Thursday, June 19, 2008

உருப்படியாகச் செய்ய, உருகுமா இந்தியா?

'இந்தியா தனது அரசியல் சிக்கலைiயும் அது சார்ந்த நலன்களையும் விடுத்து, ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு அறிவுபூர்வமான சிக்கலாக உணர்ந்து, எமது மன உணர்வுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்ள முன்வருகிறதோ, அன்றுதான் ஈழத்தமிழர் விடயத்தில் ஒரு தெளிவான வெளியுறவுக் கொள்கையை அதனால் வகுத்துக் கொள்ளமுடியும்.

'தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப- ஒரு சடுகுடு அரசியல் ஆட்டத்தில் இருக்கின்ற ஒரு பகடையாக- தமிழர்களின் போராட்டத்தையும் இந்தியா பயன்படுத்தி வருகின்றதனைப் பார்க்கும்போது நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்."

இவ்வாறு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் விடுதலைப் புலிகளின் பிரமுகர் க.வே.பாலகுமாரன்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் விடயத்தில் அதன் உண்மையான பிரச்சினை என்ன என்பது காலகாலமாக மர்மமாகவே இருந்து வருகிறது.

இந்தியாவின் வெளியுறவு நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அதன்சுற்று வட்டாரத்தில் உள்ள எந்த நாட்டுடனுமே அதற்குச் சுமூகமான உறவுநிலை இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பாகிஸ்தான் மட்டுமே அதன் பரம வைரியாக விளம்பரப் படுத்தப்படினும் நேபாளம், பூட்டான், பங்களாதேஷ், பர்மா முதல் சீனா வரை ஒருவித கசப்பான உறவுடனேயே அது இருந்து வருகிறது.

ஆசியாவின் தீர்மானிக்கும் சக்தியாகவும் அடுத்த வல்லரசாகவும் வரத்துடிக்கும் ஒரு நாடு இந்தப் பாதையில் சென்றால் வேலைக்காகாது எனப் புரிந்துகொண்ட மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு, தான் ஆட்சிபீடம் ஏறிய கையோடு தனது பழைய பொத்தல்களைச் சரிபார்க்கும் வேலையில் கொஞ்சமாவது மும்முரமாக இறங்கியது.

முதலில் தனது பிராந்தியம் பிரச்சினையற்ற வலயமாகப் பேணப்பட வேண்டும் என்பதை இந்த வேலைத்திட்டத்தின் முன்னிலை அம்சமாக காங்கிரஸ் அரசு புரிந்துகொண்டது. இதற்கு அப்பால் ஏனைய நாடுகளுடன் சுமூகமான உறவுகளைப் புதுப்பிக்கும் படிமுறையைப் பின்பற்றியது.

இந்த வகையில், தனது பிராந்தியத்தில் பிரச்சினைக்குரிய சக்தியாக அது கருதும் விடுதலைப் புலிகள் விடயத்தில் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது.

அதாவது, ராஜீவ் கொலை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள புலிகளினால் இந்தியாவுக்கு தற்போதைக்கு பாதுகாப்பு ரீதியில் எந்தப் பங்கமும் ஏற்படாது என்பதில் இந்தியா ஆரம்பம் முதலே நம்பிக்கை கொண்டிருந்தது.

ஆனால், இந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டினால் தமிழ்நாட்டில் அவர்கள் மீண்டும் தமது இருப்புக்கு அத்திவாரம் போட்டு விடுவார்கள், இன, மொழி ரீதியாக ஒன்றுபட்டுள்ள தமிழ்நாட்டு - தமிழீழ மக்களின் உறவுநிலை பரிணமித்து, அதுவே தமிழ்நாட்டு மக்களின் அரசியல் ரீதியான சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும், அது காலப்போக்கில் தென்கோடியிலும் இன்னொரு காஷ்மீரை உருவாக்கிவிடும் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருந்து வந்தது.

இதேவேளை, தாமாகச் சென்று புலிகளை நேரடியாகச் சீண்டாத வரை அவர்கள் தம்முடன் வலிந்து வம்புக்கு வரப்போவதில்லை என்ற உண்மை நிலையையும் இந்தியா உணர்ந்து வைத்திருந்தது.

2000 ஆம் ஆண்டு மே மாதம் புலிகளின் கையில் ஆனையிறவு படைத்தளம் வீழ்ந்த கையோடு யாழ். குடாநாட்டில் சிறைப்பட்ட 40 ஆயிரம் சிங்களப் படையினரைக் காப்பாற்றித் தரும்படி இந்தியாவின் கால்களில் போய் சிறிலங்கா வீழ்ந்த போதும், குடாநாட்டுக்கரையிலிருந்து தமது கப்பல் வரை வந்தால் படையினரை ஏற்றிவந்து காப்பாற்றலாமே தவிர, ஈழமண்ணில் காலடி வைக்கமாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டது.

அதாவது, கொழும்பு அதிகார பீடத்துக்கு வாக்காலத்து வாங்கப்போய்க் கூட, புலிகளுடன் வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் இந்தியா அளந்து செயற்பட்டது.

அந்த வகையில், புலிகளும் தம்முடன் அத்தகைய உறவைத் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை டில்லிக்கு இன்று வரை இருந்து வருகிறது.

விடுதலைப் புலிகளினால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து,
இறைமைக்கு அச்சுறுத்தல் போன்ற கொழும்பு அதிகாரப்பீடத்தின் அறைகூவலுக்கு இந்தியா செவிசாய்த்திருக்குமேயானால் - விடுதலைப் புலிகளிடம் பலமான கடற்படை உள்ளது என்பதைத் தெரிந்துகொண்டும் - தமிழ்நாட்டின் திருநெல்வேலி - கூழாங்குளம் பகுதியில் 30 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பாரிய அணு மின் நிலைய கட்டுமானப் பணிகளை ஆரம்பித்திருக்காது.

தனது கடற்படைக்குத் தேவையான 27 யுத்தப் படகுகளை உற்பத்திச் செய்ய சுமார் 17 பில்லியன் செலவில் தமிழ்நாடு திருவள்ளுவர் மாவட்டம் எண்ணூருக்கு அருகில் பாரிய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாட்டு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்ய பாதுகாப்பு நிலைபற்றி பரிசீலித்து அனுமதி வழங்கியிருக்கிறதே, அதைச் செய்திருக்காது.

விடுதலைப் புலிகளால் தமக்கு பாதுகாப்பு ரீதியான எந்தப் பங்கமும் ஏற்படாது என இந்தியா அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது.

அத்துடன் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டை தனிநாடாக பிரகடனப்படுத்தக்கூடிய புரட்சி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு தனக்கு சிக்கல் நிலையை ஏற்படுத்தாத வரை, அதேவேளை, சிறிலங்காவில் ஊடுருவும் அந்நிய நாட்டுச்சக்திகளிடம் விடுதலைப் புலிகள் விலைபோய், அதுவே தனது வல்லரசுக் கனவுக்கு எதிரான சதிவலையாக மாறாத வரை, சிறிலங்கா விவகாரத்தில் நேரடியாக தலையிடுவதில்லை.

ஆனால், கொழும்பு அரசியலில் காய்களை நகர்த்துவதன் மூலம், தான் இல்லாத இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி சிறிலங்காவுக்குள் நுழையும் சக்திகளைக் கலைத்து விட்டு, தனது நலன்சார்ந்த திட்டங்களை, முக்கியாமாகப் பொருண்மிய முதலீட்டுகளை, முன்னெடுக்க சிறிலங்காவை தொடர்ந்தும் தளமாக பயன்படுத்துவது.

ராஜீவ் கொலை சம்பவத்திலிருந்து இருந்து இன்று வரை இந்த மாதிரியான நிலைப்பாட்டையே பேணிவரும் இந்தியா, சிறிலங்கா தொடர்பான தனது அரசியல் நிகழ்ச்சி நிரலில் கடந்த 15 ஆண்டுகளில் பாரிய மாற்றம் எதனையும் செய்யவில்லை.

கொழும்பு குறித்த அதன் கொள்கை இந்தியாவைப் பொறுத்த வரை சரியாக இருக்கலாம். தனது நலன் சாரந்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் சர்வதேச சூழலில் இந்தியா ஒன்றும் விதிவிலக்கில்லை எனலாம்.

ஆனால், ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் நிலை என்ன என்பதுதான் புரியாத புதிர்.

தமிழ்நாட்டைப் புலிகள் தனிநாடாக்கி விடுவார்கள் என்ற கனவுநிலை அச்சத்தில்தான் இந்தியா இன்றும் இருந்து வருகிறதா?

அடக்கப்பட்ட தமது மக்களின் உரிமைக்காகவும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அவர்களது தாயகத்துக்காகவும், பறிக்கப்பட்ட அவர்களின் அரசியல் அபிலாஷைகளுக்காகவும் நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் இலக்குடன் அவர்களது ஏகப்பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் தனியரசு கோரி நடத்துவதுதான் ஈழப்போராட்டம் எனப்படுவது.

தமிழர்கள் கடந்த போராட்டப் பாதையை எட்டிப் பார்க்கும் சின்னக் குழந்தைக்கும் புரியக்கூடிய உண்மையே இது.

தமிழீழத்துக்கான இந்தப் போராட்டம் எந்த வகையில் தமிழ்நாட்டில் கொந்தளிப்பை உண்டு பண்ணும்? அல்லது புலிகள் ஏன் தமிழ்நாட்டில் புரட்சி செய்யப் போகின்றார்கள்? யுத்தத்தின் வலியைத் தினம் தினம் அனுபவித்து வரும் ஈழத் தமிழ்மக்கள் அதனைத் தனது தொப்புள்கொடி உறவான தமிழ்நாட்டு மக்களிடம் கைமாற்றுவர் என்று இந்தியா ஏன் இவ்வளவு கொடூரமாகக் கனவு கண்டு வருகிறது?

ஈழத் தமிழர்கள் தமக்கு ஆதரவளிக்கும்படி இவ்வளவு காலமாக நேசக்கரம் நீட்டியும் அதற்கு ஒரு சாதகமான சமிக்ஞையைக் காண்பிக்காத மர்மம் என்ன?

சிறி லங்காவின் ஆழமான அரசியலைப் புரிந்து கொண்டும் இறங்கி வந்து தலையிட்டு, நீதியான ஒரு முகத்தைக் காட்டுவதற்கு இந்தியாவால் இன்னமும் முடியாமல் இருப்பது ஏன்?

தமது ஆதரவாலோ எதிர்ப்பாலோ ஈழப் போராட்டம் நின்று விடப் போவதில்லை என்பதை தெளிவாக புரிந்து வைத்துக் கொண்டும், எவ்வளவு காலமாவது இந்த யுத்தம் இழுபட்டு மக்கள் வதைபடட்டும் என்ற இந்தியாவின் நியாயமே இல்லாத மௌனத்தின் மர்மம் என்ன?

தனது நாட்டிலுள்ள ஆறு கோடி மக்களின் இனத்தாலும் மதத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்டுள்ள ஈழத்தமிழரை இந்தியா எவ்வளவு காலம்தான் பிரித்துப் பார்க்க போகிறது?

இந்தியாவின் மத்திய அரசுக் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். கட்டப்பஞ்சாயத்து ரீதியில் வைத்து ஒரு இனத்தின் விடுதலைக்கான விலையை எடைபோட முடியாது.

கடந்த 25 ஆண்டு காலமாக தமிழினம் தனது விடுதலைக்காகச் செய்துகொண்ட அர்ப்பணிப்புகளும் அதற்கு இன்னமும் தயாராகவுள்ள அதன் தாயகத்தாகமும் இந்தியாவுக்குத் தெரியாத விடயங்கள் அல்ல.

ஈழப் பிரச்சினையில் தலையிட்டு 'உருப்படியான பங்களிப்பு" நல்கக்கூடிய எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தும் கூட, எல்லாவற்றையும் தன்நேச நலன் சார்ந்து பார்க்கும் மேற்குலப் பாணியில் கையாண்டு இந்தியா கையைச் சுட்டு விட்டு அணில் ஏற விட்ட நாயின் கதையாக இன்று திக்கற்றுப் போயுள்ளது.

கடந்த காலங்களில் இந்தியா புரிந்த இராஜதந்திரத் திருவிளையாடல்களையும், இராணுவக் கொடுமைகளையும் தமிழினம் மன்னித்து மறந்து இன்று நேசக்கரம் நீட்டி நிற்கும் இந்த வேளையில் இந்தியா இன்னமும் முரண்டு பிடிப்பது சிறுபிள்ளைத்தனமானது.

இன்றைய சர்வதேச சூழலில், இந்தியா ஈழப் பிரச்சினையில் தலையிட்டு காத்திரமான பணிகளை மேற்கொண்டால் அதுவே இந்தியாவின் வல்லரசுக் கனவுக்கு பாரிய படிக்கல்லாக அமையும். தெற்காசியாவின் பிடிமானம் என்பது தமிழீழத்தின் தலைவிதியை மையமாகக் கொண்ட சக்கரமே என்பதை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும்.

அதைவிடுத்து, சம்பூரில் அனல்மின் நிலையம் என்றும், மன்னாரில் எண்ணை அகழ்வு என்றும் தனது நலன்களை முன்னிலைப்படுத்தி தமிழர் மண்ணை அபிவிருத்தி என்ற பெயரில் மறைமுகமாக ஆக்கிரமித்து தமிழர்களின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தன் தலையில் தானே மண்ணைப் போடும் வேலையாக அமையப்போவது மட்டுமல்லாமல் பொல்லைக்கொடுத்து அடிவாங்கும் கதையாகவே முடியும்.

நன்றி: நிலவரம் (13.06.08)

0 Comments: