Sunday, March 29, 2009

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு குறுக்கே நிற்பது யார்?

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு இப் போது சர்வதேச ரீதியில் பேசப்படும் வலியுறுத் தப்படும் ஒரு விவகாரமாகி விட்டது.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப் பட வேண்டும். இராணுவத்தீர்வு சாத்திய மில்லை என்று பல்வேறு நாடுகள் இலங்கை அரசாங்கத்தை அழுத்திப் பிடிக்கத் தொடங்கி விட்டன.

இந்தக் கட்டத்தில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது? அரசாங்கத் துக்கா? விடுதலைப் புலிகளுக்கா? சர்வதேச சமூகத்துக்கா? அல் லது வேறு அரசியல் கட்சிகளுக்கா என்ற கேள்வி எழுகிறது. அரசியல் தீர்வு காண்பதற்கு குறுக்கே நிற்பது யார் என்ற கேள்விக்கு தமிழ் மக்களிடத்தில் பதில் கேட்டால் அரசாங்கத்தின் மீதே அவர் கள் குற்றச்சாட்டை முன்வைப்பார்கள்.

அதேவேளை சிங்கள மக்கள் மத்தியில் கேட்டால் அவர்கள் புலிகள் மீது குற்றச் சாட்டை முன்வைக்கக் கூடும். இந்தக் கேள்விக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன் றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்.

"ஏசியன் ரிபியூன்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ""தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்து ழைப்பு வழங்காததால்தான் இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வு குறித்துத் தீர்மானிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தொடர்ச்சியாக அழைப்புகள் விடுக்கப் பட்டபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தவறிவிட்டது.

இந்தநிலையில் எப்படி அதிகாரப் பகிர்வு யோசனை குறித்து நாம் திட்டமிட முடியும்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மூன்று தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகளின் கட்டளையின் பேரில் அவர்கள் அதற்கு வெளிப்படையாகவே பதிலளிக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்துடன் எதுவும் பேசக் கூடாது என்ற பிரபாகரனின் கடும் உத்தரவி னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் கள் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஜனாதிபதி என்ற வகையில் நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச அழைக்கி றேன்.

அவர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களிடமும் சர்வதேச சமூகத்திடமும் என்னிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்'' என்றுகூறியுள்ளார். அத்துடன் ""தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளே அவர்களது யோசனையுடன் வந்து எம்முடன் பேசுவதற்கு விருப்பமில்லாமல் இருந்தால் அனைத்துத் தமிழ் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டமொன்றை எம்மால் எப்படி ஏற்படுத்த முடியும்?'' என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்கும் திட்டம் இப்போதுகூட அரசாங்கத்திடம் இல்லாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குற்றம்சாட்டத் தொடங்கியிருக்கிறது.

இதே மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திடம் ஜெனிவாவில் நடந்த இறுதிச் சுற்றுப் பேச்சின் போது அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வையுங்கள் பேசலாம், என்றனர் புலிகள்.

அப்போது அரசதரப்புப் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்வுத் திட்டத்தைத் தயாரித்துக் கொண்டு வருகிறோம் என்று கூறிவிட்டு வந்தனர்.

ஆனால், இன்று வரையில் இனப்பிரச் சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை முன்வைக்க முடியாத நிலையில் தான் அரசாங்கம் இருக்கிறது. தமது தரப்பு பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காக, தமிழர் தரப்பே அரசியல் தீர்வுக்கு தடையாக இருப்பதான குற்றச் சாட்டை அரசாங்கம் இப்போது முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.

புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் தமிழ்மக்களுக்கு புதியதொரு தலைமையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்றும் அது புலிகள் சார்பில்லாத ஒன்றாக இருக்க வேண் டும் என்றும் அமைச்சர் டியூ குணசேகர அண் மையில் கூறியிருந்தார்.

இன்னொரு புறத்தில் புலிகள் சார்புள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் பேச வராததால்தான் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க முடியவில்லை என்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேவேளை நாட்டில் இனப்பிரச் சினையே கிடையாது. பயங்கரவாதப் பிரச்சினை தீர்ந்தால் சரி என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அப்பால் அதிகார பரவலாக்கம் öசய்ய முடியாது என்று சில அமைச்சர்கள் கூறிவருகின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அரசியல்தீர்வுக்குத் தடையாக இருப்பதாகக் குற்றம்சாட்டிய பின்னர் அவரது ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா போன்றோர் இன்னொரு கருத்தை தெரிவித்திருக்கிறார் கள்.

முதலில் புலி களை அழித்து பயங்கர வாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். அதற்குப் பின் னர் தான் அரசியல் தீர்வு பற் றிப் பேசலாம் என்று அவர்கள் கூறியிருக் கிறார்கள். அதாவது போர் முடியும் வரை அரசியல் தீர்வு பற்றி எந்தப் பேச்சும் கிடையாது என் பதே அவர்களின் கருத்து.

இதில் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியின் ஆலோசகர், சகோதரர். அதிகாரம் மிக்க அமைச்சர்களைவிட சக்திவாய்ந்தவராக இவர் கருதப்படுகிறார். அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர். அவருக்குத்தான் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேட்டியானது அரசாங்கம் இப்போதே அரசியல் தீர்வுக்குத் தயாராக இருப்பது போன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் அதற்குக் குறுக்கே இருப்பது போன்ற தொனியையும் வெளிப்படுத்துகிறது. அதேவேளை பசில் ராஜபக்ஷ மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரின் கருத்துக்கள், போர் முடிவுக்கு வராமல் அரசியல் தீர்வு பற்றிப் பேச முடியாதென்ற தொனியில் இருக்கின்றன. ஆக மொத்தத்தில் அரசாங்கத் தரப்புக்கே அரசியல் தீர்வு பற்றிய தெளிவான முடிவு இல்லை.

குழப்பத்தின் உச்சியில் இருக்கின்ற அரசாங் கத் தரப்புக்கு வெளியுலக நெருக்கடிகள் வந்த தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது பழி போட்டுத் தப்பிக்கும் எண்ணம் வந்துவிட்டது போலும்.

சர்வதேச சமூகத்திடம் இருந்து இப்போது அரசியல் தீர்வு பற்றிய கருத்துகள் அதிகளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் கூடுதல் அதிகாரங்களுடனான அரசியல் தீர்வின் மூலமே இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண முடியும் என்று அண்மையில் கூறியிருக்கிறார்.

ஆனால், இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்கத் தயாராக இல்லாத அரசாங்கம் அதற்கான பழியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது போட்டுவிட்டு தான் தப்பித்துக் கொள்ள முற்படுகிறது.

அரசாங்கம் முன்வைக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் நியாயமானதாகவோ, தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதாகவோ இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கீகாரத்துக்காக காத்து நிற்கத் தேவையில்லை. ஏன் புலிகள் கூட வேண்டியதில்லை. அரசாங்கமே அதைச் செய்து விட்டுப் போகலாம். ஆனால் தமிழ்மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நியாயமான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் துணியவில்லை.

அரசியல் தீர்வு பற்றிய பேச்சு என்று காலத்தை இழுத்தடிக்க இப்படியான நடைமுறைகள் அரசாங்கத்துக்குத் தேவைப்படுகிறது. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் என்ற குண்டுச் சட்டிக்குள் தான் அரசியல் தீர்வு என்ற குதிரையை ஓட்டுவதென்று தீர்மானித்து விட்டது அரசாங்கம்.

இதற்கு அப்பால் அரசாங்கம் வரத் தயாராக இல்லாத நிலையில் அரசியல் தீர்வு பற்றிப் பேச வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ, தமிழர் தரப்பில் இருந்து வேறொருவரையோ வருமாறு அழைப்பதில் அர்த்தமில்லை. அரசாங்கம் அரசியல் தீர்வு காண்பதென்று உறுதியான முடிவை எடுத்தால் முதலில் 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வைத் தேடுவதற்குத் தயாராக வேண்டும். நியாயமான அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக வேண்டும். இந்த மாற்றங்கள் ஏதும் நிகழாமல் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதென்பது, எந்தக் காலத்திலும் முடியாத ஒன்றாகவே இருக்கும்.
நன்றி
- வீரகேசரி -

0 Comments: