Wednesday, June 11, 2008

அப்பாவிகளைப் பலி வாங்கியமைக்கு அப்பாவிகள் மீது பழி தீர்க்கலாமா?

கொழும்பிலும் தென்னிலங்கையிலும் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு "எல்லாளன் படை அணி' என்ற அமைப்பு உரிமை கோரியிருப்பதாக செய்தி ஏஜென்ஸிகள் சில தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன.

ஆழ ஊடுருவும் படையணியைப் பயன்படுத்தியும், விமானத் தாக்குதல்கள் மூலமாகவும் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்வதற்குப் பதிலடியாகவே இந்தக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அந்த "எல்லாளன் படை அணி' தெரிவித்திருக்கின்றதாம்.

இலங்கை இராணுவத் தரப்புக் கூறுவது போல "எல்லாளன் படை அணி' என்ற பெயரில் இந்தக் கைவரிசையைக் காட்டுவது விடுதலைப் புலிகள் அமைப்பாக இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெறும் அப்பாவிகள் படுகொலைகளுக்குப் பதிலடியாகவே தென்னிலங்கையில் அப்பாவிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்ற நிலைப்பாடு உண்மையானால் அது பெரும் துரதிஷ்ட வசமானதாகும்.
ஓர் அப்பாவியின் படுகொலைக்காக இன்னொரு அப்பாவியைப் படுகொலை செய்யும் "கொலை கலாசாரம்' நாகரிக உலகில் எந்தக் கோட்பாட்டின் கீழும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே அல்ல. கடும் கண்டனத்துக்கும், ஆட்சேபத்துக்கும், விசனத்துக்கும், விமர்சனத்துக்கும் உரிய போக்கு இது.

ஆனாலும் கூட இந்தக் கொடூரப் போக்கு ஏற்படக் கூடிய சூழலை இங்கு வித்திட்டு உருவாக்கி வளர்த்த பின்புலத்தையும் இந்த இடத்தில் மறந்துவிட முடியாது.

இவ்வாறு பழிக்குப் பழி என்ற ரீதியில் அப்பாவிகளின் உயிரைக் காவு கொள்ளும் போக்கு எவ்வளவு தூரம் கண்டிக்கப்படுகின்றதோ, அதேயளவு தூரத்துக்கு இத்தகைய சூழலை உருவாக்கிக் கொடுத்த அகோரச் செயற்பாடுகளும் கண்டிக்கப்பட வேண்டும்.
அப்பாவித் தமிழர்கள் மீதான இனவஞ்சிப்புத் தாக்குதல்கள் என எல்லாளன் படை அணி வரிசைப்படுத்திப் பட்டியலிட்டிருக்கும் கொடூரங்கள், தமிழர் தாயகத்தில் தினசரி அரங்கேறி வரும் துன்பியல் நிகழ்வுகள்தாம். தெற்கில் மூடி மறைக்கப்படும் பரகசியங்கள் இவை.
இந்தக் கோர நிகழ்வுகளை ஒட்டிப் பின்வரும் அவதானிப்புகள் இந்தச் சமயத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகின்றன.

தென்னிலங்கையில் அப்பாவிகளுக்கு எதிராக நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களின் கொடூரங்களையும், கோரங்களையும் அப்படியே படம் பிடித்துக் காட்டி உலகுக்கும் தென்னிலங்கைக்கும் மனதைத் தொட வைக்கும் விதத்தில் உருக்கமான செய்திகளை வெளியிடும் தென்னிலங்கை ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும், தமிழர் தாயகத்தில் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் இதேபோன்ற கொடூரங்களை மூடி மறைத்து அமுக்கி விடுகின்றன.

அல்லது அவை எல்லாம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் என்று திரிப்பு வேலை செய்து சித்திரித்து ஒதுக்கி விடுகின்றன.

இத்தகைய போக்கு மூலம் தமிழர் தாயகத்தில் இடம்பெறும் மேற்படி கோரங்களையும் கொடூரங்களையும் சம்பந்தப்பட்டோர் தொடர்ந்தும் இழைப்பதற்கான நியாயப்பாட்டை உருவாக்கித் தரும் பெரும் தவறை சர்வதேச ஊடகங்களும், தென்னிலங்கை ஊடகங்களும் தொடர்ந்து இழைத்து வருகின்றன.

அதேபோலத்தான் ஐ.நாவிலிருந்து சாதாரண அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் வரை ஏன் சர்வதேச நாடுகள் கூட தென்னிலங்கையில் அப்பாவிகளுக்கு எதிராக இழைக்கப்படும் தாக்குதல்கள் தொடர்பில் காட்டும் தீவிர அதிருப்திப் போக்கையும் கண்டனப் பிரதிபலிப்பையும் தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் இத்தகைய இனவன்முறை நாசவேலைகள் விடயத்தில் வெளிப்படுத்துவதில்லை.

இத்தகைய தரப்பினருக்கு இவ்வாறான பதிலடிகள் மூலமே உண்மையை வெளிப்படுத்தி உணர வைக்கலாம் என்ற தீர்மானத்துக்கு எல்லாளன் படை அணியோ அல்லது இராணுவத் தரப்புக் கூறுவது போல விடுதலைப் புலிகளோ செல்வதற்கான புறச்சூழலை ஏற்படுத்திக் கொடுத்துக் குற்றமிழைத்தவர்களாக தென்னிலங்கை ஊடகங்கள், சர்வதேச ஊடகங்கள் மற்றும் சர்வதேச தரப்புகள் அமைவது கண்கூடு. அத்தகைய விதத்தில் ஒரு பக்கச் சார்பாக அல்லது "ஒரு கண்ணில் வெண்ணெய், மறுகண்ணில் சுண்ணாம்பு' என்ற போக்கில் செயற்படும் தரப்புகளும் இந்நிலைமையை உருவாக்கித் தந்தமைக்காகக் கண்டிக்கப்பட்டேயாகவேண்டும்.
சரி. அரசும் அதன் படைத்தரப்பும் சொல்வது போல தென்னிலங்கையில் அப்பாவிகள் மீதான தாக்குதல்களுக்குப் "புலிப் பயங்கரவாதிகளே' காரணமாக இருக்கட்டும். அதேபோல வடக்கு கிழக்குத் தமிழர் தாயகத்தில் குறிப்பாக வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அப்பாவிகள் மீது இடம்பெறும் தாக்குதல்களுக்கும் அரசுக்குமோ, அரசுப் படைகளுக்குமோ எந்தத் தொடர்புமில்லை என்று கொழும்பு கூறுவதையும் ஒரு பேச்சுக்கு அப்படியே ஏற்றுக்கொள்வோம்.

அப்படியானால் கொழும்பிலும் தென்னிலங்கையின் பிற இடங்களிலும் அரசு குற்றம் சுமத்துவதுபோல புலிப்பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு "இன்று தாக்குதல்; நாளை நஷ்டஈடு' என்ற வேகத்தில் விரைந்து நிவாரணமளிக்கும் அரசு, தமிழர் தாயகத்தில் கொல்லப்படும் அப்பாவித் தமிழர்களுக்கு மட்டும் ஒரு சதம் தன்னும் நிவாரணம் காலம் தாழ்த்தியும் கூட வழங்காமல் அதைப்பற்றியே அலட்டிக் கொள்ளாமல் இருப்பது ஏன்? இவ்வாறு ஒருதலைப்பட்சமாக நடப்பதன் மூலம், இவ்விடயத்தில் அரசுத் தரப்பு சொல்லாமல் சொல்லும் செய்திதான் என்ன?

அதைப் புரிந்து கொள்ள முயல்வோமானால் தென்னிலங்கைக் கொடூரங்களுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் கருத்து நிலைப்பாடுகளை நாம் ஓரளவு புரிந்து கொண்டவர்களாவோம்.

thanks uthayan.

0 Comments: