Sunday, March 22, 2009

அடங்காமண் நோக்கிப் பயணிக்கும் வணங்காமண் சொல்லும் செய்தி என்ன?

இருளை விலக்கும் ஒளித்துளியைச் சுமந்து "வணங்கா மண்' என்கிற நிவாரணப் பொருட்களைத் தாங்கிய கப்பல் லண்டனிலிருந்து புறப்படப் போகிறது.ஐரோப்பாவிலிருந்து பாலஸ்தீனம் நோக்கிப் புறப்பட்ட "இடப்பெயர்வு "1947' (Exodos 1947) என்று பெயரிடப்பட்ட கப்பலே, "வணங்காமண்' நினைவூட்டுகிறது.

வன்னி நோக்கிப் பயணிக்கும் இந்த "வணங்கா மண்' கப்பலின் நோக்கம், அவசர மனிதாபிமானத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டது.

"இடப்பெயர்வு 1947' கப்பல் பயணம், இஸ்ரேல் என்ற யூத தேசத்தை நோக்கிய நகர்வினைக் கொண்டிருந்தாலும் வணங்காமண்ணின் தாயகப் பயணம், பல நாடுகளின் கரைகளை தொட்டுச் செல்லும் நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

அரசின் இராணுவ நடவடிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டனம் தெரிவித்தால் பொதுச் செயலாளர் பான் கீ மூன் போரை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுப்பார். கண்டனங்கள், கவலையோடு தான் ஐ.நா.வின் காலம் கழிகிறது.

பட்டினிச் சாவென்கிற சுவடு பதியாத தமிழர்களின் வரலாற்றினை இப்பெருமக்கள் தெரிந்து கொள்ளவில்லை.

ஆகவே உலகமே உதவி செய்ய முன்வராத போது, புலம்பெயர்ந்த ஈழத் தமிழ் உறவுகள், நிவாரணக் கப்பலேறி முல்லைக்கடல் நோக்கிப் பயணிப்பது தவிர்க்க முடியாத மனிதாபிமான வரலாற்றுக் கடமையாக மாறுகிறது.

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்வோமென வரிந்து கட்டிக் கொண்டு செயற்படும், பிராந்திய நலனில் அக்கறை கொண்ட மகா சக்திகள், வணங்கா மண்ணின் தாயகப் பயணத்தை தடுத்து நிறுத்த சகல சித்து விளையாடல்களையும் பிரயோகிக்கக்கூடும்.

குறிப்பாக நடைபெறும் போருக்குப் பக்க பலமாக இருப்பதாக சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவினால் புகழாரம் சூடப்பட்ட காந்தி தேசத்திற்கு இக்கப்பல் விவகாரம் நிச்சயம் கசப்பானதொன்றாக இருக்கும்.

வல்லரசுகள் நிகழ்த்தும் ஆதிக்கப் போட்டியில், தான் வெற்றி பெறும் முக்தி நிலைக்கு வந்தடைந்திருப்பதாகக் கற்பனை கொள்ளும் இந்தியா, திருநெல்வேலி இராட்சத ராடர் நிலையத்திலிருந்து வணங்கா மண்ணின் பயணப் பாதையை உன்னிப்பாக அவதானிக்கும். கொச்சின் துறைமுகம் வழியாக அனுப்பப்படும் காலாவதி நாட்களை எட்டும் எறிகணைகளின் கையிருப்பு குறைவடைவதாலும் வன்னி மண் விழுங்கும் ஆட்பலத்தை ஈடு செய்ய ஊர்காவல் படை அனுப்பப்படுவதாலும் இந்தியாவிற்கு"வணங்கா மண்ணின்' விஜயம் புதிய அதிர்வுகளை உருவாக்குகிறது.

"நிவாரண உதவி' என்கிற வட்டத்திற்கு வெளியே, இப் பயணத்தின் வேறு பரிமாணங்கள், புதிய செய்திகளை சொல்லத்தான் போகின்றன.
1934 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக யூதர்களை ஏற்றிச் சென்ற பல கப்பல்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாம் உலக யுத்த காலத்தில் அதாவது 1947 ஜூலையில் "இடப்பெயர்வு 1947' என்று நாமம் சூட்டப்பட்டு பிரான்சிலிருந்து புறப்பட்ட கப்பல் உருவாக்கிய தாக்கமே புதிய நாடொன்றின் உருவாக்கத்திற்கு வழி சமைத்தது.

நாசிகள் ஏறி மிதித்த யூதர்களை நடுக் கடலில் பிரித்தானியர்கள் நசித்தார்கள், யூதர்களை ஏற்றிச் சென்ற சில கப்பல்கள் மொறீசியசிற்கும், சைப்பிரஸிற்கும் திசை திருப்பி விடப்பட்டன.

ஆனாலும் "இடப்பெயர்வு 1947' கப்பல் ஏற்படுத்திய அதிர்வலைகள், ஐ.நா. சபையில் முட்டி மோதி இஸ்ரேல் என்ற யூத நாட்டின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்டது.
உணவை போராயுதமாகக் கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அதே உணவைக் கொண்டு சர்வதேச விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென்கிற விடயத்தை இக்கப்பல் பயணம் உணர்த்தும்.

இதனைத் தடுத்து நிறுத்த முற்படுவோர், அதற்கான தகுந்த அரசியல் காரணிகளையும் வியாக்கியானங்களையும் முன்வைக்க முடியாமல் சீனா கூறுவது போன்று உள்நாட்டு விவகாரம் என்று பூசி மெழுக முற்படுவார்கள்.
அதேவேளை "இடப்பெயர்வு 1947' கப்பல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கான திருப்பு முனை நிகழ்வாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டாலும் "வணங்கா மண்' ணின் தாயகப் பயணமானது ஏற்கனவே பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வரும் ஓர் இனத்தின் தாயகத்தை, அங்கீகரிக்க வேண்டிய தேவையை சர்வதேசத்திற்கு உணர்த்தும்.

ஆனாலும் சில தென்னாசியப் பிராந்திய மற்றும் மேற்குலக வல்லரசாளர்களின் அழுத்தங்களை மீறி, வன்னி மக்களின் உடனடி வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத கையறு நிலையில் ஐ.நா. சபை இருப்பதாகவே தோன் றுகிறது.

இந்த இறுக்கமான முரண் நிலையை
"வணங்காமண்' உடை த்தெறியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கையின் இறையாண்மையை மறுதலித்து "பூமாலை'' நடவடிக்கை மூலம் உணவுப் பொட்டலங்க ளைப் போட்டு மனிதாபிமானம் பேசியவர்களும் வன்னியில் மக்கள் கொல்லப்படுவதை உள்நாட்டு விவகாரமென்று ஐ.நா. பாதுகாப்புச் சபையில், பேரினவாத இறைமைக்கு முண்டு கொடுத்தவர்களும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளென்கிற பொதுவான வரையறைக்குள் வைத்துப் பார்க்க முடியாதெனக் கூறிய அமெரிக்க இராஜாங்க அமைச்சரும் இந்த வணங்கா
மண்ணின், வேரிற்கு நீர் ஊற்றச் செல்லும் மனிதாபிமானப் பயணத்தை எவ்வாறு கையாளப் போகிறார்கள்?

ஏற்கனவே இப்பயணத்திற்கு ஆதரவளிக்க பல மனித உரிமை ஆர்வலர்களும் இன்படுகொலைக்கு எதிரான மனிதாபிமானிகளும் முன் வந்துள்ளார்கள்.
இராணுவ முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்கள் எதிர்கொள்ளும் பட்டினிச் சாவு மற்றும் எறிகணைகள் நிகழ்த்தும் படுகொலைகளை தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை என்கிற கவலையோடு மட்டும் வாழ்வதால் பயனில்லை என்பதை உணர்ந்து கொண்டதால் தன் கையே தனக்கு உதவியென "வணங்காமண்' புறப்படுகிறது.

உலகத் தமிழினத்தின் உணர்வுக் கொந்தளிப்பு, சுவிஸிலும் பெல்ஜியத்திலும் கனடாவிலும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டினை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

தலைமைக்கும் தன்னாட்சிக்குமான அங்கீகாரம் கோரி புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் போராட்ட வடிவம் மாறுதலடைந்து மிகவும் உணர்வு மயப்பட்ட கொதி நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

சர்வதேச அங்கீகாரத்தை தடுக்கும் அரணாக தற்போதைய இந்திய ஆட்சியாளர்கள் தொழிற்படுவதாகவே புலம்பெயர் தமிழர்களும் தமிழக உறவுகளும் திடமாக நம்புகிறார்கள்.

சீன வியூகத்தை உடைத்தெறிய ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பலிக்கடாவாக்கலாமென்கிற இந்திய ஆட்சியாளர்களின் உள்நோக்கத்தை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு இனம் அழிந்தாலும் பரவாயில்லை, தனது நலன் காக்கப்பட வேண்டுöமன ஒருவர் நினைப்பாராயின் அந்த அழிக்கப்படும் இனம், தன்னை தற்காத்துக் கொள்ள, அழிப்பவரை எதிர்ப்பதே நியாயமானதாகும்.உயிரினங்களின் உயிர் வாழும் தத்துவம் சொல்லும் இயற்கையோடு சார்ந்த செய்தி இதுதான்.

நன்றி -

சி.இதயச்சந்திரன்
வீரகேசரி வாரவெளியீடு

0 Comments: