Thursday, June 26, 2008

தோல்வியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இடம்

தோல்வியுற்ற நாடுகளின் வரிசையில் மீண்டும் இலங்கைக்கு "உயரிய' இடம் உலகளாவிய ரீதியில் கிடைத்திருக்கின்றது.

"சமாதானத்துக்கான வெளிநாட்டுக் கொள்கை மற்றும் நிதி' என்ற சர்வதேச அமைப்பு வருடா வருடம் வெளியிடும் தோல்வியுற்ற நாடுகளின் வரிசையிலேயே இம்முறையும் இலங்கை தனது ஸ்தானத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மொத்தம் அறுபது நாடுகள் தோல்வியுறும் தேசங்களின் வரிசையில் இருக்கின்றன என அந்த சர்வதேச அமைப்பு பட்டியலிட்டிருக்கின்றது.

அந்தப் பட்டியலில் முதலாவது இடம் சோமாலிய நாட்டுக்கு.
இருபதாவது இடத்தை இலங்கை பெற்றுக்கொண்டு தனது "பெருமையை'(?) வெளிப்படுத்தியிருக்கின்றது.

இந்த நாட்டில் இடம்பெறும் ஆட்சி முறையின் சீத்துவத்தையும், அராஜகங்களின் அத்துமீறலையும், ஊழல், துஷ்பிரயோகம், மோசமான பொருளாதாரக் கொள்கை, தனது நாட்டு மக்கள் எனத் தான் உரிமை கோரும் ஒரு சிறுபான்மை இனக்குழுமத்தின் மீதே அரசு வெளிப்படுத்தி வரும் போர் வெறிப் போக்கு போன்றவற்றையும் நோக்கும் போது அடுத்து வரும் வருடங்களில் இந்தப் பட்டியலில் இருபதாவது இடத்திலிருந்து மேலும் பல படிகள் இலங்கை முன்னேறி தோல்வி வரிசையில் முன்னுரிமை நிலை பெறும் என்பது திண்ணம்.
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து வெளியாகும் புள்ளி விவரங்கள் இந்தத் திசையை நோக்கித்தான் இலங்கைத் தேசம் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நமக்குத் துலாம்பரமாக வெளிப்படுத்தி நிற்கின்றன.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதை விட இவ்வருடத்தில் மிக மோசமானதாக இருக்கப்போகின்றது என்ற அதிர்ச்சித் தகவலைப் பொருளாதார நிபுணர்கள் இப்போது வெளியிட்டிருக்கின்றார்கள்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பின்னடைவுகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் இந்த வருடத்தில் குறைந்த பட்சம் ஏழு வீதமாவது பொருளாதார வளர்ச்சி வீதம் இருக்கும் என இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்தது.
பணவீக்கம் எகிறிக் கொண்டிருந்தாலும் இறுக்கமான நாணய நிதிக் கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பொருளாதார வளர்ச்சி வீதத்தை எட்டமுடியும் என்றும் மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டிருந்தது.

ஆனால் அது சாத்தியப்படாது என்பது இப்போது தெளிவாகிவிட்டது. கடந்த நான்கு வருட காலத்தில் ஆகக் குறைந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தை இந்த ஆண்டு இலங்கை காட்டப் போகிறது. இந்த வருடத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆக 5.8 வீதமாகவே அமையும் என்று பொருளாதார விவகாரங்களைத் தர நிர்ணயம் செய்யும் மலேசிய நிறுவனத்தின் சிரேஷ்ட பொருளாதார நிபுணர் குறிப்பிட்டிருக்கின்றார்.
2007 இல் 7.5 வீத பொருளாதார வளர்ச்சி வீதத்தை எட்டமுடியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் ஆக 6.8 வீத வளர்ச்சியே அப்போது எட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அது இப்போது மேலும் "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல' 5.8 வீதத்துக்குப் படுத்துவிட்டது.

இதேசமயம், இலங்கையில் பணவீக்கமும், விலைவாசி உயர்வும், மோசமாக உயர்ந்துள்ளன. இந்தப் பிராந்தியத்தில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இலங்கையில் பணவீக்கம் முப்பது வீதத்தைத் தொட்டு நிற்கின்றது.
எரிபொருள் உட்பட சகல அத்தியாவசியப் பொருட்களினதும் விலைகள் அதிகரித்து, வானத்தைத் தொட்டுள்ளன.

இந்தப் பொருளாதார நெருக்கடிகளுக்கும், மோசமான விலைவாசி உயர்வுக்கும், பண வீக்கப் பிரச்சினைக்கும் உலக சந்தையில் பொருட்களின் விலை உயர்வே முக்கிய காரணம் என்று கூறி இலங்கை அரசு தனது தவறை வேறு தரப்புகள் மீது சுமத்தித் தப்பிழைக்கப் பார்க்கின்றது.
உலக நாடுகளில் எரிபொருள் உட்படப் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்பது உண்மைதான்.

ஆனால் அதற்காக இந்தப் பிரதேசத்தின் ஏனைய நாடுகள் எல்லாம் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப தமது நாட்டிலும் எரிபொருளின் விலையில் உயர்வை ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. அதுபோலவே ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் அவை கூட்டவும் இல்லை.

அவை எல்லாம் ஏதோ ஒரு வகையில் சர்வதேசப் பிரச்சினைக்கு ஏற்றவகையில் தமது பொருளாதார நிலைப்பாடுகளை மாற்றியமைத்து, சர்வதேச மட்டத்திலான விலை உயர்வு தமது மக்களையும் எட்டிப் பாதிப்பை ஏற்படுத்த விடாமல் பார்த்துக் கொள்கின்றன.
ஆனால் இலங்கையில் மட்டும்தான் லாயக்கற்ற ஓர் அரசு இருந்துகொண்டு, சர்வதேச விலை உயர்வைக் காட்டி தனது நாட்டு மக்களின் தலையில் மிளகாய் அரைக்க முயற்சிக்கின்றது.
இந்த அரசுத் தலைமையின் பொறுப்பற்ற போக்குக்காக இலங்கைத் தீவு முழுவதுமே பொருளாதார நிலையில் பின்தங்கி, பெரும் விலை கொடுக்க வேண்டிய கட்டாய இக்கட்டை எதிர்கொள்ளும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது.

thanks uthayan

0 Comments: