Friday, June 27, 2008

பௌத்த தேசியத்துக்குள் பலியாகப்போகும் இந்தியாவின் வல்லரசு கனவு

ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா கடைப்பிடித்து வரும் பிடிவாதமான முரண்போக்கு குறித்து தமிழீழத்திலும் சரி தமிழ்நாட்டிலும் சரி எப்படி எடுத்துக்கூறினாலும் காதில் வாங்காத இந்திய மத்திய அரசு, அண்மையில் கொழும்புக்கு அனுப்பிய அதன் உயர்மட்டக்குழுவின் நடவடிக்கைகளின் மூலம் தான் இன்னும் திருந்தவில்லை என்ற செய்தியை ஈழத்தமிழர்களுக்கு மறைமுகமாக சொல்லியிருக்கின்றது.

தனது பிராந்திய நலனை உத்தரவாதம் செய்வதற்கு ஈழத்தமிழர் விடயம் உட்பட எந்த விவகாரத்தையும் தனது அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாக பயன்படுத்த தயார் என்ற தனது நிலைப்பாட்டை நிரூபிக்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு தான் சகல உதவியையும் வழங்குவதாகுவும் எக்காரணம் கொண்டும் சீனா, பாகிஸ்தான் என தனக்கெதிரான கூட்டணியின் பக்கம் சாய்ந்துவிட வேண்டாம் என்றும் மகிந்த அரசுக்கு இந்தியா மந்திரம் ஓதிச்சென்றிருக்கிறது.

ஈழத்தமிழரின் நம்பிக்கையில் வேல் பாய்ச்சி சென்றிருக்கும் இந்தியாவின் இந்த அறிவிப்புக்கள் சிறிலங்காவின் தென்பகுதியில் எவ்வாறான எதிர்வினைகளை உண்டாக்கியிருக்கின்றன என்பதை நோக்குவது அவசியமாகிறது.

அந்த வகையில், அண்மையில் 'டெய்லி மிரர்" பத்திரிகையில் இந்தியா உயரதிகாரிகளின் அண்மைய சிறிலங்காப் பயணம் தொடர்பாக எழுதப்பட்ட பத்தியிலிருந்து சில விடயங்களை நோக்குவது இங்கு பொருத்தமானதாக இருக்கும்.

அந்தப்பத்தியின் சுருக்கம்:

இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத்தீர்வு சாத்தியமற்றது. ஐக்கிய இலங்கைக்குள் சகல இன மக்களும் ஏற்றுக்கௌ;ளக்கூடிய தீர்வே சாத்தியமானது என்று அண்மையில் சிறிலங்காவுக்கு வந்து சென்ற இந்திய உயர்மட்டக்குழுவினர் கூறியுள்ளனர்.

அன்று விடுதலைப் புலிகளுக்கு தனது நாட்டில் வைத்து ஆயுதப்பயிற்சி அளித்து அவர்களை பயன்படுத்தி எமது சிறிலங்காப் படையினரை கொலை செய்வதற்கு சதிசெய்த இந்தியா இன்று சிறிலங்கா அரசுக்கே வந்து இப்படியோரு ஆலோசனையை வழங்கியிருக்கிறது.

'ஒப்பரேஷன் லிபரேஷன்" படை நடவடிக்கையின் போது இந்தியா தலையிட்டிராவிட்டால் 21 ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு, ஜே.வி.பி. கிளர்ச்சி எப்படி அடக்கி ஒடுக்கப்பட்டதோ அதேபோன்று இந்தப் போராட்டமும் அடியோடு அழித்தொழிக்கப்பட்டிருக்கும்.

எழுபதுகளில் ஜே.வி.பியின் கிளர்ச்சி இடம்பெற்றபோது அக்கட்சியினரை அழித்தொழிக்கும்படி சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்கிய இந்தியா, இன்று புலிகளுடனான யுத்தத்துக்கு மட்டும் அரசியல் ரீதியான தீர்வு காணுமாறு வக்காலத்து வாங்குகின்றது.

ஏனெனில் இந்தியாவிலுள்ள தமிழர்களின் வாக்குகளை வெல்வதற்காகவே ஆகும்.

தற்போதைக்கு இந்தியாவுக்கு உரிய பணி புலிகளுக்கு எதிரான சிறிலங்கா அரசின் யுத்தத்துக்கு இராணுவ ரீதியிலும் சகல வழியிலும் உதவியளிப்பதே தவிர இப்படியான மடத்தனமான ஆலோசனைகளை வழங்குவதல்ல.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு அநியாயத்துக்கு இந்தியாவை வெளுத்து வாங்கியிருக்கிறார் பத்தி எழுத்தாளர்.

இந்தப் பத்தியை எழுதியவர் யாருமல்லர். பௌத்த தேசியத்தை தன் மூச்சாகக்கொண்ட எஸ்.எல்.குணசேகர என்பவர்.

இலங்கை என்பது பௌத்த நாடு என்றும் இங்கும் ஏனைய இனங்கள் சிங்களவர்களுக்கு அடங்கி வாழ வேண்டும் என்றும் மூச்சுக்கு மூச்சு சிங்கள ஆங்கில ஊடகங்களில் பிரசாரம் செய்து வருபவர் எஸ்.எல்.குணசேகர.

இவர் சிங்கள இனவெறி பிடித்த - பௌத்த தேசியத்தை உதிரத்தில் பாய்ச்சிய - ஹெல உறுமய எனப்படும் முன்னாள் சிஹல உறுமய கட்சியினை உருவாக்கியவர்களில் ஒருவர்.

இக்;கட்சி ஆரம்பித்தபோது அதன் தலைவராகப் பதவி வகித்து, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மற்றும் பௌத்த தேசியவாதிகளை தனது கட்சியில் இணைப்பதற்காக நாடு நாடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டவர்.

பௌத்த தேசியத்தை காப்பதற்காகவே இக்கட்சி என்று சிங்கள இளைஞர்கள் மத்தியில் முழுவீச்சான பிரசாரங்களில் ஈடுபட்டதுடன் அதனை வலியுறுத்தி தொடர் பத்திகள் உட்பட புத்தகங்களையும் எழுதியவர்.

தமிழின உணர்வாளர்களுடன் நேருக்கு நேர்வாதம் புரிந்து வரும் இவர், படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்துடன் ஒன்றாக சட்டம் பயின்றவர்.

தமிழ் ஆயுதக்குழுக்களுடன் முன்னர் தொடர்பு வைத்திருந்தவர் என்ற காரணத்துக்காக தனது கட்சி செயலாளர் திலக் கருணாரட்ணவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக்கூடாது என்று கட்சிக்குள் பிளவை உண்டு பண்ணியளவுக்கு தமிழினம் என்ற சொல் மருந்துக்கும் ஆகாத மனிதர் இவர்.

அன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் அரசியலில் கயிறு பிடித்து ஏறிய இவரது கட்சி இன்று புத்த பிக்குகளின் முழு ஆக்கிரமிப்புடன் தென்பகுதியில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற கட்சியாக வளர்ச்சி பெற்றுள்ளது.

அதாவது, பௌத்த தேசியத்தை வலியுறுத்திய இவர்களின் பிரசாரத்தால் மூன்று பிரதான சிங்கள கட்சிகளின் வாக்குகளை உடைத்து ஒன்பது நாடாளுமன்ற ஆசனங்களை பெறுமளவுக்கு இதன் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் இக்கட்சி பௌத்த தேசியத்தை பிரதிபலிக்கும் ஓர் ஆதிக்க சக்தி என்று கூறலாம்.

இக்கட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.எல்.குணசேகர, இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக கூறியுள்ள கருத்தை அவரது தனிப்பட்ட கருத்தாக எடுத்துவிட முடியாது. சிங்கள மக்களின் மனோபாவத்தை மொழிபெயர்க்கும் ஒரு கருவியாகவே இவரை கருதவேண்டியுள்ளது.

இதன் பின்னணியில் துலாம்பரமாக தெளிவாகும் விடயம் என்ன?

அதாவது, சிங்கள மக்களும் அவர்களின் அரசும் என்றுமே இந்தியாவை பகையாளியாகவே பார்த்து வருகிறது. அன்று முதல் இன்றுவரை இதில் எந்த மாற்றமும் இல்லை.

அரசியல் இராணுவ விடயங்களுக்கு அப்பால் சாதாரண சிங்கள மக்களின் பார்வையில் இந்தியா எப்போதுமே சிங்கள தேசத்துக்கு ஒரு எதிரியாகவே வர்ணிக்கப்பட்டு வந்துள்ளது. அது அன்று இந்தியப் பொருட்களை வாங்குவோருக்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய படுபயங்கரமான போராட்டம் முதலே சிங்கள மக்களின் மனங்களில் ஆழமாக எழுதப்பட்ட ஒன்று.

தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் கொடூரப்போரினால் சிங்கள தேசத்தின் இந்திய எதிர்ப்போக்குவெளியில் தெரிவதில்லையே தவிர சிங்கள மக்களின் மனங்களில் ஆழ விதைக்கப்பட்ட இந்திய விரோதப்போக்கு சந்தர்ப்பம் ஏற்படும் போதெல்லாம் வெளிப்படத்தவறியதில்லை.

அத்துடன் இலங்கையில் சிறுபான்மை இனமாக தமிழ் பேசும் மக்கள் கருதப்பட்டாலும் சிங்கள மக்களை பொறுத்தவரை அவர்கள் இந்தியாவையும் ஈழத்தமிழர்களையும் ஒரு சக்தியாக இணைத்துப்பார்த்து தங்களைத்தான் சிறுபான்மை இனமாக கருதுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை என்றுமே இந்தியாவும் ஈழத்தமிழரும் ஒன்றுபட்ட சக்தியே என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அது அவர்களது இரத்தத்தில் ஊறிவிட்ட ஒன்று.

இந்த மாதிரியான நிலையில், இந்தியா வலியப்போய் சிறிலங்காவுடன் இணைந்து கொள்ளும் கட்டங்களிலெல்லாம் அவர்கள் இந்தியாவை ஈழத்தமிழர்களுக்கு எதிரான ஒரு கருவியாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இராணுவ ரீதியில் சரி அரசியல் ரீதியில் சரி இந்தியாவின் சகல சக்திகளையும் உள்வாங்கி அவற்றை தமிழருக்கு எதிராக திருப்பி விடுவது என்பதில் அவர்கள் காலகாலமாக உறுதியாக உள்ளனர்.

உண்மையிலேயே இந்தியாவை நேச சக்தியாக சிறிலங்கா பார்க்குமானால் இந்திய மீனவர்களை சிறிலங்கா கடற்படை கடலிலே சுட்டுப்படுகொலை செய்வது உட்பட எத்தனையோ விடயங்களில் சிங்கள தேசம் - இந்தியாவிடம் தமது ஆழ்மன விசுவாசத்தை காண்பிக்கக்கூடிய சந்தர்ப்பங்களில் - தக்க நடவடிக்கைகள் எடுத்திருக்கும். அது நடந்ததா என்ற கேள்வியின் விடையில்தான் சிங்கள தேசத்தின் தேசநலன் தங்கியிருக்கிறது.

எஸ்.எல்.குணசேகர கூறியதைப்போல, தான் என்னதான் செய்தாலும் அதற்கு ஆமா போடும் பங்காளியாக இந்தியா இருக்கவேண்டும் என்று சிறிலங்கா எதிர்பார்க்கிறதே தவிர எதிர்த்து கேள்வி கேட்கும் வகையில் இந்தியா இருக்கக்கூடாது. அப்படி கேட்க இந்தியாவுக்கு உரிமையும் இல்லை என்ற ஒரு மனோபாவத்தில்தான் சிங்கள தேசம் இந்தியாவை பார்க்கிறது.

(இந்தியத் தலையீடு இல்லாவிட்டால் 21 வருடங்களுக்கு முன்னரே விடுதலைப் புலிகளை அழித்திருக்க முடியும் என்று கூறும் எஸ்.எல்.குணசேகர, கடந்த 21 வருடங்களாக இந்தியாவின் உதவியை பெற்றும் சிறிலங்காவால் ஏன் விடுதலைப் புலிகளை அழிக்கமுடியாமல் உள்ளது என்ற பெரிய ஓட்டையை தனது பத்தியில் விட்டுச்சென்றுள்ளமை வேறு விடயம்.)

ஆனால், இந்த யதார்த்தத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளதா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

சிங்கள தேசம் என்றுமே இந்தியாவின் நட்புச்சக்தியாக இருக்கப்போவதில்லை. தமிழர்களின் போராட்டம் நோக்கியதும் தமிழ்த் தேசியம் நோக்கியதுமான சிங்கள தேசத்தின் அச்சம் இந்தியாவையும் உள்ளடக்கியதாகவே இருக்கிறது.

இதனை இந்தியா புரிந்து கொள்ளாதவரை தெரிந்தோ தெரியாமலோ அது இலங்கையின் மறைமுக வேலைக்காரனாக செயற்படுவதை தவிர்க்க முடியாது.

தனது முதலீடுகளுக்கான வளமான நிலமாக இலங்கையை சுவைத்து வரலாம் என்ற இந்தியாவின் கனவெல்லாம் சிங்கள தேசத்தின் திருவிளையாடல்களுக்கு அரோகரா சொல்லும் வரைதான்.

இந்தியாவின் இந்த சுருதியில் சின்னப்பிசகு ஏற்பட்டாலும் சிங்கள தேசத்தின் சீனக்காதல் கொடி கட்டிப்பறக்கும். அடியில் நின்று வேடிக்கை பார்க்கக்கூட இந்தியாவுக்கு இடம் கிடைக்காது.

இந்நிலையில், இந்தியா தனது உறுதியான உறவுப்பாலத்தை அமைக்க வேண்டிய இடம் ஈழத்தமிழர் பக்கமே.

இன்று தனது அயலில் உள்ள எவரையும் நம்ப இந்தியா தயாரில்லை. இந்தியா நம்பினாலும் இந்தியாவை நம்ப அவர்கள் தயாரில்லை.

இந்நிலையில், எத்தனை ஆண்டுகளாக - இன்னமும் - இந்தியாவுக்கு ஈழத்தமிழர்கள் தமது நேசக்கரங்களை நீட்டி நிற்கிறார்கள்?

இந்தியாவின் நலனை தமது நலனாக பார்க்கும் ஈழத்தமிழர்களும் அவர்களின் அரசான விடுதலைப் புலிகளும்தான் இந்தியாவின் நிரந்தர உறவாக இருக்க முடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இது இந்தியாவை தவிர அனைத்துத்தரப்பினருக்கும் தெளிவாகப் புரிந்த விடயம்.

ஆனால், இந்தியா செய்து கொண்டிருப்பது என்ன?

இலங்கையில் சீனா புற்றெடுத்து விடக்கூடாது என்பதற்காக மகிந்தவுக்கு எதைக்கொடுத்தால் மடக்கலாம் என்று நாடி பிடித்துப்பார்த்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு ஆயுதம் தரலாம் என்று பேரம் பேசி தனது முயற்சியில் வெற்றி கண்டுவிட்டதாக திருப்தியடைந்திருக்கிறது.

வல்லரசாக வரத்துடிக்கும் ஒரு நாட்டின் வெளியுறவுக்கொள்கையின் ஓட்டையை விமர்சிக்க இதைவிட ஒரு சந்தர்ப்பம் தேவையில்லை.

தனது சுற்றாடலில் எதிரிகளை வளர்ப்பதற்கென்றே வெளியுறவுக்கொள்கைகளை வகுக்கும் ஒரேயொரு நாடு உலகிலேயே இந்தியாவாக மட்டுமே இருக்கமுடியும் என்பதையே இது படம் பிடித்துக்காட்டுகிறது.

இன்று ஈழத்தமிழர் விடயத்தை மையமாக வைத்து தமது நலன்களை வளர்த்துக்கொள்வதற்கு எத்தனையோ சக்திகள் சதிராடிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தமிழர் விவகாரத்தில் தலையிட்டு இதய சுத்தியுடன் அவர்களது அபிலாசைகளை தீர்த்து வைத்தால், அது சீனாவுக்கு எதிராக மட்டுமல்ல தெற்காசியாவில் எந்தச் சக்திக்கும் எதிரான இந்தியாவின் மிகப்பெரும் வியூகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

அதனை விடுத்து, ஈழத்தமிழர் விவகாரத்தை கொழும்பின் ஊடாக நகர்த்தி விளையாடும் பகடைக்காயாக கருதி சிறிலங்காவை இந்தியா தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருந்தால் அதன் வல்லரசுக்கனவு பௌத்த தேசியத்துக்குள் பலியாவது தவிர்க்க முடியாததாகும்.

நன்றி :- -ப.தெய்வீகன்-

0 Comments: