Sunday, February 15, 2009

இலங்கை உண்மையிலேயே ஓர் தீவாகின்றதா?

இன்றைய உலகின் மிக முக்கியமான அம்சம் எந்தவொரு நாடும் தன்னுள் தான் தனித்து வாழமுடியாது என்பதாகும். தொடர்பு ஊடகங்கள் வளர்ந்துள்ள நிலையில் எந்தவொரு நாடும் மற்றைய நாடுகளுடன் தொடர்பற்றிருக்க முடியாது. வணிகம் முதல் உல்லாசப் பயணிகள் வரையென பிறநாடுகளுடனான நிதித் தொடர்புகள் ஒரு புறமாகவும் ஊடக தொடர்புகள் இன்னொரு புறமாகவும் இந்த இணைப்பை ஏற்படுத்துகின்றன.

மேலும் கடந்த சில வருடங்களாக முதலாளித்துவ நாடுகள், சோஷலிச நாடுகள் என்று வகுத்தல் கூட யதார்த்தமற்றதாகி விட்டது. அரசாங்க நிலைகளில் மாத்திரமல்லாமல் தனியார் நிலைகளிலும் இந்த இணைவு வலியுறுத்தப்படுகின்றது.

இன்றைய நிலையில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அங்கத்துவ நிலையைப் பார்க்கின்ற போதும் இந்த உண்மை புலனாகின்றது. இவையாவற்றுக்கும் மேலாக மனிதாபிமான அடிப்படையில் மனிதர்கள் என்ற வகையில் நாடுகளையும் கண்டங்களையும் ஊடறுத்து மனித உறவுகள் செல்கின்றன.

தனி மனிதன் உறவுகள் எதுவுமின்றி தனித்து வாழ முடியாது என்பதைக் குறிக்க ஆங்கிலத்தில் ஒரு மரபுத் தொடர்பு உண்டு. அது எந்தவொரு மனிதனும் ஒரு சிறிய தீவு அல்ல என்று கூறுகின்றது. மனித நிலை மாத்திரமல்லாமல் சிறு சிறு நாடுகள் பற்றியும் இத்தகைய சிரத்தையுண்டு. பப்புவாநியூகினி போன்ற தீவுகள் முதல் சிசிலிஸ் வரை இன்று எந்தப் பிரதேசமுமே தனக்குள் தான் என்று வாழ்ந்துவிட முடியாது.

இது காரணமாக உலகின் ஒரு பாகத்தின் ஒரு நாட்டின், ஒரு தீவில் ஏற்படும் சுகதுக்கங்கள் சர்வதேச பகிர்வுணர்வுக்கான பொருள்கள் ஆகிவிடுகின்றன. இதற்கான மிக அண்மித்த உதாரணம் இலங்கையின் வட பகுதியாகும். அரசாங்க கட்டுப்பாடு இல்லாத பகுதிகள் மீது நடத்தப்பெறும் வான் தாக்குதல், ஷெல் தாக்குதல் காரணமாக அந்தப் பயங்கள் அற்ற இடங்களுக்குச் செல்ல மக்கள் துணிவது இயல்பே. இத்தகையதொரு நிலை உலகில் பல நாடுகளிலே காணப்படுவதுண்டு.

இலங்கையில் கடந்த சிலவாரங்களாக அரசாங்க கட்டுப்பாடற்ற பகுதியிலிருந்து மக்கள் பெரும் தொகையாக அரசாங்க கட்டுப்பாடுள்ள பகுதிகளுக்குச் செல்ல முனைகின்றனர். இதற்கான பிரதான காரணம் அப்பிரதேசங்கள் ஷெல் தாக்குதல்களுக்கும் குண்டு வீச்சுகளுக்கும் இலக்காகியிருப்பதே. இதனாலேயே மக்கள் இந்த வான்வெளித் தாக்குதலுக்கு ஆளாகின்றார்கள். இவ்வாறு மக்கள் வெளியேறுவது குறித்தும் அந்த மக்கள் தாக்குதலுக்கு ஆட்படுவதும் குறித்தும் சர்வதேச கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

பி.பி.ஸி.போன்ற நிறுவனங்கள் மூலமாக கிடைக்கும் நேரடி மறைமுக சான்றுகளை அவதானிக்கும் போது இலங்கைப் படையினர் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளனர். இலங்கை அரசாங்கமோ, தாங்கள் இதைச் செயவேண்டிய அவசியமில்லை கி.பி.(கிளிநொச்சிக்கு பின்) யிலிருந்து தாங்கள் பிரதான ஒரே அதிகார மையமாக விளங்குவதாகவும் தாங்கள் தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியமில்லையெனவும் கூறுகின்றது. ஆனால் பி.பி.ஸி.போன்ற சர்வதேச ஊடகங்களில் வெளியாகிவரும் நேர்காணல்களைக் கேட்கும் பொழுது நிலைமை வேறு என்றே தெரிகின்றது. அதுவும் பொறுப்பு வாந்த மருத்துவர் இருவரின் நேர்காணலுக்குப் பிறகு அரச நிலை ஈடுபாடு பற்றிய சந்தேகமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளும் மக்கள் தங்கள் பிரதேசங்களிலிருந்து வெளியேற விரும்பவில்லையென்று சொல்கின்றார்கள். இதனால் விரும்பியோ விரும்பாமலோ இரண்டு பக்கமுமே அவற்றுக்குள் அழுத்த வேறுபாடு இருப்பினும் தாக்குதல்கள் மேற்கொள்கின்றன என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாதிருக்கின்றது.

இதுதான் அரசியல் நிலைமை. ஆனால் இந்த மனித இடப்பெயர்வுகளுக்கு யுத்த காரணங்களுக்கு அப்பாலான ஒரு மனிதாபிமான அம்சம் உண்டு. அதனைத் தடுத்து நிறுத்திவிட முடியாது! இப்பொழுது அந்தக் குரல் ஓங்கியே கேட்கின்றது.

ஐ.நா.பொதுச் செயலாளருக்கு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத் தூதுக்குழுவின் தலைவர் ரொபேர்ட் இவான்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் ஐ.நா.மட்டத்தில் இலங்கையின் வன்னிப் பகுதியில் கண்காணிப்பு இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இத்தகைய வெளிநாட்டு சிரத்தைகளை இலங்கையரசு கவனத்தில் கொள்ள விரும்பவில்லை. இதற்கான மிக அண்மைய உதாரணம் பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானமும் அதற்கான இலங்கை வெளிநாட்டு அமைச்சின் பதிற்குறியுமாகும்.

பிரித்தானிய பிரதமர் கோல்டன் பிரவுண் இந்த விடயம் பற்றி இலங்கைக்கு தங்கள் பிரதிநிதியொருவரை அனுப்புவதாகவும் அவர் இலங்கை அரசுடனும் அங்குள்ள சகல சமூகத் தலைவர்களுடனும் நெருக்கமாக இணைந்து செயற்படுவார் என்றும் இந்த விடயம் தொடர்பில் அவர் சர்வதேச அமைப்புகள் மற்றும் பரந்துபட்ட அளவிலான சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவாரென்றும் கூறினார். ஆனால், இலங்கையின் ஊடகத்துறை அமைச்சுப் பேச்சாளரோ அப்படியான பேச்சுக்கு தேவையுமில்லை, இடமுமில்லையென்று வற்புறுத்திக் கூறியுள்ளார். இதைவிட இன்னுமொரு பாரிய விடயமும் நடந்தேறியுள்ளது. லண்டன் பி.பி.ஸி.யிலிருந்து ஒலிபரப்பப்படும் சிங்கள,தமிழ் நிகழ்ச்சிகளில் இரு பக்கங்களினதும் நிலைமைகளை குறிக்கும் செதிகளை வெளியிடுவது குறித்து அரசாங்கம் தனது ஆட்சேபத்தை தெரிவித்து கடந்த சில நாட்களாக பி.பி.ஸி.யின் தமிழ், சிங்கள நிகழ்ச்சிகள் இலங்கை வானொலி மூலம் அஞ்சல் செயப்படுவது நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விடயத்தில் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் பி.பி.ஸி.யின் நிலைப்பாட்டை ஏற்கனவே கண்டித்தவராவார்.

அந்த நேர்காணலின் பொழுது பி.பி.ஸி.யை நிறுத்தவும் தயங்கேனென்றும் கூறியிருந்தார். இது இந்த நிலைப்பாட்டை அரசாங்கமே முற்று முழுதாக ஏற்கின்றது என்பது பிரிட்டிஷ் பிரதிநிதி எவரும் வரவேண்டியதில்லையென்று கூறுவதிலிருந்து நன்கு தெரிகின்றது.

அரசாங்கம் இத்தகைய "தலையீடுகளுக்கு இடம்கொடுக்கக் கூடாதென்று' அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகளை வலுவாக ஆதரிக்கும் விமல் வீரவன்ஸவும் சோபித தேரரும் கூறியுள்ளனர்.

அது போதாதென்று பிரித்தானிய தூதராலயத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நடவடிக்கைக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று வன்னியில் சிவிலியன்கள் கொலை நடைபெறலாம். இரண்டு மற்றைய அரசாங்கங்கள் இதில் சிரத்தை காட்டவேண்டிய அவசியமில்லை என்பனவே அவை.

ஆனால், வன்னிப் பகுதியில் சிவிலியன்களை மறுதலிக்க முடியாத நிலையில் விமல் வீரவன்ஸவின் கூற்று அந்தத் தமிழர்கள் கொல்லப்படலாம் என்று கூறுகின்றதா. அவர்களும் இலங்கையர் அல்லவா.

இங்கு அதுவல்ல பிரதான விடயப் பொருள். பிறநாடுகள் இலங்கை விடயம் தொடர்பில் சிரத்தை காட்டுவதை விரும்பவில்லையா. நாம் செவதுதான். அதனை ஆதரித்தால் சரி. இல்லையென்றால் எதுவும் பேசவேண்டாம் என்பதுவா கருத்து. இந்த இடத்தில் ஒருநாடு என்பது தனக்குள் தானே எல்லாவற்றையும் வைத்துக் கொள்ளும் தீவு அல்ல என்பதும் உலக நாடுகள் சகலவற்றுடனும் தொடர்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் எமக்குத் தெரிந்ததே.

சுதந்திரதின வைபவத்தின் பொழுது சீனாவின் தாங்கிகள் காட்டப்படவில்லை. இந்தியா கூட தனது படைத்துறை ஆலோசகர்களை அனுப்பியுள்ளதென்று வைகோ சென்றவாரம் கூட இந்திய அரசைக் கண்டிக்கவில்லையா. இப்படிப் பார்க்கின்ற பொழுதுதான் இலங்கை அரசாங்கம் வரவிருந்த பிரித்தானிய தூதுவர் பற்றிக் கூறியவை ஆச்சரியத்தை மாத்திரமல்ல பயத்தையும் ஏற்படுத்துகின்றது.

இந்த விடயத்தில் உலகத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதும் முக்கியமான ஒரு விடயமாகும். வெரிட்டாஸ் வானொலி என்ன கூறுகின்றது என்று தெரியவில்லை. பி.பி.ஸி.க்கு எதிர்ப்புத் தெரிவித்தாயிற்று. இந்த விடயங்கள் பற்றி நமக்குள்ளே மாத்திரம் பேசிக் கொள்வதில் அர்த்தமில்லை. தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் கேள்வி நேரத்தை பயன்படுத்தியாவது இந்த விடயத்தை பிரதிநிதிகள் சபையில் கிளப்புவது அவசியம்.

இதற்கும் மேலாக சிங்கள மக்களுக்கு உண்மை சொல்லப்படுவது அவசியம். அரசாங்கம் இப்பொழுது ஒரு ஸ்திரமான சூழலை எடுத்துள்ளது. இனிமேல் விடுதலைப் புலிகளுடன் பேச்சே இல்லையென்பதாகும். ஆனால், விழுகின்ற குண்டுகள் புலிகள் யாரென்று பார்த்து அவர்கள் தலையில் விழுவதில்லை. இந்த விடயத்தில் அரசாங்கம் கவனமாகயிருக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இடிப்பாரேயில்லாத ஏமறாமன்னன் கெடுப்பாரில்லானும் கெடும்.


நன்றி
-தினக்குரல்-

0 Comments: