Sunday, February 22, 2009

மீண்டுமொருமுறை கால்பதிக்க காத்திருக்கிறதா இந்தியா?

விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுப் பொறுப்பாளர் யோகி அண்மையில் வெளியிட்ட கருத்தொன்று, தமிழ் மக்களால் கூர்ந்து கவனிக்கப்படத்தக்கது.
அதாவது, உலகெங்கும் வாழ்கின்ற மக்களின் மனச்சாட்சியோடு பேச வேண்டும். அரசோடு பேசிப்பிரயோசனமில்லை. அரசுகளை தீர்மானிப்பவர்கள் மக்கள்தான். அந்த மக்களின் மனச்சாட்சியோடு பேச வேண்டும் என்று யோகி கூறியுள்ளார்.
மக்களை அணிதிரட்டும், விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடும் இதுவாகவே இருக்க முடியும்.

தமிழக மக்களின் போராட்டமும், புலம்பெயர்ந்த இளைய தலைமுறையினரின் எழுச்சியும், உலக மக்களை தமிழ் மக்களின் போராட்ட நியாயப்பாடுகளை உணர வைக்கின்றது.

பார்வையாளராகவிருக்கும் சர்வதேச மக்களை, பேரினவாதத்திற்கெதிரான போராட்டத் தளத்தினுள் உள்வாங்க வேண்டும்.

அதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சி கண்டு அச்சமுறும் பேரினவாதமும், அதற்கு முண்டு கொடுக்கும் வல்லாதிக்கங்களும் புலம் பெயர் தமிழ் மக்களின் எழுச்சிப் போராட்டங்களையும், அரசியல் பரப்புரைகளையும் முறியடிக்க வரிந்து கட்டிக் கொண்டு செயற்படுகின்றன.

கொடூரத் தாக்குதலில் பேரவலத்தை தினமும் எதிர்கொள்ளும் தமிழ் மக்களின் அழிவுகள், இனப்படுகொலை என்கிற வடிவத்தை தொட்டு விட்டதாக உலகின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

ஆகவே, யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இன அழிவு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்கிற வேண்டுகோளை நிராகரிக்க, விடுதலைப் புலிகள் மீது அதற்கான குற்றச்சாட்டுக்களை சுமத்த இவர்கள் முற்படுகின்றார்கள்.

வன்னி மக்களை விடுதலைப்புலிகள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்களென்றும், தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுகிறார்களென்றும் கூறுவதன் ஊடாக, புலிகளைத் தனிமைப்படுத்துவதோடு இனப்படுகொலையை மறைக்கலாமென்றும் இந்த பேரினவாத கூட்டுச்சக்திகள் எண்ணுகின்றன.
அதேவேளை வன்னியிலிருந்து வெளியேறி, வவுனியாவிற்கு வந்த மக்கள், முட்கம்பி வேலிகளால் சூழப்பட்ட திறந்த வெளிச் சிறைகளில் அடைக்கப்பட்டு, வெளித் தொடர்பு அற்ற நிலையில் உயிர் வாழ்கிறார்கள்.

குடும்ப உறவுகள் பிரிக்கப்பட்டு, வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது. பனையால் விழுந்தவனை மாடேறி மிதிக்கின்றது.

அதாவது ஒரு விடயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இலங்கை அரசு மீது எதுவித அழுத்தங்களையும் சுமத்த இவர்கள் தயாரில்லை. காயப்பட்டவரை, கீறிப் பார்க்கும் உத்தியைக் கையாள முயல்கிறார்கள். அதில் பயங்கரவாதமென்கிற மருந்தைத் தடவிப் பார்க்கலாமென்றும் விரும்புகிறார்கள்.

வன்னி மக்களின் உண்மையான நிலையை நேரில் சென்று அறிந்து கொள்ள இவர்கள் பின்னிற்பது எதனால் என்பதே தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆழமான சந்தேகமாகும்.

உலக நாடுகளின் உயிர் மையமான ஐ.நா.சபையின் பிரதிநிதிகளை உள் நுழைய விடாமல், இலங்கை அரசு தடுத்தால், அச்சபையில் உறுப்பினராக இருப்பதற்கு, இலங்கைக்கு உரிமையில்லை என்று இச்சபையால் ஏன் கூற முடியாதுள்ளது?
ஆகவே ஐ.நா. சபையின் பின்னடிப்பும், இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியாத பலவீனமும் சர்வதேச சதி வலைப்பின்னலிற்குள் அச்சபையும் விழுந்து விட்டதாகவே கருத இடமுண்டு.

அதாவது தென்னாசிய நாடுகளுக்கென்று தனியான ஐ.நா. சபையொன்று இருப்பது போலவும், இந்தியாவின் வீட்டோ அதிகாரத்தை மீறி எவரும் செயற்பட முடியாது போன்றும் தோன்றுகிறது.

ஐ.நா.சபையையும், நோர்வே அனுசரணையாளரின் தரத்தில் வைத்து இந்தியாவும், இலங்கையும் அணுகுவது போலுள்ளது.

ஆனாலும், இலங்கை அரசின் புலி அழிப்பு நிகழ்ச்சி நிரல் நீண்டு செல்வதால், புதிய சிக்கல்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்தியா எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளதென்பதை புரிந்து கொள்ளலாம்.

மே 15ஆம் திகதிக்கு முன்னர், தேர்தல் நடைபெற்று புதிய நாடாளுமன்றம் இந்தியாவில் கூட்டப்பட வேண்டும். அதற்கு முன்பாகவே, புதிய கூட்டணிகளை மாநில அளவிலும், நாடளாவிய ரீதியிலும் அமைக்க வேண்டும்.

40 நாடாளுமன்றக் கதிரைகளைக் கொண்ட தமிழகம், தற்போதைய கள நிலைவரப்படி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆகவே, ஈழப்பிரச்சினையில், 1987 இல் போன்று, சில அதிரடி அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு, தி.மு.க.வின் சரிந்து செல்லும் செல்வாக்கினை தூக்கி நிறுத்தி, கூட்டணியை பலப்படுத்த வேண்டுமென சோனியாவின் காங்கிரஸ் காய்களை நகர்த்த ஆரம்பிக்கலாம்.

அதற்கான இரு நகர்வுகளை, ஜனாதிபதி பிரதீபா பட்டேலும், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் இந்த வாரம் முன்னெடுத்திருந்ததை அவதானிக்க

வேண்டும்.

யுத்த பிரதேசத்திலுள்ள வன்னி மக்களை மீட்கும் பணியில், இலங்கை அரசு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தோடு இணைந்து, தமிழக அனுசரணையை வழங்க தாம் தயாராக இருப்பதாக, இந்த வார நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரணாப் முகர்ஜி அறிவித்திருந்தார்.

அத்தோடு மீட்கப்படும் மக்களை இனங்காணவும், பாதுகாப்பளித்து புனர் வாழ்வினை வழங்கவும் ஏனைய இருவரும் பொறுப்பேற்க வேண்டுமென முகர்ஜி மேலும் கூறியுள்ளார்.

1987 இல் கடற்படையை அனுப்பும் முயற்சி தோல்வியுற்றதால், வான் எல்லை மீறப்பட்டு, பூமாலை நடவடிக்கையூடாக குடாநாட்டினுள் கால் பதித்த இந்திய நகர்வு, வேறொரு பாதையில் மறுபடியும் முன்னெடுக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் பிரணாப் முகர்ஜியின் பேச்சுக்களில் தென்படுகின்றன.

வன்னி மக்களை யுத்த களத்திலிருந்து அகற்றிவிட்டால், தமிழகக் கொந்தளிப்பு அடங்கிவிடுமென இந்திய அரசு எடைபோடுகிறது. அத்தோடு கலைஞருக்கும் சிக்கல் இல்லை. தமிழ் மக்களைக் காத்த பெருமை கூறி, 40 ஆசனங்களையும் அள்ளிச் செல்லலாம் என்று கற்பிதம் கொள்ளும்.

இதற்கு எதிர் மறையாக, மக்களை மீட்கும் பணி தோல்வியுற்றால், வழமைபோன்று "மனி தக் கேடய' விவகாரத்தைக்கூறி, விடுதலைப் புலிகள் மீது பழிசுமத்தி, தமிழக மக்களை சோர்வடையச்செய்து, கலைஞரைக் காப்பாற்றலாம்.
ஆனால், 1987 இல் போன்று, விடுதலைப் புலிகளுடன் மோதும் நிலை ஏற்பட்டால், தமிழக நிலை மேலும் மோசமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்.

அதேவேளை, தற்போதைய நிலைவரத்தை இப்படியே நீடிக்கவிட்டால், புலம்பெயர் தமிழ் மக்களின் தொடர் போராட்டங்களின் விளைவாக, ஐ.நா. சபையின் நேரடித் தலையீடு தவிர்க்க முடியாமல் ஏற்படும் வாய்ப்பு உண்டென்பதை இந்தியா உணர்கிறது.

ஆகவே விடுதலைப் புலிகளையும், இலங்கை அரசையும், எவ்வாறு கையாள்வதென்பதில் பாரிய சிக்கலுக்குள் இந்தியா தற்போது அகப்பட்டுள்ளதென்று கணிக்கலாம்.

எவர் வேண்டுகோள் விடுத்தாலும், விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக்

கைவிடப்போவதில்லை. அதேபோன்று புலிகளை அழிக்காமல் மஹிந்த ராஜபக்ஷ போரை நிறுத்தப்போவதில்லை.

இத்தகைய உறை நிலையை எவ்வாறு உடைத்து விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தலாமென, இந்தியா வகுக்கும் உத்திகளின் புதிய பரிமாணம், விரைவில் வெளிவரலாமென ஊகிக்கலாம்.

போரைப் பின்னின்று நடத்துவதாக கருதப்படும் இந்தியாவுக்கு, புலிகளின் பலமும், அவர்களின் தற்காப்பு நிலைக்கான அரசியல் நோக்கமும் தெளிவாகப் புரியும்.
இதுவரை மேற்கொண்ட சமர்கள் வெற்றிப் பரப்புரைகளெல்லாம், மக்கள் ஆதரவு சக்தியை மலினப்படுத்த மேற்கொண்ட தந்திரோபாய உத்திகளென்பதை இந்தியா உணரும். ஆனால், வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

மறுவளமாகச் சிந்தித்தால், யுத்த வெற்றிக்கான சாத்தியம் அரிதாகத் தென்படுவதால், கேடயக்கதை கூறி, மக்களை பலவந்தமாக மீட்கும் பணியை தமது புதிய தெரிவாக இவர்கள் மேற்கொள்ள முனைகிறார்கள்.

ஆகவே மாவோவின் முரண்பாட்டுத் தத்துவத்தின் மூலத்தை பரீட்சித்துப் பார்க்கும் நேரமிது.இந்தியா மேற்கொள்ளப்போகும் அவசர நகர்வுகள் இறுகிப் போயுள்ள சமகால முரண்பாடுகளின் முடிச்சை அவிழ்க்கும்.


[நன்றி - சி.இதயச்சந்திரன் வீரகேசரி வாரவெளியீடு]

0 Comments: