாவது, சிங்கள ஆட்சியாளர்களால் தமிழீழ மக்கள் ஒடுக்கப்படுவதும் கொன்றொழிக்கப்படுவதும் இந்தியாவின் பெயரால்தான். தமிழீழ மக்கள் இரத்தம் சிந்துவதும், செத்து மடிவதும், துயரப்படுவதும் இந்தியாவிற்காகக்தான். இது ஒரு புரியப்படாத உண்மை. இனிமேலாவது புரிந்தேயாக வேண்டிய உண்மை அது.

நன்றி -தாயகத்திலிருந்து மு.திரு-

0 Comments: