Wednesday, March 25, 2009

சிறீ அண்ணாவுடனான முற்றுப்பெறாத உரையாடல்...

காதோரம் வந்த செய்தி பொய்யாகிப் போகாதோ... என்ற தாயகப் பாடல் தற்போது எனக்கு மிகப் பொருத்தமாகவே அமைகிறது.

'செய்தி அறிஞ்சனிங்களோ? சிறீ அண்ணா வீரச்சாவடைந்திட்டார்." என மறுமுனையில் பேசிய குரல் ஓய்வதற்கிடையில், எனது இதயம் தகர்ந்து போவது போல் உணர்கிறேன்.

ஆம்! நான் மிக மிக ஆழமாக நேசித்த, எனது உடன்பிறாவாச் சகோதரன் அண்ணன் சிறீ, எம்மை விட்டு, எமது தேசத்தை விட்டு, விடுதலைத் தீயை நெஞ்சில் சுமந்தபடி வீரகாவியமாகி விட்டார்.

நினைவுக் குறிப்புக்கள் எழுதி சளைத்துப் போன என்னால், இவரது மரணத்தின் போது மட்டும் அமைதி காக்க முடியவில்லை. இழப்புக்கள் எனக்குப் புதியவையல்ல, சோகங்களும், வேதனைகளும் எனக்குப் தாங்க முடியாதவையல்ல.

ஆனால், சிறீ அண்ணனின் மரணம் என்பது என் மனம் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாக, என் மனதை வாட்டி வதைக்கின்றது.

போரட்டமே வாழ்வாகி;ப் போன தமிழர்களின் வாழ்வில், இழப்புக்கள் நாம் விரும்பாவிட்டாலும் எதிர்பார்க்கப்படக்கூடிய ஒன்றாகவே எமது வாழ்வியலோடு கலந்து விட்ட இத்தருணத்தில், எனது மனோதிடத்துக்கே சவால் விடுகின்ற ஒரு வீரச்சாவாக சிறீ அண்ணாவின் மரணம் சம்பவித்து விட்டது.

சாவே மலிந்து போன என் தேசத்தில், இவனது வீரமரணம் மட்டும் ஏன் என்னை இப்படி உலுக்குகின்றது?

தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்களின் ஊடவியலாளர் மாநாட்டு செய்தி சேகரிப்புக்குச் சென்ற நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்களில் நானும் ஒருவனாக வன்னிக்குச் சென்றபோது, ஏப்ரல் 8, 2002 இல் எதிர்பாரதவிதமாக சிறீ அண்ணாவுடனான சந்திப்பு இடம்பெற்றது.

ஊடகவியலாளர்களின் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து அவற்றை பூர்த்தி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்த சிறீ அண்ணாவை பார்க்கும் எவரும், வியப்பை ஆழ்த்தும் ஒரு செயற்பாட்டாளனாகவே அவரை அடையாளப்படுத்துவார்கள்.

சுடுகலன்களை ஏந்திய போராளிகளை பார்த்தும், அறிந்தும் பழகிப் போன எனக்கு, சிறீ அண்ணனை ஒரு போராளியாக எண்ணிப் பார்க்க முடிந்திருக்கவில்லை.

ஊடகவியலாளர் சந்திப்பு ஏப்ரல் 10, 2002 நிறைவுபெற, நானும் வன்னி மண்ணிலிருந்து விடைபெற வேண்டிய நேரம்,

'ஹலோ பிறதர்" என்ற அழைப்பைக் கேட்டு திரும்பிப் பார்க்கிறேன். புன்முறுவலுடன் சிறீ அண்ணா.

'நான் வெளிக்கிடப் போறன், சொல்லிப் போட்டு போவம் எண்டு வந்தனான்" எனக் கூறியவாறு பாக்கர் பேனா ஒன்றைத் அன்பளிப்பாக தந்தார்.

எழுத்துக்களால் எதனையும் சாதிக்க முடியும், 'இந்தப் பேனாவை உங்கட ஆயுதமாக பாவித்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துச் சொல்லுங்கோ" எனக் கூறியபின், ஆதரவுடன் 'கவனமாய் இருங்கோ" என கூறியபடி கைகுலுக்கி, கையசைத்து விடைபெற்றார்.

அதற்குப் பிற்பாடும் சில தடவைகள் தொடர்புகொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. சந்திக்கும் பொழுதுகளி;ல் பிரதானமாக எழுத்து - ஊடகச் செயற்பாடு, தகவல் தொழில்நுட்ப அறிவியல், கிரிக்கட் இவை தொடர்பாகவே எமது கலந்துரையாடல் அமைந்திருந்தன.

பொதுவாகவே மென்மையான சுபாவமுடைய சிறீ அண்ணா எல்லோரிடத்திலும் நல்ல குணங்களையும் அவர்களிடமுள்ள திறமைகளையும் இனங்கண்டு அறிவதில் வல்லமை மிக்கவராக விளங்கினார்.

ஊடகப்பணி மீது அபரித பற்று வைத்திருந்த அண்ணன் சிறீ, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக தன்னால் முடிந்தவரை கரிசனை செலுத்துவதை என்னால் அறியமுடிந்தது.

எனது பேச்சுக்களும், எழுத்தும் சிங்கள கொலை வெறியர்களினதும், நயவஞ்சகர்களினதும் முகமூடியை வெளிப்படுத்துவதால், எனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை எடுத்துக்கூறி ஆலோசனை வழங்குவதோடு ஆதரவுடன் கண்டிக்க தவறியதுமில்லை.

நீண்ட நாளைக்குப் பிற்பாடு 2007 இன் நடுப்பகுதியில் அவரிடமிருந்து வந்த மடலில், மிகையொலி விமானங்களின் இரைச்சலாலும், குண்டுவீச்சுக்களாலும் சிறுவர்கள் உளரீதியாக பாதிக்கப்டுவது பற்றி மிகுந்ந கவலையுடன் எழுதியிருந்தார்.

பிற்பாடு, கடந்த டிசம்பர் 2008 இல் தொடர்பு கொண்டபோது, தமிழ்த் தேசியப் போராட்டத்தை எவ்வாறு சர்வதேச அரசியலுக்கும், உருவாகி வரும் உலக ஒழுங்கிற்கும் ஏற்ப நகர்த்துவது என்பது தொடர்பாக உரையாடினார்.

நான் நெருக்கடி மிகுந்ததொரு காலகட்டத்தில் இருக்கிறேன் என அறிந்ததையடுத்து 2009, பெப்ரவரி 17 ஆம் திகதி மீண்டும் தொடர்புகொண்டார்.

எனது உளவுரணை வலுப்படுத்தக்கூடிய வகையில் தைரியமூட்டிய பேச்சில், தானும், தான் சார்ந்த பணியும் எதிர்நோக்குகின்ற நெருக்கடியான சூழல் தொடர்பாக எதனையும் குறிப்பிடவில்லை.

வழக்கம் போல அவரது பேச்சில் ஒருவகை நகைச்சுவை கலந்திருந்ததோடு, உற்சாகமூட்டும் அவரது சிரிப்புக்கும் குறைவிருக்கவில்லை.

அதேவேளை, ஒரு ஊடகவியலாளன் என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு சாதகமான முறையில் சர்வதேச ரீதியாக என்னால் முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.

எமது மக்கள் மீது சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படுகின்ற இனச்சுத்திகரிப்புப் போரை சர்வதேச சமூகம் தெளிவாக புரியக்கூடிய மொழியில் எடுத்துச்செல்லப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான தொடர்பை எனக்கு ஏற்படுத்தி தருவதாக கூறிக்கொண்டிருக்கும் போது தொலைபேசி தொடர்பறுந்து போனது.

தொடர்பு மீண்டும் வரும் என நான் எதிர்பார்த்திருந்த போது, என்னுடன் கதைத்து சரியாக ஒரு மாதத்தில் அவர் வீரச்சாவடைந்து விட்டார் என்ற செய்திதான் எனக்கு வந்து சேர்ந்துள்ளது.

எப்படித் தாங்கும் என் மனது? அழுவதைத் தவிர எனக்கு எதுவும் இப்போது செய்ய முடியவில்லை. ஆனால், பெரும்பாலான எல்லாமே என்னைவிட்டு போய்க்கொண்டிருக்கின்ற இத்தருணத்தில், கண்ணீர் மட்டும் என்னை விட்டகல மறுக்கிறது.

சிறீ அண்ணாவுடனான முற்றுப்பெறாத அந்த உரையாடல் நெஞ்சை நெருடுகிறது.

ஒரு தடவை நேரடியாகக் சந்தித்த போது சிறீ அண்ணா கூறினார், 'நாளைக்கு நான் மரணமடையலாம், எனது இடம் இன்னொருவரால் நிரப்பப்படும். ஆனால், உங்கள் பணியில் எத்தகைய வெற்றிடமும் ஏற்படக்கூடாது. நீங்கள் உங்களுடைய பணியை தொடர்ச்சியாக செய்துகொண்டிருங்கோ" என.

சிறீ அண்ணாவின் தொடர்பும் இடையில் நின்று போனது. தமிழீழ விடுதலை என்ற அவரது கனவு கைகூடும் முன்னர் எமது மக்களைவிட்டு அவர் உடல் ரீதியாகப் பிரிந்து விட்டார்.

சிறீ அண்ணாவின் கனவை எம்மால் முடிந்தவரை நனவாக்கக்கூடிய ஊடகப்பணியை ஊடகவியலாளர்களான நாம் தீவிரமாக முன்னெடுப்பதற்கு திடசங்கற்பம் ப+ணுவோம்.

எமது மக்களின் சுதந்திரத்திற்காய், விடுதலைத் தீயை மூட்டி, தாயக்கனவை நெஞ்சில் சுமந்த சிறீ அண்ணாவின் கனவு மெய்ப்படும் வரை ஏந்திய என் பேனா எளிதில் விழாது.

நன்றி
சி.ரூபன்
- தமிழ்நாதம் -

0 Comments: