Friday, February 6, 2009

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை

இலங்கை இனப்பிரச்சினையின் விளைவான உள்நாட்டுப் போர் மிக மோசமான கட்டத்தை அடைந்து, சிவிலியன்கள் பெரும் எண்ணிக்கையில் கொன்றொழிக்கப்படும் பேரவலம் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலையில் டோக்கியோ உதவி வழங்கும் மாநாட்டின் இணைத்தலைமைகள் என்று தம்மை வர்ணித்துக்கொள்ளும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே ஆகியவை ஒன்றிணைந்து விடுத்திருக்கும் ஒரு கூட்டறிக்கை பலத்த வாதப் பிரதிவாதங்களைக் கிளப்பியிருக்கின்றது. குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர் வாழும் தேசங்களில் இந்த நான்கு நாடுகளுக்கும் எதிரான உணர்வலைகளை இந்த அறிக்கை கிளப்பி விட்டிருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சாத்தியம் ஒரே வழி என்று கூறிக்கொள்ளும் சர்வதேசம், மறுபுறத்தில் மேற்படி அறிக்கை மூலம், இராணுவத் தீர்வில் ஒரே முனைப்பாகவும் வெறியாகவும் இருக்கும் இலங்கை அரசின் எத்தனத்துக்கு முண்டு கொடுத்து உதவ முன்வந்திருக்கின்றது என்ற சாரப்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கின்றமை கவனிக்கத்தக்கது.

"ஆயுதங்களைக் கைவிட்டு, வன்முறைகளைத் துறந்து, இலங்கை அரசின் மன்னிப்பு வழங்க முன்வரும் வாய்ப்பை ஏற்று, நீதியான நீடித்த அரசியல் தீர்வை எட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஓர் அரசியல் கட்சியாகப் பங்குபற்றுவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இலங்கை அரசுடன் பேசுவதற்குப் புலிகள் இயக்கம் முன்வரவேண்டும்" என்ற இணைத் தலைமைகளின் கோரிக்கையே இப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி நிற்கின்றது.

ஒருபுறம் இதனைத் தமிழர் தலைமைகள் காட்டமாக விமர்சிக்கின்றன என்றால் மறுபுறம் இந்த அறிக்கை புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட மேற்குலகம் எடுக்கும் முயற்சி என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கடுமையாகச் சாடுகின்றார்.

இணைத் தலைமைகளின் இந்த அறிக்கை குறித்து புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் மையம் இந்த விடயத்தை ஒட்டி சில வினாக்களை எழுப்பியிருக்கின்றது.


* இணைத்தலைமைகள் குறிப்பிடுவதுபோல இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கை அரசும் புலிகளும் நேரடியாகப் பேசக்கூடிய சூழல் இருக்குமானால், இணைத்தலைமை இத்தகைய அறிக்கையே விடவேண்டிய தேவையே வந்திருக்காது.

* உலகில் எங்கும், எந்த ஆயுதக் குழுவையும் பேச்சுக்கான முன் நிபந்தனையாக ஆயுதங்களைக் கீழே வைக்கவேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது பேச்சை ஆரம்பிக்க வழியே செய்யாது.

* தற்போதைய இராணுவ வெற்றிகளை நல்ல சந்தர்ப்பமாகவும் சாதகமாகவும் பயன்படுத்தி, வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்தும் முன் முயற்சிகளை எடுக்குமாறு இலங்கை அரசை இணைத் தலைமைகள் கோரவில்லை.

* "மனித இழப்பின்றி" யுத்தத்தை முன்னெடுப்பதாக இலங்கை அரசு கூறினாலும், மனிதப் பேரழிவுகள் குறித்து உண்மைகளை செஞ்சிலுவைச் சர்வதேச குழு போன்றவை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த மனித பேரழிவு அளவீடு மட்டம் குறித்து இணைத் தலைமைகள் தமது அறிக்கையில் எதுவும் குறிப்பிடாமல் மௌனம் சாதிக்கின்றமை கவலைக்குரியது.

* ஜெனீவா பிரகடனம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை உள்ளடங்கலான யுத்தச் சட்டங்களைக் கடைப் பிடிக்குமாறு இலங்கை அரசையும் புலிகளையும் இணைத் தலைமைகள் கோரவேயில்லை.

*"வடக்கில் எஞ்சிய தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்தையும் புலிகள் மிக விரைவில் இழந்து போகும் அந்த சொற்ப காலம் வரையே அவர்கள் (அந்த சிவிலியன்கள்) அங்கு தங்கியிருக்க வேண்டியிருக்கும்." என வெகு "ஸிம்பிளாக" குறிப்பிடும் இணைத்தலைமைகள், "அந்த சொற்ப காலத்திற்குள் " முல்லைத்தீவில் சிக்கியுள்ள சுமார் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான சிலியன்களுக்கு ஏற்படக்கூடிய பெரும் உயிரிழப்பை கவனத்தில் கொள்ளாமை அதிர்ச்சி தருவதாகும். அதுவும் சிவில் வைத்தியசாலைமீதே குண்டுவீசி அதை அழிக்கும் தாக்குதல் நடத்தும் கட்டத்துக்கு நிலைமை சென்றிருக்கையில், இணைத் தலைமைகள் இப்படி நடந்து கொள்கின்றன.

இவ்வாறு சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்பியிருக்கின்றது ஆசிய மனித உரிமைகள் மையம்.

இதேசமயம், இணைத்தலைமைகளின் இந்த அறிக்கை வெளியான பின்னர் வாஷிங்டனில் சந்தித்த அமெரிக்க, பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்களான ஹிலாரி கிளிண்டன் அம்மையாரும் டேவிட் மில்லிபாண்ட்டும் அச்சந்திப்பை ஒட்டி விடுத்த கூட்டறிக்கையில் சில விடயங்களைப் பிரதி பலித்திருக்கின்றார்கள்.

இணைத் தலைமைகளின் முன்னைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான விடயங்களை வரிக்கு வரி தாங்கள் வரவேற்கின்றனர் என்று அதில் குறிப்பிட்ட அவர்கள் இருவரும், "புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு வன்முறைகளைத் துறந்து, மன்னிப்பு வாய்ப்பை ஏற்று, அரசியல் கட்சியாகச் செயற்படுவது குறித்து இலங்கை அரசுடன் பேச வேண்டும்" என்ற இணைத்தலைமைகளின் கோரிக் கைகளை தாங்கள் வரவேற்கின்றனர் என்று எதுவுமே குறிப்பிடாமல் தவிர்த்திருக்கின்றமை கவனிக்கத்தக்கது.

அத்தோடு, "நீடித்த சமாதானத்துக்காக இலங்கை அரசு, இந்தியா, ஐ.நா. மற்றும் ஏனைய தரப்புகளுடன் சேர்ந்து இணைத் தலைமைகள் பணியாற்றும்" என்று இணைத் தலைமைகள் தமது கூட்டறிக்கையில் குறிப்பிட ஹிலாரி மில்லிபாண்ட் கூட்டறிக்கையோ "ஐ.நா. மற்றும் இணைத் தலைமைகளோடு சேர்ந்து இவ்விடயத்தில் பணியாற்றத் தங்கள் இரு நாடுகளும் தயாராக உள்ளன" என்று தெரிவித்ததன் மூலம் இவ்விடயத்தில் இந்தியா வைக் "காய் வெட்டி" விட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி - உதயன்

0 Comments: