சில தினங்களுக்கு முன்னர் எனது கருத்தியல் நன்பர் ஒருவர் ஏன் வித்தியாதரன் பற்றி ஒன்றும் எழுதவில்லை என்ற ஒரு கேள்வியை மின்னஞ்சல் வழியாக அனுப்பியிருந்தார்.
இந்த கேள்வியை பார்த்ததும் எனக்கு நானே அடிக்கடி கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்விதான் முதலில் மேலெழுந்தது.
அது புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஆங்கில பத்திரிகையாளரும், ழேசவா நயளவநசn ஆழவொடல என்னும் மாதாந்த ஆங்கில சஞ்சிகையின் ஆசிரியருமான ஜே.எஸ்.திசநாயகத்திற்காக என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே (எழுத முடியவில்லையே) என்பதுதான் அந்தக் கேள்வி.
இன்றுவரை எங்கும் நான் இது பற்றி ஒரு குறிப்புக் கூட எழுதவில்லை. இத்தனைக்கும் அவர் எனது நண்பரும் கூட.
தமிழ்த் தேசிய கருத்துலகில் இன்றும் இட்டு நிரப்ப முடியாதளவிற்கான வெற்றிடமொன்றை தனது ஆற்றலால் ஏற்படுத்தியிருக்கும் இராணுவ ஆய்வாளர் டி.பி.சிவராம் படுகொலை செய்யப்பட்டபோது எல்லாவற்றையுமே இழந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது.
அவருடன் ஏற்பட்ட மிகக் குறுகியகால தொடர்பையும் அவர் எழுத்துக்கள் தொடர்பாக நான் கொண்டிருந்த ஈடுபாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு நினைவுக் கட்டுரையொன்றை எழுதினேன்.
அவரது நினைவு தினம் வரும்போதெல்லாம் ஒரு சிறு கூட்டத்தை கூட்டவேண்டுமென்று மனம் அவாவும். ஆனால் இறுதியில் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலைமையை எண்ணி மனம் அமைதி கொள்ளும். அப்பொழுதே தீர்மானித்துவிட்டேன் இனி இதுபற்றி எண்ணக் கட்டுரைகளை எழுதுவதில்லையென்று.
ஏனென்றால் நமது நண்பர்கள் ஒவ்வொருவராக உதிர்ந்து கொண்டும், சிறகுகள் முறிக்கப்பட்டும் கொண்டிருக்கின்றனர்.
நாங்களும் நமது ஆதங்கங்களைக் எழுத்துக்களாக கொட்டிக் கொண்டிருக்கிறோம்,
இறுதில் ஒரு நாள் நாம் அனைவருமே அஞ்சலிக் கட்டுரையின் பொருளாக மாறப் போகின்றோம். இதுதானே சமகாலத்தின் யதார்த்தம்.
புலம்பெயர்ந்து வாழும் ஊடக நண்பர்கள் இந்த விடயத்தில் புண்ணியம் செய்தவர்கள்.
எத்தனை மேடைகள் போட்டு உரத்துக் குரல் எழுப்பியிருக்கிறோம். வீதியில் நின்று நமது நண்பர்கள் பதாகைகளை ஏந்தியவாறு சத்தமிட்டிருக்கின்றனர்.
ஆனால் பேனா முனையின் சிதைவு மட்டும் தொடர் கதைதான்.
சிறிலங்காவைப் பொறுத்த வரையில் இனி ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், எழுத்துச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் அர்த்தமற்ற வார்த்தைகள்.
அவ்வாறு நாம் நம்புவோமாயின் அது கற்பனைக் குதிரையில் சவாரி செய்வதாகவே அமையும்.
வித்தியாதரன் சுடரொளி உதயன் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர், தமிழர் தேசியத்தின் மீது பற்றும் அக்கறையும் கொண்டவர் என்பதற்கு அப்பால் அவர் பற்றி வேறு எதுவும் எனக்குத் தெரியாது.
சமீப காலமாக சுடரொளி தமிழ் மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் இன்னல்களை, துன்பங்களை வெளிப்படுத்துவதில் துணிச்சலுடன் செயற்பட்ட பத்திரிகைகளில் ஒன்று.
இதிலிருந்தே அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை விளங்கிக் கொள்ள முடியும்.
ஆனால் ஒவ்வொரு முறை தமிழ் ஊடகவிலாளர்கள் கைது செய்யப்படும் போதும், சொல்லப்படும் அதே காரணம்தான் இப்போது வித்தியாதரன் விடயத்திலும் சொல்லப்படுகிறது.
இது ஒரு தொடர் நாடகத்தின் பகுதிகள் (எபிசோட்ஸ்). ஓவ்வொரு முறையும் பாத்திரங்களாக சித்தரிக்கப்படும் தமிழ் ஊடகவியலாளர்களின் நாமத்தில் மாற்றம் வருகிறதே ஒழிய அவர்கள் நடிக்க நிர்ப்பந்திக்கப்படும் பாத்திரத்தில் ஒருபோதுமே மாற்றம் வருவதில்லை.
அது எப்போதுமே புலிப்பாத்திரம்தான். வித்தியாதரனுக்கும் அதுதான் நடந்திருக்கிறது.
இன்று சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரிவொன்று இருக்கின்றது என்றால், அது விரல் விட்டு எண்ணக் கூடிய தமிழ் அச்சு ஊடகங்கள் மட்டும்தான்.
அதன் சிறகுகளும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சிறிலங்காவின் தலைநகரில் இருந்து வெளிவரும் ~சக்தி| போன்ற தனியார் தமிழ் தொலைக்காட்சி சில தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் சிறிலங்கா கிரிக்கட் அணியினர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கொடுத்ததில், ஒரு சிறு முக்கியத்துவத்தைக் கூட வன்னியில் தினமும் அழிந்து கொண்டிருக்கும் மக்களுக்காக கொடுக்கவில்லை.
இதுவரை 3,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட போதும், இது பற்றி அந்த ஊடகம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை, ஏனென்றால் அந்த மக்கள் பற்றி பேசினால் இலாபம் சம்பாதிக்க முடியாது.
இப்படியான கேவலமான பண ஊடகங்களுக்கு மத்தியில்தான் நமது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்காக தமிழ் பத்திரிகையாளர்கள் களத்தில் நின்றவாறு குரல் கொடுத்து வருகின்றனர்.
அப்படி குரல் கொடுத்த ஒருவர்தான் வித்தியாதரன். அவரது குரல்வளையும் இப்போது நெருக்கப்பட்டிருக்கிறது.
இது அவருடன் நின்றுவிடப் போவதில்லை தொடரும்.
இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம். பயங்கரவாதத்திற்கு புதிய விளக்கங்களை சொல்லுவதில் தனது நேரத்தை செலவிடும் மேற்கின் ஜனநாயகவாதிகள் என்ன செய்யப் போகிறார்கள்.
அவர்களிடம் இது பற்றி உரத்துக் கேளுங்கள்.
- தாரகா -
Wednesday, March 4, 2009
நேற்று திசநாயகம் இன்று வித்தியாதரன் நாளை?
Posted by tamil at 9:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment