Sunday, February 22, 2009

வான் புலிகளின் கரும்புலித் தாக்குதல்

கொழும்பு நகரில் வான்புலிகள் மீண்டு மொரு முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். வழமையாக நடத்தும் வான்தாக்குதலைப் போலல்லாது இம்முறை வான் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலை தாங்கள் முறியடித்து வான்புலிகளது இரு விமானங்களையும் வெற்றிகரமாக அழித்து விட்டதாக படைத்தரப்பு கூறினாலும், கரும்புலித் தாக்குதலை நடத்த வந்த வான்புலிகளின் விமானங்கள் அழியுமென்பது நிச்சயம். அதேநேரம், புலிகள் வான் கரும்புலித் தாக்குதலை ஆரம்பித்துவிட்டார்களென்ற சேதி அரசையும் படைத் தரப்பையும் பேரதிர்ச்சியடையச் செதுள்ளது.

வன்னியில் விடுதலைப் புலிகள் வசமிருக் கும் கடைசி நகரான புதுக்குடியிருப்பும் அடுத்த ஓரிரு நாட்களுக்குள் தங்கள் வசமாகி விடுமென படையினர் கூறிவரும் நிலையிலேயே அந்தப் பகுதியிலிருந்து வந்த புலிகளின் விமானங்கள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளன. புலிகள் மிகக் குறுகியதொரு பகுதிக்குள்ளேயே முடக்கப்பட்டிருப்பதாக படையினர் கூறுகின்றனர். புதுக்குடியிருப்பே புலிகள் வசமிருக்கும் கடைசி நகரெனவும் புதுக்குடியிருப்பும் போவிட்டால் புலிகளே இல்லையெனவும் படையினர் கூறிவந்த போதே அங்கிருந்து வந்த வான்புலிகள் கொழும்பு நகரில் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

வன்னியில் தற்போது புதுக்குடியிருப்பை அண்டிய கடலோரப் பகுதிக்குள் சுமார் 75 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள்ளேயே புலிகள் இருப்பதாக படையினர் கூறுகின்றனர். புலிகள் நிலைகொண்டுள்ள பகுதியை படையினர் சகல முனைகளிலும் சுற்றி வளைத்துள்ளனர். மூன்று முனைகளில் எட்டுப் படையணிகள் நிறுத்தப்பட்டு தினமும் புலிகளின் அனைத்துப் பகுதிகளிலும் இடைவிடாது ஆட்லறி ஷெல், பல்குழல் ரொக்கட்டுகள், மோட்டார் குண்டுகள், பீரங்கித் தாக்குதலையும் அவ்வப்போது விமானத் தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதைவிட முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினர் பாரிய பாதுகாப்பு வேலியை அமைத்தது போல் 25 இற்கும் மேற்பட்ட அதிவேக டோரா பீரங்கிப் படகுகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தினமும் வன்னியில் விழும் ஷெல் மற்றும் பீரங்கித் தாக்குதலில் சராசரியாக 40 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துவரும் நிலையில் பதுங்குக் குழிகளுக்கு வெளியே எவர் தலை நீட்டினாலும் தலை தப்புவதற்கான சாத்தியமே இல்லையென்றதொரு நிலையே அங்குள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் புலிக ளின் இரு விமானங்கள் எங்கிருந்து, எப்படி வந்தன என்ற கேள்வியை சாதாரண மக்களும் எழுப்புகின்றனர். புலிகள் வசமிருந்த அனைத்து (ஏழு) விமான ஓடுபாதைகளையும் தாங்கள் கைப்பற்றிவிட்டதால் வான் புலிகளின் செயற்பாடு முழுமையாக முடக்கப்பட்டுவிட்டதாக படையினர் கூறி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் புலிகளின் விமானங்கள் வன்னிக்குள்ளிருந்து கொழும்பு நகருக்கு வந்தது நாட்டு மக்கள் அனைவரையும் திகைப்படையச் செதுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு புலிகளின் இவ்விரு விமானங்களும் கொழும்பு நகரை சமீபித்த பின்புதான் இரு விமானங்களும் கொழும்பை நோக்கி வருவதை படையினர் அறிந்துள்ளனர். அதுவரை, புலிகளின் விமானங்கள் கொழும்பு நோக்கி வருவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இலங்கை வரைபடத்தில் தற்போது புலிகள் வசமிருக்கும் பகுதி ஒரு சிறு துளி போன்றே காண்பிக்கப்படுகிறது. அந்தச் சிறிய பகுதியையும் கைப்பற்றிவிடுவதற்காக ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட படையினர் தொடர்ந்தும் பாரிய படை நடவடிக்கையில் ஈடுபட்டுமுள்ளனர். புலிகளின் பகுதியில் சிறு சத்தம் கேட்டாலும் அதனை உணர்ந்து சத்தம் வந்த அந்த இடத்தை நோக்கி அடுத்த நிமிடமே ஷெல்கள், பல்குழல் ரொக்கட்டுகள், பீரங்கித் தாக்குதலை நடத்தக்கூடிய வல்லமையுடன் படையினர் இருப்பதாக அரசு கூறுகிறது. புலிகள் வசமிருந்த அனைத்து விமான ஓடுபாதைகளையும் தாங்கள் கைப்பற்றிவிட்டதாலும் புலிகளை மிகச் சிறியதொரு நிலப்பிரதேசத்திற்குள் முடக்கிவிட்டதாலும் வான்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் முற்று முழுதாக செயலிழக்கச் செயப்பட்டு விட்டதாக படைத்தரப்பு கூறிவந்தது. அத்துடன் புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியிலிருந்து ஒரு காகம் பறந்தால் கூட அதனைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுடன் படையினர் மூன்று முனைகளிலும் புலிகளைச் சுற்றிவளைத்துள்ளதாகவும் முல்லைத்தீவிலிருந்து சுமார் 12 கிலோமீற்றர் தூரத்திலுள்ள சாலையிலும் பாரிய கடற்படை முகாம் இருப்பதால் கடல்வழியாகவும் புலிகளின் அனைத்து நடவடிக்கைகளும் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் படைத்தரப்பு கூறிவந்தது.

இப்படியிருக்கையில் வான்புலிகளால் அங்கிருந்து புறப்பட்டு எப்படி கொழும்பு வரமுடிந்த என்ற கேள்வியை அனைவரும் எழுப்புகின்றனர். வவுனியாவிலும் மன்னாரிலும் இந்தியா வழங்கிய ராடர்கள் 24 மணிநேரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. முல்லைத்தீவு கடலிலும் தரித்து நிற்கும் கடற்படைக் கப்பல்களிலும் சக்திவாந்த ராடர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து புலிகளின் விமானங்கள் புறப்பட்டால் அடுத்த கணமே அவற்றை கண்டுபிடித்துவிடக்கூடிய ஆற்றலுடன் வன்னியிலும் முல்லைத்தீவு கடற்பரப்பிலும் படையினர் தயார் நிலையிலுள்ளனர். அத்துடன் புலிகளின் விமா னங்கள் முல்லைத்தீவு கடல்வழியாக பயணத்தை மேற்கொள்ள முடியாது. கடல் கண்காணிப்பு தீவிரமாயிருப்பதுடன் திறந்த வெளியென்பதால் கடற்படை பீரங்கிப் படகுகள் அவற்றைத் தாக்கி அழித்துவிடக் கூடிய வாப்புமுள்ளது. தங்களது விமானங் கள் புறப்பட்ட இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் விமானப் படை விமானங்களும் உடனடியாக அங்கு வந்து தாக்குதலை நடத்திவிடலாமென்பது புலிகளுக்கு நன்கு தெரியும். இதனாலேயே முல்லைத்தீவு கடல்வழியாக புலிகளின் விமானங்கள் புறப்படவில்லை. அத்துடன் கொழும்பு வருவதற்கு அந்தப் பாதையும் தேவையில்லை.

புதுக்குடியிருப்பிலிருந்து இரவு சுமார் 8.30 மணியளவில் இவ்விரு விமானங்களும் புறப்பட்டு மாங்குளம் ஊடாக "ஏ9' வீதியைக் கடந்து அங்கிருந்து மடுக்கோயில் ஊடாக மன்னார் சிலாவத்துறைக் கரைக்கு வந்து மேற்கு கரையோரத்தால் கற்பிட்டி, புத்தளம், சிலாபம் ஊடாக கொழும்பு நோக்கி இவை வந்துள்ளதாக படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது புதுக்குடியிருப்பிற்கு தென்மேற்கிலேயே கடும் சமர் நடைபெற்று வருகிறது. புலிகளின் இவ்விரு விமானங்களும் கடும் சமர் நடைபெறும் புதுக்குடியிருப்பின் தென்மேற்கு திசையூடாக கிளம்பியே, 24 மணிநேரமும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் புதுக்குடியிருப்பு மாங்குளம் பகுதியூடாக மாங்குளத்திற்குச் சென்று பின்னர் மேற்கூறிய பாதைகளூடாக கொழும்பை நோக்கி பறந்துள்ளன. புதுக்குடியிருப்பிலிருந்து புறப்பட்ட இவ்விரு விமானங்க ளும் படையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டே பறந்துள்ளன. இவ்விரு விமானங்களும் புறப்பட்டு மாங்குளம் நோக்கி யும் அங்கிருந்து மடு பின்னர் சிலாவத்துறையூடாக மேற்கு கடற்கரையோரத் திற்குச் சென்று கொழும்பு நோக்கி பறக்கத் தொடங்கியதை படையினரோ அல்லது அவர்களது ராடர்களோ கண்டுபிடிக்கவில்லை. இவ்விரு விமானங்களும் புத்தளத்தையும் தாண்டி கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்தபோதே இரவு 9.20 மணியளவில் இரு விமானங்கள் வருவதை படையினர் அறிந்து கொண்டனர். அடுத்த ஒருசில நிமிடங்களில் கொழும்பு மாநகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விமானப் படையினரின் வான்பாதுகாப்புப் பொறிமுறை இயக்கப்பட்டது. கொழும்பு நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சிலநிமிட நேரத்தில் புலிகளின் இரு விமானங்களும் கொழும்பு மாநகர எல்லைக்குள் கட்டுநாயக்கா பக்கமூடாக நுழைந்துவிட்டன. நகரின் அனைத்து பகுதிகளிலுமுள்ள படை முகாம்களிலிருந்தும் புலிகளின் விமானங்களை நோக்கி தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. நகரின் சகல பகுதிகளின் அனைத்து முனைகளிலிருந்தும் புலிகளின் விமானங்களை கண்டுபிடிப்பதற்காக "சேர்ச்லைற்'கள் வானத்தை நோக்கி ஒளிவெள்ளத்தை பாச்சித் தேடின. இந்த நேரத்தில் ஒரு விமானம் கோட்டைப் பகுதியில் அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் விமானப் படைத் தலைமையகத்திற்கு முன்பாகவும் "ரான்ஸ் ஏசியா' ஹோட்டலுக்கு அருகிலுமுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்கள கட்டிடம் மீது குண்டுத் தாக்குதலை நடத்திய பின் அந்தக் கட்டிடத்தின் மீது மோதி வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அந்தப் 13 மாடிக் கட்டிடத்திற்கு பாரிய சேதமேற்பட்டதுடன் கட்டிடம் தீப்பற்றிக் கொண்டது.

இந்தத் தாக்குதல் சுமார் 9.45 மணியளவில் நடைபெற்றுள்ளது. வான் கரும்புலிகளின் இலக்கு இந்தக் கட்டிடமா அல்லது அருகிலிருந்த விமானப் படைத் தலைமையகமாக என்பது சரியாகத் தெரியவில்லை. விமானப்படை தலைமையகம் ஒருசில மாடிகளைக் கொண்ட கட்டிடம். ஆனால், இறைவரித் திணைக்களம் பல மாடிகளைக் கொண்ட கட்டிடம். இதனால் தாக்குதலை நடத்த வந்த விமானக் கரும்புலிகளுக்கு இரு கட்டிடங்களும் நன்கு தெரிந்திருக்குமெனக் கருதப்படுகிறது. எனினும், அவர்களது இலக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களமாயிருந்திருக்கலாமா என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கட்டிடம் மீது புலிகளின் விமானம் கரும்புலித் தாக்குதல் நடத்தியதை படையினர் முதலில் உணரவில்லை. முதலில் புலிகள் குண்டை வீசியதால் குண்டுத்தாக்குதல் நடத்தப்படுவதாகவே அவர்கள் கருதியுள்ளனர். எனினும், பின்னர் அந்த விமானம் அந்தக் கட்டிடத்தின் மேற்குப் புறப்பக்கமாக சென்று அதனுடன் மோதிவெடித்துச் சிதறியுள்ளது. அப்போது கூட அங்கு புலிகளின் விமானம் குண்டு வீசியுள்ளதாகவே படையினர் கருதியுள்ளனர். இந்தத் தற்கொலை விமானத் தாக்குதலால் கட்டிடம் பலத்த சேதமடைந்ததுடன் அங்கு பாரிய தீயும் பரவியது. இந்தத் தாக்குதலையடுத்து புலிகளின் விமானங்கள் மீது படையினர் சகல பகுதிகளிலிருந்தும் கடும் தாக்குதலைத் தொடுக்கவே கொழும்பு நகரமே அதிர்ந்தது. வானமெங்கும் வாணவேடிக்கை போன்று ஒளிப்பிளம்புகளாக காட்சியளித்தது.

இவ்வேளையில் புலிகளின் மற்றைய விமானம் கட்டுநாயக்கா பகுதி நோக்கிச் சென்றுள்ளது. விமானப்படைத்தளமே அதனது இலக்காக இருந்திருக்க வேண்டும். இந்த விமானம் அந்தப் பகுதிக்கு வருவதை படையினர் அறிந்து அதன் மீதுதாக்குதலைத் தொடுத்துள்ளனர். இங்கும் அந்த விமானம் கரும்புலித் தாக்குதலையே நடத்த வந்ததால் அது மிகவும் தாழ்வாகச் செல்ல வேண்டியிருந்தது. இதனால், ஒரே நேரத்தில் அந்த விமானத்தை நோக்கி நடத்தப்பட்ட கடுமையான விமான எதிர்ப்புத் தாக்குதலுக்கு அந்த விமானம் இலக்காகி விமானம் படைத்தளத்தின் பின்புறமாக விமானப்படைத் தளத்திலிருந்து சற்றுத் தூரத்தில் வீழ்ந்துள்ளது. இந்த விமானமும் கரும்புலித் தாக்குதலை நடத்தவே வந்துள்ளது. எனினும் இந்த விமானம் படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி வீழ்ந்த போதும் அதிலிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை. உள்நாட்டு இறைவரித் திணைக்கள பகுதியில் நொருங்கிய விமானம் உருத்தெரியாது உலோகத்துண்டுகளாயிருந்தது. ஆனால் கட்டுநாயக்காவில் வீழ்ந்த விமானம் பெருமளவு நொருங்கிச் சிதையவில்லை. அதன் விமானியினது உடலும் பலத்த சேதமின்றி படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. படையினரின் தாக்குதலுக்கு விமானம் இலக்காகியபோது அல்லது அந்த விமானம் நிலத்தில் வீழ்ந்து நொருங்கிய போது கூட விமானத்தினுள்ளிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை. இதனால் அந்த விமானம் எந்த ரகத்திற்குரியதென்பதையும் புலிகள் அதனை எவ்வாறு தங்கள் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தினார்களென்பதையும் பெரும்பாலும் அறிந்துவிட முடியும்.

அதேநேரம் விமானக் கரும்புலித் தாக்குதலை நடத்துவதற்காக விடுதலைப் புலிகள், வழமையான விமானத்தை விட சிறிய விமானத்தையே பயன்படுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது. வழமையாக குண்டு வீச்சை நடத்தும் விமானங்களில் இரு விமானிகளிருப்பர். அந்த விமானம் சற்றுப் பெரியது. ஆனால் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலை நடத்திய விமானங்கள் இரண்டும் மிகச் சிறியவை. இரண்டிலும் தலா ஒரு விமானியே வந்துள்ளனர். இதிலொருவர் கேணல் ரூபன், மற்றவர் லெப்.கேணல் சிரித்திரன். இவ்விருவரும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இணைந்து நின்று எடுத்த புகைப்படங்களை, தாக்குதல் நடைபெற்ற சில மணிநேரத்தில் புலிகள் இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். புலிகள் இந்தக் கரும்புலித் தாக்குதலுக்கு தங்களது உயர்மட்டத் தளபதி ஒருவரை பயன்படுத்தியுள்ளனர். வான் புலிகள் இதுவரை ஒன்பது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

முதல் எட்டுத் தாக்குதல்களிலும் அவர்களுக்கு இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. அவையெல்லாம் சாதாரண தாக்குதல்கள். ஒன்பதாவதாக நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலானது வான் புலிகளது முதல் கரும்புலித் தாக்குதலாகும். அதுவும் இந்தத் தாக்குதலில் வான்புலிகளின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவரான கேணல் ரூபன் பங்கேற்றுள்ளார்.

வான் புலிகள் நடத்திய முதல் எட்டுத் தாக்குதலிலும் ஈடுபட்ட வான் புலிகள் நீலச்சீருடை அணிந்தவர்கள். இந்தக் கரும்புலித் தாக்குதலை நடத்திய வான்புலிகள் இருவரும் கரும்புலிகள் அணியும் பச்சை நிறச் சீருடையுடனேயே வந்துள்ளனர். இதிலும் விடுதலைப் புலிகள் தங்ளது வழமையான நடைமுறையை கடைப்பிடித்துள்ளனர். அத்துடன் இதுவரை புலிகள் தரப்பில் உயிர் நீத்த உயர்மட்ட தளபதிகளில் (கேணல்) முதல் கரும்புலித் தாக்குதலை நடத்தியவர் கேணல் ரூபன். அதேநேரம், இந்தத் தாக்குதலை தாங்கள் வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக படைத்தரப்பு கூறுகின்றது. புலிகளின் ஒரு விமானம் இலக்கை எட்டிய போதும் மற்றைய விமானம் இலக்கை எட்டவில்லை. இந்தத் தாக்குதலுடன் புலிகள் வசமிருந்த அனைத்து விமானங்களும் அழிக்கப்பட்டு விட்ட தாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த செப்டெம்பர் 9 ஆம் திகதி வான்புலிகள் நடத்திய தாக்குதலில் ஒரு விமானம் அழிக்கப்பட்டதாகவும் தற்போது மிகுதி இரு விமானங்களும் அழிக்கப்பட்டுள்ளதா கவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள விமானப் படைத் தலைமையகமும் கட்டுநாயக்கா விலுள்ள விமானப் படைத் தளமுமே வான் புலிகளால் இலக்காயிருந்திருக்க லாமென படையினர் கருதுகின்றனர். எனினும் புலிகளால் அந்த இலக்குகளை அடைய முடிய வில்லையெனவும் அவர்கள் கூறுகின்றனர்.

விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்புக்குள் வந்துவிட்டதால் முழுமையாகத் தோல்வியடைவதற்கு முன்னர் அரசுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்த முனைவதாகவும் அதனொரு கட்டமே இதுவெனவும் படையினர் கூறுகின்றனர். புலிகள் வசமுள்ள ஏனைய சிறு பகுதியையும் படையினர் மிக விரைவில் முழுமையாகக் கைப்பற்றி விடுவரென்பதை அறிந்துள்ள புலிகள் தங்கள் விமானங்களை படையினரிடம் இழக்க விரும்பாமலும் அதனை வீணாக அழிக்க விரும்பாமலும் இவ்வாறானதொரு தாக்குதல் மூலம் தாங்கள் வலுவாக இருப்பதாகக் காட்ட முற்பட்டு, கடைசியாக இருந்த இரு விமானத்தையும் அழித்துள்ளதாகவும் படையினர் கூறுகின்றனர். எனினும் அவர்களது கடைசி முயற்சியில் கூட அவர்களால் இலக்குகளை எட்ட முடியவில்லையெனவும் புலிகளின் தாக்குதலை தாங்கள் முறியடித்து அவர்கள் வசமிருந்த இரு விமானங்களையும் அழித்துவிட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். முன்னைய காலங்களைப் போல புலிகளால் விமானங்களை நாட்டுக்குள் கடத்திவந்து அவற்றை இனிமேல் பயன்படுத்துவது சாத்தியமில்லையெனக் கூறும் படைத்தரப்பு, வான் புலிகளது அச்சுறுத்தலுக்கு வெள்ளிக்கிழமையுடன் முற்றுப் புள்ளி வைத்து விட்டதாகவும் கூறுகின்றனர். ஏற்கனவே படைத்தரப்பு இதுபோல கூறிய நிலையிலேயே வெள்ளிக்கிழமை இரவு இவ்விரு விமானங்களும் வந்துள்ளதை படைத்தரப்பு நினைவில் கொள்ள வேண்டுமென வேறு சில தரப்புகள் கூறுகின்றன.

வெள்ளிக்கிழமை இரவு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீது வான்புலிகள் தற்கொலை விமானத் தாக்குதலை நடத்தியிருந்த போதும் புலிகள் அங்கு தற்கொலை விமானத் தாக்குதலை நடத்தியது படையினருக்கு உடனடியாகத் தெரியவரவில்லை. தாக்குதலையடுத்து கட்டிடத்தில் தீ பரவவே அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்த பின் அப்பகுதியில் படையினர் சுற்றி வளைத்து தேடுதலை நடத்திக் கொண்டிருந்த போதே, கட்டிடத்திற்கு கீழே விமானத்தின் சிதைவுகள் இருப்பதைக் கண்டனர். இவ்வாறு, அங்கு தாக்குதல் நடைபெற்று சுமார் ஒன்றரை மணிநேரத்திற்குப் பின்பே அந்தப் பகுதியில் புலிகளின் விமானம் வீழ்ந்ததை அறிந்துள்ளனர். இந்த விமானம் இங்கு வீழ்ந்த பின்னரே கட்டுநாயக்கா பகுதியில் புலிகளின் மற்றைய விமானம் வீழ்ந்துள்ளது, எனினும் கட்டுநாயக்கா பகுதியில் ஒரு விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் மற்ற விமானம் கோட்டைப் பகுதியில் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்வதாகவுமே முதலில் படைத்தரப்பு கூறியிருந்தது. நள்ளிரவு 11.45 மணிக்குப் பின்னரே கோட்டைப் பகுதியிலும் விமானமொன்று வீழ்ந்திருக்கின்றதென்ற செதிவெளியானது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முறையை வைத்து அது தற்கொலை விமானத் தாக்குதல் தான் என்பதை படையினரால் உடனடியாக ஏன் ஊகிக்க முடியவில்லையென்பது ஆச்சரியமானது.

இதற்கிடையில் தற்போதைய நிலையில் விடுதலைப் புலிகள் ஏன் வான் வழித் தற்கொலைத் தாக்குதலை நடத்தினார்களென்ற கேள்வியும் எழுகிறது. வன்னியில் அவர்கள் வசம் மிகப் பெரும்பாலான பகுதிகள் இருந்த போதும் விமானப்படை விமானங்கள் ஆரம்பம் முதலே அவர்களுக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தபோதும் கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தை தற்கொலை விமானத் தாக்குதல் மூலம் இலக்கு வைக்க முயலாத புலிகள், இலங்கை படையினர் புலிகளின் விமானங்களுக்கெதிராக கடும் தாக்குதலை நடத்தக்கூடிய ஆயுத மற்றும் தொழில்நுட்ப பலத்தை (ராடர்கள் கொள்வனவு உட்பட) நன்கு பெற்றுவிட்ட நிலையில் இவ்வாறானதொரு தாக்குதல் எந்தளவுக்கு வெற்றியளிக்குமென புலிகள் ஏன் அறிந்திருக்கவில்லையென்ற கேள்வியும் எழுகிறது. வெள்ளிக்கிழமை இரவு கூட கொழும்பு நகரின் வான்புலிகளின் இலக்கு விமானப்படைத் தலைமையகமாயிருந்திருக்கலாம். ஆனால் அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்ற கடும் தாக்குதலால் புலிகளின் விமானி பதற்றமடைய அந்த இலக்கு தவறியிருக்கலாமெனவும் கருதப்படுகிறது. புலிகள் குறித்து படையினர் தொடர்ந்தும் பிழையான மதிப்பீட்டை கொண்டிருப்பதாலேயே வன்னியில் இந்த நெருக்கடி நிலையிலும் புலிகள் கொழும்பிற்கு விமானங்களை அனுப்பி தற்கொலைத் தாக்குதலை நடத்துமளவிற்கு படையினர் அசட்டையாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள் மீதான விமானத் தாக்குதல்களைப் போன்று வான் வழித் தற்கொலைத் தாக்குதலை புலிகள் ஆரம்பித்துள்ளதால் அரசும் படைத்தரப்பும் நெருக்கடிகளை எதிர்நோக்கும் நிலையேற்பட்டுள்ளது. முன்னர் வான் புலிகள் இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தும் போது தாங்களும் தங்கள் விமானங்களும் பத்திரமாகத் திரும்பவேண்டுமென்ற எண்ணமிருந்ததால் சில வேளைகளில் தாக்குதல்கள் வெற்றியளிக்காது போயிருக்கலாம். ஆனால், தற்போது புலிகள் வான்வழித் தற்கொலைத் தாக்குதலை ஆரம்பித்துள்ளதால் அதில் வருவோருக்கு தங்களைப் பற்றியோ, விமானங்களைப் பற்றியோ கவலையில்லை என்பதால் இலக்கை அவர்கள் நெருங்க முற்படுவார்களெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நன்றி

விதுரன்
-தினக்குரல்=

0 Comments: