Wednesday, February 18, 2009

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும் சர்வதேச சமூகம் வகிக்கும் பாத்திரங்களும்

இன்றைய நிலையில் சோர்வடைந்து விடாமல் தெளிவுடன் இயங்க இவை போன்ற வாசிப்பு அவசியமாகும். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பங்காளிகளாகச் செயல்படுவோருக்கு இது ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்னும் ஆதர்சத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஜெவ் (Jeff) மற் (Mutt) (நல்ல பொலிசும் கெட்ட பொலிசும்) இவர்களின் செயல்பாடுகளும்

அடிப்படை உரிமைகள் சம்பந்தமாக மிறன்டாவும் அரிசோனாவும் என்னும் வழக்கில் 1966 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் திருப்புமுனையான தீர்ப்பு ஒன்றினை வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பில் அதிகாரத்தில் உள்ளோர் தமது அதிகாரத்துள் இருப்போரின் எதிர்ப்பினை முறியடிப்பதற்காக அவர்கள் கையாளும் முறைகள் பற்றிய சுவாரசியமான பந்தி ஒன்று காணப்படுகிறது.

" ...பலமுறை பாவிக்கப்படும் உத்திகளில் ஒன்று நட்பாகவும் நட்பின்றியும் நடந்துகொள்ளும் அல்லது ஜெவ் (Jeff) மற் (Mutt) என்னும் பாத்திரங்களின் செயல்பாடு . இவர்களில் மற் என்பவர் தீவிரமான விசாரணையாளர். சம்பந்தப்பட்டவர் குற்றவாளி என இவருக்குத் தெரியும். இதனால் இவர் தன் நேரத்தை விரயமாக்கப்போவதில்லை. இதுபோன்ற குற்றங்களுக்காக இவர் பன்னிரண்டுபேரை சிறையுள் தள்ளியுள்ளார். இந்தச் சந்தேக நபரையும் இவர் அவ்வாறே அனுப்ப உள்ளார். இதற்குமாறாக ஜெவ் என்பவர் இரக்கமான உள்ளத்தைக் கொண்டவர். இவருக்கு என்று ஓரு குடும்பம் உண்டு. இவரின் சகோதரர் இதுபோன்ற கடுமையான பூசலில் ஈடுபட்டவர். இவர் மற்றையும்(Mutt) அவரின் உத்திகளையும் ஏற்காதவர். ஆனால் மற்றினை(Mutt) எல்லா நேரமும் இவரால் கட்டுப்படுத்த முடியாது. இதனால் சந்தேக நபர் சடுதியான ஒரு முடிவை எடுப்பது புத்திசாலித்தனமானது. இந்த உத்தி இரு விசாரணையாளரும் இருக்கும்போது கையாளப்படும். இதன்போது மற்(Mutt) தனது பாத்திரத்தை நடிக்கும்போது ஜெவ் Jeff அமைதியாக இருந்து மற்டின்(Mutt) சில உத்திகளுக்கு ஆட்சேபனை தெரிவிப்பார். ஆனால் ஒத்துழைக்குமாறு ஜெவ் Jeff தன் வேண்டுகோளை விடுக்கும்போது அந்த இடத்தில் மற்(Mutt) இருக்கமாட்டார்..."

இந்த வகையான ஜெவ்,Jeff மற்(Mutt) நடத்தையை சிலசமயம் "நல்ல பொலிஸ், கெட்ட பொலிஸ் " பாத்திர வார்ப்பு என அழைப்பர். இலங்கைத் தீவில் இடம் பெறும் முரண்பாடு தொடர்பாக சர்வதேச சமூகத்தால் கைக்கொள்ளப்படும் இந்தவகையான அணுகுமுறையை நாம் ஆராய்வது உதவியாக இருக்கும். புலிகளைச் சரண் அடையுமாறும் அதன் மூலம் தமிழர் மீதான சிறிலங்காவின் இன அழிப்பில் இருந்து வன்னி மக்களை பாதுகாக்க முடியும் எனவும் அண்மையில் மற்டின்(Mutt) உத்தியினை நோர்வே,அமெரிக்கா,ஜரோப்பிய ஒன்றியம்,மற்றும் யப்பான் ஆகியோர் கையாண்டுள்ளனர்.

தமிழர்களைப் பொறுத்தமட்டில் நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்பில் நோர்வே ( அமெரிக்க தலைமையிலான நேட்டோ அமைப்பில் ஒரு அங்கத்தவர்) ஒரு நல்ல பொலிசாகவும் அமெரிக்கா கெட்ட பொலிசாகவும் தமது பாத்திரங்களை வகித்தனர். இதில் நோர்வே மெதுவாகப் பேசிய ஜெவ். Jeff இவர் தமிழர்களின் உரிமைகள் சம்பந்தமாக வருடிக்கொடுக்கும் வார்த்தைகளைப் பேசினார். இதனால் ஜே,வி.பி போன்ற சிங்கள தேசியவாதிகளால் வெள்ளைப் புலிகள் என முத்திரை குத்தப்பட்டனர். இதே சமயம் அமெரிக்கா கடுமையாகப் பேசும் மற்டின்(Mutt) பாத்திரத்தை வகித்தது. இந்தப் பாத்திரத்தை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்களும் அமெரிக்க அரசாங்கத் திணைக்கள அதிகாரிகளும் அற்புதமாகச் செயல்படுத்தினர். உதாரணமாகக் கூறுவதாயின் 2006 ஆம் ஆண்டு நோர்வேயின் சமாதான முன்னெடுப்பு நடந்து கொண்டிருக்கையில் அமெரிக்கத் தூதுவர் லன்ஸ்ரெட் கொழும்பில் கடுமையான தொனியில் பேசினார். அவர் பேசும்போது

"... எங்களின் இராணுவ பயிற்சிகளாலும்,பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னெடுப்புக்கள் உள்ளிட்ட செயல்திட்டங்களாலும், சட்டத்திற்கு எதிரான புலிகளின் நிதிசேகரிப்புக்களை தடைபடுத்துவதன் மூலமாகவும்,இலங்கை அரசு தன் மக்களைப் பாதுகாக்கவும் தன் நலன்களை தக்கவைப்பதற்கும் அவர்களின் வல்லமையை நாம் வலுப்படுத்தி உள்ளோம். புலிகள் சமாதான நடவடிக்கைகளை கைவிட முடிவெடுப்பின்,அவர்கள் வலிமையான ,மிகவும் ஆற்றல் வாய்ந்த அத்தோடு மிகவும் உறுதிமிக்க இலங்கை இராணுவத்தை எதிர்கொள்வர் என நாம் தெளிவாக அவர்களுக்கு தெரிவிக்கின்றோம். புலிகள் யுத்தத்திற்கு திரும்பின் அதன் விழைவுகள் பயங்கரமாக இருக்க நாம் விரும்புகின்றோம். " எனக் கூறினார். " United States Ambassador to Sri Lanka, Jeffrey Lunstead: The Return of the Ugly American? , 11 January 2006

தூதுவர் லன்ஸ்ரெட் கதைத்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டபின் ஜனவரி 2008 இல் சிறீலங்கா (புலிகள் அல்ல ) யுத்தநிறுத்த உடன்படிக்கையை விட்டொழித்து சமாதானத்தையும் கைவிட்டது. இதற்கான மற்டின் பதில் ஊமையானது. ஏனென்றால் அமெரிக்கத் தூதுவர் லன்ஸ்ரெட் பேசுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் யூலை 2005 இல் தர்மறட்னம் சிவராம்

" வாசிங்டனில் உள்ள ஒரு சி.ஜ.யே பிராந்திய ஆய்வாளர் யூலை 2001 இல் கூறுகையில் " புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் மீது பயமுறுத்தும் குண்டுவிச்சுக்களை செய்வதன் மூலம் அவர்கள்மேல் அழுத்தத்தைப் பாவித்து பிரபாகரனை வெளியேற்றுவதற்கான சு஻ௌழலை உருவாக்கலாம் " எனக் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார். (இலங்கையில் அமெரிக்காவின் கேந்திர நலன்கள்,தாரக்கி ,30 யூலை 2005) US Strategic Interests in Sri Lanka, Taraki, 30 July 2005

நோர்வேயின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்பின் ஆரம்பக் கட்டங்களில் ,ஜரோப்பிய ஒன்றியம் ( இதில் நோர்வே அங்கத்தவர் அல்ல ) நோர்வேயின் ஜெவ்விற்கு ஆதரவான பாத்திரத்தை வகித்தது. அமெரிக்கா 1997 இலேயே புலிகள் மீது தடை விதித்தபோதும் ( 9/11 க்கு அதிக காலத்திற்கு முன்னரும் புஸ்சின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற கோட்பாட்டிற்கு அதிக காலத்திற்கு முன்பாகவும்) பிரத்தானியா 2001 இல் புலிகளின் மீது தடை விதித்தபோதும் ( இதுவும் 9/11 க்கு முன்னர்) ஜரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது ( 9/11 க்கு பின்னர் கூட) 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மே 2006 வரை தடை விதிக்கவில்லை. மாறாக மென்மையாகப் பேசும் ஜெவ்வின் பாணியில் ஜரோப்பிய ஒன்றியம் புலிகளை சமஸ்டி அமைப்புக்கள் பற்றி படிக்குமாறு ஊக்குவித்தனர். புலிகளின் தூதுக்குழுவினர் இதற்காக 2005 ஆம் ஆண்டு மார்ச்,ஏப்பிரல் மாதங்களில் ஜரோப்பிய தலைநகரங்களுக்குச் சென்றிருந்தனர். ஆனால் யார் யாருடன் கூட்டுச் சேர்வது என்ற கேள்வி கவனமாகத் தவிர்க்கப்பட்டது.

அத்தோடு ஜரோப்பிய ஒன்றியம் 7 பெப்பிரவரி 2005 இல் இடம்பெற்ற, புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான அரசியல் பிரிவின் தலைவரான கௌசல்லியனின் கொலையை தடுப்பதில் இருந்து தவறிவிட்டது. பெப்பிரவரி 2002 இல் கைச்சாத்தாகிய யுத்தநிறுத்த உடன்பாட்டின் பின்னர் கொலைசெய்யப்பட்ட கௌசல்லியன் புலிகளின் மிக மூத்த உறுப்பினருள் ஒருவர். இதன்பின்னர் புலிகளின் நிலைப்பாடுகள் கடுமையானது. ஆகஸ்ட் 2005 இல் சிறீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் கொலைசெய்யப்பட்டார். இதை புலிகளே செய்தனர் எனக் கூறப்பட்டது. ஆயினும் இது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

தனது ஜெவ் Jeff போன்ற அணுகுமுறை அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து தமிழ்மக்களின் சுதந்திரத்தை அடைவதற்கான புலிகளின் உறுதியில் திருப்பத்தை ஏறபடுத்தவில்லை என ஜரோப்பிய ஒன்றியம் முடிவு செய்திருக்கலாம். இதனால் புலிகள் மீதான திருகாணி மே மாதம் 2006 இல் முறுக்கப்பட்டது. இதனை நோர்வேயுடன் கலந்து உரையாடாது செய்திருக்க முடியாது. குறிப்பாக ஜரோப்பிய ஒன்றியத்தின் தடை யுத்தநிறுத்தத்தில் அதிலும் முக்கியமாக கண்காணிப்புக் குழுவின் வேலைகளில் பாதிப்பினை ஏற்படுத்துமா என்பனபற்றி நோர்வேயுடன் பேசியிருக்கவேண்டும். இந்த இடத்தில் சீனாவில் 1948 முதல் 1952 வரை இந்தியாவிற்கான தூதுவராகவும் அதன் பின்னர் மைசு஻ௌர் பல்கலைக் கழகத்தின் உபவேந்தராகவும் இருந்த கே.எம். பனிக்காரின் 1956 இல் வெளியான இராசதந்திரக் கோட்பாடுகளும் செயல்பாடுகளும் என்னும் நூலில் கூறப்பட்டதை குறிப்பிடுவது பிழையாகாது.

" ....வெளியுறவுத்துறைக்கான அமைச்சர்களும் ,இராசதந்திரிகளும் தமது நாடுகளின் நிரந்தர நலன்கள் எவை என்பதை மெய்யாக விளங்கியிருப்பர். ஆனாலும் எதிர்காலத்திற்குத் தொடர்பான சாதாராண விசயங்களின் விழைவுகள் எல்லாவற்றையும் தெளிவாக ஒருவராலும் கண்டுகொள்ள முடியாது. ஸமொறின் மீதான பகையால் கொச்சின் மகாராஜா தனது மண்ணில் போர்த்துக்கேயருக்கு ஒரு வியாபார நிலையத்தை தாபிக்கவிட்டதன் மூலம் இந்தியாவின் வரலாற்றையே மாற்றும் காரியம் ஒன்றை செய்துவிட்டதை அவரால் எதிர்பார்த்திருக்க முடியாது. இதுபோல் றஸ்சியாவிற்குள் பெரும் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கான தமது அங்கலாய்ப்பினால் தமது நாட்டிற்கூடாக அடைக்கப்பட்ட புகையிரதப் பெட்டியில் லெனினை றஸ்சியாவுற்குள் செல்ல அனுமதித்ததன் மூலம் (யுகப்புரட்சிக்கான) எந்தவிதமான சக்தியை அவர்கள் திறந்துவிடுகின்றனர் என எதிர்பார்த்திருக்க முடியாது. யேர்மனியர்களைப் பொறுத்தவரையில் அந்தநேரத்தின் முக்கியம் றஸ்சியாவின் எதிர்ப்பினை உடைப்பதாகும். இதற்காக லெலினை அனுப்புவது அவர்களின் ஞானத்தின் ஒரு வெளிப்பாடு எனக் கருதப்பட்டது..."

புலிகள் மீது தடை விதிக்கும் முடிபு " ஞானத்தின் ஒரு வெளிப்பாடு " என ஜரோப்பிய ஒன்றியம் (அவர்களுடன் நோர்வேயும்) எண்ணியிருக்கலாம். இதற்காகப் புலிகள் கண்காணிப்பு குழுவில் இருந்து ஜரோப்பிய ஒன்றிய நாடுகளின் அங்கத்தவர்களை அகற்றுமாறு பதில் அளிப்பர் என்பதை அவர்கள் எதர்பார்க்காது இருந்திருக்கலாம். அது எதுவாக இருப்பினும் ஜரோப்பிய ஒன்றியத்தின் தடையுடன் ஜெவ்வும் Jeff மற்டும்(Mutt) எடுத்த நிலைப்பாடு ஒருங்குசேரத் தொடங்கியது. இந்த ஒருங்கிணைப்பின் கடுமையான பேச்சின் மற்(Mutt) அணுகுமுறை, புலிகளை சிங்கள இன அழிப்பு படையிடம் சரண் அடையுமாறும் இதன் மூலம் இந்த இனஅழிப்பு படையின் தாக்குதலில் இருந்து தமிழ் மக்கள் பாதுகாக்கப்படலாம் என்பதும் இவர்களின் அறிக்கையில் தெரிகிறது.

இருந்தபோதும் நியமிக்கப்பட்ட தங்களின் பாத்திரத்தில் வெற்றிபெற வேண்டுமாயின்,தாங்கள் சுய நலத்தால் உந்தப்படவில்லை என்பதைக் காட்டவேண்டும் என்பது மற்டுக்குக்கூட(Mutt) தெரியும். உதாரணமாக அமெரிக்கத் தூதுவர் லன்ஸ்ரெட் யூலை 2006 இல் இலங்லையை விட்டுச் சென்றபின் ஆசிய பவுண்டேசனால் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றில் சிரமப்பட்டு பின்வருமாறு கூறுகிறார்:

"... பனிப்போரின் முடிவுடன் இலங்கையில் இருந்த அமெரிக்காவின் தேவைகள் தேய்ந்து விட்டன...அரசியல் மற்றும் இராணுவு நலன்கள் பெரிதாக இல்லை. இலங்கையில் இராணுவத் தளங்களை நிறுவுதலில் அமெரிக்காவிற்கு ஒரு தேவையும் இல்லை. " (இலங்கையின் சமாதான முன்னெடுப்பில் அமெரிக்காவின் பாத்திரம்). இராசதந்திரத்தை தொழிலாக வரித்துக்கொண்ட அமெரிக்கத் தூதுவர் லனஸ்ரெட்டுக்கு பழைய பனிப்போரின் முடிவுடன் ஒரு புதிய பனிப்போர் ஆரம்பித்து விட்டது என்பது தெரியாது என்பதல்ல. " முத்துக்களின் கோர்வை : ஆசியக் கடலோரப்பகுதியில் எழுச்சிபெற்றுவரும் சீனாவின் அச்சுறுத்தலை சந்தித்தல் என்னும் அமெரிக்காவின் லெப்ரினன் கொலனல் கிறிஸ்தோபர் .ஜே. பேர்சனினால் யூலை 2006 இல் எழுப்பப்பட்ட கீழ்வரும் விசயங்களை இவர் அறிந்திருக்கவில்லை என்பதல்ல.
" இராணுவரீதியில் ,பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் ,சீனாவிடம் இருந்து எதிர்காலத்தில் எழக்கூடிய அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஒரு உத்தரவாதமாகவும்,அதிஉச்ச இராணுவ வலுவை தக்கவைத்திருப்பதற்கான செலவை அமெரிக்கா தாங்கிக் கொள்ள வேண்டும். " முத்துக்களின் கோர்வையான " இந்தப் பகுதியில் பல பிராந்திய அரசுகளிடம் பரந்த ஆதரவைப் பெறத்தக்க நோக்குடன் அமெரிக்காவின் செல்வாக்கினை அகலமாக்கவும் ஆழமாக்கவும் வேண்டும். "

இத்தோடு 5 மார்ச் 2007 இல் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்தான 10 ஆண்டுகளுக்கான கொள்வனவு மற்றும் சேவைகள் உடன்பாடும் (தூதுவர் லன்ஸ்ரட்டுக்கு) இவருக்கு ஒரு சின்னக் காரியம் தானோ?

இதுபற்றி 9 மார்ச் 2007 இல் இந்து பத்திரிகையில் பீ,முரளீதர் றெட்டி கூறுகையில்:

"...அமெரிக்காவின் எல்லா குதர்க்க மற்றும் சுத்துமாத்துக்களின் மத்தியில் இது ஒரு இராணுவ அலுவல். அத்தோடு இதன் வெளிப்பாடு அமெரிக்காவின் நலங்களுக்கு சாதகமாக உள்ளது. அமெரிக்காவிற்கு இது இந்து சமுத்திரத்தில் ஒரு தளத்தினை ஒரு செலவும் இன்றி அல்லது மிகக் குறைந்த செலவில் பெற்றுக்கொடுத்துள்ளது. இது உலக வல்லரசுடன் தனக்குள்ள செல்வாக்கினை பொதுவாக விளம்பரம் செய்யவும் ,குறிப்பாக புலிகளுடனான சண்டைக்கு பயன்படுத்தவும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவுகிறது ..."

ஜரோப்பிய ஒன்றியத்தின் தடைக்கு முன்னர் நோர்வீஜியன் ஜெவ்வும் அமெரிக்க மற்டும்(Mutt) வேறு வேறான தொனியில் பேசினர். ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றுதான். இன்று அவர்கள் வேறு வேறு தொனியில் இல்லாமல் ஒரே தொனியில் பேசுவது போல் உள்ளது. ஆனால் நோக்கம் மாறாது உள்ளது. அதாவது இந்து சமுத்திர பிராந்தியத்தில் மும்மூர்த்திகளின் (அமெரிக்கா,ஜரோப்பிய ஒன்றியம்,யப்பான்) கேந்திர நலன்களைப் பெறுவதாகும்.

ஏனெனில், " யார் இந்து சமுத்திரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனரோ அவர்கள் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்துவர். 21 ஆம் நூற்றாண்டில் இந்தச் சமுத்திரம் ஏழுகடல்களுக்குமான திறவுகோலாகும். உலகின் தலைவிதி இந்தச் சமுத்திரத்தில்தான் நிர்ணயிக்கப்படும்." US Rear Admiral Alfred Thayer Mahan quoted by Cdr. P K Ghosh in Maritime Security Challenges in South Asia and the Indian Ocean, 18 January 2004

" ...இந்துசமுத்திரப் பிராந்தியம் 21 ஆம் நூற்றாண்டின் கேந்திர இருதய பூமியாக மாறியுள்ளது. இந்த நிலைப்பாட்டை 20 ஆம் நூற்றாண்டில் கொண்டிருந்த ஜரோப்பாவையும் வடகிழக்கு ஆசியாவையும் இது தகர்த்துள்ளது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் வளர்ச்சிகள் மேற்கத்தைய தேசங்கள் சார்ந்த நிலையைக் குறைப்பதற்கும் அத்தோடு பலவான சக்திகளின் வருகைக்கும் வழிவகுத்துள்ளது .." Donald L. Berlin, Head of Security Studies, Asia Pacific Centre for Security Studies, Honolulu, Hawaii 13 December 2006

"... 17 ஆம் நூற்றாண்டில் இருந்தே உலக சரித்திரத்தில் இலங்கை கேந்திர முக்கியத்தை கொண்டிருந்தது. இது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரான்ஸ், பிரித்தானியர், இந்தியர் ஆகியோரை ஈர்த்திருந்தது. இப்போது நாம் இந்தவரிசையில் இன்னொரு அமைப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். அது " சர்வதேச சமூகம் " ஆகும். அணுவாயுத யுகம் ஒன்றில் அத்தோடு அணுவாயுத ஏவுகணைகளைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு திருகோணமலைத் துறைமுகம் அதிமுக்கியமானதாக உள்ளது. இந்தத் துறைமுகத்தின் ஆழம் நீர்மூழ்கி கப்பல்கள் றாடர் மற்றும் சொனர் என்பவற்றின் கண்களுக்குப் படாமல் ஒழித்துக்கொள்ள வசதியாக உள்ளது .." Strategic Significance of Sri Lanka’ - Ramesh Somasundaram of Deakin University quoted by P.K. Balachandran in Hindustan Times, 30 May 2005

நோர்வேயின் பயன்பாட்டு நாள் முடிவடைந்து விட்டது என அமெரிக்கா,ஜரோப்பிய ஒன்றியம்,மற்றும் யப்பான் முடிவு செய்திருக்கலாம். அன்ரன் பாலசிங்கம் வாழ்ந்தபோது செல்வாக்கான சக்தியாக நோர்வே இருந்ததுபோல் இப்போ இல்லை என அவர்கள் எண்ணி இருக்கலாம். அத்தோடு புதுடெல்கியுடனான நோர்வேயின் உறவு நல்ல சமயத்திலும் ஆர்வமற்ற அரைகுறை உறவுதான். ஆனால் ஜெவ்வின் பாத்திரத்தை நோர்வேயால் தொடர்ந்து வகிக்க முடியாவிட்டால் இந்தப் பாத்திரத்திற்கான புதிய வேட்பாளர் யார்?. ஏனெனில் ஜெவ் Jeff மற்றும் மற்(Mutt) பாத்திரங்கள் பயனானவை என்பது மிறன்டாவும் அறிசோனாவும் என்ற வழக்கில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் புதுடெல்கி நோக்கி திரும்புவது சாலப் பொருத்தமானதாகும். இங்கு எடுத்த எடுப்பில் ஒன்றைக் கூறவேண்டும். அதாவது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்கள் அமெரிக்க,ஜரோப்பிய,யப்பானிய நலன்களுடன் முற்றிலும் ஒத்தானது அல்ல. இது சம்பந்தமாக நான் செப்ரம்பர் 2006 இல் எழுதிய கறுத்த மணிக்கற்களும் வெள்ளை மணிக்கற்களும் என்னும் கட்டுரையில் பின்வருமாறு கூறியிருந்தேன்:

"... இந்தோ சிறீலங்கா உடன்படிக்கையின் இணைப்புக்கள் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள எதிர்மாறான நலன்களை 1987 இல் வெளிப்படுத்தியுள்ளது. அது 20 ஆண்டுகளுக்கு முன்பாக. அதன் பின்னர் பல காரியங்கள் நடந்துள்ளன. ஆனால் பல காரியங்கள் மாறவில்லை. இன்று அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையானது அதன் தற்போதைய ஒரே ஏக வல்லரசு நிலையை வலுப்படுத்துவதாகும். அதன் மூலம் ஏக வல்லரசு நிலையை நீண்ட காலத்திற்கு தக்க வைப்பதாகும். ( இதற்காக பல சக்தி தோற்றத்தை பேணல் என கொண்டலீசா றைஸ் கூறியுள்ளார்). இதன் அர்த்தம் ஏனையவற்றுடன் பிராந்திய வல்லாதிக்க சக்திகள் எழுச்சி பெறுவதை தடுப்பதாகும். மறுபுறம் நியூடெல்கியின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தளம் இந்தியப் பிராந்தியத்தில்க வெளிச் சக்திகளின் தனித்துவமான தலையீட்டு பாத்திரத்தை மறுப்பதாகும். அத்தோடு பல சக்திகளுடன் கூடிய உலகை உருவாக்குவதாகும்....

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் இறுதி நோக்கங்களில் உள்ள வேறுபாட்டைப் பார்க்கும்போது இலங்கை சம்பந்தமாகவும் புலிகள் சம்பந்தமாகவுமான அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கொள்கைகள் எல்லா நேரத்திலும் ஒத்திருக்காதது ஆச்சரியமானதொன்றல்ல. அதன் அர்த்தம் அமெரிக்கா இந்தியாவுடன் ஒத்துழைக்காது என்பதல்ல. அது ஒத்துழைக்கும். அது ஒரு வல்லரசு நிலையில் இருந்து ஒத்துழைக்க முயலும். அதனைச் செய்வதற்கு போதிய கருவிகள் தன்வசம் உண்டு என அமெரிக்கா நம்புகிறது. அவ்வாறான கருவிகளில் ஒன்று நோர்வேயின் அனுசரணையுடனான பேச்சுவார்தை முன்னெடுப்பாகும். சமாதான முன்னெடுப்புக்களுக்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆர்வமான ஆதரவையும் இந்தியாவின் ஊமையான ( அளந்த ஆதரவு) ஆதரவையும் இது விளக்குகிறது எனலாம்.

இலங்கைத் தீவின் தமிழ்ப் பகுதிகளில் இந்திய உளவுத்துறை றோ இரகசியமாக செய்யும் வேலைகளையும் ,சிங்கள அரசிற்கும் சிறீலங்காவின் அரசியல் கட்சிகளுக்கும் இந்தியா வழங்கும் உதவிகளையும் விளங்கிக்கொள்ள இது உதவுகிறது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் இதே நோக்கங்களை அடைய எண்பதுகளில் றோ,தமிழ் தீவிரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தது. நண்பர்கள் காலத்திற்குக் காலம் மாறியபோதும் நீயூடெல்கியின் நலங்கள் மாறாது உள்ளதுபோல் தெரிகிறது.

இவற்றைக் கூறியபோதும் இன்று விடுதலைக்கான தமிழீழப் போராட்டத்தை (அத்தோடு புலிகளை ) பலவீனப்படுத்தும் பொது நோக்கில் அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றுபடலாம். ஆனால் அதன்பின்னர் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தமது இருப்பிற்கும் செல்வாக்கிற்கும் இவர்கள் ஒருவருடன் ஒருவர் போட்டி போடும் வகையில் பலவீனப் படுத்தல் வேண்டும். இந்த வகையில் பலவீனப்படுத்தல் என்பது வேலுப்பிள்ளை பிரபாகரனை தனிமைப்படுத்தலும் அழித்தொழித்தலுமாகும். அதன்பின்னர் சீர்திருத்தப்பட்ட ஒரு தலைமையிலான புலிகள் அமைப்பை உருவாக்கலாகும். இது பற்றி இந்திய அரசின் அதிகாரியாக இருந்து இழைப்பாறிய பீ.ராமன் நீயூடெல்கியின் நியாயமான அபிலாசைகளை விளக்குகையில் 2005 இல் பின்வருமாறு கூறியுள்ளார்:

" இலங்கைத் தமிழர்களுக்கு பிரபாகரன் இல்லாத புலிகள் அமைப்பு ஒன்று வேண்டும் என நான் தொடர்ச்சியாக எழுதி வருகின்றேன். எல்ரீரீ பிரபாகரனை தூக்கி எறிந்து ,பயங்கரவாதத்தையும் கைவிட்டால் இந்தியாவும் சிறீலங்காவும் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். புலிகளின் பாதுகாப்பு இல்லாது விடின் தமிழர்கள் சிங்கள வெறியர்களின் தயவில் வாழவேண்டும். தமிழ் மக்களுக்கும் மற்றைய புலித் தலைவர்களுக்கும் சாதகமான சமிக்கைகளை காட்டுவதன் மூலம் சிங்களத் தலைவர்கள் தம்மை மாற்றிக் கொள்ள வேன்டும். "

தமிழ் மக்களை சிங்கள இனவெறியர்களிடம் இருந்து காப்பாற்றும் ராமனின் கரிசனை உள்ளத்தை உருக்கும் .ஆனால் கவலைதரும் யதார்த்தம் என்னவென்றால் நீயூடெல்கியின் அனுசரணையுடன் செய்யப்பட்ட 1988 மாகாணசபைகள் என்னும் நகைச்சுவை நாட்டியமாகும். தனது கேந்திர நல்களுக்காக ,சிங்கள வெறியை தணிக்க எந்த அளவில் தமிழர்களின் நலன்களை பலியிட நியூடெல்கி விரும்புகிறது என்பதை இந்த நகைச்சுவையான மகாணசபைகள் நாட்டியம் காட்டுகிறது.

ஜெ.ஆர் ஜெயவர்த்தனாவின் அமெரிக்காவுடனான இறுக்கமே,எண்பதுகளில் தமிழ் தீவிரவாத இயக்கங்களுக்கு நியூடெல்கி ஆதரவு அளித்தது என்ற அரசியல் யதார்த்த்தை அமெரிக்கா ஒருபுறம் மனதில் கொண்டுள்ளது. அதே சமயம் மசாசுசெஸ்ற் மாநிலத்தில் தமிழீழக் கொடியை ஏற்றியது போன்ற செயல்களால் அமெரிக்கா தமிழர் பக்கமும் தன் தலையை காட்டியிருந்தது. இன்று அதே அமெரிக்கா தமிழர்களின் ஞாயமான அபிலாசைகள் பற்றி தொடர்ந்தும் பேசுகின்றது.

மறுபுறத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனை வெற்றிகரமாக அழித்திபின்னரும்,புலிகளைப் பலவீனப்படுத்தியபின்னரும் சிறீலங்காவை வருங்காலத்திலும் தன் கைக்குள் வைத்திருப்பதற்கு தமிழர்களை துருப்பாக பாவிப்பதை இழக்கத் தயாராகவில்லை. இதனால் புதுடெல்கியும் தமிழர்களின் ஞாயமான அபிலாசைகள் பற்றி தாம் கரிசனை கொண்டுள்ளதாகப் பிரகடனப்படுத்துகிறது.

அத்தோடு இலங்கையில்,தமிழ் நாட்டில்,புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள மாறுபட்ட கருத்துள்ள தமிழர்களிடையே இந்தியா ,தன் நலன்களைப் பாதுகாப்பதற்காக தனக்கு ஆதரவான வலைப்பின்னலை பின்னி வருகிறது. இந்தவகையான சர்வதேச கட்டுமானத்துக்குள் உள்ள சிறிய இடைவெளிக்குள்தான்,அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து விடுபடுவதற்கான தமிழீழ மக்களின் போராட்டம்.,தாங்கொணமுடியாத கொடிய துயரின் மத்தியிலும் வேதனையின் மத்தியிலும் தொடர்கின்றது. இந்த சர்வதேசக் கட்டுமானத்தைப் பாவித்துதான் சிறீலங்கா தமிழ் மக்கள் மீதான தனது கொடிய இனஅழிப்பை தொடர்கிறது.

சுருக்கமாகக் கூறுவதாயின் இன்று அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ சிறீலங்காவில் இருந்து விலகி மற்றவரரிடம் அதை விட்டு விடத் தயாராகவில்லை. அந்த வகையில் அதை சீனாவிடவும் விடமாட்டார்கள். அண்மையில் இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்:

" நாங்கள் சிறீலங்காவுடன் மிகவும் புரிந்துணர்வான கூடிய உறவினைக் கொண்டுள்ளோம். (தமிழ்) மக்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற எமது அங்கலாய்ப்பில் இந்தியாவின் கேந்திர நலன்களுக்கான சிறீலங்காவின் முக்கியத்துவத்தை நாம் மறந்துவிடக் கூடாது. அதிலும் இந்தத் தீவில் பாகிஸ்தான்,சீனா போன்ற நாடுகள் காலுஃன்ற நிற்கின்ற நிலையில் நாம் சிறீலங்காவின் பாதுகாப்பிற்கான தேவைகளைப் பார்த்துக்கொள்வோம் என கொழும்பிற்குத் தெரிவித்துள்ளோம். அதன்பின் கொழும்பு வேறுபக்கம் திரும்பக்கூடாது எனவும் கேட்டுள்ளோம். எங்களின் கொல்லைப் புறத்தில் சர்வதேச சக்திகளுக்கு விளையாட்டுமைதானம் அமைக்க முடியாது "

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு 13 ஆம் சரத்தின்க திருத்தத்தைப் பற்றி நீயூடெல்கி தொடர்ந்து நகைச்சுவை நாட்டியம் ஆடுவது ஏனென்றால்,அதன் மூலம் சிறீலங்காவை 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்துள் இழுப்பதாகும். அதனால் அந்த ஒப்பந்தத்துடன் இந்தியாவின் கேந்திர நலன்களை பாதுகாக்கும் அதன் இணைப்புக்களுக்கு உயிர்கொடுப்பதாகும். 1987 இல் போன்று இன்றும் 13 ஆம் திருத்தச் சட்டம் என்னும் நகைச்சுவை நாட்டியம் தமிழ் மக்களின் நலன்களுடன் சம்பந்தப் பட்டதல்ல. தனது கொல்லை சர்வதேச சக்திகளின் விளையாட்டுத் தளமாக மாறுவதை தடுப்பதை மட்டுமே கரிசனையாகக் கொண்டது.

முயற்சித்தும்,பரீட்சித்தும் பார்க்கப்பட்ட ஜெவ் Jeff,மற்(Mutt) அணுகுமுறைக்கு மீண்டும் திரும்புவோமாக. தற்போது நோர்வேயும் மற்றுடன்(Mutt) இணைந்து கொண்டதால் யார் இந்தப் புதிய மற் பாத்திரத்தை வகிக்கப் போகின்றார்? புதிய மற் நியூடெல்கியின் சம்மதத்தையும் பெறுவது உதவியாக இருக்கும் என்பது அமெரிக்காவிற்கும்,ஜரோப்பிய ஒன்றியத்திற்கும் யப்பானுக்கும் தெரியும்.

நோர்வேய்கான இடத்தைப் பிரித்தானியா எடுக்கலாம் என்பதை சிறீலங்காமீது அவதானிப்பைக் கொண்டவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாத் தெரியும். இலங்கைத்தீவில் இடம் பெறும் முரண்பாடு சம்பந்தமாக அமெரிக்காவிற்கும், ஜரோப்பிய ஒன்றியத்திற்கும் யப்பானுக்கும் உள்ள கேந்திர நலன்களை புதுடெல்கியின் நலன்களுடன் உருக்க பிரித்தானியாவை விட வேறு நாடுகள் உண்டா? பிரித்தானியா இந்தியாவையும் இலங்கையையும் ஆண்டது. அத்தோடு கடந்த பல ஆண்டுகளாகத் தனது பழைய காலனித்துவு நாடுகளில் அது செல்வாக்கான வலைப்பின்னல்களைக் கட்டி வளர்கத்துள்ளது. இந்த இடத்தில் பெப்பிரவரி 2001 இல் பிரித்தானியா புலிகள்மீது தடைவிதித்ததற்குப் பின்னால் நியூடெல்கி வகித்த பாக்திரத்துக்கு லக்ஸ்மன் கதிர்காமர் பகிரங்கமாகவே நன்றி கூறியதை ஒருவர் நினைவு கொள்ளலாம். அத்தோடு இராசதந்திர உலகிலும் இலவச மதிய உணவு என்று ஒன்று இல்லை.

உலக விவகாரங்களில் தனக்குள்ள தனித்துவமான பலத்தை சுட்டிக்காட்ட பிரித்தானியா தவறுவதில்லை. அது ஜக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவர். ஜரோப்பிய ஒன்றியத்தின் ஒரு அங்கத்தவர். அதிலும் முக்கியமாக இந்த விவகாரத்தில் அது இந்தியாவையும் உள்ளடக்கிய பிரித்தானிய பொதுநல அமைப்பில் ஒரு அங்கத்தவர். இலங்கைத் தீவில் இடம் பெறும் முரண்பாட்டில் தனக்கு விசேட பாத்திரம் உண்டு என பிரத்தானியா நம்புகிறது. புதிய சிங்கள காலனித்துவ ஆட்சியாளரிடம் ஆட்சியை ஒப்படைப்பதற்கு முன்னர் பிரித்தானியாவே காலனித்துவ ஆட்சியாளராக இருந்தது. அத்தோடு இன்று பிரித்தானியாவில் மத்தியவர்க்கத்தை சார்ந்த ஆங்கிலம் பேசும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். தனது பாத்திரத்திற்கு உரம் ஊட்டுவதற்காக பிரித்தானிய அரசு பிரித்தானியாவில் உள்ள தமிழர்களை அணைத்தும் அவர்களின் இருந்து தெரிவு செய்யப்பட்ட பகுதியினர்க்கு அதிகாரத்தில் உச்ச்த்தில் இருப்பவர்களுடன் தொடர்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு நியூடெல்கியின் கரிசனையை கருத்தில் கொண்டு இந்த அலுவலில் இந்திய வம்சாவழியான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கிய பாத்திரத்தையும் வழங்கியுள்ளனர்.

"...ஈரானை ஆண்ட ஷா,தனது பிராந்தியத்தின் காவலாளராய் அங்கு காணப்பட்ட புரட்சிகர சவால்களை எதிர்கொள்ள தன்வசம் இரண்டு முக்கிய ஆயுதங்கள் இருந்ததாக ஒரு முறை சொன்னார். இதில் முதலாவது ஆயுதம் நேரிடித் தலையீடு. இது 1973 இல் ஓமான் மீது பாவிக்கப்பட்டது. அத்தோடு பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் அடக்கு முசூறயின்போது ஷா படைக்கரிவிகளையும் நிதி உதவிகளையும் வழங்கினார். இவரது இரண்டாவது ஆயதம் பல தேசிய இனங்களிடையே இருந்து எழுந்த தேசிய விடுதலைப் போராட்டங்களை அடக்க கையாண்ட உள்ளகமான கவுழ்ப்பு. இந்த உத்தி கேடிஸ்தான் மீது பாவிக்கப்பட்டது. இதன் நோக்கம் என்னவெனில் தேசிய விடுதலை இயக்கத்தை முறியடிப்பதற்காக அதனை ஒரு குறிப்பிட்ட வழியில் வளரவிடுவதாகும். இதில் கேடிஸ்தான் பற்றிய நடவடிக்கை செம்மையான ஒன்றாகும். கேடிஸ்தான் மீதான தன் நடவடிக்கை குறைந்த செலவானது என ஷா வெளிப்படையாகவே கூறினார். 30 மில்லியன் டொர்களுடன் வேலை முடிக்கப்பட்டது. தன்னைத் தானே அழிக்கும் வகையில் இவர் இலகுவாக கேடிஸ்தானை ஆதரித்தார். "

இதைக் கூறியபோதும் இது போல் இந்திய முகவர்களும் பிரித்தானியாவில் உள்ள புலம் பெயர்ந்த தமிழர்களின் ஓரு பகுதியினருடன் தமது தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இதில் முக்கியமாக முன்பு ஈபீஆர்எல்எவ். ஈரோஸ் மற்றும் அமைப்புக்களுடன் தொடர்பானவர்களுடன் இத் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதன் முலம் பிரித்தானியத் தமிழர் பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கையின் வெறும் கைக்கூலிகளாக மாறாது இருக்க இவர்கள் முயற்சிக்கின்றனர்.

ஆகவே இணைத்தலைமை நாடுகள் மற் (Mutt) பாணியிலான அறிக்கையை விட்ட அதே நாளில் அமெரிக்க இராசாங்க செயலாளர் கிலாரி கிளின்ரனும் பிரத்தானிய வெளிவிவகாரச் செயலாளர் மில்பான்டும் தமது கூட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தமை தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது. ஏனெனில் அமெரிக்கா இணைத்தலைமை நாடுகளில் ஒன்று ,பிரித்தானியா ஜரோப்பிய ஒன்றியத்தினதும் ,இணைத்தலைமை நாடுகளிலும் ஒரு அங்கத்தவர் . இவர்கள் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தனர். இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையை வரவேற்ற இவர்களுக்கு,அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் இன்னொரு அறிக்கைக்கான தேவை என்ன? தங்களின் அறிக்கையை தாங்களே வரவேற்பதா?

உண்மை என்னவென்றால் நோர்வேயினாலும் கைச்சாத்திடப்பட்ட இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை,நோர்வேயின் ஜெவ் பாணியிலான பாத்திரத்தையும் மாற்றுவதையும் காட்டுகிறது. அமெரிக்க பிரித்தானிய கூட்டறிக்கை இணைத்தலைமை நாடுகளின் அறிக்கையை வரவேற்றபோதும் அதன் தொனி மென்மையாக உள்ளது. அத்தோடு பிரித்தானியாவிற்கு ஜெவ் பாணியிலான பாத்திரத்தை அளிப்பது போல் உள்ளது. அமெரிக்க பிரித்தானிய கூட்டறிக்கை புலிகளை சரண் அடையுமாறும் .ஆயுத்ததை போடுமாறும் ,வன்முறையை கைவிடுமாறும் வெளிப்படையாக வேன்டுவதை தவிர்த்துள்ளது. தெளிவின்மை ஆக்கபூர்வமானது என்பதை அமெரிக்க பிரித்தானிய அறிக்கை ஏற்றுக்கொண்டதுபோல் தெரிகிறது.

அத்தோடு இவ்வாறான ஜெவ் Jeff பாணியிலான அணுகுமுறை ஜக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற மக்கள் அவையில் 5 பெப்பிரவரி 2009 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

".. அண்மைய வாரங்களில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையேயான சண்டை அதிகம் மோசமாகியுள்ளது. அத்தோடு மக்களின் நிலை மோசமாகியுள்ளது. அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்துள்ளும் சண்டை தொடர்கின்றது. அத்தோடு சுடப்படாத இடமாக அறிவிக்கப்பட்ட வைத்தியசாலைமீது ஞாயிறு அன்று மூன்று முறை ஷெல் அடிக்கப்பட்டது. இந்த வாரம் மேலும் ஷெல் வீச்சுக்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வைத்திய சாலையில் குறைந்தது 50 சிவிலியன் கொல்லப்பட்டதாகவும் பெண்களும் சிறுவர்களும் உட்பட பலர் காயம் அடைந்ததாகவும் ஜக்கிய நாடுகளின் அறிக்கை தெரிவிக்கின்றது. ஒவ்வொரு நாளும் பல மக்கள் காயம் அடைகின்றனர்,இறக்கின்றனர். இந்த தாக்குதல்கள் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை தீவிரமாக மீறுவதாகும். வைத்தியசாலை மீதான ஷெல் தாக்குதல்களை ஞாயப்படுத்தும் சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் உட்பட்ட எவரதும் நடவடிக்கைகள் உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தங்களின் படையினர் மீதான கூறப்படும் போசடிகள் சிறீலங்கா அரசால் விசாரிக்கப்படவேண்டும் எனவும் நாம் வேண்டுகின்றோம். வைத்தியசாலை மீதான ஷெல் தாக்குதல்களையும் மக்களின் சாவையும் முழுமையாக விசாரணை செய்வதை நாம் ஆதரிப்போம். விசாரணைக்கான முக்கிய பொறுப்பு போர்குற்றம் சுமத்தப்பட்டுள்ளோரின் அதிகாரிகளைச் சாரும். அந்த வகையான விசாரனைகள் மேற்கொள்ளப்பட வேன்டும் என நாம் எதிர் பார்க்கின்றோம்.. "

இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை பெப்பிரவரி 4 இலும் ,அதே நாளில் அமெரிக்க ,ஜக்கிய இராச்சிய அறிக்கை வெளியிடப்பட்டதும் ,அதற்கு அடுத்த நாள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் சிறீலங்கா மீதான விவாதம் நடற்ததும் தற்செயலானவையாக இருக்கலாம். பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களில் சில பகுதியினர் தமது பரப்புரை முயற்சியால்தான் பாராளுமன்றத்தில் விவாதம் இடம் பெற்றது என்றும் கூறலாம். இந்த இடத்தில் யார் யாருக்கு பரப்புரை செய்கின்றனர் என நான் பெப்பிரவரி 2008 இல் கூறியது பொருத்தமானதாக இருக்கலாம்:

".... அவர்களின் அரசாங்கத்தில் உயர் நிலையில் உள்ளவர்களுக்கு இருக்கும் அதே விளக்கம் தனிப்பட்ட காங்கிறஸ் அங்கத்தவருக்கோ,செனற்றருக்கோ,பாராளுமன்ற உறுப்பினர்க்கோ இல்லாது இருக்கலாம் என்பது உண்மைதான். அத்தோடு அவர்களின் அரசாங்கத்தின் முடிபிற்கான எல்லாத் தகவல்களும் அவர்கள் எடுக்கும் முடிபுக்கான மூலோபாய ஞாயங்களும் தனிப்பட்டோருக்கு கிட்டுவதில்லை. தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக உந்தப்பட்டும் அதனால் தமது தொகுதியில் கணிசமான தமிழர்கள் இருப்பதாலும் அவர்கள் உடனடி கரிசனையால் செயல்படுவர்.

இதைக் கூறியபோதும் இது போன்றவற்றில் அவர்களின் நாடுகளின் கேந்திர நலன்களைப் பொறுத்து தனிப்பட்ட அங்கத்தவரின் பதில்கள் அமையலாம். முக்கிய வெளியுறவுக் கொள்கை சம்பந்தமான காரியங்களில் தாம் எடுத்த முடிபு பற்றி அமெரிக்க அரசாங்க திணைக்கள,கனடிய வெளியுறவுத்துறை அமைச்சு,ஜக்கிய இராச்சிய வெளியுறவு மற்றும் பொதுநல அமைப்பு காரியாலயம் தனிப்பட்ட அங்கத்தவர்களுக்கு விளக்கம் அளிப்பது வுழமையான ஒன்றாகும்... "

இத்தோடு சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் (இதன் இணைத் தலைவர்களாக பற்றன் பிரபு,ஜ.நா விற்கான முன்னைய தூதுவர் தொமஸ் பிக்கெறிங்,அவுஸ்திதேலியாவின்வ முன்னைய வெளியுறவு அமைச்சர் ஹறத் எவன்ஸ் ஆகியோர் அடங்குவர்) பெப்பிரவரி 2008 ஆம் ஆண்டு அறிக்கையையும் மனதில் கொள்ள வேண்டும்.

" புலம் பெயர்ந்த தமிழர்களிடையே பிரிவினைக்கும் ,தீவிரவாதத்திற்கும் ஆதரவு இருக்கும்வரை சிறீலங்காவில் சமாதானம் இலகுவாக ஏற்படாது. சிறீலங்காவிற்கு வெளியே புலிகளுக்கு எதிராகக் கடுமையான அரசியல் மற்றும் சட்ட அழுத்தங்கள் கொடுக்கப்படவேண்டும். சிறீலங்கா மீதான மேற்குலக நாடுகளின் கொள்கைகள் தமது நாட்டில் உள்ள தமிழ் சமூகத்திடையே புலிகள் அல்லாத அரசியல் குரல்களுக்கு இடம் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். கணிசமான தமிழ் மக்களைக் கொண்ட மேற்குலக நாடுகள் ,அவர்கள் சிறீலங்காவில் உள்ள சிறுபான்மையினரின் ஞாயமான அபிலாசைகளுக்கு ஆதரவு அளிக்கவும்,புலிகளின் அழிவுநோக்கிய அரசியலை ஏற்க மறுக்க வேண்டும் என அவர்களுக்கு சவால் விடவேண்டும் எனவும் ,புலிகளுக்கு எதிரானவர்களை அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. அத்தோடு சாமதானத்தை ஆதரிப்போர் தனிநாட்டுக்கோரிக்கையை கைவிடுவதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படவேண்டும். அதன்பின்னர் யுத்தக் குற்றங்களுக்காகவும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காகவும் புலிகளின் இன்றைய தலைவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிகப்படவேண்டும். பிரபாகரனை அகற்றுவதற்காகவும் பயங்கரவாத முத்திரையை நீக்குவதற்காகவும் நாடுகள் படிப்படையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். "

அந்தச் சமயத்தில் தமிழ்நேசன் இது பற்றி கூறுகையில்:

"...சிறீலங்கா சம்பந்தமான இந்தச் சர்வதேச நெருக்கடிகளுக்கான அண்மைய அறிக்கையில் காணப்னபடுமட ஒரு அம்சம் என்னவெனில் இலங்லையிலும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் மேறகத்திய நாடுகளின் புவிசார் கேந்திர நலன்களைப் பற்றி குறிப்பிடாமையாகும். அத்தோடு சமச்சீரரற்ற பல்சகதி உலகின் அரசியல் பரிமாண்டகள் பற்றியும் இவர்கள் அறிக்கை எதுவும் கூறவில்லை. உதாரணமாகச் சொல்லப்போனால் இந்த வகையான அரசியல் பரிமாணமே கொசோவாவிற்கு மேற்பார்வைக்கு கட்டுபடபட்ட சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தது. இநதியாவின் புவிசார் நலன்களை குறிப்பிடுவதல் மூலம் (மேற்குலகின் நலன்கள் பவறிய) இவர்களின் மௌனம் கூடிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இதில் இந்தியா பற்றிக் குறிப்பிடுகையில்:

" சிறீலங்காவில் இந்தியாவிற்கு கணிசமான பொருளாதார பாதுகாப்பு நலன்கள் உண்டு. அத்தோடு இலங்கையில் எதிரிகள் ,முக்கியமாக சீனா கால் பதிப்பதை இந்தியா விரும்பவில்லை. அத்தோடு இலங்லையில் பாகிஸ்தானின் இராணுவ மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளால் இந்தியா கலக்கம் அடைகிறது. " ஆனால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மேற்குலகின் பாதுகாப்புப் பற்றிய கரிசனைகளையும் ராஜபக்ச அரசின் சீனா சார்ந்த நகர்வையும் இவர்களின் அறிக்கை குறிப்பிடத் தவறிவிட்டது. சிறீலங்கா மீதான மேற்குலகின் கரிசனை நல்ல நோக்கும் பெரும்தன்மை கொண்டதும் என்ற தோற்றத்தையும் அது நீதியையும் ஸ்திரத்தையும் ஏற்படுத்த முயல்கிறுது என்ற கருத்தையும் தெரிவிக்கிறது. வேறு இடங்களில் கூறியவாறு இந்த அணுகுமுறையானது அறையில் உள்ள யானையை புறம்தள்ளுவது போலாகும்.

"சுதந்திரமான" சர்வதேச பிரச்சனைகளுக்கான குழுவினர் ( இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்க,ஜரோப்பிய,யப்பானிய நலன்களைப் பேணும் கரிசனை கொண்ட) இரண்டு காரியங்களை மனதில் கொண்டிருப்பின் பலனாக இருந்திருக்கும்.

அவற்றில் ஒன்று

தமிழீழத்திற்கான போராட்டம் தமிழீழ மக்கள் தமது தாயகத்தை தாமே ஆள்வதற்கான அவர்களின் ஜனநாயக உரிமைகள் சார்ந்தது. இதில் கூட்டிக் குறைக்க ஒன்றும் இல்லை. இந்தப் போராட்டம் பரந்தமனம்கொண்ட சிங்கள ஆட்சுஹயை தழுவிக்கொள்வதற்கான போராட்டம் அல்ல. சுதந்திரத் தமழீழம் பேச்சுவார்த்தைக்கு உட்பட்ட ஒன்றன்று. ஆனால் சுதந்திரமான தமிழீழம் சுதந்திரமான சிறீலங்காவுடன் எந்த அடிப்படையில் இரண்டு சுதந்திரமான தேசங்கள் சமத்துவத்தில் சுதந்திரத்தில் எவ்வாறு ஒருவருடன் ஒருவர் இணைந்து கொள்வது எனப் பேசும். இறைமை என்பது கற்பல்ல.

இரண்டாவது

மதச்சார்பற்ற சுதந்திரமான தமிழீழத்தை தாபிப்பதில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மன உறுதி பல கண்டங்களில் கடல்களைத் தாண்டி வாழும் கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு ஓரு வகையான கௌரவத்தையும் தன்மானத்தையும் அளித்துள்ளது.

சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கை போன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் பெப்பிரவரி 5,2009 இல் இடம் பெற்ற விவாதத்தில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பிரித்தானியாவிற்கு (அத்தோடு மங்கலமாக சர்வதேச சமூகம் எனக் கூறப்படும் மும்மூர்த்திகளின்) உள்ள கேந்திர நலன்கள் பற்றி பிரஸ்தாபிக்கப் படாதது ஆச்சரியத்திற்கு உரிய ஒன்றன்று.

"....சிறீலங்காவில் தமக்கு உள்ள முரண்பாடான கேந்திர நலன்களை சர்வதேச பாத்திரங்கள் கூற மறுப்பதன் மூலம் உண்மையான காரியங்களுக்கு மேலாக ஒரு திரைச் சீலையை விரித்து அதன் மூலம் தீவில் உள்ள முரண்பாட்டைத் தீர்ப்பதை தவிர்க்கின்றனர். தீக்கோழிபோல் நாம் எமது தலைகளை மண்ணில் புதைக்க முடியாது. அறையில் உள்ள யானையை தவிர்க்க முடியாது. சர்வதேச சக்திகளால் நீதியான முறையில் சாதானத்தை அடையும் நோக்கம் பெரிய குரலில் ஒலிக்கப்பட்டபோதும் அவர்களின்உண்மையான அரசியல்,அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான தமிழீழப் போராட்டத்தின் நீதியை ஏற்க மறுக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள சிறீலங்காவின் இனப்படுகொலை பற்றி இணைத்தலைமை நாடுகளின் அறிக்கைக்கு சில நாட்களுக்கு முன்னர் ,ஜனவரி 29 ,2009 இல் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என நான் எழுதியதை மீண்டும் கூறலாம்:

" சிங்கள சிறீலங்கா தனது ' சமநிலை வலுமையை ' கையாளுவதன் மூலம் தீவின் பகுதிகளை (அத்தோடு அதைச் சு஻ௌழவுள்ள கடல்களையும்) இந்தியா,அமெரிக்கா,சீனா என்பவைக்கு கையளித்துள்ளது. திருகோணமலை எண்ணைக் குதத்தில் இந்தியா,அதேசமயம் திருகோணமலையில் சீனாவின் நிலக்கரி மூலம் எரிக்கப்படும் மின்சார உற்பத்தியை காண்கிறோம். ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்கான சீனாவின் திட்டம் ஒருபுறம். அதே சமயம் அதே ஹம்பாந்தோட்டையில் அமெரிக்காவுடனான கடல்படைப் பயிற்சிக்கான முன்னெடுப்பு ( இந்து சமுத்திரத்தில் சீனாவின் இருப்பை தக்கவைக்க). மன்னார் கடலில் எண்ணைவள கண்டுபிடிப்பிற்கு இந்தியாவிற்கு பிரத்தியேக அனுமதிப் பத்திரம். அதே சமயம் அதேபோல் சீனாவிற்கும் அதே உரிமை. தீவில் அஈரிக்க வானொலியின் தொடர்ச்சியான இருப்பு. அத்தோடு மார்ச் 5,2007 இல் செய்யப்பட்ட,அமெரிக்காவுடனான 10 வருட கொள்வனவு மற்றும் சேவைகளுக்கான ஒப்பந்தம்.

சிறீலங்கா தானும் 'சமநிலை வலுமையை " கையாள முயற்சிப்பது அமெரிக்காவிற்கு ஒரு வகையில் சினமூட்டுகிறது. இதனை சிறீலங்காவிற்கு தனிப்பட்ட முறையில் அது தெரிவித்துள்ளது. அதாவது சிறீலங்கா ஒரு வல்லரசு அல்ல. வல்லரசுபோல் அது பாவனை செய்யக்கூடாது. அமெரிகாவில் உள்ள நபர்களால் ஜனாதிபதி ராஜபக்சவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதான எச்சரிக்கை அவரை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு உள்ள நலன்களுடன் ஒத்துழைக்க வைக்கும். அது நடக்கும்போது அவர்மீதான வழக்கு எச்சரிக்கையும் இயற்கை மரணம் அடையும். மாறாக ராஜபக்சவின் இடதுசாரிசார்பான வாக்காளர்தளம் அவரை வெளிப்படையாக அமெரிக்காவின் தாளத்திற்கு ஆடவிட மறுத்தால் ,அமெரிக்காவிற்கு ஏற்ற,தமிழர்களை தொடர்ந்தும் ஆளுகின்ற மற்றைய சிங்களத் தலைவர்களை கொண்டுவருவர். ஆனால் ராஜபக்ச கூட்டம் தமது இன அழிப்பை சாதிப்பதன் முன்பு அல்ல.

இந்தச் சு஻ௌழ்ச்சிகளை ஜனாதிபதி ராஜபக்சவும் ,அதிகாரத்தில் உள்ள மற்றவர்களும் அறியாததல்ல. அறிந்தபடியால்தான் லசந்த விக்கிரமறட்ன கொலை செய்யப்பட்டார். ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன. அத்தோடு இனஅழிப்பு நடவடிக்கை முடிந்தபின்,தமிழரின் எதிர்ப்பு அழிக்கப்பட்டபின்,தமிழ் மக்களை தொடர்ந்தும் ஆழ வேறு தலைமைகளை உருவாக்க சர்வதேச சமூகத்தால் பாவிக்கப்படக்கூடியவர்களையும் ராஜபக்ச அழித்து வருகிறார். ஏனென்றால் 60 வருட இன அழிப்பு நடவடிக்கை காட்டுவது என்னவென்றால் சிங்கள இனவெறியும் அதன் கரையச் செய்யும் நிகழ்ச்சி நிரலும் ராஜபக்சவின் பிரத்தியேகமான ஒன்றல்ல.

ஆகவே சர்வதேச சமூகம் மனிதாபிமான அடிப்படையில் தலையிடுவதற்கும் உலகம் பூர்வான தமிழ்மக்களின் வேண்டுதலுக்குப் பதிலாக தலையிடுவதுபோல் காட்ட முன்,தமிழர்களின் எதிர்ப்பு கணிசமான அளவில் பலவீனப்படுத்தப்படும்வரை அல்லது அழிக்கப்படும்வரை காத்திருக்கும். இதே சமயம் தமிழர்களின் இவ்வாறான உலகம் தழுவிய வேண்டுகோளை சர்வதேச சமூகம் வரவேற்கும். இவை சர்வதேச சமூகத்தின் அபிவிருத்தி உதவியுடன் கூடிய முடிவான தலையீட்டிற்கும் அத்தோடு கூடிய முரண்பாட்டு தீர்வல்ல முரண்பாட்டு உருமாற்றம் என்ற மந்திரத்திற்கும் வழிவகுக்கும். அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து அவர்கள் விடுதலை கேட்கும்போது அவர்களுக்கு கேக்கை கொடுக்கும். கைப்பற்றப்பட்ட மக்கள் எதைப் பெறினும் அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். எல்லாருக்கும் போதுமான கேக் இல்லாது விடினும் அதற்கு நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும்.

தமிழர்களின் எதிர்ப்பு கணிசமாக பலவீனப்படுத்தப்படும்வரை காத்திருந்த மும்மூர்த்திகள் (அமெரிக்கா,ஜரோப்பிய ஒன்றியம்,யப்பான்) தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது கேந்திர நலன்களுடன் ஒத்துழைக்க சிறீலங்காமீது அழுத்தம்போட கரிசனை காட்டுகின்றனர். இவர்களது கேந்திர நலனுக்கு அங்கு ஸ்திரத்தன்மை வேண்டும். இனஅழிப்பு ஸ்திரத்தன்மைக்கான வழி அல்ல என்பது மும்மூர்த்திகளுக்குத் தெரியும். ஆகவே வழமைபோல் மனித உரிமைகள்,மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் தமது அரசியல் இலக்குகளை அடைவதற்கான கருவிகளாக மீன்டும் முன்னுக்கு வந்துள்ளது.

மும்மூர்த்திகளை எதிர்நோக்கும் அரசியல் யதார்த்தம் என்னவெனில் ,ஜனாதிபதி ராஜபக்ச தனது இனஅழிப்பு யுத்தத்தை வெற்றிகரமாக முடித்து அதன்பின்னரும் அதிகாரத்தில் இருப்பாராயின் ,மும்மூர்த்திகள் சிறீலங்காவின் வெளிநாட்டுக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்துவதற்கான ஒரு முக்கிய நெம்புகோலை இழந்து விடுவர். அந்த வகையில் நியூடெல்கியும்தான்.

அதனால்தான் இனப்படுகொலைக்கான குற்றத்திற்கு ஜனாதிபதி ராஜபக்சவிற்கும் அவரது குழாத்திற்கும் எதிரான மிரட்டல்கள். பொதுநல அமைப்பில் இருந்து வெளியேற்றும் மிரட்டல்கள். மக்களைக் காக்கும் உரிமை (ஆர்2பீ) கொள்கையின் அடிப்படையில் தலையிடும் மிரட்டல்கள். அதன்மூலம் மும்மூர்திகளின் வழியிலான சமாதானப் படை / மனிதாபிமான குழுக்கள் என்பவற்றை தீவில் கொண்டுவரல். இவற்றின் முலம் ஜனாதிபதி ராஜபக்சவின் உள்ளூர் வாக்குவங்கி அவரை அமெரிக்கா சாரத் தடையாக இருக்குமாயின் அவர்களுக்குச் சார்பான சிங்கள அரசாங்கம் அமைக்கப்படலாம்.

இதனால்தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் அவரது அதிகாரிகளும் சிறீலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் அடிக்கடி சந்திக்கின்றனர். இந்து சமுத்திரப் பிராந்தியத்ததில் உருவாக்கப்பட்டுள்ள அமைதி குலைக்கிற சமநிலை வலுமையால் ஏற்பட்டுள்ள இடைவெளியை தமது நலன்களைப் பேண இந்தியா முயற்சிக்கிறது. இதற்காக இந்தியா 13 ஆம் திருத்தச் சட்டம் பற்றிய தனது பகிரங்க ஈடுபாட்டை தொடர்ந்து கூறுகிறது. இதனை 1987 ஆம் ஆண்டின் இந்திய இலங்கை உடன்படிக்கையில் பரிமாறப்பட்ட கடிதங்கள் பற்றி அதேபோல் பகிரங்கமாகக் கூறுவதில்லை. அதே சமயம் இந்தியாவும் தனது உள்ளூரில் வளர்ந்த ஜெவ்வை ( தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதிபோல்) சிங்கள சிறீலங்காவின் இனஅழிப்புப் பற்றியும் ,யுத்த குற்றங்கள் பற்றியும் சம்பந்தப்பட்ட சத்தங்களைப் போடுமாறு உற்சாகப்படுத்துகிறது. 2006 இல் தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றபோது சிறீலங்கா விசயத்தில் மத்திய அரசின் கொள்கையே தமிழ்நாட்டின் கொள்கையும் என்று சும்மாவா கூறினார். கருணாநிதியும் ,நியூடெல்கியும் வேறு தொனிகளில் பேசலாம் ஆனால் நோக்கம் ஒன்றுதான்.

சிறீலங்காவின் அன்பான ,உண்மையான நண்பனான சீனா சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்வோரின் ஜெவ்,மற்,(Mutt) பாத்திரங்களின் நடத்தையை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது கேந்திர முத்துக்களில் ஒன்று தொடர்பாக,தொடர்ந்தும் கரிசனையோடு அவதானிக்கும் என ஒருவர் கற்பனை பண்ணலாம்.

தங்கள் நலன்களையே பாத்துக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் ஜெவ்,மற்(Mutt) பாத்திர நடத்தையானது கடந்த பல தசாப்தங்களாகத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் வேதனைகளும் துன்பங்களும் இன்று கூட ஜெவ்வோ அல்லது மற்றோ(Mutt) ஏற்றுக்கொள்ளாதது பகிரங்கமாகியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் 1981 இல் அமெரிக்க மசாசுசெற்ஸ் மாநிலத்தில் அழகாக வெளியிடப்பட்ட அந்தப் பிரகடனத்தின் நீதியை ஜெவ்வோ மற்றோ ஏற்கமாட்டார்கள். அநதப் பிரகடனம் வருமாறு:

" ...ஆதிகாலத்தில் இருந்து வேறான மொழிகளையும்,சமயங்களையும்,பண்பாட்டையும் அத்தோடு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பையும் சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் கொண்டிருந்தது. இந்த இரண்டு வேறான தேசங்களிடையே இருந்த வேறுபாட்டை அறியாத பிரத்தானியர் காலனித்துவ நிர்வாக இணைப்பிற்காக ஒரு ஆட்சியை நிர்ப்பந்தமாக ஏற்படுத்தினர் . அத்தோடு,

எதிர்பார்த்தவண்ணம் 1948 இல் பிரித்தானியர் தீவை விட்டு அகன்றபோது,அதன் விழைவாக விருப்பம் அற்ற இரண்டு தேசங்கள் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புக்குள் தள்ளப்பட்டனர். ஜனநாயக கோட்பாடுகளை பாழாக்கிய சிங்களவர் தமிழ் மக்களை ஆளும் புதிய எசமானார்கள் ஆனார்கள். அதனால்

மசாசுசெட்ஸ் மக்கள் சபை தமிழ் தேசத்தின் இறைமை கொண்ட வேறான தமிழீழ அரசினை மீள தாபிப்பதற்கும்,உருவாக்குவதற்குமான விடுதலைக்கான போராட்டத்தை ஆதரிக்குமாறும்,தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை பகிரங்கமாக அங்கீகரிக்குமாறும் அமெரிக்க ஜனாதிபதியையும்,அமெரிக்காவின் காங்கிறசையும் இத்தால் வேண்டிக்கொள்கிறது.

தங்கள் நலன்களையே பாத்துக்கொள்ளும் சர்வதேச சமூகத்தின் ஜெவ் ,மற்றின்(Mutt) நடத்தைகள் பகிரங்கப்படுத்தப்படும் ஏனெனில் ஜெவ்வோ அல்லது மற்றோ(Mutt) 1976 இல் காந்திய தலைவர் எஸ்.ஜே.வி செல்வநாயகம் கூறிய அந்த நிலைத்திருக்கும் உண்மையை ஏற்க மாட்டார்கள். அவர் கூறுகையில்:

காலம் காலமாக இந்த நாட்டில் சிங்களவர்களும் தமிழர்களும் அன்னிய ஆட்சியின் கீழ் வரும்வரை தனித்துவமான இறைமை கொண்ட மக்களாக வாழ்ந்தனர். தங்களின் சுதந்திரத்தையும் மீட்பார்கள் என்ற முழு நம்பிக்கையில் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தமிழர்கள் முன்னுக்கு நின்றார்கள் என்பதை ஞாபகத்தில் கொள்ளவேண்டும். கடந்த 25 ஆண்டுகளாக ஜக்கிய இலங்கைக்குள் சிங்களவருக்குச் சமமாக எமது அரசியல் உரிமைகளை பெறுவதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம்.

தங்கள் சுதந்திரத்தில் இருந்து வரும் அதிகாரத்தைப் பாவித்து எல்லாச் சிங்கள அரசாங்கங்களும் எமது அடிப்படை உரிமைகளை மறுத்து எம்மை ஆளப்படுவோராக தள்ளியுள்ளனர். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பொதுவான இறைமையைப் பாவித்தே இந்த அரசாங்கங்கள் இதனைச் சாதித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை தமிழீழத்தேசம் ஏற்கனவே தமிழ் மக்களிடம் உள்கள இறைமையை பாவித்து விடுதலை அடையவேண்டும் என எனது மக்களுக்கும் ,நாட்டிற்கும் அறிவிக்க விரும்புகின்றேன். "

சுருக்கமாகவும் நேர்மையாகவும் கூறுவதாயின் : சர்வதேச சமூகம் என்று கூறிக்கொள்வோரது தங்கள் நலன்களை மட்டும் கவனிக்கும் ஜெவ்,மற(Mutt)க பாத்திரங்கள் பகிரங்கப்படுத்தப்படும் ,ஏனெனில் இணைத்தலைமை" மற்"(Mutt) சிங்கள இனஅழிப்புப் படையிடம் சரண் அடையுமாறு கூறுகையில் பிரித்தானிய "ஜெவ் "அந்த சிங்கள இனஅழிப்புப் படையினருக்கு எதிரான யுத்த குற்றங்கள் பற்றி ஓலமிட தயாராக உள்ளது. ஆனால் ஜெவ்வோ அல்லது மற்றோ(Mutt) தமிழீழத்தின் சுதந்திரத்திற்காக இன்னமும் கதறத் தயாராகவில்லை.

ஆனால் கடந்த பல தசாப்தங்களாக ஆழமாகவும் அகலமாகவும் விரிவுபெறும் சிங்கள இனத்துவ தேசியத்திற்கு எதிராகப் போராடும் தமிழீழ மக்களுக்கு அவர்களின் குற்றச் சாட்டு இனப்படுகொலையாக இருப்பினும் அவர்களின் போராட்டம் அன்றும் இன்றும் விடுதலைக்காகவே. அன்னிய சிங்கள ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்காகவே.

" மற்ற தேசங்கள் போராட்டங்களாலும்,யுத்தங்களாலும் ,வேதனைகளாலும் இரத்தக் கண்ணீராலும் வென்றவற்றை நாங்கள் கடுமையான தியாகங்களைச் செய்யாமல் ,ஊடகவியலாளரின் பேனா மையைக் கொண்டும்,மனு தயாரிப்பவரின் உதவியுடனும் சொற்பொழிவாளரின் வல்லமையைக் கொண்டும் சுலபமாகச் சாதித்திட அனுமதிக்கப்படுவோம் என்று எண்ணுவது ஓரு வீண் கனவாகும். " சிறீ அரபிந்தோ

"...தேசிய ஞாபகங்களைப் பொறுத்தளவில் வெற்றிகளைவிட துன்பங்கள் மிகவும் பெறுமதியானவை,ஏனெனில் அவை கடமைகளை வலியுறுத்துகிறது. அத்தோடு ஓரு பொது முயற்சியை வேண்டி நிற்கிறது. ஆகையினால் ஒரு தேசம் ஒரு பெரும் அளவிலான கூட்டான உணர்வு. அது கடந்த காலத்தில் ஒருவர் செய்த தியாகங்களையும் வருங்காலத்தில் ஒருவர் செய்ய தயாராக இருக்கும் தியாகங்களின் உணர்வையும் உள்ளடக்கியது. " தேசம் என்றால் என்ன? ஏனெஸ்ற் றினன் 1882.

இக்கட்டுரை தமிழ்நேசன் இணையத்தளத்தில் திரு. நடேசன் சத்தியேந்தரா அவர்களால் எழுதப்பட்ட The Jeff and Mutt Act என்னும் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழாக்கம்
ம.தனபாலசிங்கம்.
சிட்னி,அவுஸ்திரேலியா

0 Comments: