போரியல் போக்கிலும் தமிழருக்கு எதிரான இராணுவக் கெடுபிடித் தீவிரத்திலும் ஒரேயடியாக உறுதியாக நிற்கும் தென்னிலங்கை அரசுக்கு இப்போதுதான் உண்மை மெல்ல மெல்லச் சுடத் தொடங்கியிருக்கின்றது.
இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு காணும் தனது வெறிப்போக்குக்கு சர்வதேசம் அங்கீகாரம் தராது என்பது இப்போதுதான் கொழும்புக்குப் புரிய ஆரம்பித்திருக்கின்றது.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்களைத் தூண்டி, முன்னெடுத்து, மேற்கொண்டு வரும் அரசின் செயற்போக்குக்கு எதிராக உலகின் சீற்றம் வெளிப்படத் தொடங்கிவிட்டது.
ஏற்கனவே, உலகில் மனித உரிமைகள் பேணலுக்கான உயர் காவல் கட்டமைப்பு என்று வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்புரிமையிலிருந்து இலங்கை தூக்கி வீசப்பட்டு விட்டது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டு, மிதிக்கப்படுவதை சகிக்க முடியாத அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலகு இலங்கைக்கான பல்வேறு நிதித் திட்டங்களை ஏற்கனவே, நிறுத்திவிட்டன.
இப்போது இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதிக்கான விசேட "ஜி.எஸ்.பி.' வரிச்சலுகையை நீக்குவது குறித்து மேற்குலகு தீவிரமாக ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது.
அப்படி அந்தச் சலுகையை நீக்குவதன் மூலம் பல நூறாயிரம் அப்பாவிகளின் வயிற்றில் அடித்து விடாதீர்கள் என்று வாஷிங்டனில் போய் இப்போது கெஞ்சுகின்றார் கொழும்பு அரசின் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
""பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் ஒரு ஜனநாயக நாட்டின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளுங்கள். எங்களின் மூலவளங்களை வெட்டிக் குறைப்பீர்களானால் வறுமைதான் இலங்கையில் தலைவிரித்தாடும்.'' என்றும் அங்கு இறைஞ்சியிருக்கிறார் அவர்.
நல்லது. பேராசிரியர் பீரிஸ் அவர்களே! இலங்கையில் ஓரினத்துக்கு எதிராக சிறுபான்மையினரான தமிழர்களுக்கு எதிராக உங்களின் "ஜனநாயக' அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் மோசமான மிகக் கொடூரமான கொலைவெறிப் போக்கைக் கவனிக்காமல் புறம் தள்ளிவிட்டு, இலங்கை அரசுக்கு சகல சலுகைகளையும், வழிகளையும், உதவிகளையும், ஒத்தாசைகளையும் மேற்குலகம் தொடரவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்களா?
ஜனநாயகத்தின் பெயரால் ஓர் இராணுவ அடக்கு முறை ஆட்சி தனது பேரினவாத மேலாண்மை எதேச்சாதிகாரத்தை மக்கள் மீது அதுவும் ஒரு சிறுபான்மை இனம் மீது கண்மூடித்தனமாகக் கட்டவிழ்த்து விடுவதைக் கண்டு கொள்ளாமல் அதன் அராஜகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் விதத்தில் சர்வதேசம் செயற்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமேயில்லை. அமைதி வழியிலான பேச்சு, கலந்துரையாடல் முறையிலான சமாதானத் தீர்வே ஒரே வழி என்பதை அமெரிக்காவும் ஏனைய சர்வதேச நாடுகளும் உங்கள் அரசுக்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கும் திரும்பத் திரும்ப பகிரங்கமாக வலியுறுத்தும் போது அதை அப்பட்டமாகவும் வெளிப்படையாகவும் உதாசீனப்படுத்திப் புறக்கணித்துவிட்டு, உங்களின் அரசுத் தலைவர் தமது இராணுவ நடவடிக்கைத் திட்டம் நிறுத்தப்படமாட்டாது எனப் பகிரங்கமாக அறிவிக்கின்றார். வெளிப் பேச்சுக்கு அரசியல் தீர்வு குறித்து உதட்டளவில் பேசும் உங்கள் அரசின் செயற் போக்கையும் மேற்குலகின் கருத்தைப் புறந்தள்ளும் அதன் மேலாண்மைத் திமிரையும் கவனிக்காமல், தொடர்ந்து உங்கள் அரசுக்கு உதவிகளை வழங்கி, அதன் அத்துமீறல்களுக்கு மேற்குலகு உதவியும் ஒத்தாசையும் அங்கீகாரமும் வழங்கவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்களா பேராசிரியர் அவர்களே.....?
ஜனநாயகத்தின் பெயரால் சட்ட ரீதியான அரசின் நாமத்தால் இறைமையுள்ள ஓர் நாட்டுக் கட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் ஒரு தேசத்தின் சார்பில் செயற்படுவதற்கான அடிப்படைத் தகுதிகளை வெளிப்படுத்துவது இலங்கை போன்ற ஒரு நாட்டு அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உங்கள்தரப்பின் கடமையல்லவா? அதை நீங்களும் உங்கள் அரசுத் தரப்பினரும் நிறைவு செய்துள்ளீர்களா என்பதை ஒரு தடவை சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டீர்களா?
ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்புரிமையிலிருந்து சர்வதேசம் உங்களை நிராகரித்து இருபத்தினான்கு மணி நேரம் கடப்பதற்கு முன்னரே, அந்தத் தீர்ப்பை நியாயப்படுத்தும் விதத்தில் கொழும்பில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, நையப் புடைக்கப்பட்டு, கடுமையாக அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார். அந்த அதிகார வர்க்க அத்துமீறலுக்கு அமைதி முறையில் ஆட்சேபம் தெரிவித்த ஊடகப் பிரதிநிதிகளும் பாதுகாப்பு உயரதிகாரிகளால் மிரட்டப்பட்டிருக்கின்றனர்.
இத்தகைய தொடர் அராஜகங்களின் சூத்திரதாரிகளும், பின்னணியில் இயங்கும் அதிகார வர்க்கமும், அதன் அரூபக் கரங்களும் எவை என்பது நாடறிந்த பரகசியம். ஆனால் இந்த நாட்டில் இந்த அத்துமீறல்களுக்கு எல்லாம் யார் மீதும் நடவடிக்கை இல்லை. யாரும் பொறுப்புக் கூறவும் தேவையில்லை என்ற அலட்சிய அராஜகம்.
அரசு சார்புப் பணி என்ற பெயரில் நடக்கும் மோசமான மனித உரிமை மீறல்களுக்கு யார் மீதும் குற்றம் சுமத்தப்படுவதில்லை. அத்தகைய குற்றங்களின் சூத்திரதாரிகளுக்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கும் விசேட கலாசாரம் இந்தத் தேசத்தின் தனிச்சிறப்பு.
இத்தகைய கொடூரப் போக்கிலிருந்து தன்னைத் திருத்திக் கொள்ளவே விரும்பாத திமிர்த்தனம் மிக்க ஒரு நாட்டுக்கு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்ற எத்தனை புத்திஜீவிகள் கெஞ்சிக் கேட்டாலும் சர்வதேசத்தின் சலுகைகளைப் பெறுவதற்கான உரிமையோ, தகுதியோ, பாத்தியமோ கிடையாது என்பதுதான் நீதி.
நன்றி:-உதயன்
Friday, June 6, 2008
விசேட சலுகைக்காக சர்வதேசத்தை இறைஞ்சுகின்றது இலங்கை
Posted by tamil at 5:13 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
வணக்கம் ,
தமிழீழ வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும் நோக்கில் இந்தத் தளம் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது .
http://www.pageflakes.com/rishanthan
இங்கு தங்களின் வலைபூவானது இணைக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் .
உங்களை தொடர்பு கொள்ள வேறு வழிகள் தெரியவில்லை ,
நீங்கள் ஈழத்தமிழரா?
நன்றி !
Post a Comment