Thursday, June 19, 2008

சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றும் தந்திரோபாயம் தொடர்கின்றது

"சர்வதேசப் பிரசாரப் போரில் தோற்றுவிட்டோம்.''
அண்மையில் லண்டனுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கையில் தமது அரசும் படைகளும் ஏதோ நல்ல காரியங்களை ஆற்றுவன போலவும், ஆனால் சர்வதேச மட்டத்தில் தமிழர்களின் பிரசாரப் பீரங்கிகள் தமது அரசின் நல்ல செயற்பாடுகளை எல்லாம் மூடிமறைத்துத் துவம்சம் செய்து விட்டன என்பது போலவும் அர்த்தப்படுத்தும் விதத்தில் இந்தக் கருத்தை அவர் வெளியிட்டிருக்கலாம்.
ஆனால், களத்தில் கேடு பண்ணிக்கொண்டு, வெறும் பிரசாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு சர்வதேசத்தையும் ஏமாற்றி நல்ல பெயர் சம்பாதிக்கலாம் என்ற தென்னிலங்கையின் எதிர்பார்ப்பில் இப்போது இடிவிழுந்திருப்பதைப் பிரதிபலிப்பதே அவரது இந்தக் கருத்து என்பதுதான் உள்ளார்ந்தம்.

தமது அரசின் அராஜகங்களுக்கு எதிராக சர்வதேசத்திலும், உள்ளூர் மட்டங்களிலும் கருத்து நிலைப்பாடு வலுவாக ஏற்படும்போது அதனைச் சமாளிப்பதற்குத் தாம் அவ்வப்போது மேற்கொள்ளும் வெறும் தந்திரோபாய நடிப்பு நகர்வுகளும், எத்தனங்களும், அவற்றுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் உள்நோக்கங்களின் கருத்தும் சர்வதேசத்துக்கும் வெட்ட வெளிச்சமாகி வருவதால் சர்வதேச அதிருப்தியையும், விசனத்தையும், எரிச்சலையும் சம்பாதித்து வருகிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

அந்தப் பின்னடைவுகளை "சர்வதேசப் பிரசாரத் தோல்வி' என்ற காரணத்தின்கீழ் மூடிமறைக்க அல்லது அந்தக் காரணத்தைக் காட்டி சமாளிக்க விழைகிறார் அவர்.
அரசினதும், அதன் படைகளினதும் மிகமோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அராஜகச் செயற்பாடுகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் எல்லை மீறி வரும் இச்சந்தர்ப்பத்தில் அவற்றைத் தடுத்து நிறுத்துவதற்குக் காத்திரமான பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை வெளிப்படையாக எடுத்து, நல்லதோர் ஆட்சியாகத் தமது அரசுக் கட்டமைப்பைக் காட்டுவதை விடுத்து
அவற்றை மூடி மறைத்து, சமாளித்து, சர்வதேசத்துக்கும் "அல்வா' கொடுக்கும் செயற்பாட்டை ஆட்சித் தலைமை தொடருமானால் எவ்வளவு காலத்துக்குத்தான் சர்வதேச சமூகம் ஏமாளியாகப் பார்த்து ஏமாந்து கொண்டிருக்கும்?

அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நூற்றுக் கணக்கான ஆட்கள் கடத்தப்படுகின்றார்கள். இப்படிக் கடத்தப்படுவோர் நகரில் பரவலாக நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும் படையினரின் தடை நிலைகள், சோதனைச் சாவடிகள், காவல் நிலையங்கள் போன்றவற்றை எல்லாம் தாண்டிக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் நிரந்தரமாகவே காணாமற் போய்விடுகின்றார்கள். கடத்தப்படும் பலர் பணயமாக வைக்கப்பட்டு பெரும் தொகை கப்பமாக வசூலிக்கப்படுகின்றது. சட்டத்துக்கு முரணான மரணதண்டனை விதிப்புகளும், ஆட்கொலைகளும் சாதாரணமாகி விட்டன.

இவற்றுக்கு மூலகாரணமான இடம் எது என்பது இலங்கை ஜனாதிபதிக்குத் தெரியாததல்ல. இப்பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காண்பதற்கு எங்கு விரைந்து திருத்தம் செய்யப்படவேண்டும் என்பதும் அவர் அறியாததல்ல.

ஆனால், அதைவிடுத்து, ஆட்கள் கடத்துப்படுவது, காணாமற் போவது பற்றிய விடயங்களைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அமைப்பு என்ற பெயரில் அமைச்சர்கள் மட்டக்குழு ஒன்றை பயனற்ற கட்டமைப்பு ஒன்றை உருவாக்கிச் சர்வதேசத்தின் காதில் பூச்சுற்றினார் ஜனாதிபதி.

இப்போது ஊடகங்களுக்கும் ஊடகவியலாளருக்கும் எதிராக அரச அடக்குமுறை கட்டவிழ்த்திருக்கின்றது. சர்வதேசத்தின் அதிக கவனத்தையும், சிரத்தையையும் அது இப்போது ஈர்த்துள்ளது.

இந்த அடக்குமுறையின் மூலம் எது, சிருஷ்டி கர்த்தா யார் என்பவை எல்லாம் இந்த நாட்டின் சிறுபிள்ளைக்கும் கூடத் தெரியும். அது இந்த ஜனாதிபதிக்குத் தெரியாததல்ல. அங்கு விடயத்தைக் கையாண்டு சீர் செய்ய விரும்பாத அத்தகைய சீர்கேட்டுக்கு தாமே தூண்டுதலாளி என்ற காரணத்தினாலோ என்னவோ இது விடயத்திலும் சர்வதேசத்திற்கு காது குத்த முயல்கிறார் அவர்.

ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள விவகாரத்தைக் கையாண்டு நிலைமையைச் சமாளிப்பதற்காக இதற்கும் அமைச்சர்கள் கொண்ட உப குழு ஒன்றை நியமித்திருக்கின்றார் அவர்.

தனக்கு நெருக்கமான இடத்திலிருந்து உருவாகும் அராஜகங்களை ஜனநாயக அத்துமீறல்களை ஆட்சி அதிகார அட்டகாசங்களை தடுத்து நிறுத்த வக்கில்லாத, துப்பில்லாத, விருப்பில்லா ஆட்சித் தலைமை, அமைச்சரவை உபகுழுக்களை நியமித்து சர்வதேச கருத்து நிலைப்பாட்டைத் தொடர்ந்து சமாளிக்கலாம் என்று கருதினால் அதில் ஏமாறவேண்டித்தான் இருக்கும். "சர்வதேசப் பிரசாரத்தில் தோற்றுவிட்டோம்!' என்று புலம்பும் நிலைமையைத் தான் அது ஏற்படுத்தும்.

குற்றச்செயல்களின் சட்டப் பொறுப்பிலிருந்து விலக்களிக்கும் விசேட சிறப்புரிமைக் கலாசாரத்தை படைத்தரப்புக்கு வழங்கி, பெரும் அராஜகங்களும், மனித உரிமை மீறல் துஷ்பிரயோகங்களும் அரங்கேற வாய்ப்பளித்துள்ள ஆட்சித் தலைமை, படைத்தரப்பின் கொடூரங்களுக்கு யாரையும் பொறுப்பாக்கவில்லை, குற்றவாளிகளைச் சட்டத்தின்முன் நிறுத்தித் தண்டிக்க முயற்சிக்கவே இல்லை, இத்தகைய குற்றங்களினால் பாதிக்கப்பட்டோரையும், அவைபற்றிய முக்கிய சாட்சிகளையும் பாதுகாக்க உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றெல்லாம் சர்வதேச மட்டத்திலிருந்து குற்றச்சாட்டுக் கணைகள் குவிந்து வருகின்றன.

இவற்றைச் சமாளித்து ஏமாற்றுவதற்காக இவ்வளவு காலம் கழித்து ஆறுதலாக இப்போது சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அரசு கொண்டு வந்திருக்கின்றது.
ஆனால் அப்படி சாட்சிகள் உட்பட முக்கிய தரப்பினரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம் அச்சட்டத்தின் கீழ் சுதந்திரமாக இயங்கும் தரப்புகளிடம் ஒப்படைக்கப்படவேயில்லை என்றும், இது ஒரு பயனற்ற ஏமாற்று எத்தனம் என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் தெரிவித்திருக்கின்றது.

யாழ். மாவட்ட எம்.பியான என்.ஸ்ரீகாந்த சுட்டிக்காட்டியமை போன்று, இதுவும் கூட சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகின்ற மற்றொரு எத்தனம்தான்.
எத்தனை காலத்துக்குத்தான் ஏமாற்றுவர் இப்படி......?

நன்றி - உதயன்

0 Comments: