Saturday, February 7, 2009

தமிழரின் நிரந்தர விரோதத்தை சம்பாதிக்கும் இராணுவப் போக்கு

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு குறுகிய நிலப் பிரதேசத்துக்குள் பல லட்சம் தமிழர்கள் சிவிலியன்கள் சிக்குண்டுள்ள நிலையில், அப்பிரதேசம் மீதான தனது கொடூரத் தாக்குதலை நிறுத்த மறுத்து அப்பகுதி மீது தனது இராணுவ மேலாதிக்கக் கைவரிசையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றது கொழும்பு.

தினசரி பல நூறு பேர் கொல்லப்பட்டும், பல நூற் றுக்கணக்கானோர் அவயவங்களை இழந்து படுகாய முற்றும் அந்தரிக்கும் மிக மோசமான மனிதப் பேரவலம் அங்கு கட்டவிழ்கின்றது.
நினைத்துப் பார்க்கவே கொடூரமான இந்நிலைமை பற்றிய தகவல்களை அறிந்து உலகமே சர்வதேசமுமே துடிதுடித்துக் கலங்கிப் பேரதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றது.
ஆனால் புலிகளைக் கூண்டோடு அழித்து, தமிழ்த் தேசியம் பற்றிய சிந்தனையை வேரோடு கறுவறுக்கும் வெறியில் நிற்கும் தென்னிலங்கை அரசு, மக்கள் பாதிப்பு சிவிலியன் அவலம் குறித்துக் கவலைப் படாமல், தனது இராணுவ இராட்சதத் தனத்தை வெளிப் படுத்தி, தமிழர் தம் சுதந்திர உணர்வு இலட்சியத்தை நசுக்கும் தீவிரத்தை ஒரேயடியாக வெளிப்படுத்தி வருகின்றது.

இவ்வாறு தமிழர்களின் குருதி இரத்த ஆறாக ஓடும் கொடூரம் குறித்து தென்னிலங்கையில் சிறிதும் அசுமாத்தம் இல்லை. புலிகள் அழிந்தொழியும் "மகிழ்ச்சிகரமான" செய்தியைக் கேட்டு ரசித்தபடி, "தேசத்தின் மகுடம்" என்ற பெயரில் அரங்கேறும் இராணுவ "மிதப்பை" பிரதி பலிக்கும் கண்காட்சியைப் பார்த்து மகிழ்ந்து பெருமிதம் கொள்கிறது கொழும்பு.
அதேசமயம், முல்லைத்தீவில் கட்டவிழும் மனிதப் பேரவலக் கொடூரத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக சர்வதேச அரசுகள் முன்வைக்கும் யோசனைகள் அனைத்தையும் எடுத்த எடுப்பிலேயே அடியோடு நிராகரித்துத் தள்ளுவதிலும் கொழும்பின் போக்கு உறுதியாக இருக்கின்றது.

மரபு ரீதியான யுத்தத்தில் புலிகளின் பலத்தை சிதைத்து, நசுக்கி விட்டதாகக் கருதும் அரசுப் படைத் தரப்பு, அதோடு புலிகளின் கதி அதோ கதிதான், ஆட்டம் முடிந்துவிட்டது என்றும் கணக்குப் போடுகின்றது.

அதன் காரணமாக சிவிலியன்களுக்கு எந்த இழப்பு வந்தாலும் அது குறித்துக் கவலைப்படாமல் புலிகளின் கொட்டத்தை ஒரேயடியாக அடக்கி விடலாம் என்றும் அரசுத் தலைமை எண்ணுகின்றது.

ஆனால் அந்த எண்ணம் நினைப்பு வெற்றியளிக்குமா என்பதற்குக் காலம்தான் பதில் கூறவேண்டும்.

எனினும், இந்த முயற்சிக்காக தமிழ்த் தேசிய உணர்வெழுச்சியை வேரோடு கறுவறுக்கும் தனது பேரின வாதச் சிந்தனையை நிறைவேற்றுவதற்காக நூற்றுக் கணக்கில் தமிழர்கள் தினசரி படுகொலை செய்யப்பட்டு, அவயவங்களை இழந்து, படுகாயத்துக்கு உள்ளாகும் கொடூரத்தை இலங்கை அரசு கவலைப்படாமல் வெகு அநாயசமாகத் தனது தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது என்பதும் இதனால் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றழியும் பெருநாசம் தொடர்கிறது என்பதும்
உலகத் தமிழினத்தின் மனதில் நிரந்தர ரணமாய் ஆழமான வடுவாய் பதிந்து விடும். எந்தக் கால ஓட்டத்திலும் மாற்றவோ, மறக்கவோ முடியாத கொடூர நினைவாகத் தமிழினத்தின் மூளையத்தை இந்த அடக்குமுறைக் கொடூரம் நிரந்தரமாகப் பற்றிநிற்கும்.
அத்தகைய மனப்பதிவால் எழுந்த குரோதமும், விகாரமும், அரசுப் படைகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற மரபுவழி யுத்தத்தில் புலிகளைப் பின்னடையச் செய்கின்ற இராணுவ வெற்றிகளால் மறந்து மறைந்துவிடப் போவதில்லை. அவை நிலைத்து, நீடித்து நின்று பழிவாங்கும் வெறியைத்தான் உள்ளூரத் தூண்டிவிட்டுக்கொண்டேயிருக்கும்.
அத்தகைய சூழலில் மரபுவழி யுத்தத்தில் வெற்றி கொண்டதாகப் பெருமிதப்படும் தென்னிலங்கை அரசுத் தரப்பை, வேறு ஒரு வடிவில் அந்த ஆதங்கம் பாதிப்பை ஏற்படுத்தக்ககூடும்.

ஆகவே உலகையே உலுப்பும் வகையில் அரங்கேறும் மக்கள் பேரழிவைத் தவிர்ப்பதற்காக சர்வதேச சமூகத்தின் பல தரப்புகளும் முன்வைக்கும் சமரசத் திட்டங்களை ஒரேயடியாக நிராகரித்து இராணுவத் தைரியத்தில் போர் முரசு கொட்டும் கொழும்பு, அதன் மூலம் தான் சாதிக்க முயல்வது காலாதிகால வெற்றியல்ல என்பதை உணர்ந்து கொள்ளுமா?
இப்போது கொழும்பு எடுத்திருக்கும் இராணுவத் தீவிரத்தனம், தமிழர்களின் மனதை மீறமுடியாத ரணத்துக்குள் ஆழ்த்தும் கொடூரப் போக்கே. அது மரபு ரீதியான யுத்தத்தில் புலிகளை வெற்றி கொண்டதாகக் கருதித் திருப்திப்பட்டுக்கொள்ள சில சமயம் உதவலாம். ஆனால் தமிழர்களின் மனதை வெற்றிகொள்ள அது எந்த வகையிலும் உதவவே மாட்டாது. மாறாக, தமிழர்களின் நிரந்தர வரலாற்று விரோதத்தை உறுதி யாகவும், நிலையாகவும், சாசுவதமாகவும் சம்பாதிக்கவே வழி செய்யும்.

அத்தகைய விரோதத்தைத் தேடி சம்பாதிப்பது நிரந்தர சமாதானத்துக்கும் எதிர்கால அமைதிக்கும் ஆப்பு வைப்பதோடு, எதிர்காலத்தில் சிங்களத்துக்கே விபரீத விளைவுகளைத் தரக்கூடிய வித்தாகவும் மாறிவிடலாம் அல்லவா?

நன்றி
- உதயன் -

0 Comments: