Sunday, February 15, 2009

இந்தியாவே இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் உனக்கு.....

1)

'ஒரு விருட்சம் சாய்கிற போது பூமி நடுங்கத்தான் செய்யும். என் அம்மா செத்தால் அதற்காக மூன்றாயிரம் பேர் சாகத்தான் வேண்டும்" என்ற புண்ணியவான் ராஜீவ் காந்தி போய்ச் சேர்ந்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஒரு இந்திரா காந்தியின் உயிருக்குப் பழியாக மூன்றாயிரம் சீக்கிய மக்களின் உயிர்கள் பழிவாங்கப்பட்டது என்றால், ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்கு லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களின் ரத்தத்தைக் குடித்துக் கொண்டிருக்கிறார் சோனியா.

தான் உருவாக்கிய பிந்தரன்வாலேயைக் கொன்றொழித்ததின் மூலம் சீக்கிய மக்களின் இனவிடுதலைப் போரை ஒடுக்கி விட்டதாக நினைக்கும் இந்தியப் பேரரசு, ஒரு பிந்தரன் வாலேயைப் போலவே பிரபாகரனையும் ஈழ விடுதலைப் போரையும் நினைக்கிறது.

அதனால்தான் நேரடியாக நரவேட்டையில் ஈடுபடுவதைக் காட்டிலும் தனக்குத் தோதான பாசிஸ்ட் ஒருவனை உருவாக்கி அவனது கையில் பிஸ்டலைக் கொடுத்து எப்படிச் சுட வேண்டும் என குறியும் பார்த்துக் கொடுக்கிறது இந்திய ராணுவம்.

இந்திய ராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறிய அவமானகரமான நிகழ்வுக்குப் பிறகு இந்தியா இலங்கையில் தலையிட்டதில்லை என்பதெல்லாம் வடித்துக் கட்டப்பட்ட பொய்.

அது நேற்றும் இன்றும் நாளையும் இலங்கையை தனது அறிவிக்கப்படாத காலனியாகவே வைத்திருக்கும்.

அமெரிக்காவிற்கு எப்படி இந்தியாவோ அது போல தென்கிழக்கில் இந்தியாவின் நுகர்வு வெறிக்கு பலியான நாடுதான் இலங்கை.

இந்து மாகா சமுத்திரமும் அதை அண்டிய நாடுகளும் தென் கிழக்கும் இருக்கும் வரை இந்தியாவின் போர் வெறி ஓயப்போவதில்லை.

ஏதோ ஒரு வகையில் யாராவது ஒரு தரப்பினர் மூலம் இலங்கையின் நிம்மதியைக் குலைப்பதிலும் இனவாதத் தீயை ஊதி விட்டு வளர்த்தெடுப்பதிலுமே இன்றைய இந்தியாவின் இருப்பு அடங்கியிருக்கிறது.

தென்கிழக்கில் ராணுவ மேலாண்மையும் ஆக்கிரமிப்பு ஆசையிலிருந்துமே இந்தியா ஈழ விடுதலைப் போரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இலங்கையை அச்சுறுத்தி வருகிறது.

இலங்கை பேரினவாத அரசைப் பயன்படுத்தி ஈழ மக்களை அச்சுறுத்தி வருகிறது.

எண்பதுகளில் உருவான ஈழ விடுதலைப் போராளிக் குழுக்களை தங்களின் பிராந்திய நலன் நோக்கிலேயே நடத்தினார்கள்.

தங்களின் விருப்பங்களுக்கு ஆட்பட்டு அடியாள் வேலை பார்க்கும் கூட்டமாக போராளிக் குழுக்களை மாற்றியதன் விளைவுதான் சகோதரப்படுகொலைகள்.

அந்தக் கொலைகளின் சூத்திரதாரி இந்தியாவே.

திம்பு பேச்சுக்களின் முடிவில் ஒரு குழுவுக்குத் தெரியாமல் இன்னொரு குழுவுக்கு ஆயுதம் கொடுத்து ஈழத்தின் கிழக்குக் கரைகளில் இறக்குவதும். தங்களின் போலி ராணுவ புரட்சிக்கு ஈழப் போராளிகளை பயன்படுத்துவதுமாக போராளிகளை கைக்கூலிகளாக மாற்றினார்கள்.

ஈழ மக்களின் விடுதலைப் போருக்காக இந்தியாவின் உதவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் வந்த விடுதலைப் புலிகளோ இந்தியாவின் அடியாட்களாக மாற மறுத்தனர்.

விளைவு இந்தியாவின் விருப்பங்களை நிறைவேற்றத் தொடங்கிய குழுக்களுக்கும் ஈழ மக்களின் விடுதலைப் போருக்கு மட்டுமே போராடிய விடுதலைப் புலிகளுக்கும் தவிர்க்க முடியாமல் சகோதர யுத்தம் தொடங்கியது.

அன்றைய சகோதரப் படுகொலைகளில் புலிகள் வெற்றி பெற்றார்கள்.

ஒரு வேளை புலிகள் கொல்லப்பட்டு இன்னொரு அமைப்பு அதில் வெற்றி பெற்றிருந்தால். அந்தக் குழுவால் ஈழ மக்களின் சுதந்திரப் போரை முன்னெடுத்திருக்க முடியாது மாறாக இந்தியாவின் அடியாளாக இருந்து இலங்கையின் இன முரணைப் பயன்படுத்தி அந்தப் பிரச்சனையை தீரவிடாமல் நீரூற்றி இந்தியாவின் விருப்பங்களை ஈடேற்றும் ஒரு ஆயுதக் குழுவாகவே அது இருந்திருக்கும்.

ஆனால் புலிகள் ஒரு பக்கம் இந்தியாவுக்கும் அடிபணியவில்லை. இலங்கைக்கும் அடிபணியவில்லை.

விளைவு இந்தியாவால் புலிகளின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

ஆக, இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து புலிகளை அழித்து விட்டு பழைய பாணியில் ஈழத் தமிழ்த் தேசிய ராணுவம் என்கிற பெயரில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி, இலங்கை அரசை இனப் பிரச்சனையிலிருந்து மீள விடாமல் தன் கட்டுக்குள் வைக்கலாம் என்றோ, அங்கு ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் துரோகக் குழுக்கள் மூலம் இனப்பிரச்சனையை அணைக்காமல் வளர்த்தெடுக்கலாம் என்றோ நினைக்கிறது இந்தியா இன்றைய தேதியில் இதுதான் உண்மை.

02.

சர்வதேச முயற்சிகளை குலைத்தது யார்?

ஆனையிறவை வென்று ராணுவ ரீதியில் புலிகள் பலம் பொருந்திய போது நார்வேயின் அனுசரணையுடன் சமாதான முயற்சிகள் தொடங்கியது.

தமிழர் தாயகத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் புலிகள் தங்களின் நீதி நிர்வாக ஆட்சியை நிறுவி இருந்தார்கள்.

சிங்களப் பேரினவாதிகளின் ராணுவ ஆட்சிக்குள் வாழ்வதைக் காட்டிலும் தமிழ் மக்கள் நிம்மதியாகவே புலிகளின் ஆளுகைக்குள் வாழ்ந்தார்கள்.

ஒரு போராளி அமைப்பிற்கே உண்டான இயற்கையான பலவீனங்கள் எதையும் புலிகள் மக்களிடம் காட்டிக் கொண்டதில்லை. இலங்கை இனப்பிரச்சனையை ஆகக் கூடிய சுதந்திரத்துடன் தீர்த்து விடவே விரும்பினார்கள் புலிகள்.

ஆனால் இந்தியா?

இந்தியாவுக்கும் நார்வே முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையா?

இந்தியா உண்மையிலேயே ஒதுங்கித்தான் இருந்ததா? என்றால் இல்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமாதானக் காலத்தில் புலிகளை பலவீனப்படுத்த இந்தியா இலங்கையுடன் கைகோர்த்திருந்தது.

இந்த சமாதானக் காலத்தில்தான் மேற்குலக நாடுகள் புலிகள் மீது தடைகளைக் கொண்டு வந்தார்கள்.

அது எப்படி? யுத்தம் நடைபெறும் காலமல்லாமல் சமாதானக் காலத்தில் பேச்சுவார்த்தை மேஜையில் பிரச்சனைக்குரிய இருதரப்பும் அமர்ந்திருக்கும் போது சமாதானத்தை முன்னெடுக்கிறோம் என்று வந்து அதோடு தொடர்புடைய நாடுகள் புலிகள் மீது தடை கொண்டுவரும் என உங்களால் சிந்திக்க முடியும் என்றால் இந்தியா இலங்கையோடு இணைந்து புலிகளுக்கு எதிராக சர்வதேச அளவில் முன்னெடுத்த துரோகத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.

நார்வே முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் தமிழர் தரப்பு தயாரித்த தீர்வுத்திட்டங்கள் எல்லாமே டில்லி ஆட்சியாளர்களின் அறிவுக்கு அப்பாற்பட்டு நடந்ததில்லை.

தயாரிக்கப்பட்ட முன்வைக்கப்பட்ட எல்லா கோரிக்கைகளுமே பரிந்துரைகளுமே இந்தியா ஆட்சியாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தது பாரதீய ஜனதா பார்ட்டியின் வாஜ்பாய்.

ஈழத்தின் அமைதி குறித்த எந்த பார்வையும் இல்லாத பி.ஜே.பி வழக்கம் போல் அதை பிராந்திய நோக்கில் அணுகியது.

ஆனால் 2004 மே மாதம் காங்கிரஸ் அரசின் கூட்டணி சர்க்கார் ஆட்சிக்கு வந்து மன்மோகன் சிங் பிரதமர் ஆன போது நார்வேயின் கைகள் கட்டப்பட்டன.

வடக்கு, கிழக்கு மக்களின் பொருளாதார நலன்களில் பிரதான காரணி வகிக்கும் ஏ9 சாலை மூடப்பட்டதோடு சமாதான முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டது.

அத்தோடு இந்தியா கொடுத்த அழுத்தத்தில் இலங்கை முன்னெடுத்த தடை நடவடிக்கைகள் வெற்றியளித்தது.

முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் புலிகள் அமைப்பை மட்டுமல்லாமல் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களையும் முடக்கியது.

நான்காண்டுகால அமைதி இந்தியாவின் முயற்சியால் முடிவுக்கு வந்தது.

அதற்குள் கருணாவையும் அமைப்பிலிருந்து வெளியேற்றி தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் திட்டத்தை இந்தியா வகுத்துக் கொடுக்க அதுவும் ஈடேறியது.

கிழக்கை மீட்டு இந்தியாவின் செல்லப்பிள்ளையான பிள்ளையானை ஆட்சியில் அமர்த்தியது. இன்று பிள்ளையானுக்கு இலங்கை அரசின் ஆதரவு இருக்கிறதோ இல்லை இந்தியாவின் ஆதரவு இருக்கிறது.

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி என்னும் பெயரில் தன் வியாபாரத்தை கடைவிரித்திருக்கிறது இந்தியா.

கருணா இலங்கை அரசின் தீவீர விசுவாசி ஆன போது பிள்ளையானை இன்று தன் கைக்குள் வைத்துக் கொண்டு கிழக்கில் கபடியாடிக் கொண்டிருக்கிறது இந்தியா.

கிழக்கை வென்று வசந்தத்தை பரிசளித்த ராஜபக்ஷேவுக்கு ராணுவ தளவாடங்கள் உட்பட, ரேடார்கள், உளவுக்கருவிகள், பீரங்கிகள், உளவு விமானங்களையும் அதை இயக்க பொறியாளர்களையும் அனுப்பிய இந்தியா தனது தென் பிராந்திய கடல் எல்லையை பெரும் பதட்டத்திற்குள்ளாக்கி அங்கு தன் கப்பல் படையை அடிக்கொன்றாக நிறுத்தி வைத்துள்ளது.

இன்று வன்னி மக்கள் எதிர் கொள்ளும் படுகொலைகளுக்கு இந்தியாவே காரணம். பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்த இந்திய ராணுவம் இலங்கைக்குள் நேரடியாக யுத்தம் செய்கிறது என்று சொன்னால் அதில் பெருமளவு உண்மை இல்லாமல் இல்லை.

பல்லாயிரம் மக்களைக் இந்த சில மாதங்களில் கொன்றொழித்த சிங்களப் படைகளோ அவர்களுக்கு வேவு பார்த்துச் சொல்லும் இந்திய உளவு விமானங்களாலோ புலிகளை என்ன செய்ய முடிந்தது.

புலிகளைச் சொல்லி இன்னும் எத்தனையாயிரம் மக்களைக் கொன்றொழிக்கப் போகிறது இந்தியாவும் இலங்கையும் அப்படியே புலிகளை அழித்து விட்டாலும் இந்த பிரச்சனை தீர இந்தியா விரும்புமா?

இதுதான் இன்றைய தினத்தில் பிரதானக் கேள்வி.

பல டக்ளஸ்களையும், ஆனந்தசங்கரிகளையும், பிள்ளையான்களையும் இந்தியா உருவாக்கும். அப்படி உருவாக்குவதன் மூலம்தான் இன்னொரு புலிவீரன் உருவாவதை தடுத்து அதே நேரம் டக்ள்ஸ்களையும், ஆனந்தசங்கரிகளையும் வைத்து இலங்கைப் பிரச்சனையை தீர விடாமல் குளிர்காயலாம் என நினைக்கிறது இந்தியா.

இந்தியாவின் நினைப்புகள் எல்லாம் காலத்தின் கணக்குகளில் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதோ அது போல ஈழத்தில் பிறந்த தாயொருத்தி பத்து பிரபாகரன்களை உருவாக்கி ஈழ மண்ணுக்கு பரிசளிப்பாள்.

இந்தியாவால் டக்ளஸ்களை மட்டுமே உருவாக்க முடியும். ஆனால் வன்னியோ புதிய போராளிகளை ஈன்றெடுக்கும்.

அதுதான் உண்மை. ஆனால் இன்று,

வன்னியின் மொத்த நிலமும் இன்று சிங்களப் படைகளால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கிறது.

உடமைகளோடு உயிர்களும் கொத்துக் கொத்தாய் வீதியில் சிதறிக் கிடக்கிறது. இந்தியா இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும். அல்லது அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டிய சூழல் எழலாம்.

இதை நான் வீம்புக்காகவோ இந்தியாவை பழிக்க வேண்டும் என்றோ சொல்லவில்லை.

03.

சமீப காலமாக தமிழகத்தில் எழும் உணர்வலைகள் ஈழ ஆதரவு என்பதைத் தாண்டி இந்தியாவை தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி வருகிறது.

இதை நான் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் கண்டேன்.

அந்த உணர்வில் உள்ள தார்மீகக் கோபத்தின் நியாயத்தை நீங்கள் கண்டு கொள்ள மறுத்தால். அதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமாக இருக்கும் என்பதை இந்திய ஆளும் வர்க்கங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு வேளை செய்த அட்டூழியங்களுக்கெல்லாம் பதிலா சொன்னோம். மன்னிப்பா கேட்டோம் என்று காங்கிரஸ் தலைமை நினைக்கலாம். ஆனால் இம்முறை உங்களை கேள்வி கேட்பது தமிழகம்.

தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் இந்தியா பதில் சொல்லியாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.

ராஜீவ்கொலைக்குப் பிறகு ஈழத் தமிழருக்கு என்ன நடந்தாலும் தமிழக மக்கள் மௌனிகளாக சகிப்பார்கள். ஏனென்றால் நாம் ஆகப்பெரிய விலை கொடுத்திருக்கிறோம் என்றுதான் காங்கிரஸ் கட்சி முதலில் நினைத்தது.

ஆனால் முத்துக்குமார் கொழுத்திய நெருப்பு காங்கிரஸை சுட்டுப் பொசுக்கியதோடு அதன் துரோகத்துக்கு துணை நிற்கும் நபர்களையும் இன்று தனிமைப்படுத்தி இருக்கிறது.

இந்திய ராணுவ முகாம்கள் முற்றுகைக்குள்ளாகின்றன,

மத்திய மாநில அரசு அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசின் எல்லா அலுவலகங்களுக்கும் நூற்றுக் கணக்கான போலீசாரைக் கொண்டு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

அதை எல்லாம் விட காங்கிரஸ் கொடியை யாரும் எரிக்கக் கூடாது என நடந்த கைதுகளை எல்லாம் மீறி தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் காங்கிரஸ் கொடிகள் தீக்கிரையாக்கப்படுகிறது.

கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன.

பல மாவட்டங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் கட்சியிலிருந்து வெளியேறி தங்களின் எதிர்ப்பை காட்டிய பிறகு சீர்காழி ரவிச்சந்திரன் என்கிற காங்கிரஸ் நிர்வாகி தீக்குளித்து மாண்ட பிறகு தமிழகத்தில் எங்காவது காங்கிரஸ் கொடிக்கம்பம் இருந்தால் அதற்கும் இரண்டு போலீசைப் போட்டு காவல் காக்கும் சூழல்.

இது மாற்றத்திற்கான காலம்.

எண்பதுகளில் கிளர்ந்த மக்கள் இனி ஈழ மக்களுக்காக கிளர்ந்தெழமுடியாது என்ற எமது எண்ணங்கள் எல்லாம் பொய்யாய் பழங்கதையாய்ப் போனது.

எண்பதை விட ஈழ நெருப்பு தமிழகத்தை தகிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வருகிற தேர்தலின் பெரும் பங்கு ஓட்டு வேட்டைக்கு ஈழத் தமிழர்கள் இனி பயன்படுவார்கள்.

ராஜீவின் பிணத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் எப்படி தேர்தல் அறுவடை செய்ததோ அது போல நாமும் ஈழ மக்களின் பிணங்களைக் காட்டியே காங்கிரஸை துரத்தலாம்.

அழுகிற தாய்மார்களின் கண்ணீரை நாம் அறுவடை செய்யலாம். ஆனால் அதுவல்ல நமது வேலை நாம் செய்ய வேண்டிய முக்கிய பணி ஒன்று உண்டு.

செய்ய வேண்டியது?

புலிகளை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது, ஈழம் வெல்லும், என்பதெல்லாம் கைதட்டல் பெறுவதற்காக மேடைகளில் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக மாறிவிடக் கூடாது.

உண்மையிலேயே புலிகள் யாராலும் வெல்ல முடியாதவர்களாக இருக்க நாம் அவர்களுக்கு துணை நிற்பதோடு நமது ஆதங்கங்களையும் அவர்களுக்கு சொல்லலாம்.

புலம்பெயர் சமூகத்திலும், தமிழகத்திலும், ஈழத்திலும் பெரும்பான்மை தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாக புலிகள் மட்டுமே உள்ளார்கள்.

அதனால்தான் மக்களிடமிருந்து புலிகளை தனிமைப்படுத்த முடியாத இந்தியாவும் இலங்கையும் ராணுவ ஆயுத பலம் கொண்டு புலிகளை அழிக்கப்பார்க்கிறார்கள்.

உண்மையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் நிலை.

ஐம்பதாண்டுகால விடுதலை வேள்விக்கு தமிழ் மக்கள் விடை கொடுத்து விட்டு. கூலியாட்களுக்கு அடிமைகளாக வாழும் சூழலை நாம் அனுமதிக்கக் கூடாது.

நம் சமகாலத்தில் நேர்கொள்ளும் இன விடுதலைப் போரில் புலிகள் வெல்வதற்கான மக்கள் சக்தியை திரட்டி தமிழகத்தை அந்த போரின் வலதுகரமாக்க வேண்டும்.

இந்தியாவில் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை ஜனநாயக ரீதியில் ஒழிப்பதோடு சட்ட ரீதியாக வென்று விடும் சாத்தியங்களை உருவாக்க வேண்டும்.

இலங்கை என்னும் பேரினவாதத்திற்குள் ஈழத் தமிழ் மக்களை சுருக்கிப் பார்க்கும் போக்குக்கு நாம் இடமளித்து விடக் கூடாது.

ஒன்றிலோ ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை இல்லை என்றால் சுதந்திர தமிழீழம் அதை தமிழக மக்கள் அங்கீகரித்து விட்டார்கள்.

நமது விருப்பங்களை ஈடேற்ற இந்திய அரசோடு ஒரு நெடும் போரை நாம் நடத்தியாக வேண்டும்.

ஈழ விடுதலைப் போர் என்பது இனி வெறுமனே ஈழத்தில் மட்டும் நடைபெறும் ஒரு போர் அல்ல சர்வதேச அளவில் மக்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய இனவிடுதலைப் போராட்டம்.

அதற்கான காலமும் சூழலும் இப்போது கனிந்திருக்கிறது.

நன்றி
-தமிழ்நாட்டில் இருந்து பொன்னிலா-

0 Comments: