Tuesday, June 24, 2008

யுத்தத்தைத் தொடர்வதற்காக கடன்வாங்கிக் குவிக்கும் அரசு

"கடன் வாங்கிக் கல்யாணம்' என்பார்கள். ஆனால் இலங்கைத் தீவில் "கடன் வாங்கி யுத்தம்' என்ற புதிய கொள்கை கடைப்பிடிக்கப்படுகின்றது.

தீவிர யுத்த முனைப்பில் இருக்கும் அரசு, நாட்டின் பொருளாதார வலு நிலைமையைத் தாண்டி யுத்தத்துக் குக் கொட்டிக் கொடுக்கிறது. இதற்காகக் கடன் வாங்கும் படலம் கட்டுமட்டின்றித் தொடர்கின்றது.

கடன் வாங்கிக் காரியங்களை நடத்தும் இலங்கை அரசின் செயற்போக்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் விபரீதத்தை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றது என சர்வதேச பொருளாதாரக் குறியீடுகளை அள வீடு செய்யும் முகவர் அமைப்புகள் தொடர்ந்தும் அபாய எச்சரிக்கை எழுப்பி வருகின்றன. தர நிலையில் இலங் கையின் பொருளாதாரத்தை மிகக் கீழ் மட்டத்துக்கு அவை கணிப்பிட்டு அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
சர்வதேச உதவிகளாக சொற்ப வட்டிக்கு நீண்ட காலக் கடன்களைப் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெற்றுக் கொள்ளும் நிலைமை மாறி, அறா வட்டிக்கு சர்வதேச வர்த்தக வங்கிகளிடம் கடன் வாங்கிக் குவிக்கும் பெரும் இழுக்கு நிலைக்கு நாடு போய்விட்டது.
"ஸ்டாண்டட் சார்ட்டட் வங்கி' யிடமிருந்து சுமார் ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாவை ஏப்ரல் முதல் வாரத்தில் கடனாகப் பெற்றுக் கொண்ட இலங்கை, அந்தக் கையோடே பிணை முறித் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களிடமிருந்து மேலும் சுமார் இரண்டாயிரத்து இருநூறு கோடி ரூபாவை அறவிடவும் கடனாகப் பெறவும் முயற்சி எடுத்திருக்கின்றது.
யுத்த தீவிரத்தில் குறியாக இருக்கும் அரசு, இந்த ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவினமாக 16 ஆயிரத்து அறுநூறு கோடி ரூபாவை (அதாவது சராசரியாகத் தினசரி ஐம்பது கோடி ரூபாவை) ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் பாதுகாப்புச் செலவினம் போகின்ற போக் கைப் பார்த்தால் இவ்வாண்டுக்கான பாதுகாப்புத்துறைச் செலவு 20 ஆயிரம் கோடி ரூபாவைத் தாண்டும் எனக் கணக்கிடப்படுகின்றது.

இப்படி அதிகரித்துச் செல்லும் பாதுகாப்புச் செலவினம் ஆட்சி முறையில் இடம்பெறும் ஊழல், மோசடிகளால் விரயமாகும் நிதி நல்லாட்சி தவறிய போக்கினால் ஏற்படும் இழப்புகள் மற்றும் மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படும் பின்னடைவுகள் என்று எல்லாப் பக்கங்களாலும் ஏற்படும் நட்டங்களை ஈடுகட்டுவதற்குக் கடன் வாங்கிக் குவிப்பதையும், புதிதாகப் பண நோட்டுக்களை அச்சிட்டுத் தள்ளுவதை யும் தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் அந்தப் "பொருளாதாரத் தற்கொலை' மார்க்கத்தில் குதித்திருக்கின் றது அரசு.
சர்வதேச நாடுகளிடமிருந்து ஒன்றரை வீதத்துக்கும் குறைவான வட்டியுடன் 25 முதல் 30 வருட நீண்ட காலக் கடன்களை அதுவும் ஆரம்பத்தில் பத்து வருட காலத்துக்குத் திருப்பிச் செலுத்தும் கடப்பாடு இல்லாத சொகுசு கடன்களைப்பெற்று நாட்டின் காரியங்களை ஆற்றி வந்த இலங்கை அரசு, இப்போது ஐந்து வருட காலத்தில் முழுதாகத் திருப்பிச் செலுத்தும் கடப்பாட்டுடன் சுமார் ஆறாயிரம் கோடி ரூபாவை உயர் வட்டியில் வர்த்தக வங்கிகளிடம் வாங்கித் தள்ளி, நாட் டைப் பெரும் கடனாளியாக்கி வருகின்றது.

இதற்கிடையில், நாட்டில் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக் கும் இடையிலான இடைவெளி என்றுமில்லாதவாறு கூடியிருப்பதும் நாட்டின் பொருளாதாரத்தை அதல பாதாளத்தில் வீழ்த்தப் போவதற்கான ஆரம்ப சமிக்ஞை யாக குறியீடாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இந்த வருடத்தின் முதல் நான்கு மாத காலத்தில் நாட்டின் ஏற்றுமதியை விட இறக்குமதியின் பெறுமதி இருபதாயிரம் கோடி ரூபா அதிகம் என்று புள்ளி விவரங் கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் ஏற்றுமதிகள் குறைய மறுபுறத்தில் இறக்குமதிக்காகச் செலவிடும் தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்தப் பிராந்தியத்தில் எந்த நாட்டிலும் முன்னெப் போதும் இல்லாதவாறு பண வீக்கம் மிக மோசமாக உயரும் நாடு என்ற பெருமையையும் இலங்கை இந்த ஆட்சியின் கீழ் பெற்றுக்கொண்டு விட்டது.

பணவீக்கம் 30 வீதத்தை எட்டிய நிலையில் பொருள் களின் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் எகிறிவிட்டன.

அது மாத்திரமல்ல. மூலதனக் கட்டமைப்புகளுக்கா கவோ அல்லது சமூகக் கட்டுமானங்களுக்காகவோ அல்லது அதுபோன்ற பிற அபிவிருத்தித் திட்டங்களுக் காகவோ அரசு கடன் வாங்குமானால் அதையாவது ஓரளவு நியாயம் எனச் சகித்துக்கொள்ள முடியும். அத் தகைய சமூகக் கட்டுமானங்கள் மூலம் அல்லது அபி விருத்தி மூலம் நாட்டில் வளர்ச்சியும், விருத்தியும் ஏற்படும், கடன் சுமையை எதிர்கொள்ளும் வலுவை அத் தகைய விருத்தித் திட்டங்கள் தரும் என்று நம்பி இருக்கலாம். ஆனால் இந்த அரசோ மீள் எழுந்துவரும் செலவினங்களையும், சம்பளங்களையும், ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கான கொடுப்பனவுகளைச் செலுத் தவும் கடன் வாங்கிக் குவிக்கின்றது. இத்தகைய போக்கு பொருளாதார ரீதியில் ஆக்கபூர்வமானதல்ல.

இப்படியே இந்த நாடு இன்னும் சில காலத்துக்குப் போகு மானால் "தோல்வியடைந்த நாடு'கள் என்ற வரிசையில் இலங்கை சேர்க்கப்படுவதற்கு நீண்ட காலம் எடுக்காது.

நன்றி உதயன்

0 Comments: