Monday, February 23, 2009

மீண்டுமொரு 87-க்காக காத்திருந்த இந்தியாவின் முகமும் முகமூடியும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மகிந்த நிர்வாகத்தின் யுத்த நிகழ்சி நிரலின் பின்னால் இந்தியா இருப்பதொன்றும் இரகசியமானதல்ல என்ற நிலைமை இப்போது வெள்ளிடைமலையாகிவிட்ட ஒன்று.

ஆனாலும் இந்தியா தான் அணிந்திருக்கும் முகமூடியையே முகமாக காட்டி வருகின்றது.

இந்தியாவின் ஈழம் தொடர்பான அணுகுமுறை தொடர்பில் இதற்கு முன்னரும் பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கின்றேன். அவற்றை இங்கு மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

குறிப்பாக விடுதலைப் புலிகளின் நிர்வாகப்பகுதிகளை படிப்படியாக சிறிலங்கா படைகள் கைப்பற்றியிருப்பதும், அதற்கு சகலவிதங்களிலும் இந்தியா ஒத்துழைப்பும் ஆலோசனைகள் வழங்கி வருவது குறித்துமே இங்கு நாம் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்நிலைமையானது ஏலவே இந்தியா கடைப்பிடித்து வந்த இலங்கை தொடர்பான அணுகுமுறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

முன்னர் இந்தியாவின் விடுதலைப் புலிகள் தொடர்பான அணுகுமுறை தொடர்பில் அபிப்பிராயம் தெரிவித்து வந்தவர்கள் சிலர் இந்தியா முழுமையாக விடுதலைப் புலிகளின் அழிவு குறித்து அக்கறை கொள்ளவில்லை என்றும், ஆனால் அவர்களை பலவீனப்படுத்துவது குறித்தே அக்கறை கொள்கின்றது என்ற வகையான அபிப்பிராயங்களை வெளியிட்டு வந்திருக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் முற்றிலும் இலங்கையின் அரசியலில் செல்வாக்குச் செலுத்த முடியாதளவிற்கு உருச்சிதைந்து போனால், சிறிலங்காவை கட்டுப்படுத்துவதற்கான துருப்புச் சீட்டை இந்தியா இழந்துவிட நேரலாம் என்ற அர்த்தத்திலேயே இவ்வாறான அபிப்பிராயங்களை அவர்கள் தெரிவித்திருக்கலாம்.

ஆனால் இன்று களநிலைமைகளை உற்று நோக்கினால் இந்தியா மகிந்தவின் விடுதலைப் புலிகளை பூண்டோடு அழித்தொழித்துவிட வேண்டுமென்ற முனைப்பிற்கு உறுதுணையாக இருப்பதாகவே தெரிகிறது.

குறிப்பாக 87 போன்றதொரு நிலைமைக்காக இந்தியா காத்திருப்பது போன்றே தெரிகிறது.

விடுதலைப் புலிகள் புதுக்குடியிருப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பல இராணுவ நோக்கர்களும் அபிப்பிராயப்பட்டு வரும் சூழலில்,

இந்தியாவின் சார்பில் பேசி வரும் இந்திய அதிகார மட்டத்தினர் பலரும் இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதில் முழுமையாக ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக கூறி வருவதையும் இந்த இடத்தில் நாம் நினைத்துக் கொள்ளலாம்.

இந்த இடத்தில் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பின் பின்னணி என்ன என்று பார்ப்போம்.

கடந்த மாதம் (05.01.2009) டீடீஊ தமிழ் சேவைக்கு கருத்துத் தெரிவித்த தெற்காசிய விவகாரங்களுக்கான ஜவர்கால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சகாதேவன், இந்திய கொள்கை வகுப்பு தொடர்பில் ஒரு முக்கிய விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

அதாவது, தற்போதைய நிலையில் இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழல் இல்லை என்றும், அவ்வாறனதொரு கொள்கை முன்னெடுப்பினை மேற்கொள்ளக்கூடிய அரசியல் தலைவர்கள் எவரும் இந்தியாவில் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக இப்போதைய இலங்கை தொடர்பான கொள்கைகளை அதிகாரிகளே திட்டமிடுவதாகவும் அதற்கு ஏற்பவே அனைத்தும் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதே சகாதேவன் முன்னர் கொழும்பில் பங்கு கொண்ட ஒரு கருத்தரங்கின் போது, இந்தியா தொடர்பில் குறிப்பிட்டிருந்த சில விடயங்களையும் இங்கு குறித்துக் கொள்வோம்.

தமிழீழம் உருவாகுவது இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கைகள் வலுப்படுவதை துரிதப்படுத்தி விடும் என்றவாறான அச்சங்கள் இந்தியாவிற்கு இல்லை என்றும் அது பிழையான வாதம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரம் தற்போது இந்தியா கடந்த கால அனுபவங்களில் இருந்தே இலங்கையின் அரசியல் விடயங்களை அவதானித்து வருகின்றது.

தன்னால் என்ன செய்ய முடியும் என்ன செய்ய முடியாது என்பதில் இந்தியாவிடம் தெளிவு உண்டு என்றும் கூறியிருந்தார்.

இந்த கருத்துக்கள் சில வருடங்களுக்கு முன்னர் அவரால் தெரிவிக்கப்படதாகும்.

ஆனால் இன்று, இந்தியா நடந்து கொள்வதை கருத்தில் கொண்டு பார்த்தால் அவரது கணிப்பு முற்றிலும் தவறானதாக இருக்கின்றது.

பொதுவாக இந்தியாவின் இலங்கை தொடர்பான அதிலும் குறிப்பாக தமிழர் பிரச்சினை தொடர்பில் ஆய்வுகளைச் செய்வோர், இந்தியாவின் ஆளும் கட்சியை கருத்தில் கொண்டு தமது கணிப்புக்களைச் செய்யாமல் பொது நிலையில் இந்திய மத்திய அரசு என்ற அடிப்படையிலேயே தமது கணிப்புக்களைச் செய்கின்றனர்.

இதன் காரணமாகவே அவர்களது கணிப்பு சிக்கலுக்குள்ளாகின்றது.

இந்தியாவின் மத்திய ஆட்சி காங்கிரஸ் தலைமையில் இருக்கும் போது ஈழத் தமிழர்கள் தொடர்பில் காட்டப்படும் தீவிரம், மத்தியில் ஆள்வது பாரதிய ஜனதாவாக இருக்கும் போது அதேயளவு தீவிரம் காணப்படுவதில்லை.

இந்தியா தொடர்பான மதிப்பீடுகளின் போது இந்த வேறுபாடுகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

(பாரதிய ஜனதா வந்தால் தமிழீழம் தந்துவிடுமென்பதல்ல இதன் அர்த்தம்) ஆனால் சகாதேவன் இந்திய கொள்கை வகுப்பு தொடர்பில் குறிப்பிட்;டிருக்கும் விடயம் சரியானதென்றே நினைக்கிறேன்.

சகோதேவன் வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும் தற்போது இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பினை முன்னெடுக்கும் அந்த அதிகாரிகள் நாராயணன் போன்றவர்கள் என்பதுதான் முக்கியமான விடயம்.

87 காலப்பகுதியில் ஐடீ என அழைக்கப்படும் உளவு அமைப்பான ஐவெநடடபைநவெ டீரசநயர இன் பணிப்பாளராக இருந்தவர்தான் தற்போதைய இந்திய பாதுகாப்பு ஆலோசகரான நாராயணன் என்பதையும், அன்று உள்நாட்டு பாதுகாப்பு அலுவல்களுக்கு பொறுப்பாக இருந்தவர்தான் தற்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்பதையும் குறித்துக் கொள்வோம்.

அதாவது, முன்னர் இலங்கை விடயத்தில் பங்குகொண்ட குறிப்பாக ராஜீவ் கால அரசியலை கையாண்ட அனுபவம் கொண்டவர்கள் பலர் இணைந்துதான் தற்போதைய இலங்கை யுத்தம் தொடர்பான இந்திய அணுமுறைகளை திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த பின்புலத்தில் பார்த்தால் தற்போது மகிந்த நிர்வாகத்தினால் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் உக்கிர யுத்தத்தை, நாம் மேலே பார்த்த வகையான இந்திய அதிகார வர்க்கம் ராஜீவ் கால அரசியலை தொடர்வதற்கான வாய்ப்பாக கருதுகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது.

சந்தேகம் என்பதற்கு அப்பால் இதுதான் சரியான கணிப்பென்றே நான் கருதுகிறேன்.

தற்போது தமிழகத்தை ஆளும் தி.மு.க தலைமை பற்றி குறிப்பாக கருணாநிதியின் அரசியல் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கும் நாராயணன் போன்றவர்கள் அதற்கு ஏற்பவே இலங்கை தொடர்பான கொள்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழகம் மிகவும் தீவிரமான எதிர்ப்பலைகளை வெளிப்படுத்திய போதும் அதனை கருத்தில் கொள்ளாமல் இந்திய மத்திய அரசு இருப்பதற்கு மேற்படி அதிகார மட்ட கொள்கை முன்னெடுப்பே காரணமாகும்.

இந்த அதிகார மட்டத்தினருக்கு ராஜீவின் மனைவியும் காங்கிரஸ் தலைவியுமான சோனியாவின் முழுமையான ஆதரவு இருப்பதாகவே நாம் கணிக்கலாம்.

மேற்படி அதிகாரப் பிரிவினர் சோனியாவை பயன்படுத்துகின்றனரா அல்லது சோனியா இவர்களை பயன்படுத்துகின்றாரா என்பது பற்றி தெளிவான கணிப்பினை செய்ய முடியாதுள்ளது.

இந்திரா காந்தி காலத்தில் இருந்தது போன்று றோவின் முழு இயக்கமும் சோனியாவின் கட்டுபாட்டில் இருக்கிறதா என்ற கேள்வியையும் இந்த இடத்தில் நாம் கேட்டுக்கொள்ள முடியும்.

இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்ட இந்திய வெளி விவகாரங்களுக்கான புலனாய்வு அமைப்பும், இந்திய வெளியுறவுக் கொள்கையை திட்டமிடும் அமைப்புமான றோ (சுநளநயசஉh யனெ யுயெடலணiபெ றுiபெ - சுயுறு) இந்திரா காந்தியால் உருவாக்கப்பட்டதாகும்.

1968 இல் உருவாக்கப்பட்ட றோ இந்திராவின் ஆட்சிக்காலத்தில்; அவரது ஆட்சி நலன்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இந்தியாவின் இன்றைய இலங்கை தொடர்பான அணுகுமுறையில் சோனியாவின் குடும்பம் சார்ந்த உணர்வுகள் இருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை என்றே நான் நினைக்கின்றேன்.

ஏனென்றால், இந்த அணுகுமுறை இந்தியாவின் ஒட்டுமொத்த அணுகுமுறையல்ல என்பதை தெளிவாகவே அவதானிக்க முடிகின்றது.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பாக்கிஸ்தான் இருக்கின்றது என்பது நிரூபணமான பின்னரும் கூட, ஒருவகையில் அதனை மன்னிப்பது போன்று நடந்து கொள்ளும் இந்திய காங்கிரஸ் தலைமை, விடுதலைப் புலிகள் விடயத்தில் மிகத் தீவிரமான வெறுப்பைக் காட்டுவதானது ஒருமித்த கொள்கை என்பதை விட ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பங்கள் செல்வாக்குச் செலுத்துவதையே குறித்து நிற்கிறது.

இன்றைய இந்திய அணுகுமுறையின் உள்ளடக்கமாக இரு விடயங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

ஓன்று ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் விடுதலைப் புலிகளை மீண்டுவர முடியாதளவிற்கு அழிப்பது குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரனை இல்லாதொழிப்பது.

இரண்டு 87 இல் இந்தியாவிற்கு பெருத்த அவமானத்தை குறிப்பாக இந்தியாவின் றோ செயற்பாட்டாளர்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்திய தோல்வியை சரிக்கட்டுவது.

அதாவது, ஈழத் தமிழர்களுக்கு பொருத்தமான தீர்வென அன்று ராஜீவ் முன்மொழிந்த தீர்வை மீளவும் உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்துவது.

இதில் முக்கியமான புள்ளி, விடுதலைப் புலிகளை அழிப்பதென்பது புலிகளால் கட்டமைக்கப்பட்டு பேணப்பட்டு வந்த நடைமுறை அரசை (னுந - கயஉவழ - ளவயவந) இல்லாதொழிப்பதாகும்.

குறிப்பாக நோர்வேயின் மத்தியஸ்தத்தினூடாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்தை தீர்வு எதனையும் நமது தேசத்திற்கு கொண்டு வராவிட்டாலும், பிறிதொரு வகையில் புலிகளால் பேணப்பட்டு வந்த நடைமுறை அரசை சர்வதேச மட்டத்தில் பிரபல்பயப்படுத்தியதுடன் அதற்கான இராஜதந்திர தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் பங்காற்றியிருக்கின்றது.

பேச்சுவார்த்தை காலப்பகுதியில் தமிழர் தேசம் அடைந்த நன்மை என்றும் இதனைச் சொல்லலாம்.

ஆனால் இந்த விடயத்தை இந்தியா கூர்மையாக அவதானித்திருக்கின்றது என்பதை நாம் கணித்திருந்தோமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றே.

அதேவேளை, கொழும்பின் சிங்கள ஆளும் வர்க்கமும் புலிகளால் பேணப்படும் நடைமுறை அரசை எவ்வாறாயினும் அழித்தொழித்து விட வேண்டுமென்பதில் குறியாகவே இருந்தது.

அதற்கானதொரு பொருத்தமான நபர் என்ற வகையிலேயே மகிந்தவின் பின்னால் கொழும்பு அணிதிரண்டது.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக கணிப்பிட்ட இந்தியா பொருத்தமான சந்தர்ப்பம் பார்த்து களமிறங்கியது.

சுருக்கமாக சொல்வதானால் கொழும்பு தனது நோக்கத்தை இந்தியாவின் மூலமும், இந்தியா தனது நீண்ட நாள் இலக்கை குறிப்பாக ஆளும் காங்கிரசின் இலக்கை கொழும்பின் மூலம் நிறைவு செய்வதற்கான முயற்சிதான் தற்போதைய தீவிர யுத்தம்.

ஆனால் இந்தியா தாராளமாக வழங்கி அவரும் அறிக்கைகளின் படி ஏலவே தோல்வியடைந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியுமா? இது பற்றி பிறிதொரு ஆய்வில் விரிவாக பார்ப்போம்.

நன்றி
- தாரகா -
தமிழ்நாதம்

0 Comments: