Tuesday, June 3, 2008

ஜனநாயகக் கேலிக்கூத்தால்தான் ஜனநாயகக் கேலிக்கூத்தால்தான்

தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் அடக்கி ஒடுக்காமலும், அவர்களை முற்று முழுதாக ஜனநாயக வழிக்குக் கொண்டு வராமலும் இலங்கையில் அமைதித் தீர்வு என்பது சாத்தியமேயில்லை.
இப்படி ஒரு "கண்டுபிடிப்பை' வெளியிட்டிருக்கின்றார் இலங்கை அரசின் மூத்த இராஜதந்திரி எனக் கருதப்படுபவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிகநெருக்கமானவர் என வர்ணிக்கப்படுபவருமான தயான் ஜெயதிலக.
ஜெனிவாவில் இலங்கைக்கான ஐ.நா.விடயங்களைக் கையாளும் நிரந்தரப் பிரதிநிதியான தயான் ஜெயதிலக, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அமைதி சாத்தியமேயில்லை என்றும் அறுத்து உறுத்துக் கூறியிருக்கின்றார்.
இராணுவ ரீதியிலோ அல்லது வேறு எந்த வகையிலோ பிரபாகரன் "அடக்கப்படும்போதுதான்' இலங்கையில் அமைதி சாத்தியம் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.
இலங்கையின் தற்போதைய அரச உயர்பீடத்தின் மமதைப் போக்குச் சிந்தனையை இப்படி வேறுவடிவத்தில் பிரதிபலிக்கின்றார் தயான் ஜெயதிலக.
அவர் கூறுகின்ற இந்த உத்தியில் தென்னிலங்கைச் சிங்களத்தின் மேலாண்மைச் சிந்தனைக் கட்டமைப்பின் இரு அடிப்படை விடயங்கள் பொதிந்திருக்கின்றமையை நாம் காணமுடியும்.
ஒன்று இலங்கை இனப்பிரச்சினையின் எந்தத் தீர்வு ஜனநாயக மயப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
இரண்டு இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுக்களில் சிறுபான்மையினமான தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலு முற்றாக சிதறடிக்கப்பட்டு, அவர்களது இராணுவ வலிமை ஒடுக்கப்பட்டு, ஆயுதபல ரீதியில் அவர்கள் மண்டியிட்ட நிலைமை இருக்கவேண்டும்.
இந்த இரண்டுமே தமிழர்களைப் பலவீனப்படுத்தித் தாம் தீர்வு என்று கூறும் உருப்படியற்ற ஒரு திட்டத்தைத் தமிழர் மீது திணிக்கும் சிங்களப் பேரினவாதத்தின் மூளைய மையத்தின் சிந்தனையை அப்பட்டமாக வெளிப்படுத்தும் அம்சங்களேயாகும்.
ஜனநாயக வழித்தீர்வு எனும்போது அங்கு ஜனங்களின் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றதே தவிர, எண்ணங்களுக்கு அல்ல. "இலங்கையில் ஜனநாயகம்' என்பது சிறுபான்மையினரான தமிழர்களை விட இலங்கைத் தீவில் ஐந்து மடங்கு எண்ணிக்கையில் கூடிய சிங்களவர்களின் விருப்பமாக மட்டுமே அமையமுடியும்.
ஆக, ஜனநாயக வழித்தீர்வு என்பது எண்ணிக்கையில் கூடிய சிங்களவர்களின் முடிவைத் தமிழர்கள் மீது திணிப்பதுவேயன்றி தமிழருக்கு நீதி, நியாயமானதை அளித்து, நேர்மை செய்வது அல்ல.
அதுபோலவே, இராணுவ ரீதியில் புலிகளை அடக்கி, ஒடுக்கி, அழித்த பின்னர் அமைதி வழித் தீர்வு காண்பது என்பதும் தமிழர்களின் இராணுவ வலிமையைத் தகர்த்தபின் சமாதானத் தீர்வு ஒன்றை எட்டுவதாகும்.
அதாவது ஜனநாயகத்தின் பெயராலும், இராணுவ வலிமை ரீதி யிலும் தமிழர்கள் நலிவுபடுத்தப்பட்டு அடக்கப்பட்டபின்னர், அவர்கள் "இறைஞ்சும் பிச்சையை' பேரினவாதத்தின் உச்சியின் மேலாதிக்கத்தின் முகட்டில் நின்றுகொண்டு "தீர்வாக' போடலாம் என்பது சிங்களத்தின் பகல்கனவு. அதையே தயான் ஜெயதிலகவின் கருத்துகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.
ஜனநாயகத்தின் பெயரிலான ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு பௌத்த சிங்கள மேலாதிக்க வெறித்தனம் சுமார் நான்கு, ஐந்து தசாப்தங்களாகத் தமிழர் களுக்கு எதிராக இலங்கைத் தீவில் இழைத்த அடக்குமுறை அட்டூழியங்களே, இன்று தயான் ஜெயதிலக போன்ற சிங்களப் புத்திஜீவிகள் உட்படத் தென்னிலங் கையர் கூறும் "பயங்கரவாதப் பிரச்சினை' பிறப்பெடுக்க ஒரே காரணமாயிற்று என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது.
ஜனநாயகத்தின் கேலிக்கூத்தால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழியங்களும் அராஜகங்களுமே ஜனநாயகக் கோட்பாடுகளின் கீழ் தமிழர்களுக்கு மறுக்கப் பட்ட நீதியும், நியாயமுமே இலங்கைத் தீவை இன்று இத்தகைய இனப்போரின் பேரழிவுக்குள் சிக்க வைத்திருக்கின்றன என்பது வெள்ளிடைமலை.
அத்தகைய இனச்சிக்கலுக்கு, இன்னும் எண்ணிக்கையில் கூடிய அரசியல்வாதிகளால் ஊட்டப்பட்டு எழுச்சிபெற்று நிற்கும் பேரினவாத இனவெறியில் ஊறிக்கிடக்கும் சிங்களவர்களை வைத்துக்கொண்டு, ஜனநாயக ரீதியிலான தீர்வு என்று இப்போதும் கூறுவது இன்னொரு அரசியல் கேலிக்கூத்தல்லவா?
தமிழர்கள் ஒரு தேசிய இனத்துக்குரிய கட்டமைப்பை வரலாற்று ரீதியாக பாரம்பரிய அடிப்படையில் காலாதிகாலமாக கொண்டு வாழ் பவர்கள்.
இலங்கையில் காணப்படுவது ஒரு ஜனநாயக அரசியல் பிரச்சினையல்ல; இரு தேசிய இனங்களின் வரலாற்றுத் தனித்துவம், ஆட்சியியல் உரிமை, வாழ்வியல் நிலைமை ஆகியவை சம்பந்தப்பட்ட விவகாரம் அது.
ஆகவே, இரு இனங்களின் தலைமைத்துவங்களுக்கு இடை யிலான கலந்துரையாடல் மூலம் வாதப் பிரதிவாதங்கள் வாயிலாக தீர்வுகாணப்படவேண்டிய விவகாரமே இது. அதுவும் சமதரப்பு அந்தஸ்துடன் அணுகப்பட வேண்டிய விடயம்.
இரு தலைமைத்துவங்களில் ஒன் றின் பலத்தை சிதறடித்து பலவீனப்படுத்திய நிலையில், மற்றையதின் தீர்மானத்தை பலவீனமான தரப்பின் மீது எண்ணிக்கையின் சாதகத் தன்மையை வைத்துக்கொண்டு திணிப்பது தீர்வுமல்ல; நியாயமுமல்ல.
ஜனநாயகத் தீர்வு என்ற கேலிக் கூத்துக் குறித்தும், தமிழர் தரப்பின் இராணுவ வலிமையை சிதறடிப்பது பற்றியும் சிலாகிப்பதை விடுத்து, காலாதிகாலமாக சிங்கள மேலாதிக்கத்தின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டு பரிதவித்து நிற்கும் தமிழினத்துக்கு நியாயம் செய்வது எப்படி என்பது குறித்து சிங்களத் தலைமைகள் நேர்மைச் சிந்தனையோடு ஆராயுமானால் பேசுமானால் அது இந்த இலங்கைத் தீவுக்கு நன்மை பயப்பதாக அமையும்.

நன்றி :- உதயன்

0 Comments: