Sunday, June 8, 2008

கை நழுவிசெல்லும் இந்திய ஆதிக்கம்

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தற்போது உருவாகியுள்ள விசித்திரமான நிலை குறித்து பல கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் முக்கியத்துவமானது, பிராந்தியச் சமநிலையின் அடிப்படையில் நோக்கப்படும் அதேவேளை, சமநிலை பேண விழையும் பிராந்திய நலன் பேணும் வல்லரசுகளின் புதிய கூட்டுக்களின் முயற்சிகளையும் உள்ளடக்கியுள்ளது.ஆனாலும், கேந்திர முக்கியத்துவமிக்க இப்பிராந்திய மையத்தில், சமநிலை பேணும் முன்னுரிமையை, எவ்வளவு காலத்திற்கு முதன்மைப்படுத்த முடியுமென்கிற கேள்வியும் எழுகிறது. இந்தியக் கொல்லைப்புறத்தில் சீனாவின் நகர்வுகள் பற்றியும் பேசப்படுகிறது.

தாம் நிர்மாணிக்கும் ஒரு துருவ உலகில் (Unipolar World) அதிகாரச் சமநிலை நாட்டப்பட வேண்டிய பிராந்தியமாக, சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அமெரிக்கா வரையறுத்துள்ளது. இதில் இந்து சமுத்திரப் பிராந்தியமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கணிக்கப்படுகிறது. அமெரிக்க இராஜங்க செயலாளர் கொண்டலிஸா ரைஸின் கூற்றில் ""பல்துருவ பார்வை கொண்ட ஒரு துருவ உலகம்'' என்கிற கோட்பாடு, தென்னாசியத் தலைவாசல் மையத்திற்கும் பொருந்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகப் கருதப்படலாம். தென்னாசியாவிலோ அல்லது இந்து சமுத்திரத்திலோ ஒரு வகையான அதிகாரச் சமநிலை பேணப்படவேண்டும் என்கின்ற நிலைப்பாட்டினை, சீன எழுச்சியின் வகிபாகம் நிர்ணயம் செய்வதாக பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஊதிப் பெருகும் சீனப் பொருளாதார வளர்ச்சி, பூவுலகின் கனி வளங்களையும், எரிசக்தி வளங்களையும் தனதாக்கிக்கொள்ளும் நகர்வில் தீவிர கவனம் செலுத்தும் இவ்வேளையில், சந்தை முக்கியத்துவமற்ற இலங்கையில் அமெரிக்காவும் இந்தியாவும் கூடாரம் அமைக்க இடங்களைத் தெரிவு செய்யும் பணியில் ஈடுபடுகின்றன. இதுகாலவரை, அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பõன் என்கிற முச்சக்திகளின் பொருளாதார ஆதிக்கத்தால் முழு உலகமும் கட்டுண்டு கிடந்தது. வெவ்வேறு பிராந்தியங்களில் உருவான புதிய சமநிலைகளை இவர்களே தமக்கேற்ற வகையில் உருவாக்கிக் கொண்டார்கள். அதனைத் தடுக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ சீனா முயலவில்லை. தனது வளங்களை யுத்தத்தில் செலவிடாது நாட்டின் தொழில்நுட்ப உட்கட்டுமான வளர்ச்சியில் முதலீடு செய்வதில் அக்கறையோடு செயல்பட்டது.

அதேவேளை, உற்பத்திக்குத் தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயுவினை மத்திய கிழக்கிலிருந்து கடல் வழியூடாக கொண்டுவரும் போது, பாதுகாப்பான சூழல் நிலவவேண்டுமாயின், அவ்வழித் தடத்திலுள்ள துறைமுகங்களைக் கையகப்படுத்த வேண்டும். இப் பாதையில் நீண்டகால இராஜரீக உறவு கொண்ட நாடுகள் அமைந்திருப்பது சீனாவிற்கு அனுகூலமாகவிருக்கிறது.

முத்துக்கள் நேர்த்தியாகக் கோர்க்கப்பட்ட கடல்வழிப் பாதை போன்ற குவார்டார் (Gwadar) துறைமுகம் பாகிஸ்தானிலும், சிட்டாகொங் (Chittagong) பங்களாதேஸிலும் சிற்வே (Sittwe) மியன்மாரிலும் உள்ள நிலையில் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கையிலும், சீன ஆதரவுடன் நிர்மாணிக்கப்படுகிறது. வட பகுதியில் "பூமாலை ஒப்பரேசனை' இந்தியா நடத்தும்போதே அதன் பரந்த கடல் பகுதியில் முத்துமாலை கட்டத் தொடங்கியது சீனா. ஒரு கட்சி ஆட்சியின்கீழ் அதிகாரப் போட்டியற்ற வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை நீண்டகால மூலோபாயத்தின் அடிப்படையில் நிர்மாணித்துக் கொள்ளலாம். ஐந்து வருடத்திற்கொரு முறை ஆட்சி மாறும் அரசியலமைப்பைக் கொண்டிராத மக்கள் சீனக் குடியரசின், சலனமற்ற உறுதியான தூரநோக்கு, ஏனைய பிராந்திய நலன்பேணும் வல்லரசுகளின் தடுமாற்ற நகர்வுகளால், சாத்தியமாவதை தற்போது உணரக்கூடியதாகவுள்ளது.

இந்த மூன்று வல்லரசுகளுக்கிடையே நிலவும் இணைவுகளும், முரண்நிலைகளும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் எவ்வகையான அதிகார வலு சமநிலையை ஏற்படுத்தப் போகின்ற தென்பதே பல சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் முன்னுள்ள, பிரதான ஆய்வுப் பொருளாக இருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் சில விவகாரங்களில், அதாவது கேந்திர நலனடிப்படையில் பங்காளர்களாக இணைந்திருந்தாலும், நிரந்தர நட்பு நாடுகளாக பரஸ்பர விட்டுக்கொடுப்புகளோடு இருக்கும் சாத்தியப்பாடுகள் இல்லையென்றே கூறலாம். கடற்படை ஒத்திகைகளெல்லாம் கேந்திர முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இரு தரப்பும் மேற்கொள்ளும் சில பலம் சேர்ந்த நகர்வுகளே. ஆகவே, இலங்கை விடயத்தில் பொருளாதார தேவைகளைப் பார்க்கிலும் ஆசியாவில் இந்நாடு மையங்கொண்டிருக்கும் தரிப்பிடமே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக வல்லரசுகள் கருதுகின்றன.

ஈழப்போராட்டம் பெருத்து வீங்கிய 80களின் மையப்பகுதியில், அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் விவகாரத்தையும், திருமலை எண்ணெய் குதம் மற்றும் வொஸ் ஒப் அöமரிக்கா வானொலி மையத்தையும் வைத்து இந்தியா வெளிப்படுத்திய முற்போக்குப் பாத்திரத்தை நம்பி, பல விடுதலை இயக்கங்கள் மனம் கசிந்து உருகிப்போகின. காரியம் முடிவடைந்ததும், தமிழ் பேசும் மக்கள் நிரந்தரமாக கண்ணீர் சிந்தப் போவதை இவர்களால் உணர முடியவில்லை. அதாவது, இந்தியாவின் சுயநலத்தில் எழுப்பப்பட்ட முற்போக்கு கற்பிதங்கள், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளப் போவதை அன்றும் சிலர் புரியவில்லை. இன்றும் பலர் புரிய மறுக்கின்றார்கள்.

12 சதுர மைல் பரப்பளவு கொண்ட ஆழங்கூடிய திருமலை உள் துறைமுகத்தின் உணர்திறன் கூடிய மைய இருப்பே, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக 17ஆம் நூறாண்டிலிருந்து பல நாட்டு படைத்துறை ஆய்வாளர்களால் கணிக்கப்படுகின்றது. மலைக்குன்றுகளாலும், சிறு தீவுகளால் சூழப்பட்ட இயற்கையான பாதுகாப்பு அரண்களை இத்துறைமுகம் கொண்டிருப்பதே இதன் சிறப்பம்சமாகும். 1942இல் சிங்கப்பூர் கடற்படைத் தளம், ஜப்பான் வசமானவுடன், திருமலைத் துறையானது பிரித்தானியரின் ஏழாவது கடற்படைக்கு பாதுகாப்பாகத் திகழ்ந்தது. அணுஆயுத ஏவுகணைகளைத் தாங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களின் பாதுகாப்பான தரிப்பிடமாகும்வகையில் திருமலை உள்துறைமுகம் அமைந்திருக்கும் அதேவேளை, ராடர்களின் பார்வைக்கு அகப்படாத வகையில் சிறுமலைக் குன்றுகளால் இத்துறைமுகம் சூழப்பட்டிருப்பது, இவற்றின் பாதுகாப்பிற்கு மேலதிக உத்தரவாதத்தை இப்பிரதேசம் வழங்குகிறது.

உற்பத்தி சாதனங்களின் வளர்ச்சியால், நிலக்கரியிலிருந்து மசகு எண்ணெயின் பயன்பாடு அதிகரித்த வேளையில், கேந்திர மையங்களில், எண்ணெய் சேமிப்புக் குதங்களை அமைக்க வேண்டிய தேவையும் பிரித்தானியாவிற்கு ஏற்பட்டது. ஒவ்வொரு கிணறும் 15,000 தொன் எண்ணெய் கொள்ளக்கூடிய வகையில் 101 பாரிய நிலத்தடி சேமிப்புக் குதங்களை, திருமலை சீனன்குடாவில் அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர் நிறுவினர். சுதந்திரமடைந்த வேளையில் திருமலையை குறிவைத்து, பிரித்தானியர் 1947இல் உருவாக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம், குடியரசுப் பிரகடனத்தோடு காலாவதியாகிவிட்டது. ஏறத்தாழ 40 வருடங்களின் பின்னர், இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக எண்ணெய் குதப்பாவனையும், துறைமுகத்தின் மறைமுகக் கட்டுப்பாடும் இந்தியாவின் வசம் வீழ்ந்தது.

ஆயினும் இந்தியப் பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில் இலங்கை குறித்த நிலைப்பாடானது மிகவும் வித்தியாசமானது. ஒருவகையில், காலனி ஆதிக்க மனோபõவத்தின் வெளிப்பாடாகவும் இப்பார்வை புரியப்படலாம். அதாவது, இலங்கையானது இந்தியாவின் பாதுகாப்பு வலயத்துள் இயற்கையாகப்பொருந்தியுள்ளது என்பதாகும்.

திருமலைத் துறைமுக, சீனன் குடா விமானத்தளத்திலிருந்து இந்தியா மீது கடல், வான் தாக்குதல்களை மிக விரைவாகத் தொடுக்கலாமென்பதால், இலங்கை என்கிற முழுப்பிரதேசத்தில், திருமலை என்கிற கேந்திர மையமானது ""இந்திய அதியுயர் பாதுகாப்பு வலயத்துள்'' அடக்கப்படுகின்றதே இந்தியாவின் உறுதியான கணிப்பாகும். ஆனாலும், சீன பொருளாதார வல்லாண்மைக் கரங்களின் நீட்சி, இந்தியாவைச் சுற்றி, பலமான கடல் வழி முத்துமாலைப் பாதையொன்றினை மிக சாமர்த்தியமான வகையில் அமைத்துள்ளது. இலங்கையினூடான கடல்வழிப் பாதையில் கிழக்கு மேற்கிற்கான உலக கொள்கலன் பாதை யில், மூன்றில் இரண்டு பங்கு எரிபொருள் மூன்றில் ஒரு பங்கு சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்து சமுத்திர கடல் பிராந்தியத்தின் பொரு ளாதார வணிக முக்கியத்துவத்தை இத்தரவுகளிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். ஆகவே, திருமலைக்கு மாற்றீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் கட்டும் சீனாவின் அவசரத்தை புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல.

நான்கு கட்டங்களாக நிறைவு செய்யப்படவிருக்கும் இத்துறைமுகத்திட்டமானது 15 வருடகாலத்துக்குள் முழுமையாக முடிவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு எரிவாயுவில் இயக்கப்படும் அனல் மின் நிலையமும், கப்பல்கள், கொள்கலன்கள் (இணிணtச்டிணஞுணூண்) திருத்தும் தளங்களும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் மேலதிகமாக நிர்மாணிக்கப்படவிருக்கிறன்றன. இன்னமும் ஏழு வருடகாலத்தில், தனது எண்ணெய் இறக்குமதியின் 70 வீதத்தை மத்திய கிழக்கிலிருந்தே சீனா பெறப்போகிறதென்பது குறிப்பிடத்தக்கது. தடையற்ற விநியோகம், இக்கடல் பாதையூடாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டிய தேவையும் சீனாவிற்கு ஏற்பட்டுள்ளது. சீனாவின் முத்துமாலையில், ஹம்பாந்தோட்டையும் ஒரு காத்திரமான இடைத்தங்கல் சேமிப்பு மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக மாற்றமடையப் போகிறது. அண்மைய ஈரான் ஜனாதிபதியின் வருகையும், ஒப்பந்தங்களும் இவற்றையே உறுதிப்படுத்துகின்றன.

பொருளாதார பரஸ்பர நலன் என்கிற பாதையூடாக நுழைந்து, பாதுகாப்பு கேந்திர முக்கியத்துவமிக்க இடமாக அதை மாற்றுவதை பழைய வரலாறுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்தியா அவசரப்படுவதுபோல, தமிழர் போராட்டத்தை நசுக்க முயற்சித்தாலும், வல்லரசுகளின் பிராந்தியத்தில் குறித்த நகர்வுகளில் மாறுதல்கள் ஏற்படாது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் காய் நகர்த்தும் சகல வல்லரசாளர்களும், தமக்குள் நிரந்தரமான உறவையோ அல்லது பொதுவான கூட்டுக்களையோ ஏற்படுத்தமாட்டார்கள். இப்பிராந்தியத்தின் பிதாமகன் என்கிற நிலைப்பாட்டை இந்தியாவும் விட்டுக்கொடுக்காத அதேவேளை பாரிய நிலமீட்புத் தாக்குதலில் இதுவரை ஈடுபடாமல், தற்காப்பு நிலை பேணும் விடுதலைப் புலிகளின் தந்திரத்தை, இந்தியாவும் புரிந்து கொள்ளும். இந்தியா, சீனாவைப் பொறுத்தவரை துறைமுகமும், சில கேந்திர நிலையங்களும் மட்டுமே அவர்களுக்குத் தேவை. மன்னார் எண்ணெய் வளமும், பொருளாதார முதலீடுகளும், அந்நாடுகளின் பொருண்மிய பலத்தோடு ஒப்பிடுகையில் மிக அற்பமான விடயங்களாகும்.

வீரகேசரி வாரவெளியீடு

0 Comments: