Thursday, February 26, 2009

சர்வதேசத்துக்குப் பொறுப்புக்கூறும் கடமை இலங்கைக்கு உரியது

இலங்கை இனப்பிரச்சினையை ஒட்டிய உள்நாட்டு யுத்தத்தில் எழுந்துள்ள மனிதப் பேரவல நிலையை அடுத்து, சர்வதேச உலகின் கவனம் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது. சர்வதேச சமூகத்தின் முக்கிய அங்கத்துவத் தரப்புகள் ஒவ்வொன்றும் இலங்கை விவகாரத்தை ஒட்டிப் பல்வேறு கருத்துக்களைத் தொடர்ந்து முன்மொழிந்து வருகின்றன.
ஆனால், மோதலில் சம்பந்தப்பட்ட தரப்புகள் அந்தக் கருத்துக்களையும் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோள்களையும் கவனத்தில் கொள்வதாகவே தெரியவில்லை.

இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக மோதல்களை இடைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட இரு தரப்புகளையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வேண்டியுள்ளார்.
வன்னியில் மோதலில் சிக்கியுள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பொருத்தமான நம்பகத்தன்மை மிக்க நடைமுறை ஒன்றை வகுக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தியிருக்கின்றது இந்தியா.

இதேபோன்று, இலங்கையில் எழுந்துள்ள மனிதாபிமான நெருக்கடிகள் குறித்துக் கடும் கவலை வெளியிட்டுள்ள அமெரிக்கா, இலங்கையில் அரசையும் விடுதலைப் புலிகளையும் மோதலை முடிவிற்குக் கொண்டுவருவதற்கான பேச்சுக்களை மேற்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளது.

இதேவேளை, மோதலில் சிக்கியுள்ள மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் உடனடி யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களும் கூட்டாகக் கோரியிருக் கின்றனர்.

இப்படி சர்வதேச சமூகத்தின் பல தரப்புகளினாலும் இலங்கை நிலைவரத்தை ஒட்டிப் பல்வேறு கோரிக்கைகள் வரிசையாக முன்மொழியப்படுகின்றன.

புலிகள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிடவேண்டும், ஆயுதங்களைக் கீழே வைத்து நிபந்தனையின்றி சரண டைந்து, இலங்கை அரசின் மன்னிப்பு வழங்கும் திட்டத்தைப் புலிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும், வன்முறை வழியைநிரந் தரமாகக் கைவிடுவதாகப் புலிகள் அறிவிக்க வேண்டும், தம்மால் மனிதக் கேடயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிவிலியன்களைப் புலிகள் விடுவிக்க வேண்டும், இடம் பெயர்ந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டத்தை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும், அமைதித் தீர்வுக்கான பேச்சுகளை ஆரம்பித்து அதற்கான திட்டங்களை அரசு அறிவிக்க வேண்டும் என்பன போன்ற பல கோரிக்கைகளும் மேற்படி சர்வதேசத் தரப்புகளால் முன் வைக்கப்படுகின்றன.
எனினும், அவை முன்மொழியும் கோரிக்கைகள் அனைத்திலும் இத்தகைய விடயங்கள் தவிர பொதுவானதாக ஒரே அம்சம் பொதிந்திருப்பது கவனிக்கத்தக்கது.

அதாவது, இலங்கையில் போரில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இரண்டும் உடனடியாக யுத்தநிறுத்தம் செய்யவேண்டும் அல்லது யுத்தத்தை இடைநிறுத்த வேண்டும் என்பதே அக்கோரிக்கையாகும்.

ஆனால் சர்வதேச சமூகத்தின் இக்கோரிக்கையைப் போரில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளில் ஒன்று மட்டும் பற்றி நிற்க விரும்புகையில், மற்றையது அதனை எட்டி உதைத்து நிராகரிக்க எத்தனிக்கின்றது.

சர்வதேச சமூகத்தின் கோரிக்கையை ஏற்று யுத்த நிறுத்தம் ஒன்றைச் செய்வதற்குத் தமது அமைப்புத் தயார் எனப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அறிவித்துள்ளார்.

ஆனால், புலிகளின் அந்த யுத்தநிறுத்த அழைப்பை, இலங்கை அரசு உடனடியாகவே அடியோடு நிராகரித்து விட்டது.

மரணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் புலிகளுடன் எந்தவிதமான உடன்பாடும் செய்ய அரசு தயாரில்லை என்றும், யுத்தத்தின் மூலம் புலிகளை அடியோடு இல்லா தொழித்த பின்னரே மறுவேலை என்பதே அரசின் ஒரே இலக்கு என்றும் இலங்கையின் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவோ இதற்கும் சற்று மேலேபோய் யுத்தநிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு எந்த நாடும் அழுத்தம் தரவே கூடாது எனத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். இது விடயத்தில், சர்வதேசத் தரப்புகளின் எந்த அழுத்தத்துக்கும் அரசு அடி பணிந்து யுத்த நிறுத்தத்துக்கு இணங்காது என்றும் உறுதிபட அவர் தெரிவித்திருக்கின்றார்.

ஆக, "முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா" என் பது போல யுத்த மூர்க்கத்தில் போர் வெறித் தீவிரத்தில் நிற்கும் கொழும்பு அரசின் கண்களைப் போரியல் வெற்றி மமதையும், பேரினவாதச் சிந்தனைப் போக்கும் மறைத்து நிற்பதால் அது இந்தப் போர் வெறிமூர்க்கத்திலிருந்து வெளியே வரப்போவதில்லை என்பது தெளிவு.

அதனால் இவ்விடயத்தில் சர்வதேசத் தரப்பின் கோரிக் கைகள், வேண்டுகோள்கள், ஆலோசனைகள் என்பன ஆட்சிப்பீடத்தினால் அலட்சியப்படுத்தப்பட்டு, உதாசீனம் செய்யப்பட்டு, புறம் ஒதுக்கப்படுகின்றன.
"கெடுகுடி சொற் கேளாது!" என்பார்கள். அதைத்தான் பின்பற்றுகின்றது போலும் இலங்கை அரசு.

இலங்கை அரசைப் பொறுத்தவரை புலிகளின் முடிவு காலம் நெருங்கிவிட்டது. இன்னும் சில நாட்களில் அல்லது சில வாரங்களில் அந்த அமைப்பு அடியோடு அழிக்கப்பட்டுவிடும் எனக் கொழும்பில் பாதுகாப்புத் தரப்பினரும் அரசுத் தலைவர்களும் சூளுரைத்து வருகின்றனர்.
அவர்களின் கணக்குப்படியும் சில சர்வதேச தரப்புகளின் கருத்துப்படியும் புலிகள் விரைவில் அழிந்து போகும் தரப்பு என்பதால், சர்வதேச சமூகத்துக்குப் பதிலும் பொறுப்பும் கூறும் கடமை அவர்களுக்கு இல்லை எனலாம். அவர்கள் தொடர்ந்து நீடித்தால் அல்லவா அவற்றை அவர்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்........!

ஆனால், தன்னை இறைமையுள்ள தேசம் எனக் கூறும் இலங்கையின் அரசுத் தரப்போ நின்று, நிலைத்து, நீடிக்கப் போகின்ற ஆட்சிப்பீடம்.
அதனால் புலிகளிலும் பார்க்க இலங்கை அரசுதான் சர்வதேச தரப்புக்குப் பதிலும், பொறுப்பும் கூறக்கடமைப்பட்டுள்ளது.

இதை இலங்கை அரசுத் தலைமையும், அத்தலைமையிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் சர்வதேசத் தரப்புகளும் ஒரு தடவை கவனத்தில் எடுப்பது நல்லது.

thanks
Uthayan

0 Comments: