இலங்கையில் சுமார் அறுபது ஆண்டுகால ஆறு தசாப்த கால ஜனநாயக ஆட்சியின் பெறுபேறாக உள்நாட்டு யுத்தம் உக்கிரம் பெற்று, இன்று இலங்கைத் தீவு எங்கும் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. வன்முறைப் புயல் என்றுமில்லாதவாறு மோசமாக வீசுகின்றது. எங்கும் அழிவு. எங்கும் சாவு. எங்கும் நாசம். எங்கும் ரணகளம். இதுவே இலங்கையின் வாழ்வியல் நியதி என்றாகி விட்டது.
இது ஏன்? எதனால் வந்தது? எதற்காக வந்தது?
உலகில் உன்னத ஆட்சிமுறை வடிவமாகப் போற்றப்படும் ஜனநாயகம் இலங்கையில் தோற்றுப்போய் வறிதாகி நிற்பதைக் காண்கிறோம். இதற்குக் காரணம் என்ன?
முடியாட்சி முறை முடிந்து உலகில் குடியாட்சி பரவிய காலத்திலேயே ஜனநாயகக் கட்டமைப்பு முறை நன்கு காலூன்றத் தொடங்கிவிட்டது.
ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்சிமுறை உருவாக்கிக் கொடுத்த தொட்டிலிலே ஜனநாயகக் கோட்பாட்டின் செல்லப் பிள்ளையாக முதலாளித்துவமும் செழித்து வளர்ந்தது.
ஆனால் இந்த முதலாளித்துவத்தின் வீழ்ச்சி குறித்து கார்ள் மாக்ஸ் போன்ற அறிஞர்கள் கனவு கண்டனர். முதலாளித்துவத்தின் சுரண்டல் தீவிரமாகி வறுமையின் விளிம்புக்குப் பாட்டாளி வர்க்கம் தள்ளப்படும்போது சகித்துக் கொள்ள முடியாத அவலத்தில் உழைக்கும் வர்க்கம் உழலும். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த வர்க்கம் கொதித்தெழ பாட்டாளிகளின் தலைமையில் வர்க்கப் புரட்சி வெடிக்கும். முதலாளியம் தனக்குத் தானே புதைகுழி தோண்டும். அந்தப் புதைகுழியிலிருந்து புதிய உற்பத்தி வடிவமாக சோசலிஸ சமுதாயம் பிறக்கும். பொதுவுடைமையின் உச்ச நிலையில் அந்த சமுதாயத்தில் வர்க்கப் பிரிவு அழிந்து சமத்துவம் நிலவும். அந்த சோசலிஸ சமுதாயம் மேலும் வளர்ச்சி கண்டு கம்யூனிஸ சமூகம் உருவாகும். முரணிய பேதங்களற்ற அந்தக் கம்யூனிஸம் இறுதியில் உலக மயமாகி பரிபூரணமாக அதை ஆட்கொள்ளும். முழு மனித சமுதாயத்தையும் அது தழுவிக் கொள்ளும். இப்படிக் கற்பனை செய்தார் கார்ள் மாக்ஸ்.
அது வெறும் கனவாகவும் கற்பனையாகவுமே முடிந்தது. நிஜத்தில் யதார்த்தத்தில் நடைமுறையில் அது சாத்தியப்படவே இல்லை.
மாக்ஸின் தீர்க்க தரிசனம் பிழைத்துப் போயிற்று. முதலாளியம் புதைகுழியில் அமுங்கிப்போகவில்லை. மாறாக மாக்ஸ் போற்றிப் புகழ்ந்த சோசலிஸ அரசுகளே இடிந்து, சரிந்து, குலைந்து போயின.
பொருளுற்பத்தியில் முதலாளித்துவத்துக்கு ஈடாக எந்த ஓர் உற்பத்தி வடிவமும் நிலைத்து நீடித்து நிற்கப்போவதில்லை என்ற செய்தியை உலகுக்கு அறைந்து கூறியபடி கிளைவிட்டு விருட்சமாக விஸ்வரூப வடிவமெடுத்துக் கொண்டிருக்கிறது முதலாளியம்.
பொருளுற்பத்தி வடிவத்தில் முதலாளியம் உச்சம் பெற்றமை போல
அரசுக் கட்டமைப்பு வடிவங்களில் அரசமைப்புச் சட்டங்களில் உச்சக் கட்ட வடிவமாக ஜனநாயகம் உருவாக்கம் பெற்றது.
மக்களாட்சி, மத ஆட்சி, பாஸிஸம், நாஸிஸம், கம்யூனிஸம், குடியாட்சி, முடியாட்சி என்று பல்வேறு வடிவங்களில் உருக்கொண்ட ஆட்சியமைப்புகள் அடிப்படை மனித உரிமைகளுக்கும், மனித சுதந்திரங்களுக்கும், மனித விழுமியங்களுக்கும், மனித கௌரவங்கள் மற்றும் அபிலாஷைகள் போன்றவற்றுக்கும் மதிப்பளிக்கத் தவறியமையால் அவை இறுதியில் சிதைந்து, அழிந்து, நிலைத்து நீடிக்க முடியாமல், செயலிழந்து போயின.
ஆனால் இவற்றின் அழிவிலிருந்து பிறப்பெடுத்த ஜனநாயகம் அதுவும் தாராண்மை ஜனநாயகம் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் உறுதியான அரசியல் அத்திவாரமாகத் தலைநிமிர்ந்து உயர்வாகவும் திடமாகவும் விளங்குகின்றது.
ஆனால் இலங்கை போன்ற சில நாடுகளில் அது தோற்றுப்போய் விட்டது.
மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி என்று போற்றப்படுகின்ற இந்த ஜனநாயகம் இலங்கையில் நேர்மாறான ஆட்சிக்கு அல்லவா வழி செய்து நிற்கிறது?
இந்த ஆட்சி முறையில் அநீதியும், அடக்குமுறையும் தலைதூக்கியுள்ளன. மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதும், நசுக்கப்படுவதும் இந்த ஜனநாயக ஆட்சியின் பெருமைகளாகிவிட்டன.
அடிப்படை மனித உரிமைகள், குடியுரிமைகள், அரசியல் உரிமைகள், தனி மனித சுதந்திரங்கள் என்றெல்லாம் ஜனநாயக ஆட்சியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட விடயங்கள் யாவும் அதே ஆட்சி அதிகாரத்தால் இன்று மிதிக்கப்படும் விடயங்களாகிவிட்டன.
ஒழுங்கும் அமைதியும் ஒத்திசைவான மனித உறவுகளும் சமத்துவமும், சமூக நீதியும், கௌரவமும் கூடிய உன்னத மானுட வாழ்வைத் தருவதற்கு ஜனநாயகம் இங்கு தவறிவிட்டது.
இதற்குக் காரணம் என்ன?
பெரும்பான்மையினரின் கருத்து என்ற மக்களின் எண்ணிக்கை அளவை மட்டும் முன்னிலைப்படுத்தி, அந்த முடி வுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஜனநாயகம், அந்த எண்ணிக்கையின் சிந்தனையோட்டத்தில் புதைந்து கிடக்கும் எண் ணத்தின் நியாயத்தைக் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது.
இரு தேசியங்கள் வாழும் ஒரு தேசத்தில், அந்தத் தேசியங்களின் தலைவிதியை எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்க ஜனநாயகம் இடமளித்தபோது
பெரும்பான்மையினரைக் கொண்ட தேசியம், பேரினவாத மேலாண்மையோடு சிறுபான்மைத் தேசியத்தை சுரண்டிச் சூறையாடி, அடக்கி, ஒடுக்கி, அடிமைப்படுத்துவதற்கு அது வழிசமைத்துக் கொடுத்துவிட்டது.
இத்தகைய மேலாதிக்க அடக்குமுறைக்கு இடமளிக்காத விதத்தில் விடயங்களை உறுதி செய்கின்ற அம்சங்களை ஜனநாயகக் கட்டமைப்பு முறை தன்னகத்தே கொண்டு செயற்படவோ
அல்லது அந்த ஜனநாயகக் கட்டமைப்பு ஆட்சியை அனுபவிக்கின்ற மக்கள் கூட்டத்தினர், ஜனநாயகத்தின் மேன்மையான மாண்பைக் கருத்தில் கொண்டு, தாராண்மைத் தெளிவோடு நீதியாக நடக்கவோ
தவறும்போது ஜனநாயகம் தோற்றுவிடுகிறது. பேரழிவுக்கும் பெருநாசத்துக்கும் அது வழி வகுத்துவிடுகிறது.
அதற்கு நல்லதோர் உதாரணம் இலங்கை.
நன்றி - உதயன்
Monday, June 9, 2008
இலங்கையில் ஜனநாயகம் தோற்றுப் போனமை ஏன்?
Posted by tamil at 7:21 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment