அரசாங்கத் தரப்பிலுள்ள உயர்மட்டம் தொடக்கம் கீழ்மட்டம் வரை ஒரு விடயத்தை மட்டும் தெளிவாகச் சொல்கிறார்கள்.எந்தச் சக்திகள் அழுத்தங்களைக் கொடுத்தாலும் எச்சந்தர்ப்பத்திலும் யுத்த நிறுத்தம் சாத்தியப்படாது என்பதே அச்செய்தி. இதனை சர்வதேசமும் தமிழ்மக்களும் இலகுவாகப் புரிந்து கொள்வார்கள்.
இதனைப்புரிந்து கொண்டவர்கள், தம்மை அசைக்க முடியாதென்கிற இறுமாப்பும் அரசிடம் உண்டு. ஒரே கல்லில் இரண்டு விடயங்களைத் தீர்க்கலாமென அரசு எடுத்த முடிவே, அதி தீவிர யுத்தமாக பரிணமித்துள்ளது.
பன்னாட்டு உயர் நிறுவனங்களின் வேண்டுகோள்களை மறுதலித்து மக்கள் அழிந்தாலும் விடுதலைப் புலிகளை அழித்தே தீருவேனென அடம் பிடிக்கும் அரசின் தீவிரப் போக்கில் புதைந்துள்ள உள் காரணிகளைப் புரிந்து கொண்டால் சமகால களநிலைமையை தெரிந்து கொள்ளலாம்.
புலி அழிப்பு நடவடிக்கையானது பெரும்பான்மையான நாட்டு மக்களை கிளர்ந்தெழச் செய்து அரசியல் இலாபத்தினை அதிகரிக்கும் கருவியாகத் தொழிற்படும். அதன் விளைவினால் பெற்ற அறுவடையை அண்மைய மாகாணசபைத் தேர்தல்களில் காணக் கூடியதாகவிருக்கிறது.
அதேவேளை யுத்தத்தை நடத்தியே தீர வேண்டிய, இன்னொரு பலமான காரணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதுதான் அதலபாதாளத்தை நோக்கி, மிக வேகமாக சரிந்து செல்லும் நாட்டின் பொருளாதார நிலைமையும் அதனை சீர் செய்ய அல்லது அந்த அழிவிலிருந்து தற்காலிகமாக மீட்சிப் பெற முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கான முதலீடுமாகும்.
ஆனாலும் வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 16 ஆயிரம் கோடி ரூபாய், பொருளாதார சீர்குலைவை எவ்வாறு மாற்றியமைக்கும் என்கிற கேள்வி எழலாம்.
மாக்சிஸ சித்தாந்தத்தின் அடிப்படையில் சகல விதமான சமூக மாற்றங்களுக்கும் பொருளாதார அடித்தளமும் அதனோடு இணைந்த உற்பத்தி உறவுகளும் காத்திரமானதொரு அசைவியக்கக் காரணியாக அமைந்தாலும் இன முரண் நிலைச் சிக்கலின் வரலாற்று ரீதியிலான தொடர் தாக்கங்களும் பெரும் பங்கினை அதில் வகித்து வருவதனை ஒதுக்கி வைக்க முடியாது.
இவ்வகையான முரண்பாட்டில் சிறுபான்மை இனத்துவதேசியம் வகிக்கும் பங்கினை அகற்ற பெருந்தேசிய இனவாதம் மேற்கொள்ளும் யுத்த முதலீடுகள் இறுதி வெற்றியை அளிக்குமென்கிற நம்பிக்கையில் குவிக்கப்படுகின்றன.
ஆகவே சர்வதேச சமூகத்தின் சம்பிரதாயபூர்வமான இராஜரீக சொல்லாடல்களை பெருந்தேசிய யுத்த முதலீட்டாளர்கள் அடியோடு நிராகரிப்பதை இதனடிப்படையில் புரிந்து கொள்ளலாம்.
எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் திறைசேரியில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு கீழ் நிலைக்குச் சென்றாலும் யுத்தத்தை நிறுத்த முடியாத திரிசங்கு நிலையில் அரசாங்கம் இருப்பதை உணரலாம்.
யுத்தத்தில் கிடைக்கும் வெற்றி, தற்போது இழந்துவரும்நாட்டின் பொருளாதாரத்தை மீளவும் கட்டியமைக்கக் கூடிய சர்வதேச முதலீடுகளை திரும்பவும் கொண்டு வருமென்கிற நம்பிக்கையிலேயே தற்போதைய தீவிர யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டு நவம்பர் வரையான பொருளாதார நிலைவரம் குறித்து கிடைக்கப் பெறும் புள்ளி விபரங்களின்படி இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 12 பில்லியன் டொலர் களை எட்டியுள்ளது. வெளிநாட்டு, உள்நாட்டு, மொத்தக் கடன், ஏறத்தாழ 30 பில்லியன் டொலர் அத்தொகையானது இலங்கையின் மொத்த தேசிய வருமானத்தின் 75 வீதமாக இருப்பதாகவும் புளூம்பேர்க் (ஆடூணிணிட்ஞஞுணூஞ்) என்கிற பொருளியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
வெளிநாட்டு இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய தொகை 12 பில்லியன் டொலர்களாக இருந்தபோதிலும் அக்கடனை கட்டி முடிக்காமல் மேலதிகமாக அத்தியாவசியப் பொருட்களை இறக்க முடியுமாமென்கிற கேள்வியும் எழுகிறது.
அண்மையில் மலேசியா நிகாரா வங்கி (ஆச்ணடு Nஞுஞ்ச்ணூச்) 200 மில்லியன் டொலர்களை, இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கியுள்ளது. அத்தோடு வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களிடமிருந்து 500 மில்லியன் டொலர் நிதி திரட்டும் நடவடிக்கைகளும் அரசால் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்கலாம்.
1978 இல் ஜே. ஆரினால் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் எதிர்வினைச் செயற்பாடுகள், இன்றும் ஆழமான தாக்கங்களை சமூக கட்டமைப்பின் பல படி நிலைகளில் ஏற்படுத்துவதை காணக் கூடியதாகவிருக்கிறது.
சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் சென்றால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு சர்வதேச நாணயச் சபை என்கிற ஐ.எம்.எவ் (ஐMஊ) உதவி புரியுமென்ற பேரத்தால் 2002 இல் ஒப்பந்தமொன்றிற்கு சிங்கள தேசம் இறங்கி வந்தது.
இன்றும் அதேவிதமான அழுத்தங்களை மேற்குலகு இயக்கும் சர்வதேச நாணயச் சபை கொடுத்த வண்ணமுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் தமது மத்திய பன்னாட்டு நாணயச் சேமிப்பிலிருந்த நிதியைப் பயன்படுத்தாமல் நாணய மதிப்பிறக்கம் செய்த ரஷ்யா, வியட்னாம் போன்ற நாடுகளின் செயற்பாட்டினை சர்வதேச நாணயச் சபை உதாரணமாகக் காட்ட முற்படுகிறது.
அதாவது இலங்கையின் அந்நிய நாணயக் கையிருப்பு மிகவும் குறைவடைந்த நிலையில் அதன் நாணய மதிப்பினை 20 வீதத்தால் குறைத்தால் மீட்புப் பணியில் (ஆச்டிடூ ணிதt) ஈடுபட நாம் தயாரென சர்வதேச நாணயச் சபை கூறுவதை இதுவரை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனாலும், சர்வதேச நாணயச் சபையின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஒருவித சமரசத்திற்கு அரசாங்கம் செல்ல முயற்சிப்பதாக சில செய்திகள் கூறுகின்றன. ஜீ.எஸ்.பீ. பிளஸ் என்கிற ஆடை ஏற்றுமதி வரிச் சலுகை ஊடாக இத்தகைய நிர்பந்தங்கள் மேற்குலகால் சுமத்தப்படுகின்றன.
இலங்கையைப் பொறுத்தவரை எண்ணெய் இறக்குமதிக்கு மட்டும் இரண்டு பில்லியன் டொலர்கள் தேவைப்படுகிறது. முக்கிய ஏற்றுமதி பண்டப் பொருளான தேயிலையின் விலையும் சர்வதேச அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக பொருளாதார நிபுணர்கள் கூறுவது போன்று ஒரு டொலரின் நாணயப் பெறுமதியை 130 ரூபாவாக அரசு மதிப்பிறக்கம் செய்தால் ஏற்றுமதியால் கிடைக்கப் பெறும் வெளிநாட்டு நாணய சேமிப்பின் தொகை குறைவடையும்.
ஆகவே, ஆசியாவின் பொருளõதார வல்லரசான சீனா அல்லது ஜப்பானிடமிருந்தே பொருளாதார மீட்பிற்கான நிதியை அரசு பெற வேண்டும், இல்லையேல் 2001 இல் ரணில் செய்தது போன்று சர்வதேச நாணயச் சபையின் உதவியை நாட வேண்டும். மசகு எண்ணெயின் விலையில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டாலும் அதன் பலனை அனுபவிக்கக் கூடிய வகையில் உலகப் பொருளாதார நிலைமை சாதகமாக இல்லை என்கிற விடயத்தை அண்மையில் நடைபெற்ற வெளிவிவகார அமைச்சர்களுக்கான சார்க் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
பெரும்பாலான சார்க் கூட்டமைப்பு நாடுகள், உலக வல்லரசாளர்களின் தயவிலேயே தமது அரசாட்சியை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜனாதிபதியின் ஆதங்கத்தினை இக்கூட்டமைப்பு நாடுகளõல் தீர்க்கமுடியாது. அதனைப் பரிசீலிக்கக்கூடிய நிலையிலும் அவர்கள் இல்லை.
அண்மையில் 53 ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டு 54 ஆயிரம் பேர் வேலை இழந்ததாகக் கூறப்படுகிறது. அதில் சீமெந்து, ஆடை உற்பத்தி, இரத்தினக் கல் ஏற்றுமதி மற்றும் நிதி முகாமைத்துவ துறைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களமுனையில் ஆளணி இழப்பும், வேலைத் தளங்களில் தொழிலாளர் வெளியேற்றமும் நாட்டின் உண்மை நிலைவரத்தை மக்களுக்கு உணர்த்துகிறது என்றே கூற வேண்டும்.
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியின் மறுதாக்கம், மத்திய கிழக்கு வரை ஆழமாக ஊடுருவிச் செல்வதால் மத்திய கிழக்கிற்கான இலங்கையின் மனிதக் கூட்ட ஏற்றுமதி குறைகின்றது.
இனி தொழில் வாய்ப்பிற்கான ஒரே தெரிவாக அரச பாதுகாப்புத் துறையே
விளங்கப் போகிறது. யுத்த முதலீட்டின் ஒரு பகுதியான மனித வளத்திற்குக் குறைவில்லாமல் செய்துவிட்டது இந்த உலகப் பொருளாதார நெருக்கடி நிலைமை.
இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களைச் சந்தித்த பன்னாட்டு குழுவில் அங்கம் வகித்த ரஷ்யப் பிரதிநிதி யுத்தம் வெற்றி பெற வேண்டுமென ஆசீர்வதித்ததோடு இந்த யுத்தம் முடிவடைந்ததும் தமது நாடு பாரிய பொருளாதார முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ளுமென உத்தரவாதம் அளித்துள்ளார்.
இத்தகைய இனிப்பான செய்திகளைத்தான் இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. கடந்த வருடம் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி உதவியை வழங்கிய சீனாவும் ஆயுதக் கொள்வனவிற்காக பல மில்லியன் டொலர்களை கொடுத்துதவிய இந்தியாவும் யுத்தம் முடிந்ததும் பங்குச் சண்டையில் ஈடுபடும் வாய்ப்பு இருப்பதால் மேற்குலகின் முதலீடுகளையே அரசு அதிகம் எதிர்பார்ப்பதாக ஊகிக்கலாம்.
ஆனாலும் யுத்தத்தில் இறுதி வெற்றி பெற்றால் மட்டுமே, வெளிநாட்டு முதலீடுகள் குவிந்து ஆட்சியதிகாரத்தைத் தக்க வைப்பதற் கேற்ப நாட்டின் பொருளாதாரம், ஸ்திரமடையுமென அரசு கருதுகிறது.
ஆகவே கரணம் தப்பினால் மரணம் என்கிற இறுதிக் கட்டத்திலுள்ள அரசாங்கம் எவ்விலை கொடுத்தாவது யுத்தத்தில் வெற்றி பெற வேண்டுமென துடிப்புடன் செயற்படுகிறது.
யுத்த நிறுத்தமானது, முதலுக்கே மோசமாகி விடலாம் என்று கருதும் அரசாங்கம் எவர் கருத்தையும் செவிமடுக்கப் போவதில்லை.
இலங்கையின் வெளிநாட்டு வணிகத்தை முடக்குவதில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பெரும் பரப்புரைப்போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்கள். வெளிநாட்டு நாணயச் சேமிப்பில் கணிசமான அளவிற்கு இப் போராட்டம் பாதிப்பை ஏற்படுத்தும்.
உணவுப் பொருட்களை புலம்பெயர் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தேசிய உற்பத்தி நிறுவனங்களில் பாரிய தாக்கத்தினை இது உருவாக்கக் கூடும்.
தேசிய முதலாளித்துவ கட்டமைப்பின் சிதைவு பன்னாட்டு ஏகாதிபத்திய முதலீடுகளை வரவழைக்கும் செயற்பாடுகளை ஊக்குவிக்குமென்பதை உணர்ந்தாலும் யுத்த வெற்றியே அதனையும் நிறைவேற்றுமென அரசாங் கம் நம்புகிறது.
ஆகவே யுத்தத்தை பொருளாதார மீட்சிக்கான ஒரே பாதையாக தெரிவு செய்துள்ள அரசாட்சியில் மனித உரிமை ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென உலக சமூகத்தை நோக்கி வேண்டுகோள் விடுப்பதால் பலன் ஏதும் உண்டா? ஆடு நனைகிறதென்று ஓநாய்களிடம் முறையாடக்கூடாது.
நன்றி -
இதயச்சந்திரன்
வீரகேசரி வாரவெளியீடு
Sunday, March 8, 2009
யுத்த வெற்றியில் தங்கியிருக்கும் அரசின் பொருளாதார மீட்சி
Posted by tamil at 5:25 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment