வன்னியில் நடைபெறும் போர் எப்போது ஓயும் நிறுத்தப்படும் என்ற ஆதங்கமும் கேள்வியும் அங்கு அவலமுறும் தமிழ் மக்களின் மனங்களில் நிமிடத்துக்கு நிமிடம் எழுந்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகப் போர் பெரும் பரிமாணத்தில் வேகம் கொண் டதால் தமது இன பந்துக்கள் மாண்டு போனது போன்ற கதி தங்களுக்கும் நேர்ந்திடுமோ என்ற ஏக்கத்துடனேயே அவர்கள் ஒவ்வொரு விநாடியையும் கழித்துக் கொண்டி ருக்கிறார்கள்.
அவர்கள் மட்டுமா? அவர்களுக்குச் சற்றுத் தொலை வாக குடாநாட்டிலும், ஏனைய தமிழ்ப் பிரதேசங்களிலும், ஏன் தென்னிலங்கையிலும் வாழும் தமிழர்களும் தமது இரத்த உறவுகளுக்கு என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்ற அச்ச உணர்வுடனேயே பொழுதைக் கழிக்கின்றனர்.
இந்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து உலகத்தின் பல் வேறு நாடுகளிலும் வாழும் வன்னி மக்களின் புலம்பெயர் உறவுகளும் தங்கள் இரத்தத்தின் இரத்தங்களுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று ஏங்கித் தவித்தவாறே உள்ளனர்.
தமிழகத்தின் தொப்புள்க்கொடி உறவுகளும், போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டு, ஈழத்தமிழர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதிலேயே ஈர்க்கப் பட்டுள்ளனர்.
இந்த அனைத்துத் தரப்பினரதும் விநாடி தவறாத பிரார்த்தனை, போர் நிறுத்தம் ஒன்று உடனடியாகக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதேயாகும். ஆனால் அதற்கு வழி செய்யக் கூடிய மனிதாபிமான அலகில் ஒரு துளியையேனும் இலங்கை அரச தரப்பில் காணமுடிய வில்லை.
ஐ.நா.போன்ற சர்வதேச அமைப்புகளும் செல்வாக் குள்ள வெளிநாடுகளும் மனிதாபிமானத்தில் மனதூன்றி வன்னியில் மனிதப் பேரழிவை நிறுத்துமுகமாகப் போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்டு வருகின்றன. ஆனால் அந்தக் கோரிக்கைகளைக் காதில் போட்டுக் கொள்ளாத போக் குடன், அரசு விட்டேத்தியாகச் செயற்பட்டுவருகிறது.
மனித உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படு கின்றனவே என்று மனித நேயத்தின் பாற்பட்டு பல திக்குகளில் இருந்தும், பல வட்டகைகளில் இருந்தும் போர் நிறுத்தக் கோரிக்கைகள் வரத் தொடங்கியுள்ளன; வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்தக் கோரிக் கைகளை விடுப்பவர்கள் "வேலையற்றவர்கள்" என்ற கணிப்போடு, அவற்றைக் கருத்தில் எடுக்காமல் அரசாங் கம் நாள்களைக் கழித்துக் கொண்டிருக்கிறது. காலத்தைப் போக்கி உயிரிழப்புகளை அதிகரிக்க வழிசமைத்துக் கொண்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன நேரடியாகவும் வெளிப்ப டையாகவும் உத்தியோகபூர்வமாகவும் போர்நிறுத்தக் கோரிக்கை விடுத்துள்ளன.
உத்தியோகப் பற்றற்ற முறையிலும் வெறும் வாய் மொழியாகவும், மறைபொருளாகவும் பெயருக்கு போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவும் கேட்டுக் கொள்கிறது.
ஆனால், அரசாங்கம் அவற்றை உள்வாங்குவதாக இல்லை. தான் நினைத்த காரியத்தை ஒப்பேற்றும்வரை எவர் சொன்னாலும் மசியப் போவதில்லை என்ற போக்கி லேயே தொடர்ந்து செல்கிறது.
போர் நிறுத்தம் குறித்த கோரிக்கைகள் காற்றில் வந்து கலந்ததும், அரசு சார்பில் ஒவ்வொருவராக நிலைப் பாட்டை நியாயப்படுத்தும் "சித்தாந்தங்களை" அவிழ்த்து விடுகிறார்கள்.
தமது நிலைப்பாடு சரியானதே என்றும், எந்தக் கோரிக்கையையும் தமது "இல்லை" என்ற கண்ணாடியை அணிந்து கொண்டே பார்க்க முடியும் என்ற வகையிலே அவர்கள் செயற்படுகிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் போர் நிறுத்தக் கோரிக்கை எந்த விதத்திலும் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாது. விடுதலைப் புலிகளைக் கருத்திற் கொண்டே அந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருக்கிறது என்று எதிர் மறையாக கூறியிருக்கிறார் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித @ஹாகன்ன.
முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள மக்களை அவர்களின் விருப்பப்படி வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று ஒன்றியம் புலிகளைக் கேட்டு வந்தது. அதன் வெளிப்பாடே இப்போதைய போர் நிறுத்தக் கோரிக்கை என்றும் அவர் அர்த்தம் பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகளை மெதுவாக முன்னெடுத்து வருகிறது. இது கிட்டத்தட்ட போர் நிறுத்தம் ஒன்றுக்குச் சமமானதே என்று வாய்ப்பாட்டை சமன்ப டுத்துகிறார் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனா.
மக்களைப் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான பாதைகளை பிரகடனப்படுத்தி உள்ளோம். மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். சிவிலியன்களைப் பாதுகாக்க ஏதாவது செய்யப்பட வேண்டும் என்ற ஒன்றியத்தின் கோரிக்கை இப்போது செயற்பாட்டில் உள்ளது. அதனைப் போர் நிறுத்தம் என்று கூறாவிட்டாலும் நாம் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கை அதற்குச் சமமானது என்று நீண்டு செல்கிறது ஊடக அமைச்சரின் வியாக்கியானம்.
அரசாங்கம் நினைத்தால் 48 சதுர கிலோ மீற்றர் பகுதியைக் கைப்பற்றிவிட முடியும். ஆனால் தற்போது இராணுவம் 100 அல்லது 200 மீற்றர் தூரத்தைக் கடப்பதற்கே சிந்திக்கிறது. காரணம் சிவிலியன்களின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை கொடுத்துள்ளமையே என்பது ஊடகத்துறை அமைச்சரின் வாதம்!
முல்லைத்தீவில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் நலன் கருதியே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நடை பெறுகின்றன என்று வெளி உலகத்தை நம்பவைக்கும் விவாத முயற்சிகள் தமிழ் மக்களின் மரணங்களைத் தவிர்க்க உதவப்போவதில்லை என்பதே உண்மை.
இந்தப் போக்கும் நிலைப்பாடும் மனித நேயத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் முரணானவை என்பதனை உணர்ந்து கொள்ளும் மனம் அரசாங்கத்திடம் பிறக்குமா?
நன்றி
-உதயன்-
Monday, March 16, 2009
வியாக்கியானங்கள் உயிர்களைக் காப்பாற்றா!
Posted by tamil at 4:26 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment