Wednesday, February 4, 2009

பதவி சுகமா? அல்லது இனமானமா?

காஞ்சி வரதராசப்பெருமாள் கோயில் புகழ் பெற்ற கோயில். அங்கே வீற்றிருக்கும் பெருமாள் ஒவ்வொரு நாளும் வீதி உலா வருவார். அப்போது பக்தர்கள் உரத்த குரலில் 'காஞ்சி வரதப்பா! காஞ்சி வரதப்பா! என உரத்த குரலில் முழக்கம் எழுப்புவார்கள். இப்படி பக்தர்கள் முழக்கம் எழுப்பும் போது கோயிலுக்கு வெளியே பசியால் வாடிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் காதில் அது 'கஞ்சி வரதப்பா! கஞ்சி வரதப்பா!" என விழுமாம்!

இந்தப் பிச்சைக்காரர்கள் போலவே இந்திய அரசின் வெளியுறவு செயலர் அண்மையில் ஸ்ரீலங்கா சென்ற போது தமிழ்நாடு சட்டமன்றமும் தமிழக முதல்வரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அங்கே போர் நிறுத்தம் ஏற்பட்டு சிங்களப் படைகள் தங்கள் பழைய நிலைக்குத் திரும்புவார்கள் என தமிழ்மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அங்கே, சென்று மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்திய சிவசங்கர் மேனன் இந்திய - சிறிலங்கா உறவு முன் எப்பொழுதும் இல்லாதவாறு நெருக்கமாகவும் நட்பாகவும் இருப்பதாக செய்தியாளர்களிடம் சொன்னார்.

போர் நிறுத்தம் பற்றிக் கேட்ட போது அது தனக்குத் தரப்பட்ட பொறுப்புக்கு அப்பாற்பட்டது எனக் கையை விரித்து விட்டார். சென்னை வழியாக டில்லி திரும்பிய சிவசங்கர் மேனன் அண்ணா விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு பின்னர் அவர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக்கொண்டார்.

அதன் பின்னர் நீண்ட நாட்களாக இதோ போகிறார் அதோ போகிறார் எனச் சொல்லிக் கொண்டிருந்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல்வர் கருணாநிதியுடன் பேசிவிட்டு ஸ்ரீலங்கா சென்ற போது மீண்டும் தமிழ்மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இயற்கையாகவே எழுந்தது.

ஆனால், போன மச்சான் வெறும் கையோடு திரும்பி வந்தார். அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச கொடுத்த விருந்தை உண்டு படைத்தளபதி சரத் பொன்சேகா சிங்களப் படையின் வீரதீர பிரதாபங்களைப் பற்றி போட்டுக்காட்டிய ஒளிப்படங்களைப் பார்த்து புழகாங்கிதம் அடைந்து டில்லி திரும்பினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரணாப் முகர்ஜி இந்திய - ஸ்ரீலங்கா உறவு பலமாக இருப்பதாகவும் வன்னியில் சிக்கியுள்ள தமிழ் மக்களது பாதுகாப்புக்கு மகிந்த ராஜபக்ச உறுதி அளித்துள்ளதாகவும் அந்த மக்களுக்கான இந்தியா மனிதாபிமான உதவி வழங்கும் எனவும் தெரிவித்தார்.

ஆனால், போர் நிறுத்தம் பற்றியோ வி.புலிகளோடு பேச்சுவார்த்தை பற்றியோ அமைச்சர் வாயே திறக்கவில்லை. இது எதிர்பார்த்ததுதான். டில்லியில் இருந்து சிறிலங்கா புறப்படும் முன்னர் பிரணாப் முகர்ஜி வி.புலிகளுக்கு இந்தியா கருணை காட்டமாட்டாது எனச் சொல்லியிருந்தார். திரும்பி வந்தும் அதே கருத்தினை மீண்டும் வலியுறுத்திச் சொன்னார்.

வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இப்படி மொட்டையாகப் பேசுவார் என்றோ எகத்தளமாக நடந்து கொள்வார் என்றோ தமிழக முதல்வர் எதிர்பார்த்திருக்க மாட்டார். அதன் காரணமாக பெப்ரவரி 15 இல் திமுக வின் செயல் குழுவைக் கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும் என்ற காலக்கெடுவை மாற்றி இப்போது பெப்ரவரி 3 இல் திமுக செயல்குழு கூடும் என திமுக வின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

மத்தியில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் கட்சியின்; ஆட்சியல்ல. பல கட்சிகளை உள்ளடக்கிய சனநாயக முற்போக்கு கூட்டணியே (னுநஅழஉசயவiஉ Pசழபசநளளiஎந யுடடயைnஉந) அங்கு பதவியில் இருக்கிறது.

2004 இல் நடந்த நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் திமுக தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணி தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 மக்களவைத் தொகுதியிலும் வெற்றி பெற்றது. அதனால் மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 12 அமைச்சர்கள் இருக்கிறார்கள். நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களில் திமுக 20 உறுப்பினர்களையும் பா.ம.க. 6 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

ஒரு குறைந்தபட்ச நிகழ்சி நிரலின் கீழ்தான் மத்திய அரசு ஆட்சி செய்கிறது. அந்த குறைந்தபட்ச நிகழ்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு பிரணாப் முகர்ஜி தலைமையிலான ஒரு குழு இயங்குகிறது.

அதில் திமுக சார்பாக கப்பல் மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் டி.ஆர்.பாலுவும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் என இரண்டு தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

சனநாயக முற்போக்கு கூட்டணியின் குறைந்த பட்ட நிகழ்சி நிரலில் தமிழீழ தமிழ் மக்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'ஒன்றுபட்ட ஸ்ரீலங்காவில் தமிழ்மக்களினதும் சிறுபான்மை மதத்தவரினதும் நியாயமான வேட்கைகளையும் நிறைவு செய்யும் வண்ணம் ஸ்ரீலங்காவில் நடைபெறும் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு சனநாயக முற்போக்கு கூட்டணி ஆதரவு நல்கும்."

"வுhந ருPயு றடைட ளரிpழசவ pநயஉந வயடமள in ளுசi டுயமெய வாயவ கரடகடை வாந டநபவைiஅயவந யளிசையவழைளெ ழக வுயஅடைள யனெ சநடபைழைரள அiழெசவைநைள றiவாin வாந வநசசவைழசயைட iவெநபசவைல யனெ ளழடனையசவைல ழக ளுசi டுயமெய." (ருPயு'ள ஊழஅஅழn ஆiniஅரஅ Pசழபசயஅஅந)

ஆனால், நடைமுறையில் இந்திய மத்திய அரசு பேச்சுவார்த்தையில் இருந்து ஒதுங்கியே இருந்தது. அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கிய மகிந்த ராஜபக்ச அந்தப் பேச்சுவார்த்தைக்கு அடிகோலிய போர் நிறுத்த உடன்பாட்டை கடந்த ஆண்டு சனவரி மாதத்தில் கிழித்தெறிந்த போது இந்தியா அதுபற்றி மூச்சே விடவில்லை. அதுமட்டுமல்ல அதன்பின்னர் மகிந்த ராஜபக்ச தமிழீழத்தின் மீது மேற்கொண்ட படையெடுப்பிற்கு இந்தியா எல்லா வகையிலும் ஆதரவு நல்கியது.

ஆயுத தளபாடங்கள், போர்க்கப்பல்கள், ராடார்கள், தொழில்நுட்பாளர்கள், புலனாய்வு, கண்காணிப்பு, பாகிஸ்தானிடம் இருந்த ஆயுதங்கள் வாங்க கடனுதவி வழங்கியது.

எனவே தமிழீழ மக்கள் ஒரு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் போது வி.புலிகளுக்கு இந்தியா கருணை காட்டாது என்று சொல்லிக் கொண்டு அந்த மக்களின் இனப்படுகொலைக்கு இந்திய மத்திய அரசு துணை போவது மிகப் பெரிய இரண்டகமாகும்.

மேலும் தமிழக சட்டமன்றம் ஒன்றுக்கு மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றியும் அவை பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படாது மத்திய அரசு நடந்து கொள்வது தமிழக முதல்வரை அவமானப்படுத்தியதோடு அவரை ஒரு இக்கட்டான அரசியல் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தமி;ழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்குத் தலைமை தாங்கும் வி.புலிகளையும் மனம், மொழி இரண்டினாலும் முக்காலமும் ஆதரிக்கும் வைகோ தலைமையிலான மதிமுக, மருத்துவர் இராமதாஸ் அவர்களின் பாமக, தொல். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள், தா.பாண்டியன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழர் தேசிய இயக்ம் ஆகியன 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்" என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கியுள்ளார்கள். முதல் நடவடிக்கையாக மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் உண்ணா நோன்பு இருக்க முடிவு செய்துள்ளார்கள்.

அண்மைக்காலமாக 1983 ஆம் ஆண்டளவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக வீசிய அலைக்கு ஒப்ப ஒரு ஆதரவு அலை தமிழகத்தில் வீசிக் கொண்டிருக்கிறது. இந்திய மத்திய அரசு ஏதாவது செய்யும் என்ற அரைகுறை நம்பிக்கையை வைத்திருந்தவர்களும் இப்போது ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

இலங்கைத் தமிழர் சிக்கல் தொடர்பாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் உள்ளிட்டோர் நடத்தி வரும் போராட்டம் வலுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரி, சட்டக்கல்லூரி மாணவ - மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அரசைக் கண்டித்தும் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும் ஈழத் தமிழர்களை பாதுகாக்கக்கோரியும் தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள்; வகுப்புகளை புறக்கணித்து விட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆங்காங்கே உண்ணா நோன்புப் போராட்டம் நடத்துகிறார்கள். தியாகராயர் கல்லூரி மாணவர்கள், நியூ கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர்களை பாதுகாக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் மன்றோ சிலை முன்பு சாலை மறியல் செய்தனர். பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேபோல் கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், ஈரோடு, வேலூர், தஞ்சை மாணவ - மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் மாணவ -மாணவிகள் குதித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்றக் கோரி கும்பகோணத்தில் நேற்று சட்டவாதிகள் தொடர் வண்டி மறியல் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். மயிலாடுதுறையில் இருந்து நெல்லை சென்று கொண்டு இருந்த பயணிகள் தொடர்வண்டியை அவர்கள் மறித்தனர். இதையொட்டி, 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சில மாணவர்கள் ராஜபக்சவின்; உருவப்பொம்மையை எரிப்பதற்காக எடுத்து வந்தனர். காவல்துறை அந்த உருவபொம்மையைப் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினார்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்து இருந்தனர். ஆனால் சட்டக்கல்லூரிக்கு நேற்று திடீர் என விடுமுறை விடப்பட்டு அது மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பை கல்லூரி முதல்வர் வெளியிட்டு இருந்தார்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை வளாகத்தில் சட்டவாதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது திடீரென நீதிமன்ற வளாகம் அருகே சிலர் சோனியா காந்தியின் கொடும்பாவியை எரித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். மக்களின் கோபம் இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவி மீதும் பாய்ந்திருப்தை இந்தப் போராட்டம் காட்டுகிறது. இது ஒரு முக்கிய திருப்பமாகும்.

அண்மையில் வைகோ தலைமையிலானன மதிமுக ஆட்சியாளர்களின் அலுவலகம் முன்பு நாடு தழுவிய போராட்டம் நடத்தியது.

மதுரை சட்டக்கல்லூரியில் நேற்று 20 மாணவர்கள் கூடித் தேசியக் கொடியை அகற்றி விட்டு கருப்புக் கொடியை ஏற்ற முயன்றனர். முதல்வர் இராதாகிருஷ்ணன் நாயர் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினார்.

மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் முதல்வர் சின்னப்பா தலைமையில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு இரங்கல் தெரிவிக்கபப்ட்டது. கல்லூரி வளாகத்தில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் வலுத்து வரும் மாணவர் போராட்டம் காரணமாக பல கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆங்காங்கே மாணவர்கள் உண்ணாவிரதமும் இருந்து வருவதால் தமிழகத்தில் ஒரு பதட்ட நிலை உருவாகியுள்ளது.

இதன் உச்சகட்டமாக தமிழ் உணர்வாளர் முத்துக்குமார் இன்று தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அந்தச் செய்தி தமிழகத்தைக் கொதிநிலைக்குத் தள்ளியுள்ளது.

அவரது சாவை விட அவர் தன் கைப்பட எழுதிவைத்துச் சென்றுள்ள அவரது சாவுப் பட்டயம்தான் தமிழகத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை முத்துக்குமார் வீசியுள்ளார். இந்த சாவுப் பட்டயத்தை ஒவ்வொரு தமிழின உணர்வாளர்களும் படித்து மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.

முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தை நாம் விரும்பாவிட்டாலும் அதன் பின்னால் உள்ள தமிழின உணர்வை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அது சொல்லும் செய்தியை மறந்துவிடக் கூடாது. 1965 ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முத்துக்குமாரைப் போலப் பலர் தீக்குளித்தனர்.

எப்பக்கம் வந்திடும் இந்தி எத்தனை பட்டாளம் அது கூட்டி வரும் என 1965 இல் எழுப்பிய முழக்கந்தான் 1967 இல் திமுக ஆட்சியைக் கைப்பற்றியதற்கு வழிகோலியது. இதனை நிச்சயம் தமிழக முதல்வர் அசை போட்டுப் பார்ப்பார் என நம்புகிறோம்.

தமிழீழ விடுதலை போராட்டம் பற்றியும் தமிழீழத்தில் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் செய்யாத சனநாயக முற்போக்குக் கூட்டணியிலும் அதன் ஆட்சியிலும் தொடர வேண்டுமா? இல்லையா? என்ற முடிவை தமிழக முதல்வர் எடுக்கும் காலம் இன்று கனிந்துள்ளது.

திமுக சனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டால் மத்திய அரசு பெரும்பான்மைப் பலத்தை இழந்து விடும். அதனால் அது கவிழும் வாய்ப்பு எழும். அத்தோடு தமிழகத்தில் அந்தக் கூட்டணி காணாமல் போய்விடும். அதனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இல்லையேல் அதிமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டி நேரிடும்.

இதே சமயம் திமுகவுக்கு சட்ட மன்றத்தில் வழங்கும் ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொள்ளலாம். அப்படி விலக்கிக் கொண்டாலும் திமுக ஆட்சி கவிழும் வாய்ப்புக் குறைவாகவே இருக்கும். காரணம் பா.ம.க. கட்சியின் நிறுவனர் திமுக அரசுக்கு கொடுக்கும் ஆதரவு தொடரும் எனக் கூறியுள்ளார்.

எங்கே தான் தனித்துப் போக நேரிடுமோ என்ற அச்சம் காரணமாகமே மாங்கொல்லைப் பொதுக் கூட்டமும் (ஒக்ரோபர் 06) அதனைத் தொடர்ந்து கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டமும் (ஒக்ரோபர் 14) மனித சங்கிலிப் போராட்டமும் (ஒக்ரோபர் 24) இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து இறுதித் தீர்மானம் உட்பட மூன்று தீர்மானங்களை முதல்வர் சட்டசபையில் முன்மொழிந்தார். மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தியை டில்லி சென்று நேரிலும் வற்புறுத்தினார். ஆனால் அவரது முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்துவிட்டன.

தமிழீழ மக்கள் தொடர்பாக மட்டுமல்ல திமுகவின் நட்சத்திரத் திட்டமான சேது கால்வாய்த் திட்டத்தையும் இராமருக்குப் பயந்து மத்திய அரசு கிடப்பில் போட்டுவிட்டது. ஆறு மாதத்தில் சேது கால்வாய்த்திட்டம் முற்றுப் பெறும் என்று அமைச்சர் டி.ஆர். பாலு சென்ற ஓகஸ்டில் மார் தட்டினார். அந்த ஆறு மாதம் இப்போது முடிவடைந்து விட்டது.

இன்று தமிழக முதல்வர் பதவி சுகமா? அல்லது இனமானமா? இதில் இரண்டில் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். முதல்வர் கருணாநிதி சரியான முடிவு எடுத்தால் வரலாற்றில் இடம் பிடிப்பார். இல்லையென்றால் வரலாறு அவரை மன்னிக்காது.

-நக்கீரன்-
நன்றி: நிலவரம்

0 Comments: