தமது நாடுகளின் விடுதலைக்காகவும், தம் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டபோது அந்த ஆக்கிரமிப்பாளனை விரட்டி அடிப்பதற்காகவும் தம் இன்னுயிரை ஈந்தோரை அந்த நாடுகள் என்றும் மறப்பதில்லை. அவர்களின் நினைவாக தூண்கள், நடுகற்கள், மண்டபங்கள், பூங்காக்கள் என நிறுவி சந்ததி சந்ததியாக நினைவு கூர்வதை உலகெங்கும் காண்கின்றோம்.
ஆனால், உரிமைப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்திலேயே அந்தப் போரில் வீரமரணம் எய்திய தம் தோழர்களை அந்த மண்ணிலேயே விதைத்து அவர்களுக்கு நடுகற்கள் எழுப்பி, அந்த நடுகற்களுக்கு உள்ளே உறங்கிக் கொண்டிருப்போர் வாழும் இடங்ளை துயிலும் இல்லங்களாக்கி, அவர்களை மதங்கள் கடந்த வழிபாட்டுக்கு உரியவர்களாக்கி, அவர்கள் பணியை அந்தத் தோழர்கள் சுமப்பதை தமிழீழ உரிமைப் போரில் மட்டுமே காண்கின்றோம்.
தமிழ்த் தேசியத்தில் மொழியின் வீச்சுடன், பழம்பெரும் பண்பாட்டுச் செழுமைகளின் உயிர்ப்புடன், மறவர்களுக்கு உரித்தான போர்க்குணத்தையும் நித்தியமான, நிரந்தரமான பண்பாக்கியுள்ளதை, அடங்காத வன்னியில் ஆக்கிரப்பாளனின் கொடிய இன அழிப்பின் மத்தியிலும் காண்கின்றோம்.
இந்தப் போர்க்குணம் இன்று புலத்திலும் கட்டவிழ்வதை முத்துக்குமாரன்கள், முருகதாசன்கள் என்ற மானிடத்திலும், வணங்காமண் என்னும் கப்பலின் பின்னால் உள்ள சிந்தனைகளிலும் வெளிப்படுவதைக் காண்கின்றோம். போராட மறுப்பது என்பது தோல்வி, போராடுவது என்பது வெற்றி என முழங்கிய அயர்லாந்து வேங்கை பற்றிக்பியர்சனின் குரலை தமிழ் கூறும் நல்லுலகெங்கும் இன்று கேட்டுப் பரவசம் அடைகின்றோம்.
இந்தப் பரவசத்தின் பின்னால் நடுகற்களாகி உள்ள எம் இரத்தத்தின் இரத்தங்களும் அந்த நடுகற்களுக்கூடாக பயணித்து உரிமைப்போரை முன்னைடுத்துச் செல்லும் மறவர்களும், அவர்கள் பின்னே சாவின் மடியிலும் மண்ணை நேசிக்கும் அடங்காத வன்னி மக்களையும் தரிசிக்கின்றோம்.
இந்தப் போர்க்குணத்தை ஆயிரம் ஆயிரமாம் ஆண்டுகளாக இழந்திருந்தோம். அதனை இழந்தபோதே அடிமைகளுக்கு உரிய பண்புகளையும் வரித்துக்கொண்டோம். அடக்குமுறைக்கு எதிரான உரிமைப்போரில் வெற்றி பெறும்போது மறைவது அடிமைத்தனம் மட்டுமல்ல அடிமைப்பட்ட மனிதனும் அங்கு இருக்கக் கூடாது.
அப்போதுதான் பிறான்ஸஸ் பனன் Frantz Fanon at the Congress of Black African Writers, 1959 காணும் பண்பாட்டு மனிதனை அந்த மண்ணில் தரிசிக்க முடியும். அந்த மனிதனால்தான் தேசியத்தில் சர்வதேசியத்தையும் சர்வதேசியத்தில் தேசியத்தையும் இனம் காணவும் தன் தேசியத்திற்கூடாக மனித குலத்தின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்குமான உன்னதங்களை உருவாக்க முடியும். அவனது படைப்புச் சக்திக்கு களம் அமைக்க முடியும்.
இதற்கான மாற்றங்கள் உரிமைப்போர் நிகழும் காலத்திலேயே இடம்பெற வேண்டும். நடுகற்களுக்குப் பின்னால் உள்ள தாற்பரியங்கள், பண்பாட்டுக் கோலங்கள், போர்க் குணங்கள் இவற்றில் சிலவாகும். இந்த வகையில் தமிழர் பண்பாட்டில் நடுகற்களுக்கும் வீரவணக்கத்திற்கும் பின்னால் உள்ள வரலாற்றை ஒரு முறை நோட்டமிடுவதும் அதன் பின்புலத்தில் தமிழீழ மண்ணெங்கும் பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் நடுகற்கள் தமிழ் மக்களின் ஊனோடு உயிரோடு சங்கமமாவதன் மூலமே சுதந்திர தமிழீழத்தை கட்டி எழுப்பவும் அந்த மண்ணில் இருந்து ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட அடிமை மனிதனை விரட்டி அடிக்கவும் முடியும்.
ஏனெனில் இன்று இந்தியா போன்ற நாடுகள் ஆக்கிரமிப்பாளரை விரட்டி அடித்து சுதந்திரத்தைப் பெற்றபோதும் அங்கு உருவான அடிமை மனிதனை விரட்டி அடிப்பதில் தோல்வி கண்ட தேசங்களாக உள்ளதைக் காண்கின்றோம். அவர்களின் போர்க்கால கோசங்கள் வெறும் கோசங்களே. கோசங்கள் பண்பாட்டு மனிதனை உருவாக்குவதில்லை. கோசங்கள் செயல்களாகி வாழப்படவேண்டும். நடுகற்களும் வீரவணக்கமும் எமது புதிய தேசத்தின் வாழ்வின் அத்திவாரமாகவேண்டும்.
பண்டைத் தமிழர்களிடையே முதன் முதலாக அரசு என்ற தாபனம் தோற்றம் பெற்ற போர்களின் பின்புலத்தில் அந்தப் போர்களிலே விழுப்புண்பட்டு வீழ்ந்திறந்த வீரரைத் தெய்வமாகப் போற்றினர். அவர்களைக் கல்லில் அமைத்து வழிபட்டனர். எடுத்துக்காட்டாக, பகைவர் முன்னே அஞ்சாது நின்று தன் மன்னனைக் காத்து ,அவர் மேற்செலவைக் குறுக்கிட்டுத் தடுத்து யானைகளைக் கொன்று வீழ்ந்துபட்ட வீரரது நடுகல்லைக் கடவுளாகக் கருதி வழிபடாது நெல்லைப் படைத்து வழிபடும் தெய்வம் ஒன்றில்லை எனப் பாடுகின்றார் சங்கப் புலவர்களுள் ஒருவரான மாங்குடிகிழார்.
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு, வாகைத் திணை, 355)
"களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்ற பண்டைய சமூக அமைப்பில் வீரயுகம் ஒன்றில் புலவர்கள் அரசர்களின் விசுவாசிகளாக அரச உருவாக்கத்திற்குத் துணைபோகிய காலம் அது என்பதை நாம் அறிவோம். அந்தக்காலப் பண்பாட்டை காய்தல் உவத்தல் இன்றி நேர்மையோடு தொல்காப்பியனார் தொகுத்துத் தந்துள்ளமை எமது பாக்கியம். அவர் தனது பொருளதிகாரத்தில் புறத்திணை இயலில் நடுகற்களினிதும் வீரவணக்கத்தினதும் முறைகளைக் கூறுகையில்:
"......வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க,
நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும் ,
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல்,
சீர்த்த மரபின் பெரும்படை, வாழ்த்தல், என்று
இரு மூன்று மரபின் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே
என அழகாகக் கூறுகிறார். யாவற்றிற்கும் வரம்பு கட்டி இலக்கணம் தந்த தொல்காப்பியனார் தமிழரிடையே பெருவழக்காயிருந்த இவ் வழிபாட்டு முறைக்கும் இலக்கணம் வகுத்ததில் வியப்பில்லை.
இதனை சற்று விளக்கமாக நோக்குவோம்.
(1) காட்சி : போரில் வீரமரணம் எய்திய வீரனுக்கு நடுதற்கேற்ற கல்லைத் தெரிவு செய்தல்.
(2) கால்கோள்: தெரிந்த கல்லை எடுத்து வரலும், நடுதற்கான நாள் பார்த்தலும்.
(3) நீர்ப்படை: அந்தக் கல்லிற்கு குளிப்பாட்டல்.
(4) நடுதல்: வீரன் விழுந்துபட்ட இடத்தில் அல்லது தெரிவு செய்யப்பட்ட இடத்தில் கல்லினை நடுதல்.
(5) பெரும்படை: கல்லிலே வீரனது புகழைப் பொறித்து மடை கொடுத்தல்..
(6) வாழ்த்துதல்: வீரவணக்கம் செய்தல்.
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தை வரித்துக் கொண்டோர் பாயும் புலியை சின்னமாக்கி, நடுகற்களுடனான வீரவணக்கத்திற்கும் புத்துயிர் அழித்ததன் மூலம் தேசியத்தில் மொழியின் வீச்சோடு பண்பாட்டு விழுமியங்களோடு போர்க் குணத்தையும் அதன் மூலமான மறப்பண்பாட்டையும் தேசியத்தின் வாழ்வியல் கோலங்களாக்கியுள்ளனர். இதன் பின்னால் உள்ள வீரமும், தியாகமும் இன்று கண்டங்கள் பலவற்றிலும் கடல்கள் பல கடந்து வாழும் அவர்களின் உடன்பிறப்புக்களிடையே உரிமைப் போரிற்கான புதிய உத்வேகத்தை அளித்துள்ளது எனலாம்.
தமிழரின் புராதன வீரயுகத்தில் ஒளவையின் தகடூர் யாத்திரை நடுகற்களுக்கு ஊடாக நடந்தது போல் நவீன யுகம் ஒன்றில் அடக்கப்பட்ட தேசம் ஒன்றின் அடுக்கு முறைக்கு எதிரான உரிமைப் போரும் நடுகற்களுக்கு ஊடாக நிகழ்கின்றது. இந்த நடுகற்களின் சக்தியை உணர்ந்த எதிரி அவற்றை நிர்மூலமாக்குவதில் வியப்பில்லை. தம் தோழர்களை விதைத்துவிட்டு அவர்கள் பணியைத் தொடரும் வீரர்களதும் அவர்தம் உறவுகளதும் மன உறுதியை எதிரிகளால் அழிக்கமுடியாது.
அவர்கள் நடுகற்களுக்கு ஊடாக உரிமைப்போரில் வென்று பகை கெடுக்கும் வேலோடு செல்வதைப் போற்றி வழிபடும் காலம் இது.
ம.தனபாலசிங்கம்
சிட்னி, அவுஸ்திரேலியா.
Wednesday, March 25, 2009
நடுகற்களும் அவற்றினூடான விடுதலைக்கான யாத்திரையும்
Posted by tamil at 6:29 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment