Sunday, March 29, 2009

ஆப்பிழுத்த குரங்கின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சர்வதேச சமூகம்

இலங்கையில் நடைபெற்றுவரும் போர் தொடர்பாக உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்காவுக்கும் அதற்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவுக்கும் இடையில் கருத்து வேற்றுமைகள் தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இலங்கையில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் மிகவும் தீவிரமான கட்டத்தை நெருக்கியுள்ள நிலையில் அங்கு ஏற்பட்டுவரும் மனித பேரழிவுகளை நிறுத்தும் முயற்சிகளுக்கு தற்போது மேற்குலகம் செவிசாய்க்க ஆரம்பித்துள்ளது. இலங்கை விவகாரங்களுக்கு என பிரித்தானியா சிறப்பு பிரதிநிதியை இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நியமித்ததை தொடர்ந்து இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் ஏற்பட்ட முறுகல் நிலை மெல்ல மெல்ல தீவிரம் பெற்று வருகின்றது.

ஆஸ்திரியா, மெக்சிக்கோ, கொஸ்டாரிக்கா ஆகிய நாடுகளின் ஊடாக அமெரிக்காவும், பிரித்தானியாவும் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பாக ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என கொண்டுவர தீர்மானித்துள்ள விவாதத்தை சீனாவும், ரஷ்யாவும் எதிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது ஒரு உள்வீட்டு பிரச்சினை என சீனா தெரிவித்துள்ளது. சீனாவினதும், ரஷ்யாவினதும் இந்த நகர்வுகளுக்கு அவர்கள் எதிர்கொண்டுவரும் திபத்திய மற்றும் செச்சென்யா பிரச்சினைகள் காரணம் என்பது தெளிவானது. இருந்த போதும் தாய்வானின் மீது சீனா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தாய்வானின் நலனுக்கு குந்தகமானது என ஏன் சீனா கருதவில்லை என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

இலங்கை தொடர்பான விவாதம் ஏனைய விவகாரங்கள் என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட வேண்டும் என அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமாவினால் நியமிக்கப்பட்ட ஐ.நாவிற்கான பிரதிநிதி சூசன் ரைஸ் கடந்த வார இறுதிப்பகுதியில் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தும் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவின் வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலை தொடர்ந்து சூசனின் கருத்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூகோள அரசியல் நலன்கள் தொடர்பாக இந்தியாவுக்கு சார்பாக நிலையெடுத்து மேற்குலகம் மேற்கொண்ட நகர்வுகள் தவறாகிப் போனதே தற்போதைய நிலமைக்கு காரணம் என மேற்குலகம் கருதத் தலைப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவை தமது நட்பு நாடாக பேணுவதன் மூலம் இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற அமொக்காவின் கணிப்பு தவறாகி போயுள்ளது. இந்தியாவே தற்போது அமெரிக்காவினது பொருளாதார மற்றும் பூகோள நண்பனாக உருவெடுத்து வருகின்றது. ஆனால் அமெரிக்காவின் நகர்வுகள் தவறாகி போனதற்கு காரணம் இந்தியா தனது நாட்டு நலன்களை விட தனிநபர் நலன்களை முன்நிறுத்தியதே என பல மூத்த ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியாவினதும், இந்துசமுத்திர பிராந்தியத்தின் உறுதித்தன்மையை குலைத்துவிடலாம் என அமெரிக்கா அஞ்சுகின்றது. சீனாவின் வளர்ச்சியும் அமெரிக்காவையும், இந்தியாவையும் அச்சமடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் சீனா தற்போது எடுத்துள்ள நிலைப்பாடு மேற்குலகத்திற்கு மேலும் அச்சங்களை ஏற்படுத்தலாம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் விடயங்களில் மௌனமான இருந்த சீனா தற்போது குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளமை தென்கிழக்கு ஆசியாவில் எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது.

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் போரை இந்தியா வழிநடத்தி வருகின்ற போதும், சீனா படைத்துறை உதவிகளையும், நிதி உதவிகளையும் இலங்கையில் அரசிற்கு வழங்கிவருகின்றது. எவ்7 ரக தாக்குதல் விமானங்கள், ஜேவை11 ரக முப்பரிமாண ராடார்கள், பீரங்கிகள் உட்பட பெருமளவான படைத்துறை உபகரணங்களை சீனா வழங்கி வருவதுடன், இலங்கைக்கு அதிக நிதி உதவிகளை மேற்கொள்ளும் நாடுகளில் சீனாவே தற்போது முன்னிலையில் உள்ளது. அது கடந்த ஆண்டு இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

கடந்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ சீனாவின் உதவிகளுக்கு இலங்øகயின் நன்றிகளை தெரிவித்ததுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் வலுப்படுத்தும் முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து – இலங்கையின் போருக்கு நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்க முன்வந்துள்ள சீனா ஐ.நா பாதுகாப்பு சபையில் இருந்து இலங்கையை காப்பாற்ற முன்வந்துள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் காப்பாற்ற முன்வந்துள்ளது.

சீனாவினதும் இலங்கையினதும் இந்த புதிய பிணைப்புக்கள் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் பெரும் சாவாலாக உருவெடுத்துள்ளது. "அமெரிக்கா தூங்கும் சமயம் பார்த்து சீனா ஆசிய பிராந்தியத்தில் தனக்கென பல நண்பர்களை உருவாக்கி வருகின்றது" என அமெரிக்காவை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ரெய்லர் மார்ஷல் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் தனது காலை உறுதியாக பதிக்கும் ஆரம்ப நடவடிக்கைகளை 2007 ஆம் ஆண்டு சீனா மேற்கொண்டிருந்தது. தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை பகுதியில் 2007 ஆம் ஆண்டு ஒரு பில்லியன் டொலர்கள் முதலீட்டில் துறைமுகம், எண்ணை சுத்திகரிப்பு ஆலை, விமானநிலையம் போன்றவற்றை நிர்மாணிக்கும் பணிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது. இதன் முதற்கட்ட பணிகள் எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை கப்பல்கள் தரித்துச் செல்லும் பாரிய துறைமுகமாக மாற்றும் நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகின்றது.

சீனாவின் இந்த நகர்வின் நோக்கம் தெளிவானது. தென்னிலங்கையின் அம்பாந்தோட்டை பிரதேசம் சீனாவின் வர்த்தகக்கப்பல்கள் பயணிக்கும் கிழக்கு மேற்கு இந்து சமுத்திர கடற்பாதையில் இருந்து ஆறு கடல்மைல் தொலைவில் உள்ளது. மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து சீனா கொள்வனவு செய்யும் மசகு எண்ணைகளை கொண்டு செல்லும் கப்பல்களில் 70 விகிதமானவை இந்த பாதை வழியாகவே பயணிப்பதுண்டு.

ஈரானிடம் இருந்து சீனா தனக்கு தேவையான எரிபொருட்களில் 15 விகிதங்களை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடன் போர் ஒன்று ஏற்படுமாக இருந்தால் தனது கப்பல் பாதைகள் தாக்கப்படுவது இலகுவானதாக இருக்கும் என்ற அச்சம் காரணமாக தனது கடற்படையினை நவீனமயப்படுத்தி வரும் சீனா துறைமுகங்களின் வசதிகளையும் தனது கடற்பாதையில் அதிகரித்து வருகின்றது. பாகிஸ்தானில் உருவாக்கியுள்ள கெடார் (கணிணூt ணிஞூ எதீச்ஞீச்ணூ) துறைமுகத்தை போன்றதே அம்பாந்தோட்டை துறைமுகம்.

சீனாவின் இந்த நகர்வுகளுக்கு மாற்றீடாக மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னிறுத்தி அமெரிக்காவும், இந்தியாவும் இலங்கையில் கால்பதிக்க முற்பட்டு வருகின்றன. இந்தியா ஒரு மருத்துவக்குழுவை புல்மோட்டைக்கு அனுப்பியுள்ள போது, அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் வன்னியில் உள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்ற முயன்றிருந்தது. ஆனால் அது கைகூடவில்லை.

இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகின் கையிருப்பு பணமாக தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க டொலர் மாற்றப்பட வேண்டும் என சீனாவின் மத்திய வங்கியின் தலைவர் சோவூ சியா ஒசூவான் தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது. இந்த அறிக்கையானது இரு நாடுகளுக்கு இடையில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதுடன், தற்போது சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தில் மேலும் பின்னடைவை தோற்றுவித்துள்ளது. இது அமெரிக்க டொலரின் உறுதித்தன்மை தொடர்பாக மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

போர் மற்றும் அணுவாயுத அச்சுறுத்தல்கள் தொடர்பாக மத்திய கிழக்கு நாடுகளுடன் அமெரிக்கா தனது காலத்தை செலவிட்ட போது சீனா 21 ஆவது நுõற்றாண்டின் புதிய சக்தியாக கிழக்கு ஆசியாவில் தன்னை கட்டியெழுப்பி வந்திருந்தது. அமெரிக்காவின் நீண்டகால நண்பர்களையும் தன்பக்கம் இழுக்கும் முயற்சிகளையும் அது மேற்கொண்டு வருகின்றது.

சீனா தனது ஆதிக்கத்தை கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசுபிக் பிராந்தியம் என விஸ்த்தரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் முக்கிய மாற்றமாகும். பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, அவுஸ்திரேலியா வரை அதன் உறவுகள் வலுப்பெற்று வருவதாக சீனா தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ரெய்லர் மார்ஷல் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த நாடுகள் அனைத்தும் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை பேணிவந்த நாடுகள். சீனாவுக்கும் பிலிபைன்ஸ் இற்கும் இடையில் உள்ள உறவுகள் மிகவும் விரைவாக வளர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் கொண்டுள்ள உறவுகளை போல சீனா கிழக்கு ஆசிய நாடுகளுடன் தனது உறவுகளை பலப்படுத்த முனைந்து வருவதுடன் தென்கிழக்கு ஆசியாவிலும் காலுõன்றி வருகின்றது.

ஈரானிடம் இருந்து தனது எரிபொருள் தேவையில் 15 விகிதங்களை பெற்றுவரும் சீனா அதற்கு ஆதரவாக குரல்கொடுத்தும் வருகின்றது. கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் பிரசன்னம் ஜப்பான், தாய்வான் மற்றும் தென்கொரியாவை முதன்மைப்படுத்தியே அமைந்துள்ளது. சீனா அமெரிக்காவுடன் நேரடியாக மோதுவதை தவிர்த்து வருகின்ற போதும், சூடான், மியான்மார் போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தையும், இராஜதந்திர உறவுகளையும் சீனா வலுவாக பேணிவருவது இரு நாடுகளுக்கும் இடையில் விரிசலை தோற்றுவித்துள்ளது.

மனித உரிமை மீறல்களில் இந்த இரு நாடுகளும் மிகவும் மோசமான நிலையை கொண்டிருக்கின்றன என்பது அமெரிக்காவின் வாதம். தற்போது இந்த கூட்டணியில் இலங்கையும் இணைந்துள்ளது. ஆனால் சீனாவின் குறிக்கோள் தெளிவானது. அதாவது அமெரிக்காவின் சக்தியின் வலுவை இந்த பிராந்தியத்தில் குறைப்பதே அதன் பிரதான நோக்கம். அதனை உறுதியான வர்த்தக உடன்பாடுகள் மற்றும் மென்மையான இராஜதந்திர நகர்வுகள் மூலம் சீனா சாதிக்க முயன்று வருகின்றது.

சீனாவின் முக்கிய நகர்வுகள் மூன்று திசைகளில் உள்ளன. கிழக்காக ஜப்பான் வரையிலும், மேற்காக இந்திய உபகண்டம், தெற்காக வியட்னாம் வரையிலுமே இந்த நகர்வுகள் முனைப்பு பெற்று வருகின்றன. சீனாவின் இந்த நோக்கங்களை புரிந்து கொண்டதனால் தான் அமெரிக்கா வியட்னாமுடன் தனது உறவுகளை வலுப்படுத்த தற்போது முயன்று வருகின்றது. வியட்னாம் படையினருக்கு ஆங்கில கல்வி வசதிகளை அது ஏற்படுத்தி கொடுத்துள்ளதுடன், 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்திலும் தனது உதவிகளை அமெரிக்கா ஆசிய பிராந்தியத்தில் அதிகரித்திருந்தது.

ஆனால் தற்போது தோன்றியுள்ள பொருளாதார வீழ்ச்சியும் பல வழிகளில் உளவியல் தாக்கங்களை இந்த பிராந்தியத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து கொள்கை வகுப்பாளர்கள் அமெரிக்கா, சீனா தொடர்பான தமது பார்வைகளை மீள்பரிசீலினை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்து சமுத்திர பிராந்தியத்தை பொறுத்தவரையிலும் தற்போது இலங்கை முற்றுமுழுதாக சீனாவின் ஆளுமைக்குள் வந்துவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர். மியன்மார் அரசுக்கு ஆதரவாக ஐ.நா சபையில் சீனா எடுத்த நிலைப்பாட்டை ஒத்த நிலைப்பாட்டை அது தற்போது –இலங்கை அரசுக்கு சார்பாக எடுத்து வருகின்றது.

எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்துலக மட்டத்தில் இரு கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தும் நிலையை அடைந்துள்ளது

குறிப்பிடத்தக்கதொரு திருப்பம். மறுவளமாக பார்த்தால் எல்லா நாடுகளுடனும் நழுவும் உறவைகொண்டிருந்த இலங்கை தற்போது ஏதாவது ஒரு தரப்பின் பக்கம் சாயவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேற்குலகத்தை பொறுத்தவரையில் இலங்கை தொடர்பாக அவர்கள் கணிப்பிட்டிருந்த வெளிவிவகார கொள்கைகள் எதிர்மறையாகி போகும் நிலையை அடைந்துள்ளன.

அதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் கொள்கைகளை அனுசரித்து போனதுதான். இந்தியா தனது நாட்டின் நலனைவிட தனிநபர்களின் நலன்களை முன்நிறுத்தியே இலங்கை தொடர்பான வெளிவிவகார கொள்கைகளை வகுத்திருந்தது. இந்த கொள்கைகள் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் அது தற்போது அவர்களை ஆபத்தான கட்டத்தில் நிறுத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

முன்னர் இலங்கை தொடர்பான விவாதங்கள் பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்படுவதை அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஏனைய மேற்குலக நாடுகள் எதிர்த்திருந்தன. ஆனால் தற்போது அவர்கள் அதனை ஆதரித்து வருகின்றனர். அமெரிக்காவின் இந்த நகர்வு இலங்கைக்கு நல்லதல்ல என பல அவதானிகள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனை நிறுத்தும் வல்லமையை சீனாவும், ரஷ்யாவும் எதுவரை தாக்குபிடிக்கும் என்பதும் கேள்விக்குறியானதே.

தற்போதைய நிலையில் சீனாவும், ரஷ்யாவும், எனைய ஏழு நாடுகளுமே இலங்கையுடன் நேரடியாக கைகோர்த்துள்ளன. இந்த சமயத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான நிலை தொடர்பாக கருத்தில் எடுக்குமாறு விடுதலைப்புலிகள் சீனாவிடம் கோரிக்கையை விடுத்துள்ளனர். சீனாவுக்கு விடுதலைப்புலிகள் அழைப்பு விடுத்தது இதுவே முதல்முறையாகும்.

ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் சீனா அல்லது ரஷ்யா தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினாலும், அங்கத்துவ நாடுகளிடம் வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டு (கணூணிஞிஞுஞீதணூச்டூ திணிtஞு) விவாதத்தை தொடர முடியும் என்ற ஒரு மாற்று வழியும் உண்டு. இவ்வாறான ஒரு நிலைமை ஸிம்பாப்வே தொடர்பான விவாதத்தில் ஏற்பட்டிருந்தது.

இலங்கை தொடர்பான விவாதத்தை முன்னர் ரஷ்யா எதிர்த்திருந்த போதும் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ÷ஹால்ம்ஸ் –இலங்கை விஜயம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையானது கடந்த முறை அங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கை விவாதிக்கப்பட்டதை ரஷ்யா எதிர்க்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (26) இலங்கை தொடர்பான விவாதம் ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்டிருந்தது. எல்லா உறுப்பினர்களும் தமது கருத்துக்களை முன்வைக்கலாம் (ஐணtஞுணூச்ஞிtடிதிஞு ஞீடிச்டூணிஞ்தஞு) என்ற ஒரு திட்டத்தின் அடிப்படையில் –இலங்கை தொடர்பான விவாதம் ஆராயப்பட்டிருந்தது.

பாதுகாப்பு சபை கூட்டமாக அது இருந்த போதும் பாதுகாப்பு சபை மண்டபத்தில் நடைபெறவில்லை என்பதுடன் பாதுகாப்பு சபையின் தலைவரும் அதற்கு தலைமை தாங்கவில்லை. இலங்கை விவகாரங்கள் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படுவதை தீவிரமாக எதிர்த்து வந்த லிபியா வேறு வழியின்றி கூட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தது.

ஏறத்தாழ 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் மிகவும் மென்மையான போக்கை கடைப்பிடித்திருந்தார்.

அவர் அரசாங்கத்தை குற்றம் சுமத்த முன்வரவில்லை.

இந்த கூட்டத்தின் முடிவில் கருத்து வெளியிட்டிருந்த ஐ.நாவுக்கான அமெரிக்காவின் பிரதித்துõதுவர் றோஸ்மேரி டிகார்லோ இலங்கை அரசு கனரக பீரங்கிகளை வைத்தியசாலைகளுக்கு அண்மையாக பயன்படுத்தி வருவதாககுற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை தொடர்பாக அனைத்துலகத்தின் நிலைமையை நோக்கும் போது சில கருத்துக்கள் தெளிவானவை. அதாவது மேற்குலகம் அரசுக்கு எதிராக அழுத்தமான கண்டனங்களை மேற்கொள்ள முன்வரவில்லை. மறுபுறம் இலங்கை ஆதரவான கூட்டணி நாடுகள் அரசுக்கு அழுத்தமான ஆதரவுகளையும் வழங்கவில்லை.

வேல்ஸிலிருந்து அருஷ்

[நன்றி - வீரகேசரி வாரவெளியீடு]

0 Comments: