Thursday, February 12, 2009

செஞ்சிலுவையை வெளியேற்ற முஸ்தீபு?

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவை இலங்கையிலி ருந்து வெளியேற்றவேண்டும் என்ற கோஷம் தென்னிலங்கையில் மிகப் பலமாக பொங்கி எழுந்துள்ளது. அந்தக் கோஷத்துக்கு மேலும் ஆதரவு தேடுவதற்காகவும் பிரசித்தப்படுத்துவதற்காகவும் கொழும்பில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. அந்தப் பேரணியை நடத்திய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தனது கோரிக்கைக்கு முன்வைத்த காரணம் செஞ்சிலுவைக் குழு புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது என்பதாகும்.
இதற்குமுன்னர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் செஞ்சிலுவைக் குழுவை நாட்டை விட்டுத் துரத்தவேண்டும் என்று வலியுறுத்திச் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அவரும் செஞ்சிலுவைக் குழுவினர் புலிகளுக்கு ஆதரவாகவும் படையினருக்கு எதிராகவும் செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டையே தூக்கிப் பிடித்தார்.
மொத்தத்தில் இனவாதத்தில் திளைத்து, யுத்தவெறியில் நின்று சன்னதம் ஆடும் தென்னிலங்கைத் தரப்புகள் எல்லாமே, இங்குள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளில் பணியாற்றும் பிரதிநிதிகள், அதிகாரிகள் தமக்குச் சார்பாகவே செயற்படவேண்டும் என்று விரும்புகிறார்கள். இல்லையெனில் அவர்களுக்கு சந்தேக (புலி) முத்திரை குத்துகிறார்கள்.

அதாவது, தமிழர்களின் பிறப்புரிமைகளை வழங்காது, அவர்கள் இரண்டாம் தரப்பிரசைகளாக தாம் போடும் அரசியல் மற்றும் நிர்வாகப் பிச்சைகளை ஏந்தி வாழ வேண்டும் என்ற தமது கோட்பாடுகளையும் கொள்கைகளை யும் ஏற்றுக்கொண்டு பிறநாட்டவரும் அதற்குத் தாளம் போட வேண்டும் என்றேஎதிர்பார்க்கின்றார்கள்.

இத்தகையோரின் வாக்குப் பலத்தினைக் கொண்டு ஆட்சிக் கட்டில் ஏறிய மஹிந்தரின் அரசும், அந்த நச்சு வழியிலேயே "வீறுநடை" போடுகிறது. தமிழர்களை அடக்கி, ஒடுக்கி, தாம் பெரும்பான்மை என்ற ஒரே காரணத்துக் காக சிங்களத்துவம் மேலாதிக்கம் செய்ய வேண் டும் என்ற இலக்குடன் ஆட்சி நடத்துவதால், அரசும் இந்த நாட்டில் வந்து பணிபுரியும் வெளிநாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் எல்லோருமே, தமது உண்மை, நீதி என்ற இரண்டு கண்களையும் மூடிக்கொண்டு தமக்கு ஆதரவா கச் செயற்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கிறது;விரும்புகிறது.

அந்த விருப்பத்தின் ஒரு துளிதான், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித்த கோஹண கூறியுள்ள (அல்லது கோரியுள்ள) கருத்து. புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது இராணுவம் தாக்குதல் நடத்தியதாகத்தகவல் வெளியிட்டதற்காக, ஐ.நா.சபையின் கொழும்புச் செயலகம் மற்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் கோஹண!

வன்னியில் நடைபெறும் உண்மைகள் அரசின் அட்டூழியங்கள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காகவே வன்னிப் பிரதேசத்தில் பணிபுரிந்த வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள்யாவும் பல மாதங்களுக்கு முன்னரே "பாதுகாப்பு" என்ற பூண் போடப்பட்டு வெளியேற்றப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததும் புரிந்ததுமாகும்.
அந்தவகையில், போரின் மத்தியிலும் அங்கு மனிதா பிமானப் பணிகளைச் செய்வதற்கென அனுமதிக்கப்பட்டிருப்பவை ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டமும், செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவும் மட்டுமே.

அவை தாமாக வெளியேறிவிடக்கூடாது, தமது அளப் பரிய பணிகளில் இருந்து பின்வாங்கிவிடக்கூடாது என்பதே வன்னியில் போர் அக்கிரமத்துக்குள் சிக்குண்டிருக்கும் ஒவ்வொரு தமிழ்ப் பிரஜையினதும் ஆராதவேண்டு தலாக இருக்கின்றது.
வெளிநாட்டவர்கள் அல்லது வெளிநாடுகள் உண்மை யைக் கூறித் தமது நோக்கத்துக்கு ஊறுவிளை வித்துவிடக்கூடாது; சர்வதேச மட்டத்தில் தமது பொட்டுக்கேடு அம்பலமாகிவிடக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடன்,அளப்பரிய மனிதாபிமானப் பணியை காயமுற்றவர் களைக் காப்பாற்றும் பணியை ஆற்றும் செஞ்சிலுவைச்சர்வதேசக் குழுவை வன்னியிலிருந்து வெளியேற்றி விட்டு, காயமுற்றுச் சிகிச்சை வசதி கிடைக்காமல் மரணிக்கும் அப்பாவி மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க "அ" கரம் எழுதுகிறதா அரசு?
போர்முனையில் காயமுற்றவர்களைக் காப்பாற்றவேண் டும் என்ற அடிப்படை நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்ட செஞ்சிலுவைச் சங்கம், இப்போது போரில் காயப் படும் அப்பாவி மக்களின் உயிரைக் காப்பாற்றும் உன்னத மனிதாபிமானப் பணியை உலகளாவிய ரீதியில் ஆற்றி வருகிறது. மனித உயிர்கள் எந்த நாட்டவர்,இனத் தவர் , மதத்தினர் என்ற வேறுபாடு இன்றி காப்பாற்றப் பட வேண்டும் என்ற மகோன்னதமனிதாபிமானமே செஞ் சிலுவைச் சங்கத்தின் அடிவேர்.குடிமக்கள் ஆழ்ந்த வன்முறைக்கு அதிக அளவில் இலக்காகி வரும் இக்காலத்தில், செஞ்சிலுவைச் சர்வதே சக்குழு தனது கவனத்தை அவர்கள் மீதே குவித்துள்ளது. பகைமைகளின் நேரடி விளைவுகளிலிருந்தும், போர்களிலிருந்தும் அவர்களுக்கு எதிராகப் புரியப்படும் வன் முறைச் செயற்பாடுகளில் இருந்தும் மக்களைப் பாதுகாப்பதே செஞ்சிலுவைக் குழுவின் பிரதான பணி என் பதனை அவதானிக்க முடிகிறது.
அத்தகைய ஓர் இயக்கத்தை, வன்னிப் போர்ப் பிர தேசத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான கோஷங்க ளும்,கோரிக்கைகளும், முஸ்தீபுகளும் முரண்மிக்கவை யாகும். பூனை கண்ணை மூடிக் கொண்டால் பூலோகமே இருண்டு விட்டதாக கருதுவதா? உண்மையைச் சொல் வதற்காக, அந்த உண்மை தங்களை உறுத்துகிறது என்பதற்காக, செஞ்சிலுவைச் சங்கச் சர்வதேசக் குழுவை போர் பிரதேசமான வன்னியில் இருந்து வெளியேற்றஅடிகோலப்படுவது அபத்தமாகும்.

அந்த அமைப்பை "பொய்யனாக்கி" கரிபூச முயல்வது, சந்திரனைப் பார்த்து நாய் குரைத்த நிலைக்கு ஆளாக்கினும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

நன்றி
-உதயன்-

0 Comments: