வன்னியில் தற்போது நடைபெற்று வரும் இன அழிப்பு நடவடிக்கைகளும், யுத்தச் செயற்பாடுகளும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் முடிவாக அமைந்து விடுமோ என்றொரு ஐயப்பாடு இன்று ஒரு சில தரப்புகளில் தோன்றியுள்ளது.
அதேவேளை, இராணுவ வல்லமை மிக்கவர்களாகக் கருதப்பட்டு வந்த உலகில் முப்படைகளையும் கொண்ட ஒரேயொரு விடுதலை அமைப்பான விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தொடர்ச்சியாகச் சந்தித்து வரும் பின்னடைவுகளுக்கு என்ன காரணம் என அறிந்து கொள்வதிலும் ஆர்வம் தோன்றியுள்ளது.
தமிழர் தாயகத்தின் பெரும்பாலான பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்ட, இராணுவ ரீதியில் பலம் ஓங்கிய நிலையிலேயே 2001 டிசம்பரில் விடுதலைப் புலிகள் சமாதானத்துக்கான பாதையைத் திறந்தார்கள். அதன் நீழ்ச்சியாக உருவான போர் நிறுத்த ஒப்பந்தம், அதன் விளைவாக ஏற்பட்ட குறுகிய சமாதானச் சூழல் என்பவை தமிழ் மக்களின் மனங்களில் ஏக்கத்துக்கு நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது.
இக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளும் தம்மை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதியாக இனங்காட்டிக் கொண்டார்கள். பல்வேறு நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டு தமிழர் தரப்பு நியாயத்தைப் புரிய வைத்தார்கள். உலக நாடுகளும் தமிழர்களின் கவலைகளையும், நியாயமான கோரிக்கைகளையும் புரிந்து கொண்டது போன்று தென்பட்டது.
மறுபுறம், தமிழர்களின் தரப்பு நியாயத்தை மறுதலித்து விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளாக சர்வதேச அரங்கில் நிரூபிக்க சிங்கள தேசம் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டது. சிங்களத்தின் பசப்பு வார்த்தைகளில் மயங்கிய மேற்குலகம், தமிழ் சிங்கள மோதலுக்குக் காரணம் சிங்கள தேசத்தின் இனவாத அணுகுமுறை அல்ல, மாறாக விடுதலைப் புலிகளின் கைகளில் உள்ள ஆயுதமே என்னும் முடிவுக்கு வந்தது. அதன் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்ததுடன் அந்த நாடுகளில் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளையும் முடக்கியது.
அரசுக்குள் அரசு என்ற நிலைப்பாட்டுடன் கிளிநொச்சியைத் தலைமையகமாகக் கொண்டு ஒரு நிர்வாகத்தை நடாத்தி வந்த புலிகளுக்கு சர்வதேச சமூகத்தின் இத்தகைய அணுகுமுறை புரிந்து கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருந்தது.
இலங்கைத் தீவில் நடைபெற்று வரும் இன முரண்பாட்டு மோதலில் சிங்கள அரசு, விடுதலைப் புலிகள் என இரு தரப்பார் மட்டுமே ஈடுபட்டு வந்த காலகட்டம் எப்போதே முடிவுக்கு வந்து விட்டது. விரும்பியோ விரும்பாமலோ மூன்றாவது சக்தியாக சர்வதேச சமூகம் என்ற அடையாளத்துடன் மேற்குலகு - அயல் நாடான இந்தியாவைப் புறந்தள்ளி விட்டு - நுழைந்து விட்டது.
மோதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ள விடுதலைப் புலிகளதும், சிங்கள தேசத்தினதும் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக உள்ளது. தனித் தமிழீழம் அல்லது தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய தனிநாட்டுக்கு
இணையான ஒரு தீர்வு என்பதே விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு.
உரிமைகள் எதுவும் வழங்கப்படாது முடிந்தால் முடியுமான அளவு தமிழர்களை அழித்தொழித்து விட்டு அரைகுறைத் தீர்வைப் பெற்றுக் கொண்டு தனது காலடியில் தமிழர்கள் அடிமைகளாகக் கிடக்க வேண்டும் என்பதே சிங்கள தேசத்தின் நிலைப்பாடு.
இதில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட முடியாமல் இருப்பது மேற்குலகின் நிலைப்பாடே.
சமாதான வழிகளூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு எனக் கூறிக் கொண்டே மோதலில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு தரப்பான சிங்கள தேசத்துக்கு ஆயுதமும் நிதியும் வழங்கி வரும் மேற்குலகம், மோதலில் ஈடுபட்டுள்ள மற்றைய தரப்பான புலிகளை பயங்கரவாதிகள் என அறிவித்து விட்டு அவர்களின் செயற்பாடுகளை முடக்கிவிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
அப்பட்டமான மனித உரிமை மீறல்களில் சிங்கள தேசம் ஈடுபட்டு வருவதை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டு அவற்றை ஒப்புக்காகக் கண்டிக்கும் சர்வதேசம், தன்னைத் தொடர்ந்து சிறி லங்கா அரசுடனேயே அடையாளப்படுத்தி வருகின்றது. இதில் சம்பந்தப்பட்ட மேற்குலக நாடுகளுள் ஒரு சில நாடுகள் தத்தமக்கென தனித்துவமான நலன்களைக் கொண்டுள்ளன. மோதல் தீர்வு என்ற தலையங்கத்தின் கீழ் அவற்றைச் சாதித்துக் கொள்ளவும் முயன்று வருகின்றன.
இந்தியாவின் நிலைப்பாடும் அண்மைக் காலத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியதாக இருக்கின்றது. தமிழர்களின் உரிமைகள் அபிலாசைகள் பற்றியெல்லாம் இந்தியாவுக்குக் கரிசனை இல்லை. இந்தியாவின் கரிசனை எல்லாம் விடுதலைப் புலிகள் முற்று முழுதாக அழித்தொழிக்கப்பட்ட வேண்டும் என்பதே. அதற்காக - விளைவு பற்றிக் கவலையின்றி -தமிழர்களுக்கு எதிரான போரைத் தானே முன்னின்று நடாத்தி வருகின்றது.
இறுதியாக வெளிவந்த இணைத்தலைமை நாடுகளின் அறிக்கை மேலும் குழப்பகரமானதாக அமைந்திருந்தது. ஜனவரி மாத இறுதிப் பகுதியில் நோர்வே வெளியிட்டிருந்த அறிக்கை போரை நிறுத்துமாறு சிங்கள தேசத்தைக் கோரியிருந்தது. ஆனால், ஒரு வாரத்தின் பின்னர் பெப்ரவரி 4 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த அறிக்கை விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற தோரணையில் அமைந்திருந்தது.
வன்னியில் நடைபெற்றுவரும் மிகப்பெரிய மனித அவலத்தை மையமாகக் கொண்டு சர்வதேச ரீதியான விழிப்புணர்வு ஒன்று உருவாகி, அதன் விளைவால் சிங்களம் இராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தம் உருவாகியுள்ள சூழ்நிலையில் வெளியாகியுள்ள இணைத் தலைமை நாடுகளின் அறிக்கை கவனத்தைத் திசை திருப்புவதாகவும், விவகாரத்தை தவறான பாதைக்கு இட்டுச் செல்வதாகவும் அமைந்துள்ளது.
வன்னி மக்கள் இன்று அனுபவித்து வரும் இன்னல்களுக்கு விடுதலைப் புலிகளின் கைகளில் உள்ள ஆயுதங்களே காரணமெனவும், அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டால் தமிழர்களுக்கு உரிமைகள் கிடைத்துவிடும் என்ற கருத்துப் படவும் மேற்குலகம் பசப்பு வார்த்தைகளைக் கூறி வருகின்றது.
தப்பித் தவறி தமிழர்களாகப் பிறந்து விட்ட ஒரு சிலரும் கூட இத்தகைய பிரசாரங்களில் மயங்கி விடுதலைப் புலிகளைக் குற்றஞ்சாட்டுவதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்தவும் போராட்டத்துக்கு அவர்கள் வழங்கும் ஆதரவைத் தடுத்து விடவும் முயன்று வருகின்றனர்.
இத்தகைய அறிக்கைகள் தொடர்பிலும், அவை தொடர்பில் குழப்பவாதிகள் ஒரு சிலர் தெரிவித்துவரும் கருத்துக்கள் தொடர்பிலும் தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.
தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தும் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகப் பின்னடைவைச் சந்தித்துள்ள போதிலும் கூட விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
2002 போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தான காலப்பகுதியில் சர்வதேச அரங்கில் ஈழத் தமிழர் விவகாரம் பெற்ற கவன ஈர்ப்புக்குச் சமமாக இன்றைய வன்னி அவலம் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இந்த அருமையான தருணத்தை தமிழ் மக்கள் - விசேடமாக புலம்பெயர் தமிழ் மக்கள் - நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஈழத் தமிழர் விவகாரத்தில் மேற்குலகின் எதிர்பார்ப்பு என்னவாக இருந்த போதிலும், விடயத்தை எமக்குச் சார்பானதாக மாற்றி எமது போராட்டத்தையும், போராட்ட அமைப்பையும் காக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உள்ளது.
அது செய்யப்படக் கூடியதே என்பதற்கு நல்லதொரு உதாரணம் கனேடிய நாடாளுமன்றத்தில் ஈழத் தமிழர் விவகாரம் தொடர்பாக நடைபெற்ற திடீர் விவாதம். இது தவிர, புலம்பெயர் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளின் அரசாங்கங்கள் வன்னி மக்களைக் காக்குமாறும் போர் நிறுத்தமொன்றை அறிவிக்குமாறும் கோரும் அறிக்கைகளை வெளியிட்டும் வருகின்றன.
மனிதாபிமான அடிப்படையிலான எந்தவொரு கோரிக்கையையும் சிங்கள அரசு கவனத்தில் கொள்ளப் போவதில்லை என்பது தெரிந்த விடயமே. எனவே, இதனை எமக்குச் சாதகமாக்கிக் கொண்டு எமது பரப்புரைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதன் மூலம் மேற்குலகின் எதிர்பார்ப்பை எமக்குச் சாதகமானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
மேற்குலகு எமக்குச் சாதகமாக மாறும் பட்சத்தில் சிங்கள தேசத்தின் சார்பில் தமிழின ஒழிப்புப் போரைத் தலைமையேற்று நடாத்திக் கொண்டிருக்கும் இந்தியாவும் பணிந்தாக வேண்டிய சூழல் உருவாகியே தீரும் என்பது நிச்சயம்.
நன்றி:- சண். தவராஜா - நிலவரம் (13.02.09)
Saturday, February 21, 2009
சர்வதேசம் ஈழத் தமிழர்களிடம் எதனை எதிர்பார்க்கின்றது?
Posted by tamil at 6:09 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment