முன் நாட்களில், மாகோச் சந்தியில் இருந்து கொழும்பு நோக்கித் தொடர்வண்டி புறப்பட்ட சிறிது நேரத்தில், நட்பாகப் பழகும் பாமரத் தோற்றம் கொண்ட சிங்களவர்கள் இருவர் அல்லது மூவர், மூன்றாம் வகுப்புப் பயணிகளின் ஊடாக நடந்து, தனியாகப் பயணிக்கும் கொஞ்சம் நாகரிகமான, கையில் பணமுள்ளவர் போலத் தெரியும் ஒருவரின் அருகே உட்காருவார்கள். அவரின் இருக்கைக்கு அருகே தரையில் உட்காருவதும் உண்டு.
அவ்வாறு உட்கார்ந்த பின் தங்களுக்குள்ளே சீட்டுக்களைப் பிரித்து சில்லறைகளை வைத்துச் சூதாட ஆரம்பிப்பார்கள். நமது நாகரிகர் இவர்களைக் கொஞ்ச நேரம் ஓரக்கண்ணால் பார்ப்பார். இவர்களின் சுவாரசியமான உரையாடல்களால் ஈர்க்கப்படுவார்.
நீங்களும் விளையாட வருகிறீர்களா என்று இவரையும் அழைப்பார்கள். இவர் மறுக்கும் பட்சத்தில், மாத்தையா, நீங்கள் யோசிக்க வேண்டாம். உங்கள் முகராசி நல்லாயிருக்கு. உங்கள் பெயருக்கு நான் காசு வைக்கிறேன் என்று சூதாடிகளில் ஒருவர் ஒரு பத்து ரூபாய்த் தாளை வைப்பார். அதிர்ஷ்டவசமாக அந்தத் தாள் வென்று விடும்.
பணம் வைத்த சூதாடி, எடுத்துக்கொண்டு வெற்றிப் பணத்தை இவரின் கையில் திணிப்பார். தனது முகராசி பற்றிய நம்பிக்கை மேலிட்ட நமது நாகரிகர், வலிய வந்த பணத்தை வைத்து விளையாடினால் என்ன என்று விளையாடத் தொடங்குவர். அவரின் கைப்பணம், மணிக்கூடு, தங்கச்சங்கிலி, மற்றும் பெறுமதியான பொருட்கள் என்று எல்லாமே ஒட்டம் வைத்துத் தோற்கப்படும் வரை விளையாட்டை நிறுத்துவதற்கு அந்தக்கும்பல் இவரை விடாது.
தொடர்வண்டிக் காவலரையோ அல்லது காவற்றுறையினரையோ அழைக்கவும் முடியாது. ஏனென்றால் தொடர்வண்டியில் சூதாடுவது கடும் குற்றம். பகல் கொள்ளையர் இடைவழியில் இறங்கிவிட, நமது நாகரிகர் மீதிப் பயணத்தை உடுத்த உடையோடும் திகைத்த முகத்தோடும் கழிப்பார்.
இவ்வாறான இடையில் விலகி வரமுடியாத யுத்த-இராசதந்திரப் பாதைக்குள் சிறிலங்காவை மகிந்தர் இட்டுச்செல்கின்றாரோ என்ற எண்ணம் அவதானிகளிடையே இப்போது எழுந்துள்ளது.
தமிழருக்கு எதிராக வெளிப்படையான யுத்தப் பிரகடனத்தைச் செய்த ஜே.ஆர்.ஜயவர்த்தன, போருக்கான தனது திட்டத்தினை வகுக்கும்போது, இது நீண்டகாலத்திற்கு நிகழக்கூடியது என்பதை ஓரளவு எதிர்பார்த்தார். அப்போதைய இந்திய ஆட்சியாளர் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வந்ததும் அதற்கு ஒரு காரணம்.
அந்நிலையில், போருக்கான புறவளங்களைத் திரட்டும்போது, குறிப்பாகப் படைக்கலன்கள், பயிற்சி, ஆலோசனை என்பவை மட்டில், அணிசேரா நாடு என்ற நிலைப்பாட்டிற்குக் குந்தகம் ஏற்படா வண்ணம் அவதானமாக ஜே.ஆர். இருந்தார் என்ற கருத்தும் அவதானிகளிடையே உண்டு.
தவிர, போரை நடத்தும் மூலோபாயத்தில் கூட, தனியே படை வலிமையை நம்பியிராமல் தனது நரித்தனமான சூழ்ச்சித் திட்டங்களுக்கும் ஜே.ஆர். முக்கியத்துவம் தந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இரஜபக்ச நிருவாகமோ, படையின் தொகையையும், அவர்கள் பயன்படுத்தும் வெடிப்பொருட்களின் அளவையும் நம்பிய ஒரு உபாயத்தைக் கைக்கொண்டுள்ளது.
அவ்வுபாயத்தின் படி, ஆண்டுக்கணக்கில் நீடிக்கும் போருக்குத் தொடர்ச்சியாக ஆட்களையும் படைப் பொருட்களையும் அனுப்பிக்கொண்டே இருக்கவேண்டும். சிறிலங்கா போன்ற, பொருளாதார வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு இது பிரமாண்டமான வேலை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
கொழும்பின் அதிகாரத்தை அடுத்தடுத்துக் கைப்பற்றியவர்கள், தமது ஆட்சிக்காலத்தில் தமிழரின் படை பலத்தை அழித்திட வேண்டும் என்ற அவாவில் யுத்தத்தை நடத்தும் தரப்பினருக்கான அதிகாரங்களையும் வளங்களையும் அதிகரித்துக்கொண்டே வந்தார்கள்.
இதை மறுவளமாகப் பார்த்தால், ஒவ்வொரு ஆட்சிக்காலத்தின் அல்லது படைநடவடிக்கைக் காலத்தின் போதான சிங்களப் படைகளின் வலுவள விரிவாக்கம், எதிராளிகளான புலிகளின் ஆற்றல் விருத்தியின் அங்கீகாரச் சுட்டியாகத் திகழ்ந்து வந்தது எனலாம்.
தேசிய வரும்படி மற்றும் வெளியில் இருந்து வரும் உதவிகளில் இருந்து போருக்காக ஒதுக்கும் அளவிலும் அதே விகிதமான பெருக்கம் ஏற்பட்டு வந்தது, அதன் இன்னுமோர் பக்கம் ஆகும். இதை அறிவதற்கு 1984 ஆம் நிதியாண்டில் இருந்து சிறிலங்காவின் வருடாந்த பாதீட்டில் பாதுகாப்பிற்கெனச் செய்யப்படும் ஒதுக்கீடுகளையும் இடையில் வரும் குறைநிரப்புத் தீர்மானங்களையும் பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.
ஆயினும், எவ்வளவுதான் படைத்துறையின் செயற்பாடுகளை ஒட்டி கொழும்பு அரசியல் சுழன்றபோதும், ராஜபக்ச ஆட்சியின் அளவிற்கு, படை மூலோபாயத்தை ஒட்டியதாகப் பட்டவர்த்தனமாகத் தெரியும் அளவிற்கு வெளியுறவு மூலோபாயத்தில் தோற்றப்பாட்டு மாற்றம் நிகழ்ந்தது இதுதான் முதன்முறை.
எந்தவொரு நாட்டிடம் இருந்தும் சொல்லிக்கொள்ளும்படி உதவிகள் எதையும் பெறாத உள்ளுர்க் கிளர்ச்சி அமைப்பு ஒன்றுடனான உள்நாட்டுப் போர் வெளியுறவில் தீவிரமான சலனங்களை ஏற்படுத்தும் அளவிற்குக் கட்டுமீறிப் போய் விட்டதையே இது காட்டுகிறது என்பதை பெரும்பாலான அவதானிகள் ஏற்றுள்ளார்கள்.
சிறிலங்காவின் வெளியுறவில் ஏற்பட்ட சலனத்தின் அறிகுறிகள் கடந்த சில மாதங்களாக பலவாறு வெளிப்பட்டு வந்தன. 2006 இன் நடுப்பகுதியின் பின்னர் லூயிஸ் ஆர்பர் போன்ற மேற்குலக முக்கியர்கள் சிறிலங்காவிற்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டதே இதற்கான ஆரம்பம் எனலாம். அக்கருத்துக்களில், யுத்தம் நடத்தப்படும் முறை நேரடியாகவும், யுத்தம் மறைமுகமாகவும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தது. மொத்தத்தில் யுத்தம் இறுதித் தீர்விற்கு இட்டுச் செல்லாது என்ற கருத்தை மேற்குலகத் தரப்பினர் முன்வைத்தார்கள்.
அவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு தனது மூத்த அமைச்சர்கள் வாயிலாக அதிகார வகையில் ராஜபக்ச பதிலளித்தாலும், விமல் வீரவன்ச போன்றோரின் கருத்துக்களும் ராஜபக்சவின் கண்ணோட்டத்தையே பிரதிநிதித்துவப்படுத்தி வந்ததை மேற்குலகம் இப்போது நன்கு புரிந்து கொண்டுள்ளது.
குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான சிறிலங்கா தரப்பின் பதிலாடல்களில், குற்றம் சாட்டியவரின் நிறுவனத்தையும் தனிப்பட அவரின் ஆளுமையையும் அவதூறு பேசும் பாங்கு இருந்தமை தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டது.
இவ்வாறு சிறிது சிறிதாக முறுக்கேறி வந்த முரண்பாடுகள், தைத்த ஆடைக்கான ஏற்றுமதி வரிச்சலுகை பற்றிய மிரட்டல், போருக்கான உதவியை மட்டுப்படுத்துவதான தகவல், மேற்குல முக்கியர்களின் வருகை குறைதல், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒதுங்கல் எனப் படிப்படியாகத் திடவுருவம் கொள்ளத் தொடங்கின.
பதிலுக்கு, சற்றும் மனந்தளராத விக்கிரமன் போலத் தன்னைக் காட்டிக்கொள்ள முயன்ற ராஜபக்ச, சீனாவில் நின்று, தாய்வான் சீனாவின் ஒரு மாகாணமே என்று கூறி, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மீது வெளிப்படையான சவால் ஒன்றை விடுத்தார்.
அத்தோடு நிற்காத அவர், அமெரிக்காவின் மிகப்பெரும் வைரியான ஈரானிய சனாதிபதி அகமத்நிஜாரை அழைத்து வந்து மேற்குலகின் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க கொழும்பில் அவருக்கு மேடையிட்டுத் தந்தார்.
நல்ல பாம்மை நாவால் தொட நினைக்கிறார் ராஜபக்ச என்று சிங்கள ஆய்வாளர் ஒருவர் கருத்துத் தெரிவித்தார்.
புலிகளின் ஆயுதக் கொள்வனவை இறுக்கமாகக் கண்காணித்து வரும் மேற்குலகம் ஒரு சில வான் எதிர்ப்பு ஏவுகணைகளைப் புலிகள் கொள்வனவு செய்யும் போது மட்டும் பாராமுகமாக இருக்குமானால் மறுகணமே கிளிநொச்சிக்கு எதிரான கொழும்பின் வான் மேலாதிக்கம் தொபுகடீர் என்று கவிழும் என கொழும்பு ஆய்வாளர்கள் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினர்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தோல்வியடைந்த வான் வழி நடவடிக்கைக்கு உத்தரவிட்ட அமெரிக்க சனாதிபதியும் நோபல் பரிசாளியுமான ஜிம்மி கார்ட்டர் முதலானோரின் காட்டமான கருத்துக்களும், அதையடுத்து, ஐ.நா. மனித உரிமைச் சபை அங்கத்துவத்திற்கான போட்டியில் சிறிலங்கா மண்ணைக் கவ்வியதும், ராஜபக்ச அணியின் துடுக்குத்;தனத்திற்குக் கிடைத்த பரிசு என்ற கருத்தைப் பெரும்பாலான அவதானிகள் மறுக்கவில்லை.
இது தீர்ப்புத்தான். தண்டனை இனிமேல்தான் இருக்கிறது எனவும் சிலர் கருதுகின்றார்கள். தைத்த ஆடை ஏற்றுமதிக்கான வரிச்சலுகை ஊசலாடிக்கொண்டிருப்பதையும் இந்த விவகாரங்களோடு சேர்த்துப் பார்க்கலாம்.
ஆனாலும் ராஜபக்ச நிறுவனம் எதற்கும் தியங்குவதாகத் தெரியவில்லை. முகராசிக்காரத் தொடர்வண்டிப் பயணியைப் போன்ற மிதப்பில், கேள்விப் பார்வையின்றி ஆயுதங்களைத் தரும் நாடுகளோடும் அவற்றின் கொள்கை நிலைப்பாடுகளோடும் சகட்டு மேனிக்குத் தன்னை அடையாளப்படுத்தி வருகிறது கொழும்பு நிருவாகம்.
தனது ஆட்சிக்காலத்தின் மீதிக்காலத்தைக் கடப்பதற்குத் திடமான படைய வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனது அரசியல் சக்தியையும், நாட்டின் தேசிய வளங்களையும், வெளியுறவுக் கொள்கையையும் யுத்தத்தில் ஒட்டம் வைத்துவிட்டுக் காத்து நிற்பவராகவே அவர் தென்படுகிறார்.
அவருக்குத் தொடர் வெற்றிகள் கிட்டுமா அல்லது வழியிலே சூதாடியதால் முடிவிலே கையேந்திய தொடர்வண்டிப் பயணியின் நிலைக்கு நாட்டை இட்டுச்செல்வாரா என்பற்கான விடையைக் களமுனையைத் தவிர வேறெங்கும் தேடவேண்டியிருக்காது.
நன்றி:
-சேனாதி-
வெள்ளிநாதம் (30.05.08)
Monday, June 2, 2008
ஓட்டம்
Posted by tamil at 3:39 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment